*தைப்பூசத்தின் சிறப்பு !*
*தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது உலக வாழ்க்கைக்கு பொருத்தமானதாகும், அருள் வாழ்க்கைக்கு உகந்தது அல்ல!*
*தைப்பூசத்தன்று இப் பிரபஞ்சத்தின் ஒளி கிரகங்களாகிய அக்கினி,சூரியன்,சந்திரன் ,நட்சத்திரங்கள் போன்ற ஒளிவட்டங்கள் யாவும் ஒரே நேர்க்கோட்டில் சஞ்சரிக்கும் சிறப்புடையதாகும் ஆதலால் அன்று முழு பவுர்ணமி விளங்கும் நாளாகும், அன்று நாள் முழுவதும் விரதம் இருந்து கடவுளை வணங்கினால் நல்ல பலனைத்தரும் என்பது சைவ சமய சான்றோர்களின் திரு வாக்காகும்.*
*தைப்பூசம் என்றாலே உலகம் எங்கும் உள்ள தமிழ் கடவுளான முருகக் கடவுளை தமிழ் சார்ந்த மக்கள் வழிபடும் விழாவாகத் தொன்று தொட்டு கொண்டாடப்பட்டும் நடைப்பெற்றும் வருகிறது.*
*வடலூரில் தைப்பூசம்!*
*152 ஆண்டுகளாக தைப்பூசத்தன்று வடலூரில் வள்ளலார் தோற்றுவித்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையில் 7 ஏழு திரைகளை மாட்டி பிறகு நீக்கி ஆறுகால ஜோதி தரிதனப் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டும் நடைப்பெற்றும் வருகிறது.மேலும் ஒவ்வொரு மாதப் பூசத்தன்றும் இரவு எட்டு மணிஅளவில் 7 ஏழு திரைகளை மாட்டி பிறகு நீக்கி ஜோதி தரிசனம் காட்டப் படுகிறது தவறல்ல. ஏதோ ஒருவகையில் தத்துவ உருவ வழிபாட்டை விட்டுவிட்டு ஒளியை வழிபடுகிறார்கள் என்பது வரவேற்கக் கூடியதாகும்.ஒளியை வழிபட்டால் ஆன்மா பலம் பெறும், ஆன்ம அறிவு விளங்கும்,ஆன்ம அறிவு விளங்கினால் ஆன்ம லாபம் பெறப்படும். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழலாம்.*
*அருள் வழங்கும் ஒரே இடமே வடலூர் சத்திய ஞானசபையாகும். அதனால்தான் அங்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிப்பெருங்கருணையுடன் அருள் வழங்கும் இடமாக சொல்லப்படுகின்றது.*
*வள்ளலார் தைப்பூசம் மற்றும் மாதப்பூசத்தில் மட்டும் 7 ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காட்டச் சொன்னாரா என்று கேட்பவர்களுக்கு திருஅருட்பா பாடல்களிலோ,உரைநடைப் பகுதிகளிலோ எந்த விதமான ஆதாரமும் இல்லை.*
*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபடுவதற்கு காலம் நேரம் தேவை இல்லை என்கிறார் வள்ளலார்*
*அதற்காகவே திருஅருட்பாவில் ஒரு பதிகம் பதிவு செய்துள்ளார் !*
1. அடங்குநாள் இல்லாது அமர்ந்தானைக் காணற்கே
தொடங்குநாள் நல்லதன்றோ - நெஞ்சே
தொடங்குநாள் நல்லதன்றோ.
2. வல்லவா றெல்லாமும் வல்லானைக் காணற்கே
நல்லநாள் எண்ணிய நாள் - நெஞ்சே
நல்லநாள் எண்ணிய நாள்.
3. காலங் கடந்த கடவுளைக் காணற்குக்
காலங் கருதுவ தேன் - நெஞ்சே
காலங் கருதுவ தேன்.*
4. ஆலம் அமுதாக்கும் அண்ணலைக் காணற்குக்
காலங் கருதுவ தேன் - நெஞ்சே
காலங் கருதுவ தேன்.
5. தடையாதும் இல்லாத் தலைவனைக் காணற்கே
தடையாதும் இல்லை கண் டாய் - நெஞ்சே
தடையாதும் இல்லைகண் டாய்.
6. கையுள் அமுதத்தை வாயுள் அமுதாக்கப்
பையுள் உனக்கென்னை யோ - நெஞ்சே
பையுள் உனக்கென்னை யோ.
7. என்னுயிர் நாதனை யான் கண்டு அணைதற்கே
உன்னுவ தென்னை கண் டாய் - நெஞ்சே
உன்னுவ தென்னை கண் டாய்.
8. நான்பெற்ற செல்வத்தை நான்பற்றிக் கொள்ளற்கே
ஏன்பற்று வாயென்பதார் - நெஞ்சே
ஏன்பற்று வாயென்பதார்.
9. தத்துவா தீதத் தலைவனைக் காணற்குத்
தத்துவ முன்னுவதேன் - நெஞ்சே
தத்துவ முன்னுவதேன்.
10. ஒக்க அமுதத்தை உண்டோம் இனிச்சற்றும்
விக்கல் வராது கண்டாய் - நெஞ்சே
விக்கல் வராதுகண் டாய்.!
என்னும் பாடல் வரிகளிலே தெளிவாக விவரிக்கின்றார்
திருஅருட்பா அகவல்!
*மனித ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் அறியாமை அஞ்ஞானம் என்னும் ஏழு திரைகளைப் பற்றியும் அவற்றை நீக்கும் வழிமுறைகளைப் பற்றியும் அகவல் வரிகளில் தெளிவாகப் பதிவு செய்துள்ளார் வள்ளலார், மற்றபடி இயற்கை விளக்கமான சத்திய ஞானசபையில் இயற்கை விளக்கமாக வைத்துள்ள ஞான தீபத்திற்கு திரைகளை மாட்டி விளக்கச் சொல்லவில்லை என்பதை சுத்த சன்மார்க்கத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்,*
*வடலூர் தைப்பூசப் பெருவிழாவானது சமயம் மதம் சார்ந்த விழாவாக மாறிவிட்டது*
*சாதி சமயம் மதம் கடந்து உலக மக்கள் அனைவரும் வந்து வழிபடும் பொதுவான இடமே வடலூரில் உள்ள இயற்கை விளக்கமான சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையாகும்.அச் சபையிலே அமர்ந்து அருள்பாலிக்கும் இயற்கை உண்மைக் கடவுளே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும்*
சாதியும் மதமும் சமயமும் காணா
ஆதி அநாதியாம் அருட்பெருஞ் ஜோதி! ( அகவல்)
மேலும் வள்ளலார் பாடல்!
சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்
தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே
ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம்
ஆருயிர்கள் அகம் புறம் மற் றனைத்தும் நிறைஒளியே
ஓதிஉணர்ந் தவர் எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்
ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே
சோதி மயமாய் விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்
தூய நடத்தரசே என் சொல்லும் அணிந் தருளே.! ( அருள் விளக்கமாலை)
மேலும்
சபையெனது யஉளமெனத் தான் அமர்ந்து எனக்கே
அபயம் அளித்ததோர் அருட்பெருஞ் ஜோதி! ( அகவல்)
மேலும்
சத்திய ஞான சபை என்னுள் கண்டனன்
சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன்
நித்திய ஞான நிறையமுதம் உண்டனன்
நிந்தை உலகியற் சந்தையை விண்டனன் !
*அற்புதம் அற்புதம் அற்புதமே என்பார் வள்ளலார்.*
*சாதி சமய சழக்கை விட்டேன் அருட் ஜோதியைக் கண்டேன் என்பார் வள்ளலார்*
*சாதி சமயம் மதம் கடந்த வடலூர் சத்திய ஞானசபையில் சமயம் மதம் சார்ந்த ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் அடங்கிய விழாக்களை தந்திரமாக உள்ளே புகுத்து விட்டார்கள் என்பதே உண்மையாகும்*
*இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம்!*
*வள்ளலார் கொள்கைகளை மக்கள் புரிந்து கொண்டு பின் பற்றினால் சாதி சமயம் மதம் சார்ந்த தத்துவக் கடவுள்களும் வழிபாட்டு முறைகளும் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்துவிடும் என்பதை உணர்ந்த சமய மதவாதிகள்,வள்ளலாரை சாதி சமய மதம் சார்ந்த மதவாதியாக மாற்ற முயற்சி செய்து வருகிறார்கள்அவை ஒருபோதும் நடைபெறாது*
*இப்போது எல்லாம் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கைகளை மக்கள் தெரிந்து அறிந்து புரிந்து கொண்டு தங்களை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு அடிமைகளாய் மாற்றிக்கொண்டு வருகிறார்கள் என்பதே சத்திய உண்மையாகும்.*
*அதற்கு சாட்சியாக நாங்களும் எங்கள் குடும்பமும் சுத்த சன்மார்க்க கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்து வருகிறோம்.*
வள்ளலார் வரிகள்!
*வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே!*
*வடலூர் வந்தால் மட்டுமே நல்ல வரம் பெறலாம் என்று வெளிப்படையாக சொல்லுகி ன்றார் வள்ளலார்*
*இதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,மற்றைய வழிப்பாட்டுத் தலங்களில் நல்ல வரம் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்பது பொருளாகும்*
மேலும் வள்ளலார் சொல்வது !
*சன்மார்க்கப் பெரும்பதி வருகை !*
*சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும்,இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை.தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந் தொட்டு அளவிறந்த நெடுங்காலம் வரையில் வழங்கும். அதன்மேலும், அதன்மேலும் வழங்கும்.*
*பல வகைப்பட்ட சமய பேதங்களும்,சாத்திர பேதங்களும்,சாதிபேதங்களும்,ஆசார பேதங்களும்போய்,சுத்த சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம் விளங்கும்.*
*இப்போது வந்திருக்கின்ற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்த்தாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள்,மூர்த்திகள்,கடவுளர்,தேவர்,அடியார்,யோகி,ஞானி முதலானவர்களில் ஒருவர் அல்ல,*
*இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும்,எல்லாத் தேவர்களும், எல்லாக் கடவுளரும், எல்லாத் தலைவர்களும்,எல்லா யோகிகளும், எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்து அருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி "அருட்பெருஞ்ஜோதியாகும்"*
*இது உண்மை அந்தப் பதியின் அருளை நான் பெறுவேன்,பெறுகின்றேன்,பெற்றேன். என்னை அடுத்த தாங்களும் பெறுதற்கு யாதொரு தடையும் இல்லை. பெறுவீர்கள்,பெறுகின்றீர்கள்,பெற்றீர்கள்அஞ்சவேண்டாம் என உலக மக்களுக்காக வள்ளலார் பதிவு செய்கிறார்*
*ஆகலின் இதுதொடங்கி ஞானசபையில் எழுந்தருளி அருள் வழங்கும் (நல்லவரம்) அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வந்து வந்து தரிசிக்கப் பெறுவீர்களானால் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் அன்றி இறந்தவர் உயிர் பெற்று எழுதல்,மூப்பினர் இளமையைப் பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங்களிப்பும் அடைவீர்கள்*
*எல்லோருக்கும் தாய், தந்தை,அண்ணன்,தம்பி,முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ,*
*அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இந்த இடம்* *வடலூர் சத்திய ஞானசபையாகும்* *மேலும் வள்ளலார் சித்திபெற்ற மேட்டுகுப்பம் சித்திவளாகமும் அதில் அடங்கும்.*
*இது சத்தியம் இது ஆண்டவர் கட்டளை*
*எல்லோரும் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவில் கலந்து கொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளைப் பெறுவதற்கு வடலூர் பெருவெளிக்கு வாருங்கள். தங்களால் முடிந்த அளவு அன்னதானம் செய்யுங்கள்,உண்மை உணர்வோடு ஜோதி தரிசனம் காணுங்கள்*
*வள்ளலார் பாடல்!*
ஜோதி எவையும் விளங்க விளங்குஞ் ஜோதி வாழியே !
துரிய வெளியில் நடுநின்று ஓங்கும் ஜோதி ஜோதியே!
சூதிலா மெய்ச் சிற்றம்பலத்து ஜோதி ஜோதியே !
துலங்கப் பொன்னம்பலத்தில் ஆடும் ஜோதி ஜோதியே !
மேலும்...
சுத்த சிவ சன்மார்க்க நீதி ஜோதி போற்றியே !
சுக வாழ்வளித்த சிற்றம்பலத்து ஜோதி போற்றியே !
சுத்த சுடர்ப் பொற்சபையிலாடுஞ் ஜோதி போற்றியே !
ஜோதி முழுதும் விளங்க விளக்குஞ் ஜோதி போற்றியே !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*
ஐயா வணக்கம் எல்லை இல்லா நன்றிகள். உங்களை தொலைபேசி எண் குறிப்பிடுக..
பதிலளிநீக்கு