அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

செவ்வாய், 13 டிசம்பர், 2022

 வள்ளலார் ஒரு சகாப்தம் ! 

வள்ளலார் இறைவனால் வருவிக்க உற்றவர் !

இவ்வுலகின் ஏழு வகையான பிறப்புகளிலே மனிதகுலம் என்பது  உயர்ந்த அறிவுடைய ஆற்றல் வாய்ந்த பிறப்பாகும். 

ஒவ்வொரு ஆன்மாக்களுக்கும்   தாவரம், ஊர்வன,பறப்பன,நடப்பன,தேவர்,அசுரர்,மனிதர் போன்ற ஏழு பிறப்புக்கள் கொடுக்கப்படுகின்றது. அவற்றில்  இறுதிப்பிறப்பு மனிதப்பிறப்பாகும்  

இறுதியான  ஏழாவது  பிறப்புத்தான் உயர்ந்த அறிவுள்ள மனித  பிறப்பாகும். இந்த பிறப்பில்தான் இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெரும்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று, ஊண்  உடம்பை ஒளி உடம்பாக மாற்றி, அருள்தேகம் என்னும் ஒளிதேகம் பெற்று  மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாறுவதே மனிதனும் தெய்வமாகலாம் என்பதாகும்.

இந்த உண்மை அறியாமல் மனித குலம்,அகம்கருத்து புறம்வெளுத்து, பிறந்து பிறந்து இறந்து இறந்து வீண் காலம் கழித்துக் கொண்டுள்ளார்கள் 

உயர்ந்த அறிவுபெற்ற மனித குலத்தை திருத்தி நல்வழிப் படுத்துவதற்காகவே இறைவனால் வருவிக்க உற்றவர்தான் நமது திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும். 

வள்ளலார் பாடல் !

அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்து 
இருந்த உலகர் அனைவரையும் 
சகத்தே திருத்திச் சன்மார்க்க 
சங்ககத்து அடைவித்திட அவரும் 
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்
திடுதற் கென்றே எனை இந்த 
உகத்தே இறைவன் வருவிக்க 
உற்றேன் அருளைப் பெற்றேனே !

மேலே கண்ட பாடல் வாயிலாக தான் வருவிக்க உற்ற விபரத்தை தெளிவாக பதிவு செய்து உள்ளார் .

மனிதகுலத்தின் அறியாமையின்  காரணத்தை மேலும் பலபாடல்கள் வாயிலாக பதிவு செய்கிறார் !

வள்ளலார் பாடல் !

பேருற்ற உலகில் உறு சமயமத நெறிஎலாம் 
பேய்ப் பிடிப்புற்ற பிச்சுப் 
பிள்ளை விளையாட்டு என உணர்த்திடாது உயிர்கள் பல 
பேதமுற்று அங்கும் இங்கும் 
போருற்று இறந்து வீண் போயினர் இன்னும் வீண் 
போகாதபடி விரைந்தே 
புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறிகாட்டி மெய்ப் 
பொருளினை உணர்த்தி எல்லாம் 
ஏறுற்ற சுகநிலை அடைந்திடப் புரித நீ 
என்பிள்ளை ஆதலாலே 
இவ்வேலை புரிக என்று இட்டனன் மனத்தில் 
வேறு எண்ணற்க என்ற குருவே 
நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள் 
நிறைந்து இருள் அகற்றும் ஒளியே 
நிற்குணானந்த பர நாதாந்த வரை ஓங்கும் 
நீதி நடராஜ பதியே ! 

மேலும் ஒருபாடல் !

பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும் ஓர் 
பவநெறி இதுவரை பரவியது அதனால் 
செந்நெறி அறிந்திலர் இறந்து இறந்து உலகோர் 
செறி இருள் அடைந்தனர் ஆதலின் இனி நீ 
புன்னெறி தவிர்த்து ஒரு போது நெறி எனும் வான் 
புத்தமுது அருள்கின்ற சுத்த சன்மார்க்கத் 
தன்னெறி செலுத்துக என்ற என் அரசே 
தனி நடராஜ என் சற்குரு மணியே !

உயர்ந்த அறிவுபெற்ற ஆன்மாவில் சமயமத கொள்கைகள் பதிவாகி அறிவு விளக்கம் இல்லாமல் உலக வாழ்க்கையில் ஈடுபட்டு பிறந்து பிறந்து ,இறந்து இறந்து வெவ்வேறு உயிரும் உடம்பும் எடுத்து எடுத்து  அழிந்துகொண்டே உள்ளன.அதனால் ஆன்மாக்கள் உண்மை பொது நெறியான சுத்த சன்மார்க்க  அருள் நெறியை அறியமுடியாமல் தவிப்பதால், அறிவு விளக்கம் உண்டாவதற்கு வழிவகை காட்டும் வகையில்,  மேலே கண்ட பாடல்கள் போல் நூற்றுக்கணக்கான பாடல்கள் திருஅருட்பாவில் பதிவு செய்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக