*கடவுளைக் கண்டேன்!*
தொடர்ச்சி பாகம் ..9
*ஈரோட்டில் ஸ்பென்ஸர்ஸ் என்ற பெயரில் பெரிய ஷோரூம்,பவானியில் ஒருஷோரூம்.நிறைய வேலை ஆட்கள்,வீட்டிற்கு வேலைக்காரி,பைக்,போன் ஆடம்பரமான வாழ்க்கை,மகிழ்ச்சியான குடும்பம், நிறைய வருமானம் கொட்டுகிறது என ஈரோட்டு மக்கள் கண்களில் கண்டு மனதில் பொறாமை,உள் வேக்காடு போன்ற குணங்கள் தோன்றியது.*
*பொய் புகார் பெட்டிஷன்!*
*ஈரோடு வருமான அலுவலகத்திற்கு பொய்யான புகார்... கதிர்வேலுக்கு நிறைய வருமானம் வருகிறது,அரசாங்கத்திற்கு கணக்கு காட்டாமல் வரிஏய்ப்பு செய்கிறார் என்று ஒருவர் என் மீது புகார் கொடுத்துள்ளார்*
*அந்த புகாரின் அடிப்படையில் வருமான அதிகாரிளுடன் பானுதுறை என்பவர் வீட்டிற்கும் கடைக்கும் வந்து சோதனை நடத்தினார்கள்,பணம் ஏதும் இல்லை நகைகள் ஏதும் இல்லை, வீட்டில் கடையில் உள்ள கொஞ்சம் ஆடம்பரமான பொருள்கள், மற்றும் வேலையாட்கள் அவர்கள் சம்பளம் மற்றும் மாதவருமானம்,வருட வருமானம் எல்லாம் விசாரித்து கணக்கெடுத்து பேப்பரில் எழுதி பதிவு செய்து கொண்டு சென்று விட்டார்கள். அலுவலகத்திற்கு விசாரனைக்கு வரும்படி தேதி நாள் குறித்த சம்மன் அனுப்பினார்கள்*
*நாம் செய்யும் தொழிலோ வியாபாரம் அல்ல.உடல் உழைப்புத் தொழில்.உழைப்பிற்குத் தகுந்த வருமானம், வருமானத்திற்கு தகுந்த அளவு நியாயமான, நிம்மதியான,நேர்மையான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு வந்தோம். இதில் வரி ஏய்ப்பிற்கு ஏதும் இடமில்லை.*
*இந்த உலகத்தில் மகிழ்ச்சியுடன் ஆனந்தமாக வாழ்வது, ஒரு சிலரின் உள்ளத்தில் ஏற்றுக் கொள்ள இடமில்லை.*
*வருமானவரி அலுவகத்தில் இருந்து வந்த சம்மனைப் பார்த்ததும் மனம் வேதனையில் துடித்தது.நமக்கும் எதிரிகள் உள்ளார்கள், அவர்கள் யாராக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக காத்திருந்தேன்*
*வள்ளலார் பாடல்!*
தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை எனத்தெளிந்து
வாது நினைக்கும் மனக்கடையேன் மகிழ்வுற் றிருந்தேன் என்னளவில்
சூது நினைப்பாய் எனில்யார்க்குச் சொல்வேன் யாரைத் துணைகொள்வேன்
ஏது நினைப்பேன் ஐயோநான் பாவி உடம்பேன் எடுத்தேனே.!
மேலும்
கூடுங் கருணைத் திருக்குறிப்பை இற்றைப் பொழுதே குறிப்பித்து
வாடுஞ் சிறியேன் வாட்டம்எலாந் தீர்த்து வாழ்வித் திடல் வேண்டும்
பாடும் புகழோய் நினைஅல்லால் துணை வே றில்லைப் பரவெளியில்
ஆடுஞ் செல்வத் திருவடிமேல் ஆணை முக்கால் ஆணையதே!
*என்ற வள்ளலார் பாடல்போல் மனம் அலை பாய்ந்தது!*
ஆடிட்டர் வருகை !
*சம்மன் வாங்கி படித்து பார்த்து மனம் வேதனையில் இருந்த தருணம்,ஈரோட்டில் முதன்மையான் எல்லோராலும் மதிக்கத்தக்க அனுபவம் வாய்ந்த ஆடிட்டர் திரு. இராம சுப்ரமணியம் ஐயா அவர்கள், என்கடையின் முன்பு காரில் வந்து இறங்கி தனக்கு சுப்பா தைப்பதற்காக துணி எடுத்துக் கொண்டு வந்தார். அவரும் அவருடைய குடும்பமும் என்னுடைய நிரந்தர வாடிக்கையாளர்கள் ஆவார்கள்.*
*என்மீது அளவில்லாத அன்பும் நட்பும் பாசமும் கொண்டவர்.ஓய்வு நேரங்களில் என்னிடம் உரையாடி மகிழ்வார். என் வளர்ச்சியைப்பார்த்து பெருமையுடன் பாராட்டும் நல்ல குணமுடையவர்*
*நடந்த வண்ணம் உரைத்தல்!*
*நடந்த விபரங்களை ஆடிட்டரிடம் விளக்கமாக சொல்லி சம்மனைக் கொடுத்தேன், படித்து பார்த்துவிட்டு சிரித்தார். அவர் சிரிப்பை கண்டு மகிழ்ச்சி உண்டாயிற்று. இதற்கு ஏன் கவலைப்படுகிறாய் நான் பார்த்துக் கொள்கிறேன். என்று சொல்லிவிட்டு நாளை காலை 10 மணிக்கு வருகிறேன் ரெடியாய் இரு, நானே வந்து அழைத்து செல்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.*
*சொல்லியவாறு மறுநாள் காலை வந்தார் அவர் காரிலேயே என்னை அழைத்துக் கொண்டு சென்றார். வருமானவரி அலுவலகத்திற்குள் சென்றார்.* *அவரைக் கண்டதும் அதிகாரிகள் எழுந்து நின்று பவ்வியமான மரியாதை கலந்த வணக்கம் தெரிவித்து வாருங்கள் வாருங்கள் என அழைத்து அமர வைத்தார்கள்.அவ்வளவு மரியாதை வருமானவரி அலுவலகத்தில் அவருக்கு. எனக்கு ஆச்சரியமாக இருந்தது*
*சம்மனை தள்ளுபடி செய்தல்!*
*உயர் அதிகாரியிடம் எனக்கு வந்த சம்மனைக் காட்டி விபரம் கேட்டார். அதிகாரி அவர்கள் என்மீது பொய்புகார் அனுப்பிய மனுவை ஆடிட்டரிடம் கொடுத்தார். படித்து பார்த்துவிட்டு என்னிடம் கொடுத்து இவர் யார்? உமக்குத் தெரிந்தவரா என்று கேட்டார், ஆம் ரொம்ப பழக்கமானவர் தெரிந்தவர் எனறு சொன்னேன்*
*இதுபோன்று கூடவே இருந்து குழியைப் பறிக்கும் குள்ளநரிகள் நிறையபேர் உண்டு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உள்ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்களிடம் உறவு வைத்துக் கொள்ளாதே தொடர்பு வைத்துக் கொள்ளாதே என்று அறிவுரை கூறினார்.*
*அதிகாரி புகார் மனுவை ரத்து செய்தார்!*
*வருமானவரி அதிகாரியிடம் ஆடிட்டர் என்னைப்பற்றிய விபரங்களை நன்கு எடுத்துரைத்தார்*
*மேலும் கோடி கோடியாய் கொள்ளை அடிக்கும் வியாபாரிகள்,பெரிய பெரிய கம்பெனிகள் மற்றும் அரசியல்வாதிகள்,மற்றும் அதிகாரிகள் போன்றவர்கள் கோடி கணக்கில் வரிஏய்ப்பு செய்து அரசாங்கத்தை ஏமாற்றிக் கொண்டுளார்கள் அவர்களை நாம் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்க முடிவதில்லை.இதுதான் இன்றைய உலகத்தின் சட்டத்திட்டங்கள் என அதிகாரிகளிடம் விமர்சனம் செய்தார்*
*என்னுடைய நண்பர் கதிர்வேல். அவர் தொழிலில் கடுமையாக உழைக்கும் அறிவு சார்ந்த உழைப்பாளி. தையல் நுணுக்கங்களைத் நன்கு தெரிந்தவர்.*
*ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரையும் திருப்தி படுத்தும் தையல் தொழில் வல்லுனர்.தையல் தொழிலில் டாக்டர் பட்டம் பெற்றவர். நிறைய வாடிக்கையாளர்களை கொண்டவர். நேர்மையான முறையில் சம்பாதிக்கின்றவர். அவர் தொழில் வரிஏய்ப்பு செய்ய முடியாத நேர்மையான தையல் தொழிலாகும் என்பதை விளக்கமாக அதிகாரியிடம் எடுத்துரைத்தார். அதிகாரி ஆச்சரியமாக கேட்டுக் கொண்டே இருந்தார்*
*கதிர்வேல் பற்றிய விபரங்கள் யாவும் எமக்கு நன்குத் தெரியும், அவருக்காக நான் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன் என்று அதிகாரியிடம் தெரிவித்து, வக்காளத்து பேப்பரில் கை எழுத்துப் போட்டு கொடுத்தார். மேற்கொண்டு பொய்யான புகார்மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று சொல்லி மனுவை ரத்து செய்ய வைத்துவிட்டார்.*
*உயர்அதிகாரி எந்த பதிலும் சொல்லாமல் நீங்கள் சொல்லியவாறு செய்து விடுகிறேன் ஐயா என்று மனுவை தள்ளுபடி செய்தார்*
*ஆடிட்டர் இராம சுப்ரமணியம் அவர்களை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத பெரிய மனிதர் , இனிமையான நண்பர். நல்ல உயர்ந்த குணம் உள்ளவர், நல்ல அழகானவர், உலக அனுபவம் தெரிந்தவர், நல்ல ஆன்மீக சிந்தனையாளர், அப்படி ஒரு நல்ல பண்பு உள்ளவர் இப்போது அவர் இல்லை என நினைக்கும் போது மனம் மிகவும் வேதனை அடைகிறது.*
*நமக்கு எதிரிகள் நம் அருகியிலேயே இருப்பார்கள் இருக்கின்றார்கள்,ஜாக்கிரதையாக நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் !*
*நம்முடன் நன்கு பழகுபவர்கள்,நம் உறவினர்கள், நம் தொழில் எதிரிகள், நம் நண்பர்கள், நம் வாடிக்கையாளர்கள் இவர்களே நமக்கு எதிரிகளாகவும் துரோகிகளாகவும் மாறி விடுவார்கள,காரணம் நம்மைப்பற்றிய எல்லா விபரங்களும் அவர்களுக்கு நன்குத்தெரியும், நம் செயல்கள் அவர்கள் விருப்பத்திற்கு பாதகமாக மாறுகின்ற போது நேர்மறையாக பேசி தீர்வு கானாமல் நமக்கு பாதிப்பு உண்டாக்கும் வகையில் எதிரிகளாக மாறிவிடுகின்றார்கள்,இதுவே உலகியல் சுயநலமாகும்*
*நாம் எவ்வுயிருக்கும் துன்பம் செய்யாமல், ஜீவகாருண்ய உணர்வோடு நன்மையே செய்து வந்தால், அதாவது பொதுநல நோக்கத்தோடு வாழ்ந்தால் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் இறைவன் எளிதில் நம்மைக் காப்பாற்றி விடுவார், இதுவே சத்தியமான இயற்கை உண்மையாகும்*
(அப்போது எமக்கு வள்ளலாரைப் பற்றியோ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப் பற்றியோ தெரியது)
*எம்மீது வருமானவரி அலுவலகத்திற்கு பொய்யான புகார் கொடுத்தவர் யார் ? என நான் தெரிவித்தால் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள்.*
அடுத்த கட்டுரையில் தெரிவிக்கிறோம்
தொடரும்....
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக