அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

திங்கள், 31 அக்டோபர், 2022

வள்ளலார் வாலிப்பருவத்திற்கு முன்பே !

 *வாலிப்பருவத்திற்கு முன்பே!* 


*வள்ளலாரின் வாலிப்பருவம் தோன்றுவதற்கு முன்னரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அறிவித்த உண்மையை வெளிப்படுத்துகிறார்*


*அவ்வாலிபப் பருவம் தோன்றுதற்கு முன்னரே எல்லா உயிர்கட்கும் இன்பந் தருவதற்கு அகத்தும் புறத்தும் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி உண்மைக் கடவுள் ஒருவரே உள்ளார் என்று அறிகின்ற மெய்யறிவை விளக்குவித்தருளினீர்.*


*வாலிபப்பருவம் தோன்றிய போதே சைவம் வைணவம் சமணம் பவுத்தம் முதலாகப் பலபெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும் அச்சமயங்களில் குறித்த சாதனங்களும் தெய்வங்களும் கதிகளும் தத்துவ சித்தி விகற்பங்கள் என்றும், அவ்வச் சமயங்களில் பலபட விரிந்த வேதங்கள் ஆமங்கள் புராணங்கள் சாத்திரங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்றும், உள்ளபடியே எனக்கு அறிவித்து அச்சமயாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாமல் தடைசெவித் தருளினீர்.*


 *அன்றியும் வேதாந்தம் சித்தாந்தம் போதாந்தம் நாதாந்தம் யோகாந்தம் கலாந்தம் முதலாகப் பலபெயர் கொண்ட பலபடவிரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்று அறிவித்து அவைகளையும் அனுட்டியாதபடி தடைசெய்வித் தருளினீர்.*


*அங்ஙனம் செய்வித்ததும் அன்றி, உலகியற்கண் பொன்விஷய இச்சை பெண்விஷய இச்சை மண்விஷய இச்சை முதலிய எவ்விஷய இச்சைகளிலும் என் அறிவை ஓரணுத்துணையும் பற்றுவிக்காமல்* 


*எல்லா உயிர்களையும் பொதுமையில் நோக்கி எல்லா உயிர்களும் இன்பமடைதல் வேண்டுமென்னும் கருணை நன்முயற்சியைப் பெறுவித்துச் சுத்த சன்மார்க்கத் தனிநெறி ஒன்றையே பற்றுவித்து எக்காலத்தும் நாசமடையாத சுத்ததேகம் பிரணவதேகம் ஞானதேகம் என்னும் சாகாக் கலானுப தேகங்களும்,*


*தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெரு வல்லபமும் கடவுள் ஒருவரே என்றும் அறிகின்ற உண்மை ஞானமும்*


*கருமசித்தி யோகசித்தி ஞானசித்தி முதலிய எல்லாச் சித்திகளும் பெருகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்பப் பெருவாழ்வில் என்னை அடைவிப்பதற்குத் திருவுளங்கொண்டு அருட்பொருஞ்ஜோதியராகி*


*நான் எவ்விதத்தும் அறிதற்கரிய உண்மைப் பேரறிவை அறிவித்தும், நான் எவ்விதத்தும் காண்பதற்கரிய உண்மைப் பெருஞ் செயல்களைச் செய்வித்தும், நான் எவ்விடத்தும் அனுபவித்தற்கரிய உண்மைப் பேரனுபவங்களை அனுபவிப்பித்தும் எனது அகத்தினும் புறத்தினும் இடைவிடாது காத்தருளி எனது உள்ளத்திருந்து உயிரிற்கலந்து பெருந்தயவால் திருநடஞ்செய்தருளுகின்றீர்.*


*இங்ஙனஞ் செய்தருள்கின்ற தேவரீரது திருவருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!*


*என்று சமரச சுத்த சன்மார்க்க சத்திய பெருவிண்ணப்பத்தில் பதிவு செய்கிறார்.*


*எனவே நாம் குழப்பம் இல்லாமல் வள்ளலார் சொல்லியுள்ள சுத்த சன்மார்க் தனிநெறியை கடைபிடித்து மெய்ப்பொருளை நன்கு உணர்ந்து தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்.*


*இதற்கு தேவையானது ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் பரோபகாரம்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொள்ளும் சத்விசாரம் என்னும் உண்மை அறிந்து இடைவிடாது விசாரம் செய்வதே நமது உண்மையான வழிபாடும் கடமையும் ஆகும்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்*

*9865939896*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக