அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

புதன், 7 செப்டம்பர், 2022

சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம்!

 *சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம்!*


*வள்ளல்பெருமான் உலகிற்கு காட்டிய போதித்த புதிய மார்க்கமே "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க ஞானாசாரம்" என்னும் கொள்கையாகும், இவை   சாதி சமயம் மதங்கள் சார்ந்த கொள்கை அல்ல, தனித்தன்மை வாய்ந்த புதிய பொது நோக்கமுள்ள கொள்கையாகும்*


*சுத்த சன்மார்க்க சாதனம்!*


*சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய சாதனம் என்னவென்றால்; எல்லா ஜீவர் களிடத்தில் தயவும்,ஆண்டவரிடத்தில் அன்புமே முக்கியமானவையாகும்.*


*உதாரணம் இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லியது "கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெறுக",மற்று எல்லாம் மருள் நெறி எனவே எனக்கு நீ உரைத்த வண்ணமே பெற்று இருக்கின்றேன் என்கிறார் வள்ளலார்* 


மேலும் சொல்லுகிறார் !


*சாதனங்கள் ஒன்றும் வேண்டாம். எதாவது ஓர் சாதனம் சொல்லக் கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாகும். அதைக் கண்டு பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும். ஆதலால் காலம் தாழ்த்தாது எல்லா உயிர்களையும் தன் உயிரைப்போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம். இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன்தான் இறந்தவரை எழுப்புகின்றவன்! அவனே ஆண்டவனும் ஆவான்* 


*என்பதை உணர்ந்து அறிந்து தெளிந்து, ஒவ்வொரு சன்மார்க்க அன்பர்களும் பின்பற்ற வேண்டும்.* 


*சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் காட்டிய போதித்த கற்பனை கதைகளில் வரும், மூட நம்பிக்கையில் இருந்து விலகி, அறிவு சார்ந்த சுத்த சன்மார்க்கத்தின் ஜீவகாருண்ய ஒழுக்கமான இந்திரிய,கரண,ஜீவ, ஆன்ம ஒழுக்கங்களான நான்கு ஒழுக்கங்களை இடைவிடாது கடைபிடிக்க வேண்டும்.இந்திரிய,கரண இரண்டு ஒழுக்கங்களை  முழுமையாக கடைபிடித்தாலே ஜீவ, ஆன்ம ஒழுக்கத்தை ஆண்டவர் இலவசமாக லேசிலே வழங்கி விடுவார்.* 


*சுத்த சன்மார்க்கப் பிரார்த்தனை!*


*ஒருவன் பிரார்த்தனை செய்வதில் அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மகிழ்ச்சியுடன் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும்.அப்படிச் செய்வதால் அதில் ஒருவனுக்கு வேண்டியது எல்லாம் அடங்கி விடுகின்றன.*


*பிரார்த்தனை செய்ய வேண்டுமானால் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று பாடல் மூலமாக தெரிவிக்கின்றார்.*


பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பி *அருட் 

ஜோதி அளித்து* என் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்


நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை ஓதி முடியாது *என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே !*


*என்பதே என் பிரார்த்தனை ஆகும் என்கிறார் நமது அருள்தந்தை வள்ளல்பெருமான் அவர்கள்* *எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !*

*கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! என்பதே அருள் வாக்காகும்*


*மேலும் வள்ளலார் சொல்லுகின்றார்*


*சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம்!*


*ஜீவகாருண்யத்தால் பிரமன் ஆயுசும், பாசவைராக்கியத்தால் விஷ்ணு ஆயுசும், ஈசுர பக்தியால் ருத்திரன் ஆயுசும் பிரம்மஞானத்தால் என்றும் அழியாத சுவர்ண தேக முதலியவைகளைப் பெற்றுக் கடவுள் மயமாகலாம்.*


எப்படியெனில்:?


*கடவுள் சர்வ ஜீவதயாபரன், சர்வ வல்லமையுடையவன்; அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்! ஆகையால், நம்மையும் சர்வ ஜீவ தயையுடையவர்களாய்ச் சர்வ வல்லமையையும் பெற்றுக் கொள்ளும்படி மனித தேகத்தில் (ஆன்மாவை) வருவித்தார்.*


*ஞானிக்குத் தயவு அதிகப்பட்டிருக்கிறபடியால், கேளாத கேள்வி முதலிய மகா அற்புதங்களான இறந்தார் எழுதல் முதலிய அற்புத வல்லமையைப் பெற்றிருக்கின்றார்* 


*எந்த ஜீவர்களிடத்தில் தயாவிருத்தியாகிய அருள் விசேடம் விளங்குகின்றதோ, அந்த ஜீவர்களிடத்தில் கடவுள் விளக்கம் விசேடமாயிருக்கும். மற்றவர்களிடத்தில் காரியப்படாது.* 


*ஆதலால் மலஜல சங்கல்ப காலங்கள் தவிர மற்றக் காலங்களில், கடவுளிடத்தில் அன்பும் ஜீவர்களிடத்தில் பக்தியும் செலுத்த வேண்டும் என்கிறார்.* 


*ஆதலால் பக்தி என்பது மன நெகிழ்ச்சி, மனவுருக்கம்,மன மகிழ்ச்சியை உண்டு பன்னும். அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி, ஆன்மவுருக்கம்,ஆன்ம மகிழ்ச்சியை உண்டு பன்னும்.* 


*மனதில் பதிவாகியது நிலை பெறாது விலகிவிடும் ஆண்டவரிடம் செல்லாது. ஆன்மாவில் பதிவாகியது விலகாமல்  நிலைத்து நிற்கும் ஆண்டவரிடம் சென்றடையும்.*


*எல்லாவுயிர்களிடத்தும் கடவுள் வியாபித்திருப்பதை அறிதலே ஈசுவர பக்தியாகும்.*


*அந்தக்கரண சுத்தியின் பிரயோசனம் பக்தியை விளைவிப்பது  ஜீவன்,ஆன்மாவை தூய்மை படுத்துவது அன்பு, பரோபகாரம் தயவு,கருணை, அருள் என்பவைகளாகும்* 


*இவற்றில் எவை  முக்கியமானது என்பதை மனிதர்கள் நினைந்து உணர்ந்து கொள்ள வேண்டும்*

 *ஜீவகாருண்யமுண்டானால் அருளுண்டாகும், அருளுண்டானால் அன்புண்டாகும், அன்புண்டானால் சிவானுபவமுண்டாகும்.*

 *தத்துவ வொழுக்கம் பற்றிச் சமயங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. தொழிலொழுக்கம் பற்றி ஜாதிகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன.*  


*தயவை விருத்தி செய்வதற்குத் தடையாயிருப்பன சமய ஏற்பாடு ஜாதியேற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள்.*


*அவையாவன: ஜாதியாசாரம், குலாசாரம், ஆசிரம ஆசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாஸ்திராசாரம் முதலிய ஆசாரங்கள்.*


 *ஆதலால் மேற்குறித்த ஆசாரங்கள் ஒழிந்து, சுத்தசிவ சன்மார்க்க சத்திய ஞான ஆசாரத்தை வழங்கிப் பொது நோக்கம் வந்தால், மேற்படி காருண்யம் விருத்தியாகிக் கடவுள் அளைப் பெற்று, அனந்த சித்தி முத்திகளைப் பெறக்கூடுமேயல்லது, இல்லாவிடில் கூடாது.!* 


*மேலே கண்ட சுத்த சன்மார்க் சத்திய ஞானாசாரம் என்னும் உண்மையை அறிந்து வாழ்க்கையில் கடைபிடித்து வாழ்ந்தால் மட்டுமே இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப் பெற்று, ஊன  உடம்பை ஒளி உடம்பாகிய அருள் தேகமாக மாற்றி  மரணத்தை வென்று,என்றும் எதனாலும், எவராலும் அழியாத அழிக்க முடியாத அருள் தேகத்தை பெற்று வாழ்வதே பேரின்ப சித்தி பெருவாழ்வு என்பதாகும், அதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாக வாழ்வாங்கு வாழ்வதாகும்.*


*வள்ளலார் பாடல்!*


காற்றாலே புவியாலே ககனமத னாலே

கனலாலே புனலாலே கதிராதி யாலே


கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே

கோளாலே பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களாலே


வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்

மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே


ஏற்றாலே இழிவென நீர் நினையாதீர் உலகீர்

எந் தந்தை அருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.! 


*என்னும் பாடலில் தான்பெற்ற அனுபவத்தை தெளிவாக வள்ளலார் வெளிப்படுத்துகின்றார்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்*

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக