*கடவுளைக் கண்டேன்!*
தொடர்ச்சி பாகம் 7.
*வள்ளலார் பாடல் !*
எல்லாம் செய்வல்ல தெய்வம் எங்கும் நிறை தெய்வம்
என்னுயிரில் கலந்து எனக்கே இன்பம் நல்கும் தெய்வம்
நல்லார்க்கும் நல்ல தெய்வம் நடுவான தெய்வம்
நற்சபையில் ஆடுகின்ற நடராஜ தெய்வம்
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் தெய்வம்
காரணமாம் தெய்வம் அருட் பூரணமாம் தெய்வம்
செல்லாத நிலைகள் எல்லாஞ் செல்லுகின்ற தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்!
*மேலே கண்ட பாடல் எல்லோருக்கும் பொதுவான பாடலாகும். கற்றவர் கல்லாதவர் என்ற பேதம் இல்லாமல், அவரவர் செய்கைக்கு ஒழுக்கத்திற்கு தகுந்தாற் போல் மனிதனின் ஆன்ம சிற்சபையில் உள் ஒளியாக நிறைந்து கடவுள் காரிய காரணமாக விளங்கிக் கொண்டு உள்ளார் என்பதை இப்போது என்னால் புரிந்து உணர்ந்து கொள்ள முடிகிறது.*
*ஈரோட்டில் ஸ்பென்ஸர்ஸ் என்ற பெயரில் டைலரிங் ஷோரூம் ஆரம்பித்து நிறைந்த வாடிக்கையாளர்களை தன்வசமாக வரவழைத்து எல்லோராலும் பாராட்டும் அளவிற்கு வெற்றி நடை போட்டு பெரிய அளவில் புகழுடன் நடைபெற்று வந்து கொண்டு இருந்தது*
*ஈரோட்டில் டைலரிங் தொழிலில் நான் ஒரு கதாநாயனாக திகழ்ந்தேன், எனது நடை உடை பாவனை, மற்றும் தொழிலில் புதிய புதிய மாடல், சரியான பிட்டிங்,அழகு அலங்காரம் போன்ற கலை நுணுக்கங்களால் தையல் தொழிலில் புதிய திருப்பம், திறமை, நேர்மை, மரியாதை, நாணயம், நேரம் தவறாமை வாடிக்கையாளர்கள் எல்லோரையும் கவர்ந்தது. அதிகம் பெண் வாடிக்கையாளர்கள் நிறைந்து வழிந்தது*
*பெரிய அளவில் பொருள் செலவு செய்து திருமணம் செயபவர்கள் விலை உயர்ந்த பட்டு துணிகள் மற்றும் விலை உயர்ந்த எந்த துணிகளாக இருந்தாலும் எங்கள் கடைக்குத்தான் நம்பிக்கையுடன் வருவார்கள் அவர்கள் நம்பிக்கைக்கு தகுந்தாற்போல் அனைவரையும் திருப்தி படுத்தி விடுவோம்*
ஓய்வு இல்லாத தொழில்..
*ஓய்வு இல்லாத தொழில் வளம் பெற்று வளர்ந்து கொண்டே இருந்தது.*
*அக் காலத்தில் ரெடிமேட் எதுவும் அதிகமாக கிடையாது. தீபாவளி வந்து விட்டால் மூன்று மாதம் இரவு பகல் இடைவிடாது தையல் தொழில் செய்து வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.*
*1969 ஆம் ஆண்டு தையற் கடை வைக்கும் போது வருமானத்திற்கு தகுந்தாற் போல் மாதம் 30 ரூபாய் வாடகை வீடு ஒரே ரூம், அதில் நான் மனைவி முதல் குழந்தை மூவரும் அந்த சிறிய வீட்டில் குடி இருந்தோம்*.
*தொழில் வளர வளர ஒரே வருடத்தில் 250 ரூபாய் மாத வாடகைக்கு குடி பெயர்ந்தோம்,அதில் ஒரு ஹால், ஒரு பெட்ரூம், தனி சமையல் அறை போன்ற வசதிகள் மட்டும் இருக்கும். மனைவிக்குத் துணையாக வீட்டு வேலைக்கும் ஒர் பெண்ணை அமர்த்தி கொண்டோம்*
*ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கும் எங்கள் மாமியார் வீட்டிற்கு குழந்தையுடன் சென்று விடுவது வழக்கம்.*
*அந்த வருடம் தீபாவளி பண்டிகை வந்தது மூன்று மாதம் இடைவிடாது வேலை முடிந்து மாமனார் வீட்டிற்கு சென்று விட்டோம்.*
குடி பழக்கம்!
*தீபாவளி பண்டிகை யொட்டி இரவு பகல் தூங்காமல் வேலை செய்ததால் எழுந்திருக்க முடியாமல் அசதியாக படுத்தே இருந்தேன். எனது மாமனார் இன்டியன் ஸ்டேட் வங்கியில் பணி புரிந்து வருகிறார். அவர் என் அருகில் வந்து எழுப்பி இதை குடிங்க சோம்பல் அசதி எல்லாம் நீங்கிவிடும் என்று ஒரு டம்ளரில் ஏதோ ஊற்றி கொடுத்தார் நானும் மாமனார் கொடுக்கின்றாறே என்று மறுக்காமல் மரியாதை நிமித்தமாக, வேண்டா வெருப்பாக வாங்கி குடித்து விட்டேன். கொஞ்சம் சகப்பு கலந்த துவர்ப்பாக இருந்தது விர் என்று உடம்பு முழுவதும் ஒரு விதமான மாற்றம் உண்டாயிற்று .*
*அடுத்து காலை உணவு கோழிக் குழம்பு இட்லி தோசை,பணியாரம் கொடுத்தார்கள் நானும் மாமனாரும் ஒன்றாக அமர்ந்து திருப்தியாக உண்டோம்.*
*மதியம் ஆட்டுகறி குழம்பு,மட்டன் பொரியல் சாப்பாடு. மாப்பிள்ளை இப்ப கொஞ்சம் சாப்பிடுங்க என்று மறுபடியும் ஊற்றி கொடுக்க நானும் அவரும் சாப்பிட்டோம். அப்படியே ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை யானால் பனைமரத்துக்கள்,சாராயம்,பிராந்தி,விஸ்கி குடிக்கும் பழக்கம் உண்டாயிற்று சிகரெட் பிடிக்கும் பழக்கமும் உண்டாயிற்று ஒரு நாளைக்கு பத்து பாக்கெட் சிகரெட் பிடிக்கும் பழக்கம் தொற்றிக் கொண்டது.*
*சிறுவயதில் இருந்து எந்த கெட்ட பழக்கமும் என்னிடம் இல்லை.திருமணம் முடிந்து மாமனார் மூலமாக குடி பழக்கம் உண்டாயிற்று. எவ்வளவு குடித்தாலும் தடுமாற்றமோ தவறான வார்த்தைகளோ என்னிடம் இருக்காது. நான் குடிப்பது வெளியில் யாருக்கும் தெரியாது. ஞாயிற்றுக்கிழமை மட்டுமே குடிப்போம்.*
*அடுத்து போலீஸ் பயமில்லாமல் குடிப்பதற்காக எனக்கும் மாமனாருக்கும் அரசாங்க (அனுமதி) பர்மிட் வாங்கி விட்டோம். சேலம் அல்லது கோயம்புத்தூர் சென்று சிந்தாமணியில் தான் வாங்கிவர வேண்டும். மாதம் நான்கு புல் பாட்டில் கொடுப்பார்கள். நாங்கள் குடியைக் கெடுக்கும் குடிக்காரகள் இல்லை. கவுரமான குடிக்காரர்கள் எங்களால் யாருக்கும் எந்தவிதமான இடையூறுகளும் வராமல் பார்த்துக் கொள்வோம்*
*எப்படி இருந்தாலும் நாங்கள் குடிப்பது என் மனைவிக்கு பிடிக்கவில்லை எதிர்த்து பேசவும் வாய்ப்பு இல்லை, அவ்வளவு மரியாதை கலந்த அன்பு பாசம் காதல் உள்ளவள்*
*பெண்கள் விரும்புவார்கள்!*
*தொழில் ரீதியாகவும் என்னுடைய இளம் வயது, அன்பு அழகு இனிமையானபேச்சு, பழக்கம் வாய்மை,தூய்மை கலந்த தோற்றத்தின் ரீதியாகவும் நிறைய படித்த வசதியான பெண்கள் என்னை காதலிக்க தூண்டுவார்கள். பொருள் ஆசையைக் காட்டி என்னை விரும்புவார்கள் எவ்வளவு அழகான பெண்களாக இருந்தாலும் என் மனத்தில் யாருக்கும் இடம் கொடுக்க மாட்டேன். யாருக்கும் அடங்க மாட்டேன். நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, அஞ்சாநெஞ்சம் கொண்டவனாக திகழ்ந்தேன்*
*அப்போது நடந்ததை இப்போது நினைக்கும் போது வள்ளலார் பாடல் ஞாபகம் வருகிறது.*
மங்கையர் எனைத்தாம் வலிந்துறுந் தோறும் மயங்கி நாம் இவரொடு முயங்கி
இங்கு உளம் களித்தால் களித்தவர்க்கு உடனே இன்னல் உற்றிடும் நமக்கு இன்னல்
தங்கிய பிறர்தம் துயர்தனைக் காண்டல்
ஆகும் அத்துயர் உறத் தரியேம்
பங்கம் மீ தெனவே எண்ணி நான் உள்ளம் பயந்ததும் எந்தை நீ அறிவாய்!
*வள்ளலாரை மாப்பிள்ளை சாமி என்று போற்றி புகழ்வார்கள், அவ்வளவு அழகாக இருப்பாராம், மற்றவர்கள் தம் உடம்பை பார்க்க கூடாது என்பதற்காக ஆடையால் உடம்பு முழுவதையும் மறைத்துக் கொள்வார்.*
*வள்ளலார் உடம்பை மறைக்க பல காரணங்கள் அதில் இதுவும் ஒன்று. பல பெண்கள் வள்ளலாரை அனுபவிக்க பலமுறை முயற்சி செய்துள்ளார்கள்.வள்ளலார் அவர்களை கடிந்ததும் இல்லை கலந்ததும் இல்லை என்பார்கள்.*
வள்ளலார் பாடல் !
வைகிய நகரில் எழிலுடை மடவார் வலிந்து எனைக் கை பிடித்து இழுத்தும்
சைகை வேறு உரைத்தும் சரச வார்த்தைகளால் தனித்து எனைப் பலவிசை அறிந்தும்
பொய் கரைந்தானை புகன்று மேல் விழுந்தும் பொருள் முதலிய கொடுத்து இசைத்தும்
கை கலப் பறியேன் நடுங்கினேன் அவரைக் கடிந்ததும் இல்லை நீ அறிவாய்!
*என்னும் வள்ளலார் பாடல் போல் என் வாழ்க்கையிலும் நிறைய நடந்துள்ளது என்பதை நினைக்கும் போது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னை எப்படி எல்லாம் காப்பாற்றி வந்துள்ளார் என்பதை நினைக்கும் போது மிகவும் அதிசயமாய் ஆச்சரியமாய் உள்ளது.*
*மேலும் உடம்பை கெடுக்கும் உயிரை அழிக்கும் உயிர்க்கொலையான மாமிசம் உண்பதும். அறிவை கெடுத்து தெளிவை மறைக்கும் குடிப்பழக்கமும். சுவாசத்தை கெடுக்கும் புகைப்பழக்கமும் செய்துகொண்டும், பொய்யான ஆன்மீக வேடம் தரித்துக்கொண்டும் பல தெய்வங்களை வணங்குவதும் வழிபட்டு வந்ததையும் இப்போதும் என்னை நான் நினைக்கும் போது, அப்போது எனக்கு அவ்வளவு அற்ப அறிவாக இருந்துள்ளது என்பதை நினைக்கத் தோன்றுகிறது.*
*இப்போது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னை ஏறாநிலைமிசை ஏற்றி வைத்து உள்ளார், ஏன் என்றால் ? எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது,ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால் என்னைப்போல் பெரிய ஆன்ம லாபத்தை பெறுவீர்கள்.இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டு இருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா ? என்றால் எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்*
*இவை எல்லாம் வள்ளலார் எழுதிய திருஅருட்பாவைப் படித்தபிறகு எனக்கு தோன்றிய அறிவு ஆற்றல் அருளால் கிடைத்த தெளிவான மாற்றங்களாகும்.*
*வள்ளலார் பாடல்!*
மாயையாற் கலங்கி வருந்திய போதும்
வள்ளல் உன் தன்னையே மதித்துன்
சாயையாப் பிறரைப் பார்த்ததே அல்லால்
தலைவவே றெண்ணிய துண்டோ
தூயபொற் பாதம் அறியநான் அறியேன்
துயர் இனிச் சிறிதும் இங் காற்றேன்
நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தே
நன்றருள் புரிவதுன் கடனே.!
*என்னும் பாடல் என்னை பொய்யில் இருந்து விலகி உண்மை அறிய மடை மாற்றம் செய்து மயக்கத்தை தெளிவித்து உண்மைக் கடவுளைத் தேட தூண்டியது இப்போது மிகவும் தெளிவாக உள்ளேன்.*
*ஒவ்வொரு மனித ஆன்மாக்களும் வள்ளலார் காட்டிய சாதி,சமயம்,மதம் கடந்த "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின்" பொது நெறியான தனித்தன்மை வாய்ந்த மெய் நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருளை நன்கு உணர்ந்து பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே ஆன்ம லாபத்தையும் அருள் லாபத்தையும் பெற்றுக் கொள்ள முடியும் இதுவே சத்திய உண்மையாகும்*
அடுத்து 1970 ஆம் ஆண்டு என் மனைவி கர்பமானால்...
தொடரும்....
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக!
அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக