*கடவுளைக் கண்டேன்!*
தொடர்ச்சி 6..
*வள்ளலார் பாடல்!*
அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் சோதியை என்
அம்மையை என் அப்பனை என் ஆண்டவனை அமுதைத்
தெருளுறும் என் உயிரை என்றன் உயிர்க்குயிரை எல்லாம்
செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியை
மருவுபெரு வாழ்வை எல்லா வாழ்வும் எனக் களித்த
வாழ்முதலை மருந்தினை மா மணியை என்கண் மணியைக்
கருணைநடம் புரிகின்ற கனகசபா பதியைக்
கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.!
மேலே கண்ட வள்ளலார் பாடல் எமக்கு அனுபவ ரீதியாக நினைவூட்டுகின்றது.
*அன்பர்கள் வேண்டுகோளுக்கு இணங்க வரலாறு தொடர்கிறது,*
*காணும் பொங்கல் அன்று சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள பூந்துறை ரோடு பழனி செல்லும் சாலையில் உள்ளது அசோகபுரம் என்னும் ஊர் என் மாமனார் வீடு, விடியற்காலை 5-30 மணிக்கு திடீர் என்று வீட்டின் உள்ளே சென்றேன்.*
மனைவியின் சோகம் கலந்த முகம்!
*மனைவியையும் குழந்தையும் அம்மா வீட்டிற்கு அனுப்பிவிட்டு கணவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியாமல் சோகமான வாடிய முகத்தோடு தன் குழந்தையை அனைத்து படுத்துக்கொண்டு இருந்த காட்சியைப் பார்த்து கண்ணீர் வடிய கதறி அழுதுவிட்டேன்.மழைமுகம் கண்ட பயிர்போல் என் மனைவி அமுதாவின் முகத்தில் மகிழ்ச்சி கலந்த புன்னகை, பேச்சுவராமல் தடுமாறிய வாயின் ஆனந்தம், மலர்ந்த விரிந்த பூ போல் முகம், காணாததை கண்ட பூரிப்பு,மவுன துடிப்புடன் எழுந்து அனைத்துக்கொண்டு ஆனந்த கண்ணீர் வடித்து அனைத்துக் கொண்டாள் என்மனைவி அமுதா. சிறிதுநேரம் இனம்புரியாத மவுனம் அந்த மவுனத்தில் எண்ண அலைகளின் ஆற்றல், எழுதமுடியாத வரிகள் "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!*"
*திருமணம் முடிந்த நாளில் இருந்து இன்றுவரை என் மனைவி என்னை அன்போடு, ஆசையோடு, ஆர்வத்தோடு காதலித்து வருகிறாள். என் மனைவி எனக்கு கிடைத்த விலை மதிப்பில்லா பொக்கிஷம்.*
வீடே ஆனந்த அமைதி!
*வீட்டில் உள்ளவர்கள் மாமனார் மாமியார் மற்றும் மனைவியின் அண்ணன்கள் தங்கைகள் அனைவரும் எழுந்து அமர்ந்து மலர்ந்த முகங்களோடு அமர்ந்து மவுனம் காத்தனர். நான் வீட்டிற்கு சென்றதும் சோகவம்சம் ஆனந்த வம்சமானது*
நடந்ததை மனைவியிடம் தெரிவித்தல்!
*சென்னை சென்ற விபரங்களையும் தையல் தொழில் கற்றுக்கொண்ட விபரங்கள் யாவையும் ஓர்அளவு சொல்லிவிட்டு,இனி நாம் நம் ஊருக்கு போக வேண்டாம் ஈரோட்டிலே ஒரு தையல் கடை வைத்து தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற முடிவு செய்தோம்*
*நான் சொல்லிய விபரங்கள் அனைத்தையும் என்மாமனார் மாமியார் இடம் என் மனைவி தெளிவாக சொல்லி விட்டாள்.*
ஊரில் உள்ள நிலம் விவசாயம் கடைஎல்லாம் என்னாவது என்று என்மாமனார் மாமியார் கேட்டுள்ளார்கள், அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்றும் சொல்லிவிட்டார்.நாம் சொந்த கடைவைத்து சொந்த காலில் நிற்போம், உழைத்து முன்னேறுவோம் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார் என்பதை அவள் அப்பா அம்மாவிடம் தெரிவித்து விட்டாள்
*டைலர் கடை வைக்க ஆயுத்தம்!*
*என் மனைவியின் அண்ணன், எனது மைத்துனர் நடராஜ் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்து அதற்கு வேண்டிய வேலைகள் நடந்து கொண்டு உள்ளன. திருமணம் முடிந்ததும் தையல் கடை வைத்துக் கொள்ளலாம் அதுவரை பொறுமையாக இருக்கச் சொன்னார் எனது மாமனார்*
*உன் அப்பாவிடம் உதவியோ பணமோ கேட்கவில்லை கேட்கவும் வேண்டாம், உன் அண்ணன் திருமணத்திற்குள் நாம் கடை வைத்து நம் கடையில்தான் திருமணத்திற்கு வேண்டிய துணி தைத்துக் கொடுக்க வேண்டும், அதற்குள் நாம் எப்படியாவது தையற்கடை திறப்புவிழா செய்தே ஆகவேண்டும் என்று திட்டவட்டமாக என் மனைவியிடம் சொல்லிவிட்டேன்,அவளும் தடையில்லாமல் ஒப்புக்கொண்டார்*
*கையில் பணம் இல்லை!*
*என் மனைவி கழுத்தில் பத்து பவுன் சையின் போட்டு இருந்தார்( அப்போது ஒரு பவுன் விலை 150 ரூபாய் )அவற்றை பெற்று ஈரோட்டில் "ஜானகிஆச்சு'" என்ற நகை அடகு கடையில் வைத்து ஆயிரம் ரூபாய் கிடைத்தது, ஈரோட்டில் முக்கியமான பெயர்பெற்ற பிரப்ரோட்டில் உள்ள ஒரு கடைக்கு அட்வான்ஸ் ஆயிரம் கொடுத்து கடைசாவியைப் பெற்றுக் கொண்டேன்.*
*மேலும் தையல் மிஷின்கள் மற்றும் கடைக்கு வேண்டிய கட்டிங்டேபிள் ஷோரூமுக்கு வேண்டிய பொருட்கள் வாங்குவதற்கு பணம் வேண்டும். கடைக்கு வேண்டிய பொருட்கள் வாங்குவதற்கு பணம் இல்லாமல் தடுமாறுவதை அறிந்த என் மனைவியின் பெரியப்பாவின் மருமகன் அதாவது எனது பெரிய மாமனார் மருமகன் காலத்தைக் கருதி தேவையைக் கருதி எவற்றையும் எதிர்பார்க்காமல் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து உதவி செய்தார். அவர் விவசாயம் செய்பவர். இன்றுவரை அவர் செய்த உதவியை நன்றி உணர்வோடு எண்ணி பார்க்கிறேன், மறக்கவே முடியாது நினைவுகள்*
*கடையின் பெயர் "ஸ்பென்ஸர்ஸ் டையலரிங்"*
*"ஸ்பென்ஸர்ஸ்" என்ற தலைப்பில் கடைக்குப் பெயர் வைத்து ஷோரூம் அமைத்து பத்திரிகை அடித்து, சிறப்பான முறையில் முக்கியமானவர்களை வரவழைத்து கடை திறப்புவிழாசெய்தோம். ஈரோட்டில் வித்தியாசமான,புதுமையான சிறப்பானதொரு தையற்கடையை ஈரோடு மக்கள் விரும்பும் அளவிற்கு புதிய கோணத்தில் திறப்புவிழா செய்து தொழிலை ஆரம்பித்துவிட்டேன்.*
*பெண்கள் ஆண்கள் என வாடிக்கையாளர்கள் அதிகமாக வருகை புரிந்தனர். தையற்தொழிலில் ஒரு புதுமையைப் புகுத்தினேன்.*
*வாடிக்கையாளர்கள் துணி தைக்க கொடுத்துவிட்டு அலைய வேண்டியதில்லை*
*ஆர்டர் டேட், டிரைய்லர் டேட்,டெலவரி டேட் அதாவது துணி கொடுக்கும் நாள்,சரிபார்க்கும் நாள், வாங்கும் நாள்,அதற்குண்டான பணம் போன்ற விபரங்களுடன் பில் தயார் செய்து எழுதிக் கொடுத்து வாடிக்கையாளர்களின் மனப்போக்கை மாற்றி தையற் தொழிலின் சிறப்பை வெளிப்படுத்தினேன்,வாடிக்கையாளர்களும் அளவுகடந்த மனம் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட நாளில் வருகை புரிந்து தைத்த துணிகளை பெற்று சென்றனர்.*
*தையக்காரன் என்ற வார்த்தையை டைலர் என்ற வார்த்தையை உபயோகிக்க செய்தேன்.*
*ஈரோடு மாவட்டத்தில் மிகச்சிறந்த தையல் ஷோரூம் "ஸ்பென்ஸர்ஸ்" தான் என்ற பெயர் பெற்றது. மாவட்டத்தின் உயர் அதிகாரிகளும், கல்லூரி மாணவ மாணவிகளும்படித்தவர்கள் படிக்காதவர்கள,மற்றும் விலைஉயர்ந்த துணிகள் வாங்கும் வசதியானவர்களும் எங்கள் கடைக்கு குவியத் தொடங்கினார்கள்.*
*எங்கள் கடையில் துணி தைப்பதற்கு மற்ற கடைகளைவிட அதிகமான பணம் வாங்குவோம் என்பது அனைவருக்கும் தெரியும் (ஸ்பென்ஸர்ஸ்ரேட் என்று சொல்வார்கள்) அந்த அளவிற்கு சரியான முறையில் அளவு எடுத்து அவரவர்கள் உடம்பிற்குத் தகுந்தவாறு தைத்து தரப்படும்*
*என்பெயர் கதிர்வேல் என்பது எவருக்கும் தெரியாது, ஸ்பென்ஸர் என்ற பெயரே எமக்கு நிரந்தரமாயிற்று*
*சொல்லியவாறு செய்தேன்!*
*என் மைத்துனர் திருமணத்திற்கு முன்பே தையல் கடையை ஆரம்பித்து, எனது மைத்துனர் திருமணத்திற்கு வேண்டிய துணைகளை எங்கள் கடையிலே தைத்து கொடுத்து திருமணம் நடைபெற்றது*
*எதிலும் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, நேர்மை, ஒழுக்கம், இரக்ககுணம் உழைப்பு ,தொழிலில் பற்றுதல்,செய்யும் தொழிலே தெய்வம் என்ற பற்றுதல் இருந்தால் போதும் எந்தவொரு மனிதனும்,எந்த தொழிலாக இருந்தாலும் எதிர்ப்பு இல்லாத, தடையில்லாத முன்னேற்றம் அடையலாம், என்றும் மனநிறைவோடு வாழலாம்.*
*எல்லாம் வல்ல நமது அருட் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்றும் துணையாக இருப்பார் என்பது சத்தியம்*
*வள்ளலார் பாடல்!*
*அருட்சோதித் தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம்*
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
*இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்*
*எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்*
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.!
*என்னும் பாடல் வரிகளுக்கு ஏற்ப அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், எனக்கேத் தெரியாமல் என்னுள் அமர்ந்து என்னை இயக்கிக் கொண்டே உள்ளார் என்பதை இப்போதும் உணர்ந்து மகிழ்ச்சி அடைகிறேன்.*
தொடரும்..
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக