*திருஅருட் பெருவெளி !*
*திருஅருட் பெருவெளி என்பது இயற்கை உண்மை கடவுளாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருவருட் செங்கோல் வளத்தோடு செலுத்தும் அருள் நிறைந்த பெருவெளியே திருஅருட் பெருவெளியாகும்*
*அந்த மாபெரும் திருஅருட் பெருவெளியை கண்டு பிடித்தவர் வள்ளலார் ஒருவர் மட்டுமே.இதுவரையில் அப்பெரு வெளிக்குள் சென்றவர்கள் ஒருவரும் இல்லை.*
*உயர்ந்த அறிவு பெற்ற மனித அத்மாக்கள் மட்டுமே அங்கு செல்வதற்கு உண்டான வாய்ப்பையும் தகுதியையும் பெற்றவைகளாகும்.அங்கு செல்ல வேண்டுமானால் பஞ்சபூத மனித தேகத்தோடு செல்ல முடியாது.அருட்பெருவெளியில் அருள் ஆட்சி செய்யும் இயற்கை உண்மைக்கடவுளாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று அருட்தேகமாக மாற்றிக் கொண்டால் மட்டுமே அருட்பெருவெளிக்குச் செல்லமுடியும் என்பதை ஒவ்வொரு சுத்த சன்மார்க்க அன்பர்களும்,மற்றும் மனித தேகம் எடுத்த அனைவரும் அவசியம் தெரிந்த கொள்ள வேண்டும்*
*வள்ளலார் பாடல்!*
வண்ணமிகு பூதவெளி பகுதிவெளி முதலா
வகுக்குமடி வெளிகளெலாம் வயங்கு வெளியாகி
எண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல்
இசைத்த பர வெளியாகி இயல்உபய வெளியாய்
அண்ணுறு சிற் பரவெளியாய்த் தற்பரமாம் வெளியாய்
அமர்ந்த பெரு வெளியாகி அருளின்ப வெளியாய்த்
திண்ணமுறும் *தனிஇயற்கை உண்மைவெளி யான*
திருச்சிற்றம் பலந்தனிலே *தெய்வமொன்றே கண்டீர்.!*
மேலே கண்ட பாடலில் பல திடுக்கிடும் உண்மைகளை வெளிப்படுத்துகின்றார் வள்ளலார்.
*வெளிகள்!*
*பல கோடிக்கணக்கான அண்டங்களையும், உலகங்களையும் படைத்து, அவைகளுக்கு இடை இடையே ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ள முடியாத, இணையமுடியாத, அளவிடமுடியாத அளவுகள் கொண்ட இடை இடையே உள்ள வெளிகளையும்படைத்து*,
*மேலும் பஞ்சபூத உலகங்களில் உள்ள,பலகோடி வெளிகளையும் படைத்து, எண்ணில் அடங்காத ஆத்மாக்களையும் அனுப்பி அவைகளுக்கு உயிர் கொடுத்து, உடம்பு கொடுத்து,பஞ்சபூத வெளியில், உலகில் வாழ்வதற்கு எல்லாவிதமான வழிமுறைகளையும் அமைத்து கொடுத்து வாழ்வதற்கு வழிகாட்டி எல்லாவிதமான வசதி வாய்ப்புகளை யும் செய்து கொடுத்து இயங்கி இயக்கிக் கொண்டு உள்ளவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்*
*எல்லா வெளிகளையும் படைத்து இயங்க வைத்துக் கொண்டு, தனி இயற்கை உண்மை வெளியான தனிஇன்ப வெளியாகிய அருட் திருச் சிற்றம்பலத்திலே தனிச் செங்கோல் நடத்தும் இறைவர் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்! என்பவராகும்.*
*சமயங்கள். மதங்கள்!*
உலகில் உள்ள சமயங்கள் மதங்கள் யாவும் இயற்கை உண்மை கடவுள் யார்? என்று தெரியாமல் உண்மைக்கு புறம்பான தத்துவ கடவுள்களைத் தோற்றுவித்து *மக்களை குருடர்கள் போல் அலையவிட்டு விட்டார்கள்.*
*வள்ளலார் பாடல்!*
எவ்வுலகில் எவ்வௌர்க்கும் *அரும்பெருஞ்சோதியரே*
இறைவர் என்ப தறியாதே இம்மதவா திகள் தாம்
கவ்வைபெறு *குருடர்கரி கண்டகதை போலே*
கதைக்கின்றார் *சாகாத கல்விநிலை அறியார்*
நவ்விவிழி யாய் இவரோ சிலபுகன்றார் என்றாய்
*ஞானநடம் கண்டேன்* *மெய்த் தேன்அமுதம் உண்டேன்*
செவ்வை பெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே
சேர்ந்தேன் அத் தீமொழியும் தேமொழி
ஆயினவே.!
மேலும்
மதம்எனும் பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர் எல்லாம்
மன்றிடத்தே வள்ளல்செயும் மாநடம்காண் குவரோ
சதம்எனவே இருக்கின்றார் படுவதறிந் திலரே
*சாகாத கல்விகற்கும் தரம்இவர்க்கும் உளதோ*
பதம் அறியா இந்த மதவாதிகளோ சிற்றம்
பலநடங் கண் டுய்ந்தேனைச் சிலபுகன்றார் என்றாய்
சுதைமொழி நீ அன்றுசொன்ன வார்த்தை அன்றோ இன்று
தோத்திரஞ் செய்து ஆங்காங்கே தொழுகின்றார் காணே.!
*சமய மதங்களை சார்ந்தவர்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தெரிந்து கொள்ளமுடியாமல்,தொடர்பு கொள்ள வழி தெரியாமல் எவ்வாறு அலைந்து அழிந்து கொண்டுள்ளார்கள் என்பதை மேலே கண்ட பாடல்களின் வாயிலாக தெளிவாக விளக்குகின்றார் வள்ளலார்.
*சாகாமல் இருக்கவும் சாகாக்கல்வி கற்றுக் கொள்ளவும் மரணத்தை வெல்லவும் கற்றுத்தரும் ஒரே கொள்கை வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.*
*சன்மார்க்கிகள்*
*வள்ளலார் கொள்கையை பின்பற்றும் சன்மார்க்க அன்பர்கள், வள்ளலார் எழுதிய திருஅருட்பாவை முழுவதும் படித்து,அதில் உள்ள சூழ்நிலைக்கேற்ற கருத்துக்களையும், நன்மை தீமைகளையும், அவற்றில் உள்ள உளவுகளையும், அன்பு தயவு கருணை கொண்டு அறிவு விளக்கத்தோடு தெரிந்து கொள்ளாமல், சமய மதவாதிகள் போலவே ஒன்றுகிடக்க ஒன்றை உளரிக்கொண்டும்,சமய மதம் சார்ந்த ஆச்சார சங்கற்ப விகற்பங்களை கடைபிடித்தும், பின்பற்றியும் வாழ்ந்து வருகிறார்கள்.*
*வள்ளலார் காலத்தில் அவருடன் இருந்தவர்களும் சமயம் மதம் சார்ந்தவர்களாகவே இருந்தார்கள். இப்போதும் அதே நிலையில் தான் உள்ளார்கள்.*மாற்றம் எதுவும் தெரியவில்லை*
*சன்மார்க்கிகள் என்பவர்கள் உயிர்க்கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் உள்ளார்கள்.*
*முடிந்த அளவு சொந்த பணத்திலோ மற்றவர்களிடம் பணமோ பொருளோ பெற்று தங்களால் இயன்ற அளவு பசிப்பிணி யாற்றி வருகிறார்கள். கடவுள் கொள்கையான சத்விசாரத்தில் முழுமையாக எவரும் பின்பற்றுவதில்லை,*
*வள்ளலார் பாடல்!*
மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்
மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ
சற்றும் அதை நும்மாலே தடுக்கமுடி யாதே
*சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை*
எற்றிநின்று தடுக்கவல்லார் *எவ்வுலகில் எவரும்*
இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்
பற்றிய பற்று அனைத்தினையும் *பற்றற* விட் டு அருள் அம்
பலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே.!
*பற்றிய பற்று அனைத்தையும் பற்று அற விட்டால் மட்டுமே அருட்பெருவெளியில் உள்ள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று மரணத்தை வெல்ல முடியும்.* என்பதை ஒவ்வொரு சன்மார்க்க அன்பர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.
*இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது மற்று என்று வருமோ அறியேன் எங்கோவே---*
*துன்று மல வெம்மாயை அற்று வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம்!*
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக