அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

செவ்வாய், 21 ஜூன், 2022

ஞான தேகம்!

 *ஞான தேகம்!*


*முத்தேக சித்தி என்னும் ஞான தேகத்தை பெற்றவர் வள்ளலார்.*


*உயர்ந்த அறிவு பெற்ற மனித தேகம் பெற்றவர்கள் அனைவரும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருள் பெற்று பஞ்சபூத தேகமான வாடகை வீட்டை    அருள் தேகமாக மாற்றம் செய்வதே சொந்த வீடாகும். சொந்த வீடான  முத்தேக சித்தி என்னும் அருள் ஒளி தேகம் பெற்றவர்களே மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாற்றம் அடைய முடியும். இதுவே ஆன்மீகத்தின்இறுதி நிலையாகும்*


வள்ளலார் பாடல்!


பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்

சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்


நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும்பேற்றை

ஓதி முடியாது என்போல் இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.! 


*மேலே கண்ட பாடலில் என்போல் எல்லோரும் ஆண்டவரைத் தொட்பு கொண்டு அருள் பெற்று மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ வேண்டும் என்ற பொது நோக்கமான ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் தான் பெற்ற நெடும் பெரும் பேற்றை ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படுத்தி உள்ளார் வள்ளலார்*


*அருள் பெறும் பொழுது பஞ்ச பூத உடம்பு கரைந்து எவ்வாறு மாற்றங்கள் அடையும் என்பதை அருட்பெருஞ்ஜோதி அகவலில் எளிய தமிழில் தெளிவாக பதிவு செய்து உள்ளார்!*


அகவல்!


725. தோலெலாங் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும்

மேலெலாங் கட்டவை விட்டுவிட் டியங்கிட


726. என்பெலா நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட

மென்புடைத் தசையெலா மெய்யுறத் தளர்ந்திட


727. இரத்தம் அனைத்தும் உள் இறுகிடச் சுக்கிலம்

உரத்திடை பந்தித்து ஒருதிர ளாயிட


728. *மடலெலாம் மூளை மலர்ந்திட* *அமுதம்*

*உடலெலாம்* *மூற்றெடுத் தோடி நிரம்பிட*


729. ஒண்ணுதல் வியர்த்திட வொளிமுகம் மலர்ந்திட

தண்ணிய வுயிர்ப்பினிற் சாந்தந் ததும்பிட


730. உண்ணகை தோற்றிட வுரோமம் பொடித்திடக்

கண்ணினீர் பெருகிக் கால்வழிந் தோடிட


731. வாய்துடித்து  அலறிட வளர்செவித் துணைகளிற்

கூயிசைப் பொறியெலாங் கும்மெனக் கொட்டிட


732. மெய்யெலாங் குளிர்ந்திட மென்மார்பு அசைந்திடக்

கையெலாங் குவிந்திடக் காலெலாஞ் சுலவிட


733. மனங்கனிந்து உருகிட மதி நிறைந்த்து ஒளிர்ந்திட

இனம்பெறு சித்தம் இயைந்து களித்திட


734. அகங்காரம் ஆங்காங்கு அதிகரிப்பு அமைந்திடச்

சகங்காண வுள்ளந் தழைத்து மலர்ந்திட


735. அறிவுரு வனைத்து மானந்த மாயிடப்

பொறியுறு மான்மதற் போதமும் போயிடத்


736. தத்துவம் அனைத்துந் தாமொருங் கொழிந்திடச்

சத்துவம் ஒன்றே தனித்துநின் றோங்கிட


737. உலகெலாம் விடய முளவெலா மறைந்திட

அலகிலா அருளின்  ஆசைமேற் பொங்கிட


738. என்னுளத் தெழுந்து உயி ரெல்லா மலர்ந்திட

என்னுளத் தோங்கிய என்றனி யன்பே


739. பொன்னடி கண்டருட் புத்தமு துணவே

என்னுளத் தெழுந்த வென்னுடை யன்பே


740. *தன்னையே யெனக்குத் தந்தரு ளொளியால்*

*என்னைவே தித்த என்றனி யன்பே*


741. என்னுளே யரும்பி யென்னுளே மலர்ந்து

என்னுளே விரிந்த என்னுடை யன்பே


742. என்னுளே விளங்கி யென்னுளே பழுத்து

என்னுளே கனிந்த வென்னுடை யன்பே


743. தன்னுளே நிறைவுறு தரமெலா மளித்தே

என்னுளே நிறைந்த என்றனி யன்பே


744. *துன்புள வனைத்துந் தொலைத்து* *எனது உருவை*

*யின்புறு வாக்கிய என்னுடை யன்பே*


745. 

*பொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டா*

*என்னுளங் கலந்த என்றனி யன்பே!*


*இறைவனைபொன்னார் மேனியனே என்பார்கள் அதேபோல் மனிதனும் பொன்மேனியாக மாற்றம் அடைந்தால் மட்டும் இறைவன் ஏற்றுக்கொள்வார் தன்னுடன் இணைத்து கலந்து கொள்வார்* இதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்.


*ஞான தேகத்தின் வல்லபம்!*


பேரின்ப லாபத்தை அடைந்தவர் பெருமை எது என்று அறிய வேண்டியது யாதெனில் ? 


1.*பொன் வடிவாகத் தோன்றுதல் மாத்திரமே அன்றி,ஆகாயம்போல் பரிசிக்கப்படாத சுத்த பூதகாரண பிரவண தேகத்தையும்,தோன்றுபடுதலும் இன்றி ஆகாயம் போல் விளங்குகின்ற ஞான தேகத்தையும் பெற்றவர்களாய் இருப்பார்கள்*


2, *உள்ளே மண்ணினது திண்மையால் தறிக்கப்படார்கள்.புறத்தே மண்,கல் முதலியவற்றால் எறியனும் அவை அவர் வடிவில் தாக்குவன அல்ல.*


3, *உள்ளே நீரினது தண்மையால் குளிரப்படார்கள்.புறத்தே நீரில் அழித்தினும் அவர் வடிவம் அழுந்தாது*


3, *உள்ளே நெருப்பினது வெம்மையில் சுடப்படார்கள்,புறத்தே நெருப்பில் சுடினும் அவர் தேகத்தில் சூடும் வடுவம் தோன்றுவன அல்ல*


4, *உள்ளே காற்றினது ஊக்கத்தால் அசைக்கப்படார்கள்; புறத்தே காற்று அவர் வடிவைப் பரிசித்து அசைக்க மாட்டாது.*


5, *உள்ளே ஆகாயத்தினது கலப்பினால் அந்தரிக்கப்படார்கள்,புறத்தே ஆகாயம் அவர் தேகத்தை அந்தரிக்க மாட்டாது.*


6,*ஆதாரத்தில் அன்றி நிராதாரத்திலும்  அவர் தேகம் உலாவும்*


7,*அவரது கண்கள் முதலிய ஞானேந்திரங்களும்,வாக்கு முதலிய கர்மேந்திரங்களும்,பார்த்தல் முதலிய விஷயங்களையும்,பேசுதல் முதலிய விஷயங்களையும் பற்றுவன அல்ல.தயையினால் விஷயங்களைப் பற்றவேண்டில்,சுவர்,மலை முதலிய தடைகளும்,அவர் கண்களை மறைப்பன அல்ல,அண்ட பிண்டங்களில் அகம் புறம் முதலிய எவ்விடத்தும் உள்ள விடயங்களை அவர் கண்கள் இருந்து இடத்து இருந்தே கண்டறியும்.*


8,*அண்ட பிண்டங்களில் எவ்விடத்திலிருந்து பேசினும் அவர் செவிகள் இருந்த இடத்திருந்தே கேட்டறியும்.*


9,*எவ்விடத்து இருக்கின்ற ரசங்களையும் அவர் நா,இருந்த இடத்திருந்தே சுவைத்தறியும்.*


10,*எவ்விடத்திருக்கின்ற பரிசங்களையும்,அவர் மெய் இருந்தவிடத்திருந்தே பரிசித்தறியும்*


11,*எவ்விடத்தில் இருக்கின்ற சுகந்தங்களையும் அவர் நாசி இருந்த இடத்திருந்தே முகந்தறியும்.*


12,*எவ்விடத்தில் இருக்கின்றவர்களுக்கும் அவரது கைகள்,இருந்த இடத்திடந்தே கொடுத்தல் கூடும்.*


13,*எவ்விடத்திலும் அவரது கால்கள் இருந்த இடத்திருந்தே நடத்தல் கூடும்.*


14,*அவரது வாக்கு எவ்விடத்தில் இருக்கின்ற எவ்வெவர்களோடும் இருந்த இடத்திருந்தே பேசுதல் கூடும்*


15,*மற்ற இந்திரியங்கள்,இருந்த இடத்திருந்தே எவ்விடத்தும் ஆனந்திருத்தல் கூடும்.*


15,*அவரது. மனம் முதலான கரணங்கள் எப்படிப்பட்ட விஷயங்களையும் பற்றுவன அல்ல; தயவினால் பற்றத் தொடங்கில்,எல்லா உயிர்களினது எல்லாச்  சங்கற்ப விகற்பங்களையும் ஒரு நிமிடத்தில் ஒருங்கே நினைத்து  விசாரித்து நிச்சயித்துக் கொள்ளும்*


16,*அவர் அறிவு ஒன்றையும் சுட்டியறியாது: சுட்டியறியத் தொடங்கில் எல்லா அண்டங்களையும்,எல்லா உயிர்களையும்,எல்லாப் பண்புகளையும் எல்லா அனுபவங்களையும் எல்லாப் பயன்களையும் ஒருங்கே ஒரு நிமிடத்தில் சுட்டி அறியும்.*


17,*அவர்கள் நிர்க்குணத்தவராவார்கள் அல்லது,தாமசம் இராசதம் சாத்துவிகம் முதலிய முக் குணங்களாலும் உள்ளே விகாரப்படார்கள்; புறத்தே அவரது குணங்கள் கரணங்களைப் பற்றுவன அல்ல.*


18,*உள்ளே பிரகிருதியினால் மூடப்படார்கள். புறத்தே அவரது  பிரகிருதி குணங்களைப் பற்றுவன அல்ல.*


19,*உள்ளே கால தத்துவத்தால் வேற்றுமைப்படார்கள்,புறத்தே காலத்தால் அவரது திருமேனி தடைபடாது.*


20,*உள்ளே நியதி அளவால் அளக்கப்படார்கள்,புறத்தே நியதியால் அவரது திருமேனி வரைபடாது.*


21,*அன்றிக் காலம்,வித்தை,ராகம்,புருடன் முதலிய மற்றைத் தத்துவங்களும் தத்துவ காரியங்களும்,அவர்களுக்கு இல்லை.*


22,*மாயையால் பேதப்படார்கள்; சுத்த மகாமாயையைக் கடந்து,அதன் மேல் அறிவுருவாக விளங்குவார்கள்.ஆகாரம்,நித்திரை,மைத்துனம்,பயம் என்பவைகளால் தடை படார்கள்.*


23,*அவர்கள் தேகத்திற்குச் சாயை,வியர்வை,அழுக்கு,நரை,திரை,பிணி,மூப்பு,பயம்,இறப்பு முதலிய குற்றங்கள் உண்டாவன அல்ல.*


24,*பனி,மழை,இடி,மின்னல்,வெயில் முதலியவற்றாலும்,இராக்கதர்,அசுரர்,பூதம்,பசாசு முதலியவற்றாலும்,தேவர்,முனிவர்,மனிதர்,நரகர்,மிருகம்,பறவை,ஊர்வன,தாவரம் என்பவைகளாலும், எவ்விடத்தும்,எக்காலத்தும்,அவர் தேகம் வாதிக்கப்படாது.வாள்,கத்தி முதலிய எக் கருவிகளாலும் கண்டிக்கப்படாது.*


25,*எல்லா அண்டங்களும் அணுக்கள் போலச் சிறிதாகத் தோற்றலும்; எல்லா அணுக்களும் அண்டங்கள் போலப் பெரியதாகத் தோற்றலும்; அவர் தேகத்திற்கு உரித்து.*


25,*இறந்தோரை எழுப்புதல்,வார்த்திபரை வாலிபராக்கல் முதலிய கரும சித்திகளும்,யோக சித்திகளும்,ஞான சித்திகளும் அவர் சந்நிதியில் இடைவிடாது விளங்கும்.*


26,*சிருட்டித்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அனுக்கிரகித்தல் என்கின்ற கிருத்தியங்களும் அவர் நினைத்த மாத்திரத்தில் நடக்கும்.பஞ்ச கர்த்தாக்களும் அவர் கடைக்கண் பார்வையால் தங்கள் தங்கள் தொழில் நடத்துவார்கள்*


27,*அவர்கள் அறிவு கடவுள் அறிவாக இருக்கும்; அவர் செய்கை கடவுள் செய்கையாக இருக்கும்.அவர்கள் அனுபவம் கடவுள் அனுபவமாக இருக்கும்.*


28,*சர்வ சத்தியும் உடையவர்களாய்,எக்காலத்தும் அழிவில்லாதவர்களாய் ஆணவம்,மாயை,கன்மம் என்னும் மும் மலங்களும்,அம்மல வாதனைகளும் இல்லாதவர்களாய்,பேரருள் வண்ணம் உடையவர்களாய் விளங்குவார்கள்.*


29,*சடமாகிய ஒரு துரும்பும் அவரது திருநோக்கத்தால் உயிர்ப் பெற்றுப் பஞ்ச கிருத்தியங்களும் செய்யும்*


30,*அவரது பெருமை வேதாந்தம், சித்தாந்தம்,கலாந்தம்,போதாந்தம்,நாதாந்தம்,யோகாந்தம் என்கின்ற ஆறு அந்தங்களிலும் விளங்கும்; அவற்றைக் கடந்தும் விளங்கும் என்றும் அறிய வேண்டும்.*


31,*இவைகள் யாவும் பேரின்ப லாபத்தை அடைந்தவர் பெருமை என்றுஅறிய வேண்டும்*


*இதுவே ஞான தேகத்தைப் பெற்ற அருளாளர்களின் சித்தி வல்லபமாகும்*

*இம்மை இன்ப லாபம்,மறுமை இன்ப லாபம்,பேரின்ப லாபம் என்ற மூவகை இன்ப லாபத்தையும், கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளின் ஏக தேசத்தைக் கொண்டும் அருட் பூரணத்தைக் கொண்டும் அடையக்கூடும் என்று அறிய வேண்டும்.*


*ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் உயிர் இரக்கத்தால் (பரோபகாரம்) ஏகதேச அருளும். ஆண்டவரிடத்தில் இடைவிடாத தொடர்பும்.இடைவிடாது அன்பும் கொண்டு ஸ்தோத்திரம் செய்கின்றதும், தெய்வத்தை நினைக்கின்றதிலும்  (சத் விசாரத்தால்) சுத்த உஷ்ணம்  உண்டாகி அறியாமை,அஞ்ஞானம் என்னும் திரைகள் விலகி பூரண அருளும் பெற்று, மேலே கண்டவாறு உயிர் உடம்பு அனைத்தும் வேதியல் மாற்றம் அடைந்து ஒளிதேகம் பெற்று, மரணத்தை வென்று முத்தேக சித்தி பெற்று பேரின்ப  பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வதே ஞானதேக வாழ்க்கையாகும்*


வள்ளல்பெருமான் சுத்த பிரணவ ஞான தேகத்தில் இறைவனுடன் கலந்து  வாழ்ந்து கொண்டும் சுத்த சன்மார்க்கிகளை கண்காணித்து கொண்டும் உள்ளார் என்பதை தெரிந்து,அறிந்து,புரிந்து உலக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக