*வள்ளலார் அருளிய மெய்ம்மொழி !*
ஆன்நேய அன்புடையீர் வந்தனம்.
*நமது அருட்தந்தையார் திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்கள் அருளிய அருள் மெய்மொழியை பொறுமையாக ஊன்றி படிக்கவும்.*
உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப்பெற்ற நண்பர்களனைவரும் நாமும் அறிவேண்டுவதும் ஒழுகவேண்டுவதும் யாதெனில்:?
இயற்கையிற்றானே விளங்குகின்றவராய் உள்ளவரென்றும், இயற்கையிற்றானே உள்ளவராய் விளங்குகின்றவரென்றும், இரண்டு படாத பூரண இன்பமானவ ரென்றும்,
எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லாப் பதங்களையும், எல்லாச் சத்திகளையும், எல்லாச் சத்தர்களையும், எல்லாக் கலைகளையும், எல்லாப் பொருள்களையும், எல்லாத் தத்துவங்களையும், எல்லாத் தத்துவிகளையும், எல்லா உயிர்களையும், எல்லாச் செயல்களையும், எல்லா இச்சைகளையும், எல்லா ஞானங்களையும், எல்லாப் பயன்களையும், எல்லா அனுபவங்களையும், மற்றை எல்லாவற்றையும்.
தமது திருவருட் சத்தியால் 1.தோற்றுவித்தல், 2.வாழ்வித்தல், 3.குற்றம் நீக்குவித்தல், 4.பக்குவம் வருவித்தல், 5.விளக்கஞ் செய்வித்தல் என்னும் ஐந்தொழில்கள் முதலிய பெருங் கருணைத் தொழில்களை இயற்றுவிக்கின்றவரென்றும்,
எல்லாம் ஆனவரென்றும், ஒன்றும் அல்லாதவ ரென்றும், சர்வ காருண்ய ரென்றும், சர்வவல்லபரென்றும், எல்லாம் உடையராய்த் *தமக்கு ஒருவாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதியர் என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் *கடவுள் ஒருவரே!*
அகம், புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த *சுத்தமெய்யறிவு என்னும் பூரணப் பொதுவெளியில்*, அறிவா ரறியும் வண்ணங்களெல்லாமாகி விளங்குகின்றார்.
*அவ்வாறு விளங்குகின்ற ஒருவரேயாகிய கடவுளை இவ்வுலகினிடத்தே ஜீவர்களாகிய நாம் அறிந்து அன்புசெய்து அருளையடைந்து அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல்,*
*பலவேறு கற்பனைகளாற் பலவேறு சமயங்களிலும் பலவேறு மதங்களிலும் பலவேறு மார்க்கங்களிலும் பலவேறு லக்ஷியங்களைக் கொண்டு, நெடுங்காலம் பிறந்து பிறந்து, அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவு மின்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துக்களினால் துன்பத்திலழுந்தி இறந்து இறந்து வீண் போயினோம்; வீண்போகின்றோம்.*
ஆதலால் இனிமேலும் ஜீவர்களாகிய நாம் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல் உண்மை அறிவு, உண்மை அன்பு, உண்மை இரக்கம் முதலிய சுபகுணங்களைப் பெற்று, நற்செய்கை உடையவர்களாய்,
*எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் *உண்மைப் பொது நெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப்* *பேரின்பசித்திப் பெருவாழ்வில் பெருஞ் சுகத்தையும் பெருங்களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு -*
மேற்குறித்த உண்மைக்கடவுள் தாமே திருவுள்ளங்கொண்டு *சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லக்ஷியமாகிய *உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ஞானசபையைச்* சித்திவளாகம் என்னும் இச்சந்நிதானத்திற் கடுத்த உத்தரஞானசிதம்பரம் அல்லது ஞானசித்திபுரம் என்று குறிக்கப் படுகின்ற வடலூர் பார்வதிபுரத்தில்
தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து, *இக்காலந்தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்தருளித் திருவிளையாடல் செய்தருள்கின்றோம்* என்னும் திருக்குறிப்பை
இவ்விடத்தே தாயினுஞ் சிறந்த பெருந்தயவுடைய நமது கருணையங் கடலாராகிய
*அருமைத் தந்தையார் அருட்பிரகாச வள்ளலார்* முன்னிலையாகப் பலவாற்றானும் பிரசித்தப்பட வெளிப்படுத்தி, *அருட் பெருஞ்ஜோதி சொரூபராய் அப்பெருங்கருணை வள்ளலாரது உடல் பொருள் ஆவிகளைக் கொண்டு பொற்சபை சிற்சபைப் பிரவேசஞ் செய்வித் தருளி, அரிய அவரது திருமேனியில் தாம் கனிவுறக் கலந்தருளிய எல்லாம் வல்லசித்தத் திருக்கோலங்கொண்டு, அருளர சாட்சித் திருமுடி பொறுத்து அருள் விளையாடல் செய்தருளு நிமித்தம்,*
எல்லா உலகங்களிலுள்ளவர்கள் யாவரும் ஒருங்கே, இஃது என்னை! இஃது என்னை! என்று அதிசயிக்கும்படி வெளிப்பட எழுந்தருளும் தருணம் அடுத்த அதிசமீபித்த தருணமாயிருத்தலினால் -
அங்ஙனம் வெளிப்படுந் திருவரவுபற்றி எதிர்பார்த்தலாகிய விரதங் காத்தலில் நிற்கும் அல்லது நிற்க வேண்டிய நாம் எல்லவரும் மேற்குறித்த அசிந்திய அற்புதத் திருவரவு நேரிட்ட கணத்திற்றானே,
*சுத்தசன்மார்க்க அரும்புருஷார்த்தங்களின் பெரும் பயன்களாகிய எக்காலத்தும் நாசமடையாத சுத்த அல்லது சுவர்ணதேகம், பிரணவ தேகம், ஞானதேகம் என்னும் சாகாக்கலானுபவ சொரூப சித்தித் தேகங்களும் தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெரு வல்லபமும்,*
*கடவுள் ஒருவரே ! என்றறிகின்ற உண்மை ஞானமும், கருமசித்தி, யோகசித்தி, ஞானசித்தி முதலிய எல்லாச் சித்திகளும் பெறுகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்பசித்திப் பெருவாழ்வை அடைவதற்கான சுத்தசன்மார்க்கத் தனிப்பெரு நெறியைப் பற்றுவதற்குரிய உண்மை ஒழுக்கங்களில் நாமெல்லவரும் தனித்தனி ஒழுக வேண்டுவது அவசியமாகலில், அவ்வொழுக்கங்கள் இவை என உணரவேண்டுவது அவசியம்.*
அவ் வொழுக்கங்கள் என்ன என்ன என்பதை அடுத்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
வள்ளலார் சொல்லிய ஒழுக்கங்களை முழுதும் கடைபிடிப்பவர்கள் யாராக இருந்தாலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அருளைப்பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வார்கள்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக