சனி, 14 மே, 2022

சன்மார்க்க சங்கத்துச் சாதுக்கள் !

 *சன்மார்க்க சங்கத்துச் சாதுக்கள் !*


*வள்ளலார் பாடல்!*


புன்மார்க்கத் துள்ளும் புறத்தும் வேறாகிப்

புகன்றசொல் அன்றுநும் பொன்னடி கண்ட


*சன்மார்க்க சங்கத்துச் சாதுக்கள் காணச்*

*சத்தியம் சத்தியம் சத்தியம் சொன்னேன்*


தன்மார்க்கத் தென்னுடல் ஆதியை நுமக்கே

தந்தனன் திருவருட் சந்நிதி முன்னே


என்மார்க்கத் தெப்படி 

யேனுஞ்செய் கிற்பீர்

எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.! 


மேலே கண்ட பாடலில் *சன்மார்க்க சங்கச் சாதுக்கள் காண சத்தியம் சொல்கிறேன்* என்கின்றார் வள்ளலார்.


*இதன் உண்மையை சன்மார்க்கத்தை பின்பற்றும்  நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.* 


*சாதுக்களின் குணம்!*


*அன்பு.தயவு.ஒழுக்கம்.அடக்கம்.இரக்கம்.பொறுமை.வாய்மை.தூயமை.மற்றும் தாய்மை குணம் கொண்டு எல்லவரையும் தம்மவர்களாக பாவிக்கும் உணர்வு கொண்டவர்களாய் இருப்பவர்களே சன்மார்க்க சங்க சாதுக்கள் என்பவர்களாகும்*


*மற்ற உலகியலில் உள்ள  சமயம் மதம் சார்ந்த புன்மார்க்கத்தில் உள்ளவர்கள் போல் உள்ளும் புறத்தும் வேறாகி ( உள்ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்கள்) சொல்லுபவர்கள் அல்ல சன்மார்க்க சங்க சாதுக்கள். உள்ளதை உள்ளபடி உண்மையை எடுத்து உரைப்பவர்களே சாதுக்கள் என்பவர்களாகும்.*


*சன்மார்க்க சங்க சாதுக்கள் என்றாலே இறைவனை தொடர்பு கொள்ளும் தனித் தகுதியும். உயர்ந்த குணமும்.உயர்ந்த அறிவும் கொண்டவர்கள் என்பதை சத்தியம் வைத்து சொல்லுகிறேன் என்று சன்மார்க்க சங்க சாதுக்களை உயர்ந்த இடத்தில் வைத்து நம்பிக்கையோடு புகழ்ந்து போற்றுகிறார்*


*மேலும் உடல் பொருள் ஆவியை இறைவனிடம் கொடுத்து.பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அறவிட்டு அருள் அம்பலப்பற்றை பற்றி அருள் பெறும் தகுதி உடையவர்களே சன்மார்க்க சங்க சாதுக்கள் என்பவர்களாகும்*


*சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் வள்ளலார் சொல்லியவாறு உயர்ந்த குணம் கொண்ட  சாதுக்களாக உள்ளார்களா? என்பதை ஒவ்வொரு சன்மார்க்கியும் சிந்தித்து  சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்*  


*வடலூர் சத்திய தருமச்சாலை !*


*வடலூரில் வள்ளலார் தோற்றுவித்த சத்திய தருமச்சாலயில் பணி செய்பவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தெரிவிக்கின்றார்..*


*வள்ளலார் ஆணைப்படி  ஜீவகாருண்ய பணி செய்து கொண்டு இருப்பவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை கல்பட்டு ஐயா மூலம் தெரிவிக்கச் சொல்லுகிறார்.*


*போத நாச வந்தனம் !*


*பார்வதிபுரம் என்னும் உத்திர ஞான சிதம்பர  சித்திபுரத்தின் கண்ணே பெருந்தலைமைப் பதியாக வீற்றிருந்தருளும் அருட்பெருஞ்ஜோதி யாகிய எமது ஆண்டவனார் திருச்சந்நிதிக்கு யானெனும் போத நாசம் வந்தனம் செய்த விண்ணப்பம்* 


*எம் இறையவரே ! இது பரியந்தம் யானாகத் தேடியதோர் பொருள் என்பது ஏதும் இல்லை.* 


*ஆகவே தேவரீர் பெருங்கருணையால் என்னை உபகரித்தருளிய உடல்.பொருள்.ஆவி என்னும் மூன்றையும் அறியாமையால் யான் எனது என்று கொண்டதோர் சுதந்தரமானது துன்ப இன்ப விளைவுக்கு ஆதாரமாய் இன்றைய வரையில் என்னைப் பற்றி இருந்த ஒன்றையும் யான் பெரும் பொருளாக எண்ணி நின்றனன்*


*ஆதலால் அச் "சமரச சுத்த சன்மார்க்க சங்கத்து சாதுக்கள்" சமூகத்து நிற்கப் பெற்ற விசேடத்தால் அத் தற்சுதந்தரப் பொருளைத் தேவரீர் பெருங்கருணைச் சந்நதி முன்னே அர்ப்பித்தனன்.*


*இனி தேவரீர் அதனை அருள் வசமாக்கி ஏழையாகிய என்னையும் என்னை யடுத்த சுற்றம் என்னோடு பழகிய நட்பினர்களையும் உய்யக் கொண்டு அருளுக.*


இங்கனம் 

அடிமை 

கல்பட்டு இராமலிங்கம்.


*என்று கையொப்பம் இட்டு  வள்ளலார் இடம் கொடுக்கின்றார்.அதேபோல் மற்ற சாதுக்கள் கையொப்பம் இட்டு கொடுத்தார்களா என்பது தெரியவில்லை*


*வள்ளலார்போல் ஆடை அணிந்தால் மட்டும் போதாது அவர்போல் வாழ்ந்து காட்ட வேண்டும்*


*சன்மார்க்க சங்க சாதுக்கள் என்பவர்கள் உலகப் பற்றை விட்டு அருள் பற்றை பற்றும் தகுதி உடையவர்களாக இருப்பவர்களே சாதுக்கள் என்பவர்கள்.*


*வள்ளலார் காலத்தில் இருந்து இன்றுவரை வள்ளலார் சொல்லியவாறு சுத்த சன்மார்க்கை கொள்கையை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. ஒருவரும் கடைபிடிக்கவில்லை என்பதே உண்மையாகும்*


*வள்ளலார் போல் கடைபிடித்து வாழ்ந்து இருந்தால் வள்ளலார் போல் மரணத்தை வென்று இருப்பார்கள்* 


*முதலில் வள்ளலார் சொல்லிய  ஒழுக்க நெறிகளை கடைபிடிப்பவர்களே சன்மார்க்க சங்க சாதுக்கள் எனப் பெயர் பெற்றவர்களாவார்கள்.எனவே  தான் சன்மார்க்க சங்க சாதுக்கள் காண சத்தியம் சொல்கிறேன் என்கிறார் வள்ளலார்*.


சத்திய தருமச் சாலையிலும் சித்திவளாகத்திலும் வசிப்பவர்கள் .

வள்ளலார் சொல்லியவாறு கடைபிடிக்காமல் சண்டையிட்டு கொள்கிறார் போலும் 


*சன்மார்க்க சங்கத்தார் பழக்க விதி !* 25-11-1872.


*ஆண்டவர் ஒருவர் உள்ளார் என்றும்.அவர் பொதுப்பட உலகத்தில் உள்ளார் யாவரும் சன்மார்க்கப் பெருபயன் பெற்று நித்திய வாழ்வு வாழ்தற்பொருட்டு வெளிப்படக்  காரியப்படுகின்றார் என்றும்*


*அதுகாலையில் நாமும் ஆன்மலாபத்தைப் பெற்றுக் கொள்வோம் எனவும் நம்பி இங்கே வசிக்கும் யாவரும் வழிபாடு விஷயத்தில் ஒரு தடையும் சொல்லாது ஒத்து இருத்தல் அவசியம்* 


*அன்றியும் கால பேத்ததால் அல்லது மற்றவகையால் அவ்வத் தருணங்களில் நேரிடும் குரோதத்தால் விளையும் துவேஷாதிகள்  உண்டாயினாலும் அல்லது உண்டாகிறதா யிருந்தாலும் உடனே ஜாக்கிரதைப் பட்டு அதை முற்றிலும் மறந்துவிடல் வேண்டும்*


*அப்படி யிருத்தல் மேல்விளைவை உண்டு பண்ணாதிருக்கும்.*

*அப்படி இனிமேல் ஒருவரை ஒருவர் அதிக்கிரமித்த வார்த்தைகளால் சண்டை விளையத் தக்கதாக வைதாலும்.அப்படிவைதவர்களையும்அந்த வைதலைக் கேட்டுச் சகிப்பவர்களோடுமறுபடி அத் துவேஷத்தை ஒருங்கே விட்டு மறந்து மனக்கலப்புடன் மருவுதல் வேண்டுவது.*


*அப்படி மருவதார்களையும் உடனே ஒதிக்கிவிட வேண்டுவது.அல்லது குரோதத்தால் விளையும் அக்கிரம அதிக்கிரம வார்த்தைகளைக் கேட்டு தாங்கள் எதிர்த்து வார்த்தையாடாமல் கூட்டாத்தாரில் அப்போது இருக்க வாய்ந்த இரண்டொருவர்க்குத் தெரிவித்தல் வேண்டும்* 


*அப்படி தெரிவிக்காதவர்களும் எதிர்த்துச் சண்டை தொடுப்பவர்களும் இங்கிருத்தல் அனாவசியம்.அப்படிப்பட்டவர்களை ஒருபேச்சும் இல்லாமல் இந்த இடம்விட்டு போய்விடத்தக்க முயற்சி ஒவ்வொருவரும் செய்தல் வேண்டுவது.*

என்று எழுதி கீழே 

*சிதம்பரம் இராமலிங்கம்* என்று கைஎழுத்து போட்டுள்ளார்.


மேலும் வள்ளலார் பதிவு செய்கிறார் !


*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்*!


*சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள். மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் - இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள்.* 

*இவர்களே சன்மார்க்க சங்க சாதுக்களாவார்கள்*


*அதாவது, செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிசார மரணம் நீங்கும். அப்படி இல்லாது இவ்விடம்* *காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள். அருள் விளங்குங் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும். பரலோக போகமாகிய ஞானசித்திகளைப் பெறமாட்டார்கள்.*


*உலக வாழ்வை விட்டு அருள் வாழ்க்கை வாழ்பவர்களே சன்மார்க்க சங்க சாதுக்கள் என்பவர்களாகும் அவர்களே மரணத்தை வெல்லும் தகுதி உடையவர்கள்.* *அவர்களையே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஏற்றுக்கொண்டு அருள் வழங்குவார்.*


*அவர்களே சன்மா்க்க சங்கங்களை வழிநடத்தும் தகுதி உடையவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்* 


*தமிழகம் மற்றும் எங்கிருந்தாலும் சுத்த சன்மார்க்கத்தை கடைபிடிக்கும்  சாதுக்கள் அனைவரும் ஒன்று கூடி வடலூரில  வள்ளலார் தோற்றுவித்த சங்கம் சாலை சபையை  வள்ளலார் சொல்லிய வண்ணம் செயல்படுத்த வேண்டும்.*


*வடலூரில் சங்கம் சாலை சபை செயல்படுவதைப் பார்த்துதான் உலகில் உள்ள எல்லா சங்கங்களும் பின்பற்ற வேண்டும்.*


*வடலூரில்  சாதுக்கள்  தங்குவதற்கும்.சன்மார்க்க உணவுமுறை பழக்கத்திற்கும்.*

*சாகாக்கல்வி பயிற்சிக்கும்.சத்விசாரம் செய்வதற்கும் தகுந்த இடத்தை தேர்வு செய்து கொடுக்க வேண்டும்* 


*சுத்த சன்மார்க்க கொள்கைகளை முழுவதும்  அறிந்து வாழ்க்கையில் கடைபிடிக்கும்  சன்மார்க்க சங்க சாதுக்களையே  சொற்பொழிவு செய்ய அனுப்பி வைக்கப்பட வேண்டும்.* 


*ஒத்த கருத்துடைய சாதுக்களே சாதி சமயம் மதம் சாராத சுத்த சன்மார்க்க கொள்கைகளையும் ஜீவகாருண்ய ஒழுக்கத்தையும் சத்விசாரத்தையும் முழுமையாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.* 


*நாங்கள் சொல்லும் சாதுக்கள் சாதி சமயம் மதம் சார்ந்த கலப்படம் உள்ள வேஷதாரிகள் அல்ல. சுத்த சன்மார்க்கத்தை முழுமையாக கடைபிடிப்பவர்கள்.தயவுடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சன்மார்க்க சங்க சாதுக்களே ஆவார்கள்.*


*இதன் தொடர்ச்சி மீண்டும் தெரிவிக்கிறோம்*

  *சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக உத்தமன் ஆகுக ஓங்குக!* 


*வள்ளலார் பாடல்!*


எவ்வுலகும் அண்டங்கள் எத்தனையும் நான்காண

இவ்வுலகில் எந்தை எனக்களித்தான் - 


*எவ்வுயிரும்

சன்மார்க்க சங்கம்* தனைஅடையச் செய்வித்தே

என்மார்க்கம் காண்பேன் இனி.! 


*இனி சன்மார்க்க உலகமாக மாறுவது மாற்றுவது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணையாகும்* *அதற்கு தகுந்தவறு சன்மார்க்க சாதுக்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு