அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

திங்கள், 18 ஏப்ரல், 2022

ஆன்ம அறிவு விளக்கம் வேண்டும்!

 *ஆன்ம அறிவு விளக்கம் வேண்டும்!*


1.*இந்திரிய அறிவு.*

2.*கரண அறிவு*

3.*ஜீவ அறிவு*

4.*ஆன்ம அறிவு*

அதற்குமேல்

5.*அருள் அறிவு*

அதற்குமேல்

6.*கடவுள் அறிவு* 


*ஆன்ம அறிவு விளங்கினால் மட்டுமே அருள் அறிவும் கடவுள் அறிவும் வெளிப்படும்* *அதன் பின் கடவுளின் உண்மை தன்மை தானே வெளிப்படும்.*

*இது படிப்பால் அறிவது அல்ல.நான்கு வகையான ஜீவகாருண்ய ஒழுக்கத்தால் அறியப்படுவதாகும்*


*சீவகாருணியம் விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும்; அதனால் உபகாரசத்தி விளங்கும்; அந்த உபகாரசத்தியால் எல்லா நன்மைகளுந் தோன்றும். சீவகாருணியம் மறையும்போது அறிவும் அன்பும் உடனாக மறையும்; அதனால் உபகாரசத்தி மறையும்; உபகாரசத்தி மறையவே எல்லாத் தீமைகளுந் தோன்றும்.*


*வள்ளலார் இறைவனால் வருவிக்க உற்றவர்*.


*எதற்காக இறைவனால் வருவிக்க உற்றார் என்ற உண்மையை ஆன்ம அறிவால் அறிந்து கொண்டால் மட்டுமே வள்ளலார் காட்டிய  சொல்லிய மேலும் அவர் வாழ்ந்துகாட்டிய "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க" கொள்கைகளை ஆன்மஅறிவு விளக்கத்தை கொண்டு முழுமையாக  தெரிந்து கொள்ள முடியும்.* 


*வள்ளலார் பாடல்!*


பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்

*பேய்ப் பிடிப்புற்ற பிச்சுப்*

*பிள்ளைவிளை* *யாட்டென உணர்ந்திடாது* உயிர்கள்பல

பேதமுற்று அங்கும்இங்கும்


*போருற்று இறந்துவீண் போயினார்* இன்னும் வீண்

போகாதபடி விரைந்தே

*புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி* *காட்டிமெய்ப்*

*பொருளினை உணர்த்தி* எல்லாம்


ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதி *நீ*

*என்பிள்ளை* *ஆதலாலே*

*இவ்வேலை புரிகஎன் றிட்டனம்* மனத்தில்வே

றெண்ணற்க என்றகுருவே


நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்

நிறைந்திருள் அகற்றும்ஒளியே

நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு

நீதிநட ராஜபதியே.!!


என்னும் பாடலின் வாயிலாக வெளிப்படையான  உண்மையைத் தெரிவித்துள்ளார்.


*உலகம் முழுவதும் பலபல ஆன்மீக பெரியவர்களால் பலவகையான பெயர்களில் பலவகையான தோற்றங்களில் பலகாலங்களில் சமயங்கள் மதங்களை தோன்றி வைத்து உள்ளார்கள். அவற்றின் வழியாக சாதிகள் போன்ற பொய்யான பிரிவினையான வாழ்க்கை முறைகளை அமைத்து உயர்ந்தவன் தாழ்ந்தவன்.ஏழை பணக்காரன் போன்ற வாழ்க்கை முறை கொள்கைகள் யாவும் அவரவர்களின் சிற்றறிவுக்கு தெரிந்த அறிந்த புரிந்த வகையில் வெளிப்படுத்தி உள்ளார்கள்.*


*முழுமையான ஆன்ம அறிவு விளங்காமல்  உண்மையான அருள் அறிவை பெறமுடியாமல்*.

*மெய்ப்பொருளான இயற்கை உண்மைக் கடவுள் யார்? என்று தெரிந்து கொள்ளாமல். தத்துவ ஜடப்பொருளான சிலைபோன்ற உருவங்களையும் பஞ்சபூத தத்துவங்களையும் கடவுள்களாக படைத்து மற்றும் சிலைகளாக செதுக்கி வைத்து ஆலயங்கள். மசூதிகள்.சர்சுக்கள்.பிரமிடுகள் போன்ற கூடாரங்களை எழுப்பி அதன் உள்ளே வைத்துள்ளார்கள். அதிலும் உன்கடவுள் சிரியது சக்தி இல்லாதது.என் கடவுள் பெரியது சக்தி உள்ளது என்று கடவுளின் பெயரால் போட்டிப்போட்டுக்கொண்டு வணங்கி வழிபாடு செய்து வருகின்றார்கள்*


*அவர்களைப்பற்றி வள்ளலார் சொல்லுவதைப் கேளுங்கள்.* 


*பேய்ப் பிடித்த பைத்தியக்காரப்பிள்ளைகள் போல்*

*விளையாட்டுத்தனமாக* *அங்கும் இங்கும் அலைந்து அலைந்து.திரிந்து திரிந்து கண்மூடித் தனமாக மூர்க்கத்தனமாக போரிட்டு சண்டையிட்டு பலகாலமாக அழிந்து அழிந்து.இறந்து இறந்து பிறந்து பிறந்து மக்கள் வீண்போய் கொண்டே உள்ளார்கள்*


*இவைகள் யாவையும் பின்பற்றும்  மக்கள் மீது குற்றம் அல்ல.மக்களுக்கு தவறான வழிகாட்டியவர்களே குற்றவாளிகளாகும்.*


*இனிமேலும் மக்கள் வீண்போகாமல்  மக்களைக் காப்பாற்ற வேண்டும் அவர்களின் அறியாமையைப் போக்க வேண்டும். அறிவை வெளிப்படுத்த வேண்டும் என்று தனிப் பெருங்கருணையோடு பக்குவம் உள்ள ஆன்மாவான வள்ளல்பெருமான் அவர்களை தேர்வு செய்கிறார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.*


 *நீ என்பிள்ளை ஆனதினாலே இவ்வேலை புரிக வேண்டும் என ஆணையிட்டு எல்லாம் வல்ல தனித்தலைமைப் பெரும்பதியான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல்பெருமான் அவர்களை இவ்வுலகிற்கு அனுப்பி வைத்து உள்ளார்* என்பதை ஒவ்வொரு மனிதகுலமும் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும். 


*புனிதம் உறும் பொதுவான சுத்த சன்மார்க்கம்!*


*உலகிலே இதுவரையில் இல்லாத உண்மை பொது நெறியாக விளங்கும் புனிதமுறு "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க" மெய் நெறியை தனி நெறியை 1872 ஆம் ஆண்டு தன் தொண்டர்களின் முன்னிலையில்  வடலூரில் தோற்றி வைத்துள்ளார் வள்ளலார்.*  


*சத்திய தருமச்சாலை !*


*மேலும் ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோல் என்றும். உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்னும் உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் சங்கம் சார்ந்த "சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை 23-05-1867 ஆண்டு வடலூரில் தோற்றுவித்து தொடர்ந்து ஏழைகளின் பசிப்பிணியைப் போக்கி வருகின்றது.*"


*தருமச்சாலையில் தனிமனித ஒழுக்கமான இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம்.ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கம் போன்ற ஒழுக்கங்களை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பதை தெளிவாக உரைநடைப் பகுதியிலும் பாடலிலும் எழுதி பதிவு செய்து வைத்துள்ளார்.* 


*சத்திய ஞானசபை !*


*ஒழுக்கம் நிறைந்து கருணையே வடிவமாகும் போது ஆன்ம அறிவு விளக்கம் தோன்றும். அப்போதுதான் உண்மைக்கடவுள் யார் ? என்பது அக அனுபவத்தில் விளங்கும்.*


*வள்ளலார் அக அனுபவத்தில் அறிந்த இயற்கை உண்மை கடவுளான  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயங்கும் காட்சியை வெளிப்படுத்தும் வகையில். இயற்கை விளக்கமாக வடலூரில் "சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை" 1872 ஆம் ஆண்டு உலக மக்களின் பார்வைக்காக புறத்தி்ல் தோற்றி வைக்கின்றார்*  


*சத்திய ஞானசபை கட்டிமுடித்து குடமுழக்கோ புனித நன்னீராட்டு விழாவோ கும்பாபிஷேகமோ போன்ற  எந்தவிதமான சமய மதம் சார்ந்த சடங்குகளையும் வள்ளலார் செய்யவில்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.*


*சத்திய ஞானசபையில் சமயம் மதங்கள் சார்ந்த சிலைகள் போன்ற  உருவ வழிபாடுகள் கிடையாது. ஜோதி வழிபாடு (ஒளிவழிபாடு) மட்டும்தான் காட்டப்படுகிறது.*

சன்மார்க்க சங்கங்கள் கடைபிடிக்க வேண்டியது! 


*வடலூரில் உள்ளதுபோல் உலகம் எங்கும்* *"சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்" என்று பெயர் வைக்க வேண்டும். ஏழைகளின்  பசிப்பிணியைப் போக்க வேண்டும்.*

*ஜீகாருண்ய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்*


*சங்கத்தின் வசதிக்கேற்ப தகரக் கண்ணாடி கூண்டு வைத்து அதன்உள்ளே அகல் விளக்கு வைத்து தீபத்தை ஏற்றி ஜோதியை வழிபடவேண்டும்.* *ஜோதியின் முன் அபிஷேகம் ஆராதனை படையல் போன்ற எந்த விதமான ஆச்சார சங்கற்ப விகற்பங்களும் செய்ய வேண்டாம் என்பது வள்ளலாரின் அழுத்தமான கட்டளையாகும்.*


*ஒவ்வொரு நாளும்  சன்மார்க்க சங்கத்தின் உறுப்பினர்கள் தனித்தோ  கூடியோ காலை மாலை  திருஅருட்பா ஆறாம் திருமுறையில் உள்ள அகவல் மற்றும் வேண்டுதல். விண்ணப்பம். முறையீடு போன்ற தலைப்புகளில் உள்ள பாடல்களை நேரத்திற்கு தகுந்தாற்போல் மெல்லென உணர்வு பூர்வமாக மனத் தூய்மையுடன்  துதி செய்தல் வேண்டும்.*


 *அவ்வாறு அவரவர் பின்பற்றும் தருணம் ஒழுக்கத்திற்கும் தகுதிக்கும் தகுந்தவாறு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்  ஆன்ம அறிவை வெளிப்படுத்தி அருளை வழங்கி மேல்நிலைக்கு ஏற்றுவார் என்பது சத்தியம்.*


*சன்மார்க்க சங்கங்கள் !*


*சன்மார்க்க சங்கங்களும் சங்கம் சார்ந்த உறுப்பினர்களும் வள்ளலார் சொல்லியவாறு முழுமையாக  கடைபிடிப்பதாக தெரியவில்லை.*

*அவரவர்கள் விருப்பம்போல் சாதி சமயம் மதம் சார்ந்த ஆச்சார சங்கற்ப விகற்பங்களும் சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றியே வழிபாடு செய்து வருகிறார்கள்.*


*அதனால் அவரவர்கள் ஒழுக்கத்திற்கு தகுந்தவாறு அற்ப பிரயோசனம் அடைவார்களே தவிர பெரிய ஆன்ம லாபத்தை  பெறுவதற்கும் அருளைப்பெறுவதற்கும் மரணத்தை வெல்லுவதற்கும் வாய்ப்பே இல்லை என்பதை சத்திய வாக்காக உணர்ந்து ஒவ்வொருவரும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.*


*சன்மார்க்க சங்கங்களில் தருமச்சாலை அமைத்து பசித்த ஏழைகளுக்கு உணவு வழங்கினால் போதும் அதுவே  வழிபாடாகும்.*

*அதைத்தான் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றும்.உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றும் வள்ளலார் தெளிவாக சொல்லியுள்ளார்.*


*ஞானசபை குடமுழக்கு!*


*ஞானசபை என்பது ஒன்றே ஒன்று தான் அவை வடலூரில் வள்ளலார் தோற்றுவித்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையாகும்.* 

*அதனால்தான் வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே என்று அனைவரையும் வடலூர் வரச் சொல்லுகிறார் வள்ளலார்*


*சிலபல சன்மார்க்க சங்கங்கள் உள் ஊர்களிலும் வெளிநாடுகளிலும் ஞானசபை என்ற பெயரில் அவரவர்கள் விருப்பம்போல் கண்டபடி கட்டிடங்களை கட்டி ஞானசபை என்று பெயர் சூட்டி குடமுழக்கு என்றும்.மகா கும்பாபிஷேகம் என்றும்  .புனித நன்னீராட்டு விழா என்றும். கோபுர கலசங்களை வைத்து ஆடம்பரமான பொருள் செலவுகள் செய்து சமய மதவாதிகள் போல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ஊர்வலம் போன்ற நிகழ்வுகள் கொண்டு  விழா எடுக்கின்றார்கள்.* 

*அவ்வாறு நடத்துகின்ற நிகழ்ச்சிகளில் அடியேன் கலந்து கொள்ளாமல் சொற்பொழிவு மட்டும் செய்துவிட்டு வந்துவிடுவேன்.*


*உண்மை நேர்மை ஒழுக்கம் அன்பு தயவு கருணை மட்டுமே போதுமானதாகும் மற்றபடி ஆடம்பரமான செயல்கள் எதுவும் வேண்டாம் என்பது வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.*


*ஆடம்பரத்தை எல்லாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஏற்றுக் கொள்வாரா என்றால் சத்தியமாக ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பது எனது அனுபவத்தில் தோன்றிய   கருத்தாகும்.*


*எனது கருத்தால் யாரும் வருத்தபட வேண்டாம். திருந்தி திருத்திக் கொள்வது சுத்த சன்மார்க்க கொள்கைக்கு நல்லது  என நினைக்கிறேன்*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அருளைப் பெறுவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். சுத்த சன்மார்க்க கொள்கைக்கு விரோதமாக எக்காலத்திலும் எவரும் செயல்பட கூடாது என்பதே வள்ளலார் கொள்கையாகும்*


 *புதியதாக வருபவர்கள் நாம் செய்யும் அதே தவறை தொடர்ந்து பின்பற்றி செய்வார்கள்.அப்படி செய்வதால் யாருக்கும் எந்த விதமான ஆன்ம லாபமும். அருள் லாபமும் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை ஆன்ம அறிவால் அறிந்து கொள்ள வேண்டும்*


*வள்ளலார் பாடல்!* 


காடுவெட்டி நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டுக்

*கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்*


*கூடுவிட்டுப் போயினபின்* *எதுபுரிவீர் எங்கே*

*குடியிருப்பீர்* ஐயோநீர் குறித்தறியீர் இங்கே


*பாடுபட்டீர் பயன்அறியீர் பாழ்க்கிறைத்துக் கழித்தீர்*

பட்டதெலாம் போதும்இது பரமர்வரு தருணம்


*ஈடுகட்டி வருவீரேல் இன்பம்மிகப் பெறுவீர்*

*எண்மைஉரைத் தேன்அலன்நான் உண்மையுரைத் தேனே.!*


*காடு மலை கல் மரம் செடி கொடி மேடு பள்ளம் குன்றுகள் நிறைந்த நிலத்தை வாங்கி  எவ்வளவோ சிரமப்பட்டு கஷ்டபட்டு பாடுபட்டு உழைத்து சமபடுத்தி அதில் காட்டு எருவும்போட்டு. போர்போட்டு தண்ணீர் வரவைத்து நன்செய் பயிர் வைக்கும் நன்செய் நிலமாக மாற்றி நெல் கரும்பு வாழை போன்ற பயிர் வைக்காமல் உயிரை அழிக்கும் கடுகுபோன்ற விஷத்தை பயிரிடுவது போன்று* *நாம் கடுமையாக உழைத்த உழைப்பு பயன் இல்லாமல்  போய்விடக் கூடாது என்கிறார் வள்ளலார்.* 


*நம் உழைப்பு அருள் பெறுவதற்கு ஈடுகட்ட வேண்டும். அப்போதுதான் ஆன்ம இன்ப லாபத்தை பெறமுடியும்* *அருள்பெற முடியும் மரணத்தை வெல்ல முடியும் கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாறமுடியும் அதுவே பேரின்ப சித்தி பெருவாழ்வாகும்.*


*வள்ளலார் கொள்கையான சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றும் சான்றோர்கள் தாம் வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாக  இருக்க வேண்டும்.*

*உலகம் முழுவதும் வள்ளலார் சொல்லியவாறு சன்மார்க்க உலகமாக மாற்றம் அடைய வேண்டும். சன்மார்க்கிகள் ஒழுக்கம் நிறைந்து  கருணையே வடிவமாகி  பாடுபட்டு உழைத்து மக்களை காப்பாற்ற வேண்டும்.* 


உலகினில் உயிர்களுக்கு உறும் இடை யூறெலாம்

விலக நீ யடைந்து விலக்குக மகிழ்க ! 


சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக

உத்தம னாகுக வோங்குக வென்றனை!


போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்

ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி! ( அகவல்)


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் 

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக