*உடம்பும் உயிரும்!*
வள்ளலார் பாடல்!
உடம்பு வரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர்
உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர்
மடம்புகு பேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை
வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறை கற் றறியீர்
இடம்பெறு பொய் வாழ்க்கையிலே இன்பதுன்பம் அடுத்தே
எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே
நடம்புரி என் தனித்தந்தை வருகின்ற தருணம்
நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே.!
*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சமூகம்*!
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சமூகமான ஆன்ம ஆகாயத்தில் இருந்து ஆன்மாக்களை பஞ்ச பூத உலகத்திற்கு ஆணவத்தின் துணைக் கொண்டு அனுப்பி வைக்கப்படுகிறது.
*மாயை உலகம்!*
*பஞ்ச பூத உலகத்திற்கு வந்த ஆன்மாக்கள் உயிர் உடம்பு எடுத்து வாழ வேண்டும்.உயிரையும் உடம்பையும் மாயையால் கட்டிக் கொடுக்கப்படுகிறது.மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்ட வாடகை என்னும் வீட்டில் உடம்பையும உயிரையும் இயக்கிக்கொண்டு ஆன்மா இவ்வுலகில் வாழ்ந்து வருகிறது*
*வள்ளலார் பாடல்!*
பெருமாயை என்னும்ஒரு பெண்பிள்ளை நீதான்
பெற்றவுடம் பிதுசாகாச் சுத்தவுடம் பாக்கி
ஒருஞானத் திருவமுதுண் டோங்குகின்றேன் இனிநின்
உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடைநான் விரும்பேன்
அருளாய ஜோதிஎனக் குபகரிக்கின் றதுநீ
அறியாயோ என்னளவில் அமைகஅயல் அமர்க
தெருளாய உலகிடைஎன் சரிதமுணர்ந் திலையோ
சிற்சபைஎன் அப்பனுக்குச் சிறந்தபிள்ளை நானே.!
*மேலே கண்ட பாடலை ஊன்றி படிக்கவும் வள்ளலார் எவ்வாறு மீண்டுவர வழிகாட்டியுள்ளார் என்ற உண்மை விளங்கும்*
ஆன்மாவானது தன் இயற்கை குணமான தயவை மறந்து உயிரின் விருப்பபடி வாழ்வதால் தன்னை மறந்துவிடுகிறது.அதனால் பொய் வாழ்க்கையில் ஈடுபட்டு இன்பம் துன்பம் அனுபவித்து எண்ண எண்ணி இளைத்துக் கொண்டே உள்ளது.
*ஆன்மா சொல்படி கேட்டு உயிர் உடம்பு செயல்பட வேண்டும்.ஆனால் உயிரின் செயலுக்குத் தகுந்தவாறு ஆன்மாவும் உடம்பும் செயல்படும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது*
உதாரணத்திற்கு:- *ஆன்மா கணவன் உயிர் மனைவி என்று வைத்துக்கொள்ளுங்கள்* *கணவன் மனைவி வாழ்வதற்கு உடம்பு என்னும் வீடுதேவை*.
வீடு மாயையால் கட்டிக் கொடுக்கப்படுவதால் மனைவி என்னும் உயிரின் ஆதிக்கம் அதிகமாகிறது.
உயிரின் ஆதிக்கத்தால் ஆன்மா தன்னை மறந்து உயிரின் வழியே உடம்பின் வழியே சென்று துன்பம் அடைந்து கொண்டுள்ளது.
*உயிரின் வழியே ஆன்மா செல்வதால் உயிரின் சுயநலத்தால் செய்கின்ற கன்மம் என்னும் வினைகள் ஆன்மாவில் பதிவாகி ஆன்மா துன்பத்தை அனுபவிக்கின்றது*
*ஆன்மாவில் பதியும் அறியாமை அஞ்ஞானம் என்னும் தீவினை நல்வினையால் மாயா திரைகள் ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ளது. ஆதலால் ஆன்மாவில் உள்ள இயற்கை குணமான தயவும் அன்பும் அறிவும் அருளும் வெளிப்படுவதில்லை*.
*உயிர் இறந்து இறந்து பிறந்து பிறந்து வேறு வேறு உடம்பு எடுத்து கொண்டே உள்ளது* ஆன்மாவும் தன்னிடம் உள்ள தயவு அன்பு அறிவும் அருளும் பெற முடியாமல் உயிரின் வழியே சென்று கொண்டுள்ளதால்.பிறப்பையும் இறப்பையும் தவிர்க்க முடியாமல் மரணத்தை வெல்ல முடியாமல் ஆன்மா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டுள்ளது.
ஆன்மாவானது தன்னை அறிந்து இன்பம் பெற்று வாழவேண்டுமானால் உயிரையும் உடம்பையும் தன் சொல்வழி கேட்க செய்ய வேண்டும்.அதற்கு அருள் இன்பத்தை உயிருக்கும் உடம்பிற்கும் ஊட்ட வேண்டும்.
அதாவது பொருள் இன்பத்தை தவிர்த்து அருள் இன்பத்தை ஊட்ட வேண்டும்.
*உயிரையும் அழிக்காமல் உடம்பையும் அழிக்காமல் பாதுகாக்க வேண்டும்*
அதற்கு ஆன்மாவில் இருந்து அருள் சுரக்க வேண்டும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு மாயா திரைகளை விலக்கி அருள் பெற்று ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்ற வேண்டும்.
*கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால்*
*அரைசது மறைக்கு மருட்பெருஞ் ஜோதி*! (அகவல்)
ஆன்மாக்கள் அருள்பெற்று மரணத்தை வெல்லும் வழியைக் காட்ட வந்தவர்தான் நமது அருள்தந்தை திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.
ஆன்மாக்கள் உண்மை தெரிந்து கொள்ளவே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை தோற்றுவித்துள்ளார் அவற்றில் சொல்லி உள்ள ஜீவகாருண்ய ஒழுக்க நெறிகளை கடைபிடித்து மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக