*நரை திரை பிணி மூப்பு வராமல் வாழும் வாழ்க்கை!*
மனித குலத்தில் பிறந்த உயர்ந்த அறிவுபெற்ற மனிதன் நரை திரை பிணி மூப்பு வராமல் என்றும் இளமையோடு வாழும் வாழ்க்கையைக் கண்டுபிடித்தவர் வள்ளலார்.
நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்
உரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே ! (அகவல்)
என்றே யென்னினும் இளமையோடு இருக்க
நன்றே தருமொரு ஞானமா மருந்தே! ( அகவல்)
*வள்ளலார் பாடல்!*
நரை மரண மூப்பறியா நல்ல உடம்பினரே
நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்
வரையில் உயர் குலம் என்றும் தாழ்ந்தகுலம் என்றும்
வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்
புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம் என் றறிந்தே
புத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவே
உரைபெறும் என் தனித்தந்தை வருகின்ற தருணம்
உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே.!
மேலே கண்ட பாடல்கள் வாயிலாக நமக்கு வள்ளலார் என்ன தெரிவிக்கின்றார் என்பதை கவனிக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆன்மாக்களும் உயிர் எடுத்து உடம்பு எடுத்து வாழ்ந்து உடம்பு என்னும் வீடு முதிர்ச்சி அடைந்து பழுது அடைந்து விடுவதால் *ஆன்மா உயிர் இரண்டும உடம்பை விட்டு பிரிந்து விடுகிறது*. அதற்கு மரணம் என்றும் உயிர் போய்விட்டது என்றும் இறந்து விட்டார் என்றும் மக்களால் சொல்லப்படுகிறது
*வள்ளலார் பாடல்!*
இறந்தவரை எடுத்திடும் போது அரற்றுகின்றீர் உலகீர்
இறவாத பெருவரம் நீர் ஏன்அடைய மாட்டீர்
மறந்திருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ நுமக்கு
மறந்தும் இதை நினைக்கில் நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்
சிறந்திடு சன் மார்க்கம் ஒன்றே பிணிமூப்பு மரணம்
சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே
பிறந்தபிறப் பிதிற்றானே நித்திய மெய் வாழ்வு
பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.!
பிறந்து வளர்ந்து வாழ்ந்து நரை திரை பிணி மூப்பு மரணம் வந்துவிட்டால் மற்றவர்களைப் பார்த்து அழுகின்றோம் கத்துகிறோம் கதறுகிறோம்.
*(செத்த பிணங்களைப் பார்த்து சாகும் பிணங்கள் அழுகின்றது போல்)*
உயர்ந்த அறிவுபெற்ற மனிதா ! நரை திரை பிணி மூப்பு மரணம் ஏன் வருகிறது எதனால் வருகிறது என்று ஒரு நிமிடமாவது சிந்தித்தது உண்டா ? அறிவு இருந்து என்ன பயன்? மறந்துதானே இருந்தீர் என கேள்வி கேட்கிறார் வள்ளலார்.
உங்களை நினைக்கின்ற போது எமக்கு மனம் நடுங்குகின்றது.
நீங்கள் எதைப்பற்றியும் வருத்தப்படாமல் கவலைப்படாமல்
சிந்திக்காமல் *அறிவுக்கு வேலை கொடுக்காமல்.*
*மனம்போனபடி எதுநடந்தாலும் பரவாயில்லை என்று ஏற்றுக்கொண்டு வாழ்கின்றீர்* என்னே உமது வாழ்க்கை பைத்தியக்காரத் தனமாக இருக்கின்றதே என நினைத்து மனம் வருந்துகின்றார்.
*போனது எல்லாம் போகட்டும் இனிமேலாவது தயவுசெய்து நான் சொல்வதை கேளுங்கள் என்கிறார்*.
*சிறப்பான சன்மார்க்கம்*!
நரை திரை பிணி மூப்பு மரணம் வராமல் காப்பாற்றும் சிறந்த மார்க்கம் சன்மார்க்கம் ஒன்றே என்பதை தெரிந்து அறிந்து இங்கே வாருங்கள் என ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் அழைக்கின்றார்.
இந்த பிறப்பிலே அழியாத நித்திய பெருவாழ்வை பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே வாருங்கள் என்கிறார்.
*வள்ளலார் பாடல்!*
விரைந்து விரைந் தடைந்திடுமின் மேதினியீர் இங்கே
மெய்மைஉரைக் கின்றேன் நீர் வேறுநினையாதீர்
திரைந்து திரைந் து உளுத்தவரும் இளமைஅடைந் திடவும்
செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய
வரைந்து வரைந்து எல்லாஞ் செய் வல்லசித்தன் தானே
வருகின்ற தருணம்இது வரம்பெறலாம் நீவீர்
கரைந்து கரைந்து உளம்உருகிக் கண்களின் நீர் பெருகிக்
கருணைநடக் கடவுளைஉட் கருதுமினோ களித்தே.!
மேலே கண்ட பாடல் மிகவும் முக்கியமானதாகும்.
திரைந்து திரைந்து உளுத்தவரும் இளமை அடைந்திடலாம் என்கிறார்.
அதற்கு *ஒரே வழி*
கரைந்து கரைந்து உள்ளம் உருகி கண்களில் நீர்பெருகி *கருணை நடக்கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உட் கருதுமினோ களித்து என்கிறார்*.
ஆன்மாவை இயக்கிக் கொண்டு இருக்கும் இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை உள்ள ஆண்டவரால் மட்டுமே அருளை வழங்கி காப்பாற்ற முடியும் வேறு இறைவர்களால் ஒன்றும் வேலைக்கு ஆகாது. ஆதலால் ஆண்டவரை நினைந்து ஊற்று எழும் கண்ணீர் கொண்டு இடைவிடாது அழுது கொண்டே இருக்க வேண்டும் என்கிறார்.
*உண்மையாக ஆண்டவரை நினைப்பவர்களுக்கு அழுத கண்ணீர் மாறாது ஆகாரத்தில் இச்சை செல்லாது என்பதே அடையாளமாகும்.* இந்த அடையாளம் உள்ளவர்களைத் தேடி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நேரில் வந்து அருளை வழங்கி ஆட்கொள்வார்.
*மேலும் வள்ளலார் பாடல்!*
சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே
சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை
நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்
நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி
ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை
எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை
ஓர் உறவென் றடைந்துலகீர் போற்றி மகிழ்ந் திடுமின்
உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே.!
*சார் உலக வாதனையைத் தவிர்த்து ஒரே உறவு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான்* *என்ற உண்மை* *அறிந்து போற்றி*
*மகிழ்ந்து நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து* *அன்பே நிறைந்து நிறைந்து* *ஊற்றெழும் கண்ணீர் அதனால்*
*உடம்பு நனைந்து நனைந்து* *அழுகின்றபொழுது* தான்
*என்றும் அழியாத நன்நிதியாகிய அருளை வாரி வழங்குவார்*
*அருள்பெற்றால் மட்டுமே நரை திரை பிணி மூப்பு மரணம் வராமல் உடம்பு உயிர் ஆன்மாவை பிரியாமல் பாதுகாக்கமுடியும்*.
*இந்த உண்மை அறிந்து வாழ்பவர் எவரோ அவரே சன்மார்க்கியாவார்*
அருள் வடிவு அதுவே யழியாத் தனிவடிவு
அருள்பெற முயலுக என்று அருளிய சிவமே!(அகவல்)
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
திருவருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக