*கண்டதும் காணாததும்!*
*கண்டது சிறிதளவு காணாதது பெரிதளவு*
நம் உடம்பில் இரண்டு வகையான கண்கள் உள்ளன. ஒன்று அகக்கண் ஒன்று புறக்கண் என்பனவாகும்.
அகக்கண்ணுக்கு அருட்கண் என்றும். புறக்கண்களுக்கு பூதக்கண்கள் என்றும். (பொய்) ஊனக்கண்கள் என்றும் சொல்லப்படும்.
*புறக் கண்களின் பார்வை!*
நம் புறக்கண்களை ஊனக் கண்கள் என்றும் சொல்லக்காரணம். ஊன் என்ற அசுத்த பூத காரிய அணுக்களால் பின்னப்பட்ட உடம்பின் புறத்தில் உள்ளதால் ஊனக்கண் என்பதாகும்.
மாயை மாமாயை பெருமாயை என்னும் சக்தியால் நிர்வாகம் செய்யும் இவ்வுலகப் பொருள்கள் யாவும் தோற்றம் மாற்றம் மறைவுக்கு உட்பட்டதாகும்.
தோற்று விக்கப்பட்ட பஞ்சபூத உலகத்தையும் மற்றும் பஞ்சபூதங்களால் பின்னப்பட்ட உடம்பையும் அவற்றிற்கு தேவையான மண் நீர் அக்கினி காற்று ஆகாயம் ஆகிய பொருள்கள் யாவையும் நம் உடம்பின் புறப்புறத்தில் உள்ள பூதக் கண்களால் காணமுடியும். காண்பன எல்லாம் ஜடப் பொருள்கள் மற்றும் பொய்ப் பொருள்கள் மட்டுமே பூதக் கண்களுக்குத் தெரியும்.
மேலும் ஒருகுறிப்பிட்ட தூரத்திற்கு மேல் நம்முடைய கண் பார்வை செல்லாது செலுத்தவும் முடியாது.
கண்ட கண்ட சிறிய பொருள்களைக் காணமுடியுமேத் தவிர *காணாத காணமுடியாத மறைபொருளான அருட்பெருஞ்ஜோதி மெய்ப் பொருளை ஊனக் கண்களால் காணமுடியாது*.
*நம்முடைய உயிரையும் உடம்பையும் இயக்கிக் கொண்டுள்ள ஆன்மாவையே நம் கண்களால் காணமுடிவதில்லை என்றால்* பலகோடி அண்டங்களையும் இயக்கும் மெய்ப்பொருளை எவ்வாறு காண இயலும்.
*ஊனக் கண்களால் மெய்ப் பொருளைக் காண்பதற்கு வாய்பே கிடையாது.*
*அருட்கண்* !
*மனித தேகத்தின் அகத்தில் உள்ள ஒரேக்கண் அருட்கண் என்பதாகும்*.
*அகத்தில் உள்ளது ஆன்மா. ஆன்மாவின் உள்ளே அருள் நிறைந்து உள்ளது அருளில் இருந்து தோன்றுவதால் அதற்கு அருள் அறிவு என்றும்.மெய் அறிவு என்றும் மெய்ப்பொருள் என்றும். அருட்கண் என்றும் மெய்க்கண் என்றும் நெற்றிக்கண் என்றும் ஞானக்கண் என்றும் பலவாறாகச் சொல்லப் படுகிறது*
*ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடையும்போது ஞானக்கண் என்னும் அருட்கண் உலகம் முழுவதும் ஊடுருவி செல்லும்*
அருட் கண்ணால் மட்டுமே அண்ட கோடிகளையும் அவற்றில் உள்ள பொருள்களையும் உயிர்களையும் ஆண்மாக்களையும் மற்றும் அனைத்தையும் (யாவற்றையும்) படைத்த இயற்கை உண்மையான மெய்ப்பொருளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும் தடையில்லாமல் கண்டுகொள்ள முடியும்.
*வள்ளலார் பாடல்!*
அண்ட கோடி அனைத்தும் காணும் கண்கள் எய்தியே
அறிந்தேன் அங்கைக் கனிபோல் அவற்றில் உள்ள செய்தி யே
பிண்ட கோடி முழுதும்காணப் பெற்று நின்னை யே
பேசிப் பேசி வியக்கின்றேன் இப்பிறவி தன்னையே.!
என்று வள்ளலார் சொல்லுகிறார்.
நெற்றிக் கண்ணைத் திறக்க கோடிக்கணக்கான ஞானிகள் தவம்.தியானம்.
பக்தியோகம்.
ஞானயோகம்.ராஜயோகம்.போன்ற பலப்பல வழிமுறைகளில் முயற்சி செய்தார்கள். ஏகதேசம்
(சிறிதளவு) திறந்தது. முழுமையாக (பூரணமாக) அருட்கண் திறந்து மெய்ப்பொருளை காண்பதற்கு உள்ளே போக முடியாமல் வெளியே நின்று காத்துக் கொண்டு உள்ளார்கள்.
*வள்ளலார் பாடல் !*
உண்ணுகின்ற ஊண்வெறுத்து வற்றியும் புற் றெழுந்தும்
ஒருகோடிப் பெருந்தலைவர் ஆங்காங்கே வருந்திப்
பண்ணுகின்ற பெருந்தவத்தும் கிடைப்பரிதாய்ச் சிறிய
பயல்களினும் சிறியேற்குக் கிடைத்தபெரும் பதியே
நண்ணுகின்ற *பெருங்கருணை அமுதளித்து* என் உளத்தே
நானாகித் தானாகி அமர்ந்தருளி நான்தான்
எண்ணுகின்ற படிஎல்லாம் *அருள்கின்ற சிவமே*
இலங்கு நடத்தரசே என் இசையும் அணிந் தருளே.!
மேலும் பாடலில் சொல்லுகின்றார்!
நான்முகர் நல் உருத்திரர்கள் நாரணர் இந் திரர்கள்
நவில் அருகர் புத்தர் முதல் மதத்தலைவர் எல்லாம்
வான்முகத்தில் தோன்றி *அருள் ஒளிசிறிதே அடைந்து*
வானகத்தும் வையகத்தும் மனம்போன படியே
தேன் முகந்துண் டவர் எனவே விளையாடா நின்ற
சிறுபிள்ளைக் கூட்டம் என அருட்பெருஞ்சோ தியினால்
தான்மிகக் கண் டறிக எனச் சாற்றிய சற் குருவே
சபையில்
நடத்தரசே என் சாற்றும்அணிந் தருளே.!
அருள் ஒளி சிறிதே அடைந்து வானகத்தும் வையகத்தும் மனம் போனபடி சிறுபிள்ளைகளின் கூட்டம்போல் திரிந்தார்களேத் தவிர *அவர்களின் அருட்கண்கள் பூரணமாக திறந்து மெய்ப்பொருளைக் காணும் கண்களாக தோன்றவில்லை* என்கிறார் வள்ளலார்.
*வள்ளலாரின் அருட்கண் திறந்த்து !*
மருள்நெறி சேர் *மலஉடம்பை* அழியாத விமல
வடிவாக்கி எல்லாஞ்செய் வல்லசித்தாம் பொருளைத்
தருணமது தெரிந்தெனக்குத் தானே வந்தளித்த
தயாநிதியை எனை ஈன்ற தந்தையை என் தாயைப்
பொருள்நிறை
சிற்றம்பலத்தே விளங்குகின்ற பதியைப்
புகல் அரிதாம் சுத்தசிவ பூரணமெய்ச் சுகத்தைக்
கருணைஅருட் பெருஞ்சோதிக் கடவுளை *என் கண்ணால்*
கண்டுகொண்டேன் கனிந்து கொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.!
மேலே கண்ட பாடலில் அணுக்களால் பின்னப்பட்ட மருள்(இருள்) உடம்பை அழியாத அருள் உடம்பாக்கி அருட்கண் திறக்கப்பெற்று சுத்த சிவ பூரண மெய்ச் சுகத்தைக் கருணை அருட்பெருஞ்ஜோதி கடவுளை என் கண்ணால் கண்டு கொண்டேன் கனிந்து கொண்டேன்
கலந்து கொண்டேன் களித்தேன் என்கிறார்.
நாம் புறக்கண்களால் காணும் காட்சிகள் அனைத்தும் அநித்தியமானது.காதால்
கேட்டதெல்லாம் பழுதானது.
நாம் கற்றதெல்லாம் பொய்யானது.
நாம் களித்தது எல்லாம் வீணானது.நாம் உண்டது எல்லாம் மலமாகிப் போனது .
உட்கொண்டது எல்லாம் குறைபாடு உடையதானது. இதுவரையில் உண்மை என்னவென்று தெரிந்து கொல்லாமல் வீணான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உள்ளீர்கள் என்கிறார்.
*வள்ளலார் பாடல்!*
கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே
உண்டதெலாம் மலமே உட் கொண்டதெலாம் குறையே
உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே
விண்டதனால் என் *இனிநீர் சமரசசன் மார்க்க*
*மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து* *மெய்ப்பொருள்நன் குணர்ந்தே*
எண்டகு சிற்றம் பலத்தே எந்தைஅருள் அடைமின்
இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.!
இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண் காலம் கழிக்காமல். *சமரச சுத்த சன்மார்க்க சத்திய மெய்நெறியை கடைபிடித்து* மெய்ப்பொருள் நன்கு உணர்ந்து நமது தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றிக்கொண்டு மரணத்தை வென்று அருள் உடம்புடன் ஞானக்கண் என்னும் அருட்கண் திறக்கப்பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.
அருட்கண் திறக்க ஒரேவழி பொய்யான சாதி சமய மதங்களைப் பின்பற்றாமல்.
ஆண் பெண் என்ற பேதம் இல்லாமல் *ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் இடைவிடாது *சத்விசாரம் பரோபகாரம்* செய்தால் மட்டுமே அருட்கண் திறக்கும்.
*சன்மார்க்க அன்பர்களே மரணம் இல்லாப் பெருவாழ்வு பெறுவது எளிதான காரியம் அல்ல சிந்தித்து செயல்படுங்கள்*
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக