அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

இரவு பகல் இல்லாத இடம்!

 *இரவு பகல் இல்லாத இடம் !* 


*நாம் வாழும் இவ்வுலகில் இரவும் பகலும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கின்றது.* 


*ஆதலால் இன்பமும் துன்பமும்.பிறப்பும் இறப்பும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றது.*

மேலும் நினைப்பு மறைப்பு.விழிப்பு தூக்கம்.பற்று பற்றில்லாமை.

உறவினில் பகைமை.பகைமையில் உறவு போன்ற  வேற்றுமையில் ஒற்றுமை.

ஒற்றுமையில் வேற்றுமையின் வாழ்க்கை முறைகளாலும் மேலும் சாதி சமய மதங்களினாலும் அகம் கருத்து புறம் வெளுத்து மயக்க நிலையில் ஆன்மாக்கள் சிக்கித் தவித்துக்கொண்டு உள்ளன. 


*இவ்வுலகில் அறியாமை அஞ்ஞானம் மூட நம்பிக்கைகள் எல்லாம் சேர்ந்து  ஆன்மாவின் அருள் தன்மையைத் தெரிய வொட்டாமல் மாயாத் திரைகள் மறைத்துக் கொண்டுள்ளது.*


*அருள்பெறுவதே ஆன்மாவின் குறிக்கோளாகும்*


*ஆன்மா உயிர் உடம்பு எடுத்து வாழ்ந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு  அருள் பெற்று *உயிர் உடம்பை  அழிக்காமல் மாயையிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு இரவு பகல் இல்லாத அருள் பெருவெளிக்கு  செல்வதே ஆன்மாக்கள் பெறும் ஆன்ம இன்ப லாபமாகும்*.


*இராப்பகல் இல்லா இடத்தே வெண்ணிலாவே நானும் இருக்க  எண்ணி வாடுகின்றேன் வெண்ணிலாவே*! 


இரவு பகல் அற்ற இடத்திற்கு நான்  வரவேண்டும் என்று ஆண்டவரிடம் விண்ணப்பம் செய்கின்றார் வள்ளலார். 


*வெண்ணிலா என்பது இங்குள்ள நிலவைக் குறிப்பது அல்ல!*


*வெண்ணிலா என்பது வெள்ளை நிறம் உடையது சுத்தமான இடத்திற்கும் வெண்மை என்று பெயர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயங்கும் இடமான அருட்பெருவெளிக்கும் வெண்ணிலா என்று பெயராகும்*.

*கலவை இல்லாத அருளுக்கும் வெண்ணிலா என்று பெயராகும்* 


*அருட்பெருவெளி என்பது அருள் நிறைந்த பெருவெளியாகும் அங்கு பஞ்சபூதங்களான ஜட தத்துவங்கள் கிடையாது அங்கு இரவு பகல் என்பது கிடையாது*.


*அங்கு செல்ல வேண்டுமானால் பொன்மை வெண்மை கலந்த அருள் உடம்பாக மாற்றிக் கொண்டால் மட்டுமே அங்கு செல்ல முடியும் என்பதை அவசியம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்*.


வள்ளலார் பாடல்!


இருளும் ஒளியும் வந்த வகையை எண்ணி எண்ணி யே

இரவும் பகலும் மயங்கி னேனை இனிது நண்ணி யே


அருளும் பொருளும் கொடுத்து மயக்கம் நீக்கிக் காட்டியே

அன்பால் என்னை வளர்க்கின்றாய் நல்அமுதம் ஊட்டி யே.!


எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ இந்த பொருத்தம் பிறர்க்கு எய்தும் பொருத்தமோ ! என்று போற்றுகிறார்.

மேலும்


இரவும் பகலும் என்னைக் காத்துள் இருக்கும் இறைவ னே

எல்லா உலகும் புகழ எனைமேல் ஏற்றும் இறைவ னே

கரவு நினையா தெனக்கு மெய்ம்மை காட்டும் துணைவனே

களித்தென் தனையும் *சன்மார்க்கத்தில் நாட்டும் துணைவ னே*.

எனக்கும் உனக்கும்


*இரவுபகல் அற்ற  இடமான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சமூகமான அருட்பெருவெளிக்குள்ளே  ஆன்மாக்கள் செல்ல வேண்டிய சொந்த  இடமாகும்*


*இரவு பகல் அற்ற இடம்தான் நம் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் கோட்டையாகும்*.


ஆன்மாக்கள் அங்கு செல்ல வேண்டுமானால் இங்கு தூங்காமல் இருக்கும் சூதை தெரிந்து கொள்ள வேண்டும்.

கோட்டையைத் திறந்து உள்ளே செல்லும் சாவியை இங்கே பெறவேண்டும்


தூக்கம் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என்தனக்கே

ஆக்கமென ஓங்கும் பொன் அம்பலத்தான் - ஏக்கமெலாம்

நீங்கினேன் எண்ணம் நிரம்பினேன் பொன்வடிவம்

தாங்கினேன் சத்தியமாத் தான்.!


தூக்கம் இல்லாமல் வாழ்ந்து அருள் பெறுவது எவ்வாறு என்னும் சூதை அடுத்த கட்டுரையில் சிந்திப்போம். 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக