வடலூர் ஜோதி தரிசனம் காணும் உண்மை !
*வடலூர் ஜோதி தரிசனம் காணும் உண்மை* !
எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து !
*எல்லாவற்றுக்கும் வல்லமை பொருந்திய தனித் தலைவன் ஒருவன் உண்டு.அவரைத் தொடர்பு கொண்டால் மட்டுமே நம் எண்ணம் எல்லாம் நிறைவேறும் என்பது சத்தியமாகும்* என்பது வள்ளலார் வாக்கு.
அந்த சத்தியவான் யார்? அவரைக் காண்பது எங்கனம். வள்ளலார் வாக்குமூலம்.
*சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை விளம்பரம்* !
*25-11-1872, ஆம் ஆண்டு ! வள்ளலார் வெளியிட்டது*
உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே !
*அறிவு வந்த காலம் முதல் அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும்*.கேட்டு அறியாத அற்புதக் கேள்விகளையும்.
செய்து அறியாத அற்புதச் செயல்களையும்,
கண்டு அறியாத அற்புதக் காட்சிகளையும்,
அனுபவித்து அறியாத அற்புத அனுபவங்களையும்,இது தருணம் தொடங்கிக் கிடைக்கப் பெறுகின்றேன்.
என்று உணருகின்ற ஓர் சத்திய உணர்ச்சியால் பெருங் களிப்பு உடையோனாகி இருக்கின்றேன்.
*என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டும்*
நீவீர்களும் அவ்வாறு பெற்றுப் பெருங்களிப்பு அடைதல் வேண்டும் என்று எனக்குள்ளே நின்று நிறைந்து எழுந்து வெளிப்பட்ட எனது சுத்த சன்மார்க்க லஷியமாகிய *ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமைப்* பேராசை பற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன் .
இயற்கையில் தானே விளங்குகின்றவராய் உள்ளவர் என்றும்,
இயற்கையில் தானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்றும்,
இடண்டுபடாத பூரண இன்பமானவர் என்றும்,
எல்லா அண்டங்களையும் .எல்லா உலகங்களையும். எல்லாப் பதங்களையும்,
எல்லாச் சத்திகளையும்,
எல்லாச் சத்தர்களையும்,
எல்லாக் கலைகளையும்,
எல்லாப் பொருள்களையும்
எல்லாத் தத்துவங்களையும்.
எல்லாத் தத்துவிகளையும்.
எல்லா உயிர்களையும்.
எல்லாச் செயல்களையும்.
எல்லா இச்சைகளையும்.
எல்லா ஞானங்களையும். எல்லாப் பயன்களையும்,
எல்லா அனுபவங்களையும்,மற்றை எல்லா வற்றையும்
*தமது திருவருட் சத்தியால்*
*தோற்றுவித்தல்*,
*வாழ்வித்தல்,*
*குற்றம் நீக்குவித்தல்* ,
*பக்குவம் வருவித்தல்*,
*விளக்கஞ் செய்வித்தல்,*
முதலிய பெருங்கருணைப் பெருந் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும்,எல்லாம் ஆனவர் என்றும்,ஒன்றும் அல்லாதவர் என்றும்,
சர்வ காருண்யர் என்றும்,
சர்வ வல்லபர் என்றும்,
எல்லாம் உடையராய்த் தமக்கு ஒரு வாற்றானும் ஒப்புயர்வு இல்லாத் தனிபெருந்தலைமை *அருட்பெருஞ் ஜோதியர்* என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற *உண்மைக் கடவுள் ஒருவரே* அகம்புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த *சுத்த மெய்யறிவு என்னும் பூரணப் பொது வெளியில்* அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார்.
அவ்வாறு விளங்குகின்ற *ஒருவரே யாகிய கடவுளை* இவ்வுலகினிடத்தே ஜீவர்கள் (மனிதர்கள் ) அறிந்து,அன்பு செய்து, அருளை அடைந்து, அழிவில்லாத *சத்திய சுகப்பூரணப் பெருவாழ்வைப் பெற்று* வாழாமல் ,பல்வேறு கற்பனைகளால் பல்வேறு சமயங்களிலும்,
பல்வேறு மதங்களிலும்,
பல்வேறு மார்க்கங்களிலும்,பல்வேறு லஷியங்களைக் கொண்டு,
*நெடுங்காலம் பிறந்து பிறந்து,அவத்தை வசத்தர்களாகிச் சிறிய அறிவும் இன்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்து இறந்து வீண் போகின்றோம்.*
இனி இச்சீவர்கள் ( மக்கள் ) விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல் *உண்மை அறிவு,உண்மை அன்பு,உண்மை இரக்கம்* முதலிய சுப குணங்களைப் பெற்று நற்செய்கை உடையவர்களாய்.
எல்லாச் சமயங்களுக்கும்,
எல்லா மதங்களுக்கும்,
எல்லா மார்க்கங்களுக்கும், **உண்மைப் பொது நெறியாகி விளங்கும்* *சுத்த சன்மார்கத்தைப் பெற்று* பெருஞ் சுகத்தையும் பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு ,
மேற்குறித்த *உண்மைக் கடவுள் தாமே திருவுளங் கொண்டு......*
*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ஞானசபையை* *இங்கே தமது திருவருட் சமமதத்தால் இயற்று வித்து இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம்,அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடு கின்றோம் என்னும் திருக்குறிப்பை வெளிப்படுத்தி, *அருட்பெருஞ் ஜோதியராய் வீற்று இருக்கின்றார்*.
ஆகலின் ,அடியிற் குறித்த தருணம் தொடங்கி வந்து வந்து தரிசிக்கப் பெருவீர் களாகில் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்பு அடைவதும் அன்றி, *இறந்தவர் உயிர் பெற்று எழுதல்,மூப்பினர் இளமைப் பெற்று நிற்றல்* முதலிய பல்வகை அற்புதங்களைக் கண்டு பெருங் களிப்பையும் அடைவீர்கள்.
மேலே கண்ட *சத்திய ஞானசபையின் உண்மை விளக்கம் விளம்பரம்* என்னும் தலைப்பில் *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்* ஆணைப்படி பத்திரிகையை வெளிப்படுத்தி உள்ளார் வள்ளலார்.
நாம் வடலூர் சென்று சென்று *ஜோதி தரிசனம்* காண்பது எதற்காக என்பதை சுத்த சன்மார்க்கிகளும் பொது மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும்.
உருவம் அற்ற ஒளிவழிபாடே ஜோதி வழிபாடாகும்.
*வடலூர் சத்திய ஞானசபையின் ஜோதி தரிசனம் என்பது சமயம் மதம் சார்ந்த பக்தி மார்க்க சார்ந்த தைப்பூசம் வழிபாடு போல் அல்ல. ஞானம் என்னும் பூரண அருள் பெற்று மரணத்தை வெல்லும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையில் இயற்கை உண்மையை வெளிப்படுத்தும் இயற்கை விளக்கத்தை காணும் அருள் பெறும் ஜோதி வழிபாடாகும்*.
உலகில் அருள் வழங்கும் ஒரே இடம் வடலூர் மட்டுமே ! எனவேதான் வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே என்று வடலூருக்கு அழைக்கின்றார் வள்ளலார்.
*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஞானசபையில் அமர்ந்து அருள் வழங்கும் இடமே வடலூர் சத்திய ஞானசபையாகும்.*
ஆதலால் அடிக்கடி வடலூர் வந்து தரிசிக்கப் பெருவீர்களாகிற் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் அன்றி இறந்தவர் உயிர்பெற்று எழுதல். மூப்பினர் இளமைப்பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங்களிப்பும் அடைவீர்கள் என்னும் சத்திய வாக்கை வெளிப்படுத்துகின்றார்.
வள்ளலார்பாடல் !
சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்
சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்
இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்
இனிவரும் அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்
சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்
தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்
செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்
திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.!
என்னும் பாடல் வாயிலாகவும் அறியலாம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு