அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

உயிரைக் காப்பாற்ற தெரியாத சமுதாயம் !

 *உயிரைக் காப்பாற்ற தெரியாத  சமுதாயம்*! 


இந்த பஞ்சபூத இவ்வுலகில் ஆன்மா என்னும் அணு ஒளியை. உயிர் உடம்பு எடுத்து வாழ வேண்டும்  என்பதற்காக ஆன்மாவை ஆணவத்தின் துணை கொண்டு தனியாக இறைவனால் அனுப்பப்பட்டு வந்துள்ளது. 


இவ்வுலகில் ஆன்மா தனித்து வாழமுடியாது. வாழ வேண்டுமானால் உயிரும் உடம்பும் அவசியம் தேவைப்படுகிறது. உயிரும் உடம்பும் பஞ்ச பூத அணுக்களைக் கொண்டு மாயையால் வாடகை என்னும் வீடு கட்டிக் கொடுக்கப் படுகிறது. நாம் தினமும் கொடுக்கும் உணவுதான் வாடகை என்பதாகும். மாயை மாமாயை பெருமாயை என்னும் மூன்று மாயைகளையும் படைத்தவரும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ! 


*உணவு இல்லாமல் உயிர் வாழமுடியாது.*

*உணவு உண்பதால் உயிரைக் காப்பாற்ற முடியாது.* 


*பொருள் உணவை நிறுத்தி அருள் உணவு உட்கொள்வதே மரணத்தை வெல்லும் வழியாகும்*


*ஆன்மாவின் ஒளித்தன்மை கோடி சூரிய பிரகாசம் உடையது.* ஆன்மா தங்கி வாழ்வதற்கு உயிர் உடம்பு என்னும் அணுக்களால் பின்னப்பட்ட வீடு தேவைப்படுகிறது.


ஆன்மாவிற்கு உயிரும் உடம்பும் எவரால் எந்த சக்தியால் எந்த எந்த அணுக்களால் பின்னப்பட்டு  கொடுக்கப்படுகிறது என்பதை எவராலும் காணமுடியாது. எவ்வாறு சேர்ந்தது என்பதை எந்த கொம்பனாலும் சொல்ல முடியாது. எந்த அருளாளர்களாலும் கண்ணால் கண்டு சொல்ல முடியவில்லை. 


*கண்களுக்குத் தெரியாமல் நடப்பதே  உயிர் தோற்றம் உடல் தோற்றமாகும்.*


அணு அறிவியல் ஆராய்ச்சி கண்டு பிடிப்பாளர்களான அணு விஞ்ஞானிகளாலும்.அவர்கள் கண்டுபிடித்த எந்த கருவியாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. கருவிகளால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கும் அவற்றில் சிக்கமுடியாத அளவிற்கும் மாபெரும் இருட்டு அறையில் அருள் ஆற்றல் எனும் அருள் சக்தியால் உயிர் உடம்பு படைக்கப்படுகிறது. 

இதுவே பிரம்மரகசியம் என்பதாகும்.  


*வள்ளலார் சொல்லுவதை கேளுங்கள்*


உள்ளொளி யோங்கிட உயிரொளி விளங்கிட

வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே!  


மெய் அருட்கனல் எனும் இறை ஆற்றலால் திருவருட் சத்தியால். சராசர ஜீவராசிகளின் உயிர் உடம்பு மற்றும் அனைத்தும்  மறைமுகமாக தோற்றுவித்தல்.வாழ்வித்தல்.குற்றம் நீக்குவித்தல்.

பக்குவம் வருவித்தல். விளக்கம் செய்வித்தல் என்னும் ஐந்தொழில்களும் பெருங் கருணையால் நடைபெறுகிறது.

இவை எல்லா உயிர் இனங்களான ஜீவராசிகளுக்கும் அதன் அதன் தகுதிக்கு தகுந்தவாறு ஒரே சீராக  நடைபெறுகின்றது.


அந்த *இறை உண்மையை கண்டுபிடிக்கும் உயர்ந்த அறிவு  அருள் ஆற்றல்  மனித குலத்திற்கு மட்டும் இறைவனால் வழங்கப்பட்டு வருகிறது.* அந்த அருள் ஆற்றலை முழுமையாக

( பூரணமாக ) பெற்றவர்கள் இவ்வுலகில் வள்ளலாரைத் தவிர வேறு எவரும் இல்லை என்றே சொல்லலாம்.


*அந்த இயற்கை உண்மை கடவுள் யார்?  என்பதையே  இந்த மனிதகுலம் இன்றுவரை அறிந்து கொள்ளவில்லை*.


*இந்த உண்மை தெரியாமல் பொய்யான தத்துவ கடவுள்களையே கற்பனைகளாக ஆன்மீகவாதிகள் படைத்துள்ளார்கள்*.

வள்ளலார் மட்டுமே அந்த இயற்கை உண்மை  மெய்ப்பொருளான 

அருட்பெருஞ்ஜோதி யைக்  

கண்டுபிடித்துள்ளார் அந்த மெய்ப்பொருளுக்கு


*அருட்பெருஞ்ஜோதி* *அருட்பெருஞ்ஜோதி* *தனிப்பெருங்கருணை*

*அருட்பெருஞ்ஜோத*! என்றும் பெயர் வைத்துள்ளார்.


அந்த மெய்அருள் கனல் பற்றி வள்ளலார் சொல்லி உள்ளதை கவனிக்க வேண்டும்.


*உள்ளொளி யோங்கிட வுயிரொளி விளங்கிட*

*வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே!* என்று தெளிவாக விளக்கி உள்ளார்.


*உயிரும் உடம்பும் எடுத்த வழியும் வந்த வழியும் தெரிந்து இருந்தால் உயிரையும் உடம்பையும் காப்பாற்றும் வழியும்  எளிதாக மக்களுக்குத் தெரிந்திருக்கும்*.


*வள்ளலார் பாடல் !*

என்னைக் காட்டி என்னுள் இலங்கும் நின்னைக் காட்டியே

இறங்கா நிலையில் ஏற்றி ஞான அமுதம் ஊட்டி யே

பொன்னைக் காட்டிப் பொன்னே நினது புகழைப் பாடியே

புந்தி களிக்க வைத்தாய் அழியா தென்னை நாடியே.!


அண்ட கோடி அனைத்தும் காணும் கண்கள் எய்தியே

அறிந்தேன் அங்கைக் கனிபோல் அவற்றில் உள்ள செய்தியே

பிண்ட கோடி முழுதும் காணப் பெற்று நின்னையே

பேசிப் பேசி வியக்கின்றேன் இப் பிறவி தன்னையே.! 


எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ இந்த பொருத்தம் உலகில் பிறருக்கு எய்தும் பொருத்தமோ ! என்று வள்ளலார் தான் கண்ட காட்சியை விளக்கி தெளிவுப் படுத்துகின்றார்


*உயிரும் உடம்பும் பிரியும் வகையும் பிரியா வகையும்!*


உயிருக்கும் உடம்ப்பிற்கும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் பெரும்பிணி (நோய்) வந்துவிடும் அதுதான் மரணப் பெரும் பிணியாகும் . அந்த பிணியைத் தாங்கமுடியாமல் இயங்க முடியாமல் போனதால் ஆன்மாவை விட்டு விலகி பிரிந்து விடுகிறது.


*நோய் தீர்க்கும் மருந்து !* 


உடற்பிணியையும் உயிர் பிணியையும் காப்பாற்றும் மருந்தை கண்டு பிடித்தவர் *தமிழ்நாட்டில் தோன்றிய அருள் விஞ்ஞானி திருஅருட்பிரகாச வள்ளலார்*


*வள்ளலார் பதிவு செய்துள்ள திருஅகவல் வரிகள்*.!


*உடலுறு பிணியால்  உயிர் உடல் கெடாவகை*

*அடலுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி!*


*உடற் பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி அனைத்தையும்*

*மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே!* 


உயிர்ப்பிணியும் உடற்பிணியும் வருவதால் உயிரையும் உடம்பையும் விட்டு ஆன்மா  பிரிந்து விடுகிறது. அதற்கு மரணம் என்றும் இறப்பு என்றும் பெயர் வைத்துள்ளார்கள்.

உயிர் போய்விட்டது என்றும் வழக்கத்தில்  சொல்லப்படுகிறது.


உயிர் உடம்பை காப்பாற்றத்  தெரியாமல் போனதால் உயிர்  உடம்பை விட்டு பிரியும் ஆன்மா என்னும் அணு மீண்டும் மீண்டும் தொடர்ந்து பிறவி எடுத்துக் கொண்டே இருக்கும்.


*உயிரையும் உடம்பையும் அழிக்காமல் அப்படியே நூறு இருநூறு ஆண்டுகள்  வாழ்வதும் வாழ்க்கை அல்ல*.* *அப்படியே நீண்ட காலம்  வாழவும் முடியாது வாழ்ந்தாலும் மரணம் வந்தே தீரும்*  


மரணத்தை வெல்ல முடியாதவர்கள் எவ்வளவுதான் உயர்ந்தவர்களாகவும் அனைவராலும் பாராட்டத் தக்கவர்களாகவும்.போற்றத் தகுந்தவராயினும் எப்படி இருந்தாலும் மரணம் வந்தால் அவர்கள் குற்றம் உடையவர்களே.

தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்பவர்களே ! தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்கள் என்று வள்ளலார் சொல்லுகிறார்.


மேலும் *பாவத்தின் சம்பளம் மரணம் என்றும் சொல்வார்கள்.*


மேலும் பல கர்ம சித்தர்கள்.யோக சித்தர்கள்.

நாயன்மார்கள் மற்றும் ஞானிகள்  உயிரை அடக்கி உடம்பை மாற்றி பஞ்ச பூதங்களில் கலந்து உள்ளவர்களும் மீண்டும் பிறப்பு எடுப்பவர்களே !  


*அருள் தேகம் பெறுவதே மரணத்தை வெல்லுவதாகும் !* அதாவது ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றுவது.

அதாவது ஊனினை உருக்கி உள் ஒளியை பெருக்குவதாகும்.


ஆன்மா உயிர் உடம்பு  மற்றும் அணுத்துகள்களால் பின்னப்பட்டு இணைந்துள்ள ஊன் தேகம்.நம்மை படைத்த   அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று என்றும் எதனாலும் அழிக்க முடியாத அருள் தேகமான *சுத்த பிரணவ ஞானதேகம்* பெறுவதே மரணத்தை வென்று வாழும்  வாழ்க்கையாகும். *ஞான தேகத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது.*


*வள்ளலார் பாடல்* ! 


வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது

வாழ்க்கைஎலாம் வாழ்க்கைஎன மதித்துமயங் காதீர்


மையகத்தே உறுமரண வாதனையைத் தவிர்த்த

வாழ்க்கையதே வாழ்க்கை என மதித்ததனைப் பெறவே


மெய் அகத்தே விரும்பி இங்கே வந்திடுமின் எனது

மெய்ப்பொருளாம் தனித்தந்தை இத்தருணந் தனிலே


செய்அகத்தே வளர் ஞான சித்திபுரந் தனிலே

சித்தாடல் புரிகின்றார் திண்ணம்இது தானே.!  


உலகில் உள்ள மனித தேகம் பெற்ற அனைவரும் மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாறவேண்டும்.என்பதே இறை ஆணையாகும்.


இறைவனை அறிந்து கொள்ள வேண்டும்.இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தனிப்பெருங் கருணையால் அருளை வழங்க *உத்தர ஞான சித்திபுரம் என்னும் வடலூரில் அமைந்துள்ள சத்திய ஞானசபையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள்நடம் புரிகின்றார்* 


*பற்றுகள் அனைத்தும் பற்றுஅற விடவேண்டும்!*


உலகப் பற்றான பொருள்பற்றை விட்டு. *இந்திரிய.கரண.ஜீவ.ஆன்ம ஒழுக்கத்தை முழுமையாக கடைபிடித்து *அருள் பற்றை விரும்புபவர்கள்* மட்டும் வடலூர் வந்து வந்து நினைந்து நினைந்து. உணர்ந்து உணர்ந்து. நெகிழ்ந்து நெகிழ்ந்து. அன்பே நிறைந்து நிறைந்து. ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து   *சிற்சபை நடத்தை தெரிந்து துதித்து வேண்டுபவர்களுக்கு திரைகளை நீக்கி அருள்அமுதமான நந்நிதியை வாரி வாரி வழங்க அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தயார் நிலையில் உள்ளார்*.


*அருள் பெறும் தகுதியை நாம் ஒவ்வொருவரும் வளர்த்தி கொள்ள வேண்டும். நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்*.


*என் மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம்*!


*வள்ளலார் பாடல் !*

உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே

உறவன்அன்றிப் பகைவன் என உன்னாதீர் உலகீர்


கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்

கரணம்எலாம் கலங்கவரும் மரணமும் 

சம்மதமோ


சற்றும் இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது

தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்


இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும் சேர்ந் திடுமின்

என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே! 


உலகில் உள்ள கற்றவர் கல்லாதார்.

உயர்ந்தவர் தாழ்ந்தவர்.ஏழை பணக்காரன் அனைவருக்குமே கண்முன்னே மரணம் வந்து அழிந்து கொண்டே உள்ளார்கள்.

அவற்றை எல்லாம் பார்த்து கொண்டே உள்ளீர்கள். கரணம் எல்லாம் கலங்க வரும் மரணம் உங்களுக்கு சம்மதமா ?  என ஒரு கேள்வி கேட்கிறார் வள்ளலார்.


என்மனமானது உங்களைப்போன்று  கன்மனமோ வன்மனமோ இல்லை எனக்கு இதில் சம்மதமும் இல்லை என்று வள்ளலார் சொல்லுகிறார்.


இந்த கொடூரமான மரணத்தை தடுத்திடலாம் தடுக்கும் வழியை கண்டு பிடித்துள்ளேன் என்னோடு அனைவரும் சேர்ந்து விடுங்கள் *என்மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம்* என்று ஆன்மநேயத்துடன் அன்புடன் உலக மக்களை  அழைக்கிறார். 


*இறந்தார் பிறந்தார் வாழ்ந்தார்  இறந்தார் என்ற செய்தி கேட்டு கேட்டு சலிப்படைவதே உலகத்தின்  வழக்கமாகிவிட்டது*

*மேலும் வள்ளலார் பாடல்!*


இறந்தவரை எடுத்திடும் போ தரற்றுகின்றீர் உலகீர்

இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்


மறந்திருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ நுமக்கு

மறந்தும் இதை நினைக்கில் நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்


சிறந்திடு சன் மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம்

சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே


பிறந்த பிறப்பு இதில் தானே நித்தியமெய் வாழ்வு

பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.!  


*செத்த பிணங்களைப் பார்த்து சாகும் பிணங்கள் அழுகின்றது.*


மனித வாழ்க்கையில் பிணி மூப்பு இறுதியில் மரணம் வந்து விடுகிறது.மரணம் அடைந்தவர்களை பார்த்து அய்யோ அய்யோ !  அம்மா அப்பா தாத்தா பாட்டி எங்களை விட்டு போய்விட்டீர்களே என்றும் குய்யோ முறையோ என்றும் என்ன செய்வோம் என்றும் தலையிலும் மார்பிலும் அடித்துக் கொள்கிறீர்கள். நேற்று இருந்தவர் இன்று இல்லை.நேற்று பேசியவர் இன்று பேசவில்லை.

சற்று முன் பார்த்தவர்.அருகில் இருந்தவர்.

நடமாடியவர்.

கொடுத்தவர் வாங்கு சாப்பிட்டவர் மற்றும் எல்லா உணர்வும் உள்ளவர் இன்று உணர்வு இல்லாமல்.இயக்கம் இல்லாமல்  ஜடமாக கிடைக்கின்றாரே என்று பேசி பேசி அழுகின்ற காட்சிகள் உலகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கின்றது. 


*இந்த மரணப் பெரும்பிணியை தவிர்க்கும் மாமருந்தை கண்டு பிடித்தவர் வள்ளலார்.* 

இந்த பிறப்பிலேயே மரணத்தை வெல்ல வேண்டும் என்பதே சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.


இறவாத பெரும் வரத்தை நீங்கள் அனைவரும் பெற்றிடலாம் சந்தேகம் வேண்டாம் வாருங்கள் என அழைக்கின்றார்.


*நாம் செய்ய வேண்டியது* ! 


வள்ளலார் தோற்றுவித்த மார்க்கம் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்ற மிகச் சிறந்த ஒழுக்கம் நிறைந்த மார்க்கமாகும். இந்த மார்க்கத்தில் இணைந்து வள்ளலார் சொல்லியவாறு *உண்மை ஒழுக்கத்தோடு சாகாக்கல்வி கற்கவேண்டும்.*


சாகாக்கல்வி கற்பதற்கு எவை எவை எல்லாம் தடையாக இருக்கிறதோ அவற்றை எல்லாம் பற்றுஅற விட்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அம்பலப் பற்றை மட்டுமே பின்பற்ற வேண்டும்.


*எல்லா உயிர்களும் இறைவன் படைப்பு என்பதை உணர்ந்து   *தன் உயிரைக் காப்பாற்ற பிற உயிர்களை காப்பாற்ற வேண்டும்*


*வள்ளலார் பாடல்*!


மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் களானால்

மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ


சற்றும் அதை நும்மாலே தடுக்கமுடி யாதே

சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை


எற்றி நின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்

இல்லைகண்டீர் சத்தியமீ தென் மொழிகொண் டுலகீர்


*பற்றிய பற் றனைத்தினையும் பற்றற விட்டு அருள் அம்*

*பலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே.!* 


என்னும் பாடலில் தெளிவாக பதிவு செய்துள்ளார்.


*உலகிலே மிகவும் கொடுமையான வேதனையான சம்பவம் மரணம் மட்டுமே.*


மரணத்தை வெல்லும் தகுதி பெற்றவர்களையே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அன்புடன் ஏற்றுக்கொள்கிறார். 


*ஆன்மீகம் என்ற விலாசத்தில் இருப்பதாலோ.

தத்துவ கடவுள்களை வழிபடுவதாலோ தவம் தியானம் யோகம் செய்வதாலோ கடவுளைக் காணவும் முடியாது. அருளைப் பெறவும் முடியாது.*


*உயிர்கள் இடத்தில் இரக்கமும் கடவுள் இடத்தில் அன்பு மட்டுமே மிகவும் முக்கியமானதாகும்.*


*மரணத்தை வென்றவர் மட்டுமே  கடவுளைக் காணும் தகுதி பெற்றவர். கடவுளைக் காணும் தகுதி பெற்றவர் மட்டுமே மரணத்தை வெல்லும்  தகுதி பெற்றவர்* என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.


*இன்று உலகம் முழுவதும் கொரோனோ என்னும் கொடிய நோயால்  மரண ஓலங்கள் நிகழ்ந்து கொண்டுள்ளன*. 


மரணத்தை வெல்லும் வழி தெரியாமல் மக்கள் தவித்துகொண்டு உள்ளார்கள். தினமும் வரும் செய்திகளை பார்க்கும்போதும் கேட்கும்போதும் மனம் மிகவும் வேதனை அடையச் செய்கின்றது.


எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் மக்களை காப்பாற்ற வேண்டும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக