அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

புதன், 10 மார்ச், 2021

உண்மை உரைக்கின்றேன் !

 *உண்மை உரைக்கின்றேன்!*


*வள்ளலார் பாடல்!*


உண்மையுரைக் கின்றேன் இங்கு வந்தடைமின் உலகீர்

உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர்


எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான்

என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர்


தண்மையொடு சுத்த சிவ சன்மார்க்க நெறியில்

சார்ந்து விரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்


கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள் எனப்புகலும்

கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே.! 


மேலே கண்ட பாடலில் உண்மை உரைக்கின்றேன் இங்கு வந்து அடைமின் என்று உலக மக்களை ஆன்மநேயத்துடன் அன்புடன் அழைக்கின்றார் வள்ளல்பெருமான். 


உண்மை உரைக்கின்றேன் என்றால் ?  இதுவரையில் உலகில் தோன்றிய ஆன்மீக அருளாளர்கள்.

மற்றும் ஆன்மீக போதகர்கள் எவரும் *உண்மையான மெய்ப்பொருள்* என்னும் கடவுளை அறிந்து தெரிந்து உணர்ந்து அனுபவித்து உலக மக்களுக்கு நேரிடையாக  உரைக்க வில்லை என்ற உண்மையை வெளிப்படையாக வள்ளலார் சொல்லுகின்றார். 


நான் உண்மை உரைக்கின்றேன் என்றால் மன்றவர்கள் எல்லாம் பொய் சொல்லி உள்ளார்கள் என்பதுதான் உண்மையான அர்த்தம் என்பதை அறிவாலே அறிந்து கொள்ள வேண்டும்.


*அப்படி என்ன பொய் சொல்லி உள்ளார்கள் !* 


*வள்ளலாரே  சொல்லுகிறார்.*


சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி!

என்றும்.  


*சமயம் குலம் முதல் சார்பெலாம் விடுத்த அபயம் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி!*

மேலும் 

*எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு* ! என்னும் குறள் வாயிலாக திருவள்ளுவரும் 

சொல்லி உள்ளார். 


*சாதி சமயம் மதங்கள் சொல்லிய அனைத்து கொள்கைகளும் பொய்யானது என்று வெளிப்படையாக சொல்லியுள்ளார் வள்ளலார்*


இங்கே *மெய்ப்பொருள் என்பது எது ? என்றால் தோற்றம் மாற்றம் இல்லாதது. எக்காலத்தும் நிலையாக உள்ளது.தானே தானாகி எல்லாம் தானாக உள்ளது.குடும்பம் குழந்தைகள் இல்லாதது.அறிவு அருள் ஆற்றல் உள்ள மனிதர்களாலும்  உருவாக்க முடியாதது. படைக்கமுடியாதது* 

*உருவமும் அருவமும் உபயமும் ஆகிய அருள்நிலை தெரித்த அருட்பெருஞ்ஜோதி*!  

என்கின்ற சமரச சுத்த சன்மார்க்க *சத்தியத்தின்  உண்மை நிலையாக  உள்ளது எதுவோ ! அதுதான் அருள்நிறைந்த தனிப் பெருங்கருணை பொங்கிய பேரொளியாகும் அதுவே *மெய்ப்பொருளாகும்*  


*இயற்கை உண்மையாக*

*இயற்கை விளக்கமாக.*

*இயற்கை இன்பமாக* உள்ளதுதான் *அருட்பெருஞ்ஜோதி* ஆண்டவர் என்பதாகும்.


*சமய மதங்கள் !*


மெய்ப்பொருளான  உண்மைக் கடவுளை காண முடியாமல். தொடர்புகொள்ளும் வழியைத் தெரிந்து கொள்ள முடியாமல்.அறிந்து கொள்ளும் முறை துறை வழி தெரியாமலும்.

உண்மையான கடவுளை உலக மக்களுக்கு தெரியப்படுத்த முடியாமல்.

அவரவர்களுக்கு தோன்றிய விளங்கிய கற்பனைக் கதைகளை உருவாக்கி காவியங்களாக படைத்து. அக்கதைகளின் கதாநாயகர்களையும்.  கதாநாயகிகளையும்.மற்றும் துணை நடிகர்களையும் நடிக்க வைத்து அவர்களுக்கு தத்துவங்களின் பெயர்சூட்டி .

அவர்களையே *பெரிய தெய்வங்களாகவும்*

*சிறிய தெய்வங்களாகவும்*  பொய்யான கற்பனை தத்துவ கடவுள்களை *சமயங்களும் மதங்களும்*  படைத்து உள்ளன. 


அக்கடவுள்களை வணங்கவும் வழிபடவும் உலகம் முழுவதும் தேவாலயங்களையும்.கோவில்களையும்.

சர்ச்சுக்களையும்.

மசூதிகளையும்.

பிரமீடுகளையும்.மற்றும் புத்தமத சங்க கொள்கைகளையும் தோற்று வித்துள்ளார்கள். 


மேலும் அவற்றின் தத்துவ உருவங்களைத் தெரிந்து கொள்ள சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் என்பவற்றின்  ஆச்சார சங்கற்ப விகற்பங்களும்.

வருணம் ஆசிரமம் முதலியவைகளும் படைத்து வைத்துள்ளார்கள்.


*மேலும் அவைகளின் மூலப் பொக்கிஷங்களான* *வேதங்கள்*.

*ஆகமங்கள்.*.

*புராணங்கள்.*

*இதிகாசங்கள்.*

*சாத்திரங்கள் போன்ற நூல்களையும் எழுதி வைத்துள்ளார்கள்*


*வள்ளலார் பாடல்!* 


நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா

நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே


மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலை நீ விழித்து இதுபார் என்றெனக்கு விளம்பிய சற் குருவே


கால்வருணங் கலையாதே வீணில் அலையாதே

காண்பன எல்லாம் எனக்குக் காட்டிய மெய்ப் பொருளே


மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற

வயங்கு நடத்தரசே என் மாலைஅணிந் தருளே.!


மேலும்.


வேதம் ஆகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்

வேதம் ஆகமத்தின் விளைவறியீர் - சூதாகச்

சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை

என்ன பயனோ இவை.! 


என்னும் பாடல்களின் வாயிலாக வெளிப்படையாக தெரியப்படுத்துகின்றார்.


*ஆரம்பத்தில் இவை எல்லாம் உண்மை என்று நம்பி பின்பற்றிய வள்ளலார் உண்மைக் கடவுள் யாராக இருக்கும் எவ்வண்ணமாக. எவ்வடிவமாக இருக்கும். என இடைவிடாது தேடினார் உண்மை அறிந்து கொண்டார். பின்னாளில் முன்னாடி  உள்ள சாதி.சமயம் மதங்களும் அவற்றில் போதிக்கப்பட்ட கொள்கைகள் யாவும் பொய் என்றும் அறிந்து கொண்டார்.* 


*வள்ளலார் வரிகள் !*


பொய்ந்நெறி யனைத்தினும் புகுத்தாது எனை யருட்

செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே! 


பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும்

ஐயரைக் கண்டேன டி - அக்கச்சி

ஐயரைக் கண்டேன டி.!


என்னும் வரிகளின் வாயிலாக. மக்களின் மனத்தை. அறியாமையை. மயக்கத்தை மூட பழக்க வழக்கங்களை உண்டாக்கிய சாதி சமயம் மதங்களின் கட்டுக்கதைகள் என்னும் பொய்யை அறிந்து கொண்டேன் என்கிறார்.


 *மெய்ப் பொருளான அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே* வள்ளலாருக்கு வெளிப்படையான உண்மையை உணர்த்தி காட்டிஉள்ளார். ( இதனை விளக்கினால் நீளும் என்பதால் சுருக்கமாக சொல்லுகிறேன்) 


*வள்ளலார் பாடல் !*

அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் சோதியை என்

அம்மையை என் அப்பனை என் ஆண்டவனை அமுதைத்


தெருளுறும் என் உயிரை என்றன் உயிர்க்குயிரை எல்லாம்

செய்யவல்ல தனித்தலைமைச் சித்த சிகாமணியை


மருவுபெரு வாழ்வை எல்லா வாழ்வும் எனக் களித்த

வாழ்முதலை மருந்தினை மா மணியை என்கண் மணியைக்


கருணைநடம் புரிகின்ற கனகசபா பதியைக்

*கண்டு கொண்டேன் கனிந்து கொண்டேன் கலந்து கொண்டேன் களித்தே*.! 


என்னும் பாடலின் வாயிலாக தெரியப்படுத்துகின்றார். உலகப் பற்றை விடுத்து இந்திரிய.கரண.ஜீவ.ஆன்ம ஒழுக்கம் நிறைந்து கருணையே வடிவமாக வாழ்ந்து. *வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றும். எல்லா உயிர்களையும் தம் உயிர்போல்  நிணைந்து உணர்ந்து ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் வாழ்ந்தும்.உயிர்களின் துன்பங்களை போக்கும் செயலோடும் உணர்வோடும் வாழ்ந்துள்ளதாலும்* *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் பூரண அருள்பெற்று ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றி சுத்த பிரணவ ஞானதேகம் பெற்றுள்ளதால்* 


*அருட்பெரு வெளியில். அருட்பெரு பீடத்து அருட்பெரு வடிவில்.அருட்பெருந் திருவிலே அமர்ந்து.அருட்பெரும் பதியாக.அருட்பெரும் நிதியாக.அருட்பெரும் சித்தி பெறும் அருள் அமுதமாக  அருள் அரசின் ஆட்சியில் அமர்ந்து அருள் ஆட்சி நடத்தும்  *மெய்ப்பொருளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாருக்கு அனைத்து உண்மைகளையும் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படுத்தி காட்டி காட்டியுள்ளார்.*  


*வள்ளலார் பாடல்!*


நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை

நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே


வான்உரைத்த மணிமன்றில் நடம்புரி எம் பெருமான்

வரவெதிர் கொண்டு அவன்அருளால் வரங்களெலாம் பெறவே


தேன்உரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவீர்

தெரிந்தடைந்து என் உடன் எழுமின் சித்திபெறல் ஆகும்


ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்

*யானடையும்  சுகத்தினை நீர் தான்அடைதல் குறித்தே.!*


என்னும் பாடல் வாயிலாக  நான் உரைக்கும் வார்த்தைகள் யாவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் வார்த்தை என்பதால் உண்மை உரைக்கின்றேன் என்கிறார். 


எனவே சாதி.சமயம்.மதங்களில் இருந்து விடுபட்டு.இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருள் பெற்று துன்பம்.துயரம்.

அச்சம்.பயம் இல்லாமல் என்றும் மகிழ்ச்சியுடன்  வாழ்வாங்கு வாழ்வதற்காக உண்மை உரைத்து மக்களை அன்புடன் அழைக்கின்றார் வள்ளலார். 


*சாதி சமய சழக்கை விட்டேன் அருட் ஜோதியை கண்டேன்*!


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக