அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

திங்கள், 25 ஜனவரி, 2021

வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே !

 *வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே* !


வடலூர் வடதிசைக்கே வாருங்கள் என அனைத்துலக மக்களையும் வள்ளலார் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் அழைக்கின்றார். மேலும் வடலூருக்கு வருவதோடு மற்றவர்களையும் உடன் அழைத்து வாருங்கள் என அன்பு கட்டளை பிறப்பிக்கின்றார். 


*இயற்கை உண்மையாம் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மக்களுக்கு நேரிடையாக அருள் பாலிக்கும் இடமாக தேர்வு செய்து அமைக்கப்பட்ட இடம்தான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை என்பதாகும்.*


வள்ளலார் பாடல்! 


1. வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே

வந்தாற் பெறலாம்நல்ல வரமே.

2. திருவார் பொன் னம்பலத்தே செழிக்கும் குஞ் சிதபாதர்

சிவசிதம் பரபோதர் தெய்வச் சபாநாதர் வருவார் அழைத்துவாடி.

3. சிந்தை களிக்கக்கண்டு சிவானந்த மதுவுண்டு

தெளிந்தோர் எல் லாரும் தொண்டு செய்யப் பவுரிகொண்டு

*இந்த வெளியில் நட மிடத்துணிந் தீரே*  *அங்கே*

*இதைவிடப்* *பெருவெளி இருக்குதென் றால்இங்கே* *வருவார்*

4. இடுக்கி லாமல் இருக்க இடமுண்டு நடஞ்செய்ய

இங்கம் பலம் ஒன்று அங்கே எட்டம்பலம் உண்டைய

*ஒடுக்கில் இருப்பதென்ன உளவுகண்டு கொள்வீர்என்னால்*

*உண்மைஇது வஞ்சமல்ல உம்மேல் ஆணை என்றுசொன்னால் வருவார்*

5. மெல்லியல் சிவகாம வல்லி யுடன்களித்து

விளையாடவும் எங்கள் வினை ஓடவும் ஒளித்து

எல்லையில் இன்பந்தரவும் நல்ல சமயந்தானிது

இங்குமங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது

வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே

வந்தாற் பெறலாம்நல்ல வரமே.!


மேலே கண்ட பாடலின் விளக்கத்தையும் அதில் உள்ள கருத்துக்களையும் தெரிந்து கொண்டால் உண்மை தானே விளங்கும்.


உலகில் உள்ள ஆலயங்களில் கோயில்களில் சர்சுக்களில்.

மசூதிகளில். பிரமிடுகளில் கடவுள் இருப்பதாக சொல்வது நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை நல்வழிப்படுத்த செய்யும் உபகாரச் செயலாகுமேத் தவிர உண்மை அல்ல.


கடவுள் எல்லா இடங்களில் நீக்கமற நிறைந்து இருப்பதாக சொல்பவர்கள் ஓர் இடத்தில் இருப்பதாக சொல்லுவது எந்த விதத்தில் ஏற்றுக்கொள்வது என்பதை சிந்திக்க வேண்டும்.


*சிதம்பர ரகசியம் !*


*சிதம்பரத்தில் உருவ வழிபாடு.அரு உருவ வழிபாடு.அருவ வழிபாடு என மூன்று வழிபாடுகள் உண்டு*. 

அதில் ஒன்று

. கடவுள் உருவம் அற்றவர் ஆகாயம்போல் விளங்குகின்றவர் என்பதை குறிக்கும் வண்ணம் *சிதம்பர ரகசியம்* என்பதை ஆலயத்தின் ஒரு சிறிய சுவரில் வில்வமாலைபோல் அமைத்து திரைகளால் மறைத்து வைத்து இருப்பார்கள்.

வழிபாடு நேரத்தில் திரைகளை நீக்கி குருக்கள் ஆராதனை செய்வார். மக்கள் அவற்றைக் கண்டு களித்து வணங்குவார்வள். 


சிதம்பரத்தில் மக்கள் வந்து வழிபாடு செய்ய வணங்க இடுக்கலான குறுகிய  நெருக்கமான இடமாக உள்ளது.

 ஒரே நேரத்தில் லட்சகணக்கான மக்கள் கண்டு களிக்க முடியாத இடமாகவும் உள்ளது. *வடலூரில் 80 காணி பெருவெளி உள்ளது* அதன் மத்தியில் சத்திய ஞானசபை எட்டு கதவுகள் வைத்து எண் கோணவடிவமாக அமைக்கப் பட்டுள்ளது.கோடிக்கணக்கான மக்கள் வந்தாலும் ஒரே நேரத்தில் எங்கிருந்து பார்த்தாலும்.எட்டு அம்பலத்தின் வழியாக ஜோதி தரிசனம் சிரமம் இல்லாமல் காணும் அளவிற்கு சத்திய ஞானசபையை அமைத்துள்ளார் வள்ளலார்.தற்சமயம் அங்கு எவ்வாறு நடந்து கொண்டுள்ளது என்பதே அனைவருக்கும் தெரியும்.


எட்டுப்பக்கம் இருந்து காணும் ஜோதி தரிசனம் சமய மதங்களின் வழிபாடுகள்போல் ஒருபக்கமாக காண்பிக்கப்

படுகிறது.இவற்றை எல்லாம் மாற்ற காலம் தான் பதில் சொல்லனும் அதுவரையில் காத்திருப்போம்.


அதே நேரத்தில் கடவுளின் உண்மைத் தன்மையை வெளிப்படையாக காட்டாமல் ஆதியிலே ஞானிகள் சித்தர்கள். மற்றும் பெரியவர்கள் என்று பெயரிட்டுக்கொண்டவர்கள் மண்ணைப்போட்டு மறைத்து வைத்து விட்டார்கள் என்பதை வள்ளலார் தெரிந்து அறிந்து அதன் உண்மையை திரை மறைப்பு இல்லாமல் மக்களுக்கு வெளிப்படுத்துகிறார்


*குழந்தை பருவத்திலே உண்மை அறிந்தவர்* 


வள்ளலார் ஐந்து மாதக் குழந்தையாக இருக்கும்போதே தாய் தந்தையருடன் சிதம்பரம் சென்று வழிபட சென்றுள்ளார்கள்.

*இறைவனால் வருவிக்க உற்ற ஏதும் அறியாத அந்த சிறுவயதில் ஞான குழந்தையான  வள்ளலாருக்கு இயற்கை உண்மையை வெளிப்படையாக இறைவன் காட்டியுள்ளார்*

*என்பதை தனது 49 ஆம் ஆண்டில் அருள்விளக்கமாலை என்னும் தலைப்பில் பாடலாக பதிவு செய்துள்ளார்*.


*பாடல்!*


தாய் முதலோரொடு சிறிய பருவமதில் தில்லைத்

தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது


வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்

வெளியாகக் காட்டிய என் மெய்உறவாம் பொருளே


காய்வகை இல் லாதுளத்தே கனிந்த நறுங்கனியே

கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே


தூய்வகையோர் போற்றமணி மன்றில் நடம்புரியும்

சோதி நடத்தரசே என் சொல்லும்அணிந் தருளே.!


மேலே கண்ட பாடலில் சிதம்பர ரகசியத்தின் மறைபொருளான இறை உண்மையை  ஜோதிவடிவமாக உள்ளார் என்பதை தனக்கு வெளிப்படையாக காட்டியதாக வள்ளலார் சொல்லுகிறார்.


*வள்ளலார் தான் அகத்தில் கண்ட அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் இயற்கை விளக்கத்தின் உண்மையை  புறத்தில் காட்டுவதே வடலூர் சத்திய ஞானசபையாகும்.* 


*சத்திய ஞானசபை என்னுள் கண்டனன் சன்மார்க்க சித்தியை நான் பெற்று கொண்டனன்* என்றும்.

*சபை எனது உளம் என தான் அமர்ந்து எனக்கே அபயம் அளித்ததோர் அருட்பெருஞ்ஜோதி!* என்றும் வெளிப்படுத்துகிறார்


*வடலூர் தைப்பூச ஜோதி தரிசனம் !*


*வடலூரில் ஜோதி  தரிசனம் ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட மாதத்தில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே காணவேண்டும் என்று வள்ளலார் எங்கும்  சொல்லவில்லை*.

 *எப்போது வேண்டுமானாலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை* *காணபதற்கு* வடலூர்

*வரவேண்டும்* *என்பதே வள்ளலார் காட்டிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க கொள்கையாகும்*


*சத்திய ஞானசபை விளம்பரம் பத்திரிகையில் 25-11-1872 ஆம் ஆண்டு வெளியிட்டது.*


சுருக்கமாக பதிவு செய்கிறேன்.


*கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதியர்*!  என்றும்.

அவர் எல்லாம் ஆனவர் என்றும்.ஒன்றும் அல்லாதவர் என்றும்.சர்வகாருண்யர் என்றும்.எல்லாம் உடையவராய் தமக்கு ஒருவாற்றானும் ஒப்புயர்வு இல்லாத  *தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதியர் என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக்கடவுள் ஒருவரே* அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய் அறிவு என்னும் பூரணப் பொதுவெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார்.


*இயற்கை உண்மைக்கடவுள்*


அவ்வாறு விளங்குகின்ற ஒருவரேயாகிய கடவுளை இவ்வுலகினிடத்தே ஜீவர்களாகிய நாம்  அறிந்து அன்புசெய்து  அருளை அடைந்து அழிவில்லாத சத்திய சுகப்பூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல் .


பல்வேறு கற்பனைகளாற் பல்வேறு சமயங்களிலும்.பல்வேறு மதங்களிலும் பல்வேறு மார்க்கங்களிலும் பல்வேறு லட்சியங்களைக் கொண்டு நெடுங்காலமும் பிறந்து இறந்து அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவும் இன்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி  இறந்து இறந்து வீண்போகின்றோம்.


இனியும் இச்சீவர்கள் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல்.

*உண்மை அறிவு.*

*உண்மை அன்பு*.

*உண்மை இரக்கம்*


முதலிய சுப குணங்களைப் பெற்று நற்செய்கை உடையவர்களாய் எல்லாச் சமயங்களுக்கும்.

எல்லா மதங்களுக்கும்.

எல்லா மார்க்கங்களுக்கும் *உண்மைப் பொது நெறியாகி விளங்கும்* சுத்த சன்மார்க்கத்தைப் பெற்று.பெருஞ் சுகத்தையும் பெருங்களிப்பையும்அடைந்து வாழும் பொருட்டு


*மேற்குறித்த உண்மைக்கடவுள் ஒருவரே  தாமே திருவுளங்கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய உண்மை விளக்கம் செய்கின்ற* *ஓர் ஞானசபை இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து* 


*இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகிறோம்* *என்னும் திருக்குறிப்பை வெளிப்படுத்தி.அருட்பெருஞ்ஜோதியராய்  வீற்றிருக்கின்றார்.* 

*இதுதான் முக்கிய வாக்குமூலம்*!


ஆதலின் இத்தருணம் தொடங்கி வந்து வந்து தரிசிக்கப் பெருவீர்களாகில் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் இன்றி  இறந்தவர் உயிர்பெற்று எழுதல்.மூப்பினர் இளமைப்பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங்களிப்பு அடைவீர்கள் என்று தெளிவாக சொல்லுகின்றார்.


*சமய மதங்களின் பிடியில் சிக்கிய வடலூர்*


வள்ளலார் சொல்லியவாறு வடலூர் சங்கம். சாலை. சபை  எதுவும் முழுமையாக நடைபெறவில்லை.


இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை யிடமும். சமய மதவாதிகளிடமும். மற்றும் அரசியல்வாதிகளிடமும் வடலூர் சிக்கித் தவித்துக் கொண்டுள்ளது. சமய மதங்களின் வழிபாடு போலவே சாதி சமய மத சடங்குகள்.மற்றும் வேடிக்கை வினோதங்கள் யாவும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. 


வள்ளலார் சொல்லியவாறு அருளாளர் ஒருவர் வருவார் அவர் வந்தவுடன் எல்லாமே மாற்றி அமைக்கப்படும் அதுவரையில் பொறுமையாக மக்கள் வேடிக்கைத்தான் காணவேண்டும்

வேறு வழியில்லை.


வடலூர் சங்கம்.சாலை.சபை

எவ்வாறு இயங்க வேண்டும் என்பதை பின்பு தெரியப் படுத்துகிறேன்.


காலம் கடந்த கடவுளைக் காண்பதற்கு காலம் கருதுவதேன் ! ?


அடங்குநாள் இல்லாது அமர்ந்தானை காண்பதற்கே தொடங்குநாள் நல்லதன்றோ ? 


வல்லவா எல்லாமும் வல்லானைக் காண்பதற்கே நல்லநாள் எண்ணிய நாள் ?


என்ற பல கேள்விகளை எழுப்புகின்றார் வள்ளலார்.உலகியலில் உண்மை விளக்கத்தை ஒருவரும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை.

பின்பற்றவும் இல்லை.காரணம் எல்லவரும் சாதி சமய மதவாதிகளே.


இவைகளை எல்லாம் பார்க்கும் போது வேதனைதான் மிஞ்சுகிறது.


*நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.*

*எல்லாம் திருவருள் சம்மதமே..*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக