*சாதி சமய மதத்தை ஒழித்தவர்* !
உலக வரலாற்றில் சாதி சமய மத ஒழிப்பிற்கு முதன் முதலில் வித்திட்டவர் தமிழ் நாட்டில் பிறந்த வாழ்ந்து மரணத்தை வென்ற மகான் வள்ளல் பெருமானாகும்.
வள்ளலாருக்கு பின்னாடிதான் சாதி சமய மதச் சீர்திருத்தங்கள். பல பெரியோர்களால் பேசப்பட்டது.மூட நம்பிக்கையை முதன் முதலில் வேரோடு சாய்த்தவர் வள்ளலார்.
*சாதி சமய மதங்களை ஏன் அழிக்க வேண்டும் என்ற ஒரு கேள்வி எழுகின்றது அல்லவா ?*.
மனிதகுலத்தின் ஆன்மாவில் உள்ள இயற்கை குணமான அன்பை தயவை.
கருணையை மறைத்துக் கொண்டு இருப்பதே பொய்யான சாதி சமய மதக்கொள்கைகளாகும்.எனவேதான் அவற்றை அகற்ற வேண்டும் என்பதாகும்.
இறைவனுக்கும் ஆன்மாவிற்கும் உள்ள நேரடித்தொடர்பை தடைசெய்து ஆன்ம அறிவை வெளிப்பட காட்டமுடியாமல் மறைத்துக் கொண்டு இருக்கும் மாயா திரைகளே சாதி சமய மதக் கொள்கைகளாகும்.
*அறிவின் வேறுபாடுகள்*
பகுத்தறிவு சிந்தனை.நாத்திக சிந்தனை.கடவுள் மறுப்புக் கொள்கைகள்
சமூகநீதி போன்ற முற்போக்கு சிந்தனைகள் பல அறிஞர்களின் அறிவு விளக்க துணிச்சலோடு உலகம் எங்கும்
மக்கள் மத்தியிலே பேசப்பட்டது.
ஆன்மநேயத்தையும் ஆன்மநேய கொள்கைகளையும் வள்ளலாரைத்தவிர வேறு எவராலும் பேசப்படவில்லை.
ஆன்மீகம் இல்லாத முற்போக்கு சிந்தனை.பகுத்தறிவு சிந்தனை.கடவுள் மறுப்புக் கொள்கைகள் எதுவானாலும் பெருமளவு மக்களிடம் சென்று சேரவில்லை என்பது உண்மையாகும்.
ஆன்மீக வழியிலே உண்டான மூட நம்பிக்கைகளான சாதி சமய மதக் கொள்கைகளை
புதிய ஆன்மீக கொள்கைகளை படைத்து. பழையவைகளை வேரோடு பிடுங்கி எறிய பாடுபட்டவர்களில் முதன்மையானவர் முக்கியமானவர் வள்ளலார்தான் என்பதில் சந்தேகமே தேவையில்லை.
*கடவுள் என்றால் அவர் யார்* ?
ஆன்மீக வழியில் பகுத்தறிவை விதைத்தவர் வள்ளலார்.பகுத்தறிவை உயர்ந்த அறிவு என்றும். உண்மை அறிவு என்றும். ஆன்ம அறிவு என்றும் சொல்லுவார் வள்ளலார். உண்மையான உயர்ந்த அறிவை தெரிந்து கொள்ளவும். வளர்த்திக்
கொள்ளவும் உருவாக்கியதே *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்பதாகும்*.
இங்கே கடவுள் மறுப்பு கொள்கை என்பதே கிடையாது.நாத்திகமும் கிடையாது. 100% கடவுள் உண்டு என்பதே வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையாகும். உண்மையாகும்.
*ஆனாலும் உலகில் வழிபடும் கடவுள்கள் எல்லாம் உண்மையான கடவுள்கள் இல்லை என்பதை வெளிப்படையாக சொன்னவர் வள்ளலார்*.
கடவுளுக்கு மனிதர்கள் போல் கை கால் கண் காது மூக்கு வாய் உடம்பு போன்ற உருவம் கிடையாது.
உருவம் உள்ள கடவுள்கள் யாவும் ஜட தத்துவங்களே தவிர உண்மையான கடவுள்கள் அல்ல. மனிதர்களால் கடவுளைப் படைக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
கடவுள் பஞ்சபூதங்களில் உள்ள அக்கினி சூரியன் சந்திரன்.நட்சத்திரங்கள் போன்ற ஒளியும் உண்மையான கடவுள் அல்ல. *கடவுள் உருவம் அற்ற அருள் ஒளியாக உள்ளார்*.அவர் இருக்கும் இடம் இயங்கும் இடம்.இயக்கும் இடம் *அருள்நிறைந்த அருட்பெருவெளி என்னும் ஞானவெளியாகும்*
அங்கு இயற்கை உண்மையாக.
இயற்கை விளக்கமாக.
இயற்கை இன்பம் வழங்கும் பூரண அருள் ஆற்றல் மிகுந்த அருட்பெருஞ்ஜோதி யாக தனிப்பெருங்கருணயாக உள்ளவரே உண்மைக் கடவுளாகும்.
மக்கள் மத்தியில் சாதாரண ஆன்மீகவாதியாக. பக்தியாளராக மட்டுமே பார்க்கப்படுபவர் வள்ளலார் அல்ல.அருள் பெற்ற அருள் நிறைந்த அருட்பேரொளியே வள்ளல் பெருமானாகும்.
தமிழ் நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே
மருதூர் என்னும் சிறிய கிராமத்தில்
05 -10-1823 அக்டோபர் மாதம் இறைவனால் வருவிக்க உற்றவரே வள்ளலார் சிவபக்தராகவும், சிவ பக்தியை வலியுறுத்தக் கூடிய முற்றும் துறந்த ஒரு துறவியாக மட்டுமே மக்கள் பின்பற்றி வந்துள்ளார்கள் வருகின்றார்கள் அவருடைய சுயரூபம் சுய சிந்தனை என்னவென்று எவராலும் அறிந்துகொள்ள முடியவில்லை.
தன் வாழ்க்கையை ஆன்மீக அருள்வடிவம் கொண்ட முற்போக்கு வாதியாக வடிவமைத்துக் கொண்டவர்.அவரை மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாது. முக்காடுபோட்டுள்ள சாதாரண துறவியாகவே மக்களுக்கு காட்சிக் கொடுத்துள்ளார்.
அவர் உடம்பு எந்த சக்தியாலும் அழிக்க முடியாத அருள் உடம்பாகும்.
ஆனாலும் அவருக்குள் இருந்த பகுத்தறிவு.
அருள்அறிவு.கடவுள் அறிவு. கடவுளின் குணம் மக்களிடம் வெளிப்படையாக காட்டாமல் மறைத்துக் கொண்டே வந்துள்ளார்.அவர் பாடிய திருஅருட்பா பாடல்களை ஊன்றி படித்துபார்த்தால் மனித தரத்தில் ஓர் அளவு தெரிந்து கொள்ளலாம்.
*மூட மதங்கள்* !
மனிதர்களை *முட்டாள்களாக்கி மூட நம்பிக்கை கொள்கைகளை ஆன்மாவில் பதிய வைத்து. சமூக ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்திய சாதி சமய மதங்களின் அமைப்புகளுக்கும் அவற்றின் கொள்கைகளுக்கும் எதிராகக் குரல் கொடுக்க ஒருபோதும் அவர் தயங்கியதில்லை!*
வள்ளல்பெருமானுக்கு இளமையிலே கல்வி கற்காமலே ஞானம் உண்டாயிற்று.
உலகில் உள்ள எல்லா மொழிகளும் கற்காமலே கற்றவர்.தமிழ் நாட்டில் தமிழ்மொழியில் பிறப்பித்த இறைவனுக்கு நன்றி சொன்னவர். ஆனால், சிறு வயதிலிருந்தே பல தெய்வங்கள் பெயரால் பக்திப் பாடல்களைத் தமிழ்மொழியில் பாடியவர்.
மற்றவர்கள் பாடிய பக்தி பாடல்களை விட வள்ளலார் இயற்றிய பக்திப் பாடல்கள் மிகவும் உயர்ந்த கருத்து ஆழம் உள்ளதாகும். கல்வி கற்காமலே பாடல்கள் இயற்றும் அருள் ஆற்றல் வள்ளபெருமானுக்கு ஆன்மாவிலே இறைவனால் வழங்கப்பட்டுள்ளது.
பல கோயில்களுக்குச் சென்று பாடும் வழக்கத்தைக் கொண்ட வள்ளலார் சிதம்பரம் நடராஜர் கோயில் மீது அளவுகடந்த பற்று வைத்திருந்தார். *ஏன் என்றால் அங்கேதான் உண்மையை மறைத்து சிதம்பர ரகசியம் என்ற வெற்று இடத்தை வைத்து வழிபாடு செய்து வருகிறார்கள்.*
பின்னாளில் கடவுளின் ரகசியத்தை வெளிப்படுத்த வடலூரில் சத்திய ஞானசபையைத் தோற்றுவித்து ஒளியே கடவுள் வடிவம் என்பதை மக்களுக்கு காட்டினார். *வடலூருக்கு உத்தர ஞான சித்திபுரம் என்றும்.உத்தர ஞான சிதம்பரம் என பெயர் சூட்டினார்*.
*உலகின் வறுமையை போக்கியவர்* !
மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும்நான் சகித்திடமாட்டேன்
எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்
நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கும் நல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.!
மேலே கண்ட பாடலில் தன் விருப்பத்தை இறைவனிடம் சொல்லி மக்களின் துன்பங்களைப் போக்க அருள் வழங்க வேண்டும் என்பதே என் விருப்பம் என வேண்டுகின்றார்.
உலகில் மக்கள் பசி பட்டினி வறுமைகள் மேலோங்கி ஏழைகளாக. நோயாளிகளாக.அடிமைகளாக. அனாதிகளாக ஆதரவற்றவர்களாக.உண்ண உணவில்லாமல் வாடி வருந்தி இறந்து கொண்டு இருந்த மக்களைப்பார்த்து காப்பாற்ற கொதித்து எழுந்து களத்தில் இறங்க தொடங்கினார்.
ஒரு துறவியால் இது சாத்தியமாகுமா என நினைத்து கிண்டலும் கேலியும் செய்துள்ளார்கள். ஆன்மீகவாதிகளும்.ஆட்சியாளர்களும் செய்ய முடியாத காரியத்தை துறவியாக இருந்து செய்து காட்டியவர் வள்ளலார்.
*தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தை அழித்திடுவோம் என வாய்வார்த்தை கூறாமல்*.ஏழைகளின் பசிப்பிணியைப் போக்க வடலூரில் 1867 ஆம் ஆண்டு தருமச்சாலையை தொடங்கிவைத்தார்.இன்றுவரை ஏழைகளின் பசிப்பிணியைப் போக்கிவருகின்றது.இன்று உலகம் முழுவதும் பின்பற்றி நடைபெற்று வருகிறது.
சாதி சமய மதங்களை அப்புறப்படுத்த 1872 ஆம் ஆண்டு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை தொடங்கி வைத்தார்.
*வள்ளலார் பாடல் !*
முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்
முடுகி அழிந் திடவும் ஒரு மோசமும்இல் லாதே
இயன்ற ஒரு சன்மார்க்கம் எங்கும் நிலை பெறவும்
எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர்
துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்
தோன்றஎழு கின்றதிது தொடங்கி நிகழ்ந் திடும்நீர்
பயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப்
படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.!
மக்களுக்கு பயன் அளிக்காமல் செயல்படுகின்ற எந்த இயக்கமாக இருந்தாலும். எந்த மார்க்கமாக இருந்தாலும். எந்த ஆட்சியாக இருந்தாலும்.
அவற்றை இருக்கும் இடம் தெரியாமல் அகற்றிவிட்டு.
மக்களுக்கு பயன் தரும் நன்மைபயக்கும்
*புதிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமான ஞான மார்க்கத்தை தோற்று வித்தவர்தான் வள்ளலார்*.
எனவேதான் இதுவரையில் எவரும் படிக்காத.படிக்கமுடியாத புதிய படிப்பை படித்திடலாம். உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே என உலக மக்களை சன்மார்க்க சங்கத்திற்கு அன்புடன் அழைக்கின்றார் வள்ளலார்.
*இந்த சங்கமானது தமிழ் நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் மட்டும் சொந்தமானது அல்ல.அனைத்து உலகத்திற்கும் சொந்தமானதாகும்*
*வள்ளலார் பாடல்* !
உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி
இலகஅருள் செய்தான் இசைந்தே
திலகன் என
நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான்
தானே எனக்குத் தனித்து.!
என்னும் பாடலிலே சன்மார்க்க சங்கத்தை நீங்கள் யாரும் நடத்தவேண்டாம் நானே நடத்துகிறேன் என்று தெளிவாக பதிவு செய்கிறார்.
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை நடத்தும் முழு பொருப்பையும் வள்ளல்பெருமான் இடமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கொடுத்துள்ளார் என்பதை சன்மார்க்கம் சார்ந்த ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளவேண்டும்.
நம்முடைய பணி ஜீவகாருண்யத்தையும்.ஜீவகாருண்ய ஒழுக்கத்தையும்.
இறைவனை தெரிந்து கொள்ளும் சத்விசாரத்தையும். முழுமையாக கடைபிடித்து.
இதுவரையில் படியாத படிப்பான சாகாக்கலை. சாகாக்கல்வி கற்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொண்டு அருள் பூரணம் பெற்று.ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றி மரணத்தை வென்று பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ வேண்டும் என்பதே வள்ளலார் காட்டிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க கொள்கையாகும்.
*மரணத்தை வென்று வாழ்பவர்களுக்கே சங்கத்தை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வழங்கப்படும்.*
வள்ளலார் கொள்கையிலே முக்கியமானது உயிர்க்கொலை செய்யக்கூடாது.
அதன் புலால் உண்ணக்கூடாது.
வள்ளலார் தோற்றுவித்த சங்கம் சாலை.சபையில் வேலை செய்பவர்கள்.
சன்மார்க்க சங்கங்கள் வைத்து நடத்துபவர்கள். அவற்றில் உறுப்பினராக உள்ளவர்கள் கண்டிப்பாக மது மாமிசம் உண்ணாதவர்களாகவே இருக்க வேண்டும் என்ற கண்டிப்புடன் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்பதே மிகவும் முக்கியமான செயலாகும்.
1872 ம் ஆண்டு பொதுமக்கள் வழிபடுவதற்காக.
சாதி சமயம் மதங்கள் சாராத. சத்தியஞான சபையை அமைத்த வள்ளலார், அங்கு பெரும் புரட்சியை நிகழ்த்திக் காட்டினார். அன்றைய காலகட்டத்தில் கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்களும் சில பிற்படுத்தப்பட்ட மக்களும் நுழைவதற்குத் தடை இருந்தது. கடவுளுக்கு முன் அனைவரும் சமமானவர்கள்.
கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர்.
கடவுளை வழிபடுவதற்கும் தொடர்பு கொள்வதற்கும் எந்த விதமான தடையும் இருக்ககூடாது என்றும் அனைவரும் வந்து வழிபடலாம் என்ற அமைப்பே சத்திய ஞானசபையாகும்.
சாதி சமய மதங்கள் கடைபிடித்து வந்த அந்தத் தடையை முதலில் நொறுக்கியவர்.
அகற்றியவர். மாற்றியவர்
வள்ளல்பெருமான் ஒருவரே. அனைவரும் வழிபடும் பொது தளமாக *சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையைத் தோற்றுவித்தார்*.
*கலையுரைத்த கற்பனையை அகற்றியவர்*
கலையுரைத்த கற்பனையை நிலையெனக் கொண்டாடும்
கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக! என குரல் கொடுத்தவர் வள்ளலார்.
தெய்வங்களின் பெயரால் ஆன்மீக மூடநம்பிக்கைகள், அதன் விளைவாக கட்டமைக்கப்பட்ட ஆச்சார சங்கற்ப விகற்பங்கள்.மேலும் சடங்குகள் சம்பிரதாயங்களுக்கு எதிராக பொது நோக்கமுள்ள புரட்சி கொள்கைகளை வெளியிட்டார்.
வள்ளலார் எழுதிய திருஅருட்பா பாடல்களைத் தொகுத்த அன்பார்கள் அவரது பாடல்களை 6 திருமுறைகளாக வகுத்தனர். அதில் ஒன்று முதல் ஐந்தாம் திருமுறை வரையில் சமயம் மதம் சார்ந்த பக்தி நிறைந்த ஆன்மிகப் பக்தி பாடல்களாகும்.
ஆறாம் திருமுறையில் கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்! என்ற உண்மையும். சாதி சமயம் மதம் சாராத புதிய கொள்கைகளும். சமூகம் நல்லிணக்கம் சார்ந்த புரட்சிப் பொது பாடல்களும்.அருள் சார்ந்த உண்மைப் பாடல்களும். மக்களை வழிதடத்தும் அருள் ஆட்சி நடத்தும் வழிமுறைகளையும் பாடல்களின் வாயிலாகவும் உரைநடைப்பகுதி வாயிலாகவும் தெளிவாக ஆறாம் திருமுறையில் வெளியிடப் பட்டுள்ளது.
ஆறாம் திருமுறையில் நூற்றுக்கணக்கான பாடல்களில் சாதி சமய மதங்களை அழுத்தமான வார்த்தைகளால் சாடியுள்ளார்.
*உதாரணத்திற்கு ஒருபாடல்*!
கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்
கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்
காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
பிள்ளைவிளை யாட்டென நன் கறிவித்திங் கெனையே
பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே
தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்
தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.!
என்றும் .
மதம்எனும்பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர் எல்லாம்
மன்றிடத்தே வள்ளல்செயும் மாநடம்காண் குவரோ
சதம்எனவே இருக்கின்றார் படுவதறிந் திலரே
சாகாத கல்விகற்கும் தரம்இவர்க்கும் உளதோ
பதம்அறியா இந்தமதவாதிகளோ சிற்றம்
பலநடங்கண் டுய்ந்தேனைச் சிலபுகன்றார் என்றாய்
சுதைமொழிநீ அன்றுசொன்ன வார்த்தைஅன்றோ இன்று
தோத்திரஞ்செய் தாங்காங்கே தொழுகின்றார் காணே.!
போன்ற பாடல்கள் ஆறாம் திருமுறையில் நிறைந்து உள்ளன.
முதல் ஐந்து திருமுறைப் பாடல்களும் ஆன்மிக வாதிகளாலும், பக்தர்களாலும் இன்றளவும் போற்றிக் கொண்டாடப்படுகின்றன.
ஆனால், ஆறாம் திருமுறையில் உள்ள பாடல்களில் உள்ளபடி.இந்திரிய கரண. ஜீவ. ஆன்ம ஒழுக்கங்களை கடைபிடித்து வாழ முடியாமையால். மக்கள் உலக வாழ்க்கையிலே கவனம் செலுத்திக் கொண்டுள்ளார்கள்.
உலக உண்மைகளையும் கடவுள் உண்மைகளையும் வெளிப்படுத்தும் உயர்ந்த பகுத்தறிவு ஆன்மஅறிவு அருள்அறிவு.கடவுள் அறிவை அறிந்து கொள்ளும் பாடல்கள் யாவும் ஆறாம் திருமுறையில் நிறைந்துள்ளன.
ஆறாம் திருமுறை போதிய அளவு மக்கள் கவனத்தைப் பெறவில்லை என்பதே உண்மை. அதற்குக் காரணம், அதில் உள்ள சாதி சமய மத ஒழிப்பு. ஒரே கடவுள் என்ற உண்மை கொள்கை. உயிர்கொலை செய்யாதிருத்தல் புலால் உண்ணாமல் இருத்தல் போன்ற உயர்ந்த பண்புகளையும் ஜீவகாருண்ய ஒழுக்கங்களையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதால் ஆறாம் திருமுறையை பின்பற்றும் மக்கள் குறைவாகவே உள்ளனர்.
வரும் காலங்களில் மக்கள் அனைவரும் உண்மை உணர்ந்து தெளிவடைந்து சுத்த சன்மார்க்க கொள்கைகளை பின்பற்றுவார்கள் என்பதே சத்திய வாக்கு.
*வள்ளலார் பாடல்*
சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்
சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்
இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்
இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்
சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்
தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்
செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்
திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.!
என்பதே சத்திய வாக்காகும்.மேலும்.
பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம் இங் கிதுநான்
புகலுவதென் நாடொறும் புந்தியிற்கண் டதுவே
மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவதழ கலவே
மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே
பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே
அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை
அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே.!
சுத்த சன்மார்க்க கொள்கைகளை பின்பற்றுபவர்களை ஆதரிப்பார்களேத் தவிர தடுப்பவர்கள் எவ்வுலகில் எவரும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகின்றார்.உலகில் உள்ள நெறிகளிலே சிறந்து விளங்கும்
திருநெறி ஒன்றே சுத்த சன்மார்க்கமாகும்.
திருநெறி ஒன்றே அதுதான் சமரசசன் மார்க்கச்
சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு
வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து
வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்
பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்
பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே
கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்
கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக.!
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக