அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

வியாழன், 17 செப்டம்பர், 2020

கடவுளின் அருளைப் பெறுவது எங்கனம் !

 *கடவுளின் அருளைப் பெறுவது எவ்வாறு ?*


முதலில் கடவுள் யார் என்பது தெரிந்து கொண்டால்தான் அருளைப்பெற  வசதியாக இருக்கும்.


அருள் வழங்கும் கடவுளை உலக மக்களுக்கு வள்ளலார் அறிமுகப் படுத்துகின்றார்.

அவர்தான்

*அருட்பெருஞ்ஜோதி*

*அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை*

*அருட்பெருஞ்ஜோதி!!* 


என்னும் இயற்கை உண்மைக் கடவுளாகும்.

இயற்கை உண்மைக் கடவுளைத் தொடர்பு கொள்ள இயற்கை உண்மையுடன் வாழ்ந்து தொடர்பு கொள்ள வேண்டும்.


இயற்கை உண்மையுடன் வாழ்வதற்கு.

*இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம் ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கம்* 

என நான்கு ஒழுக்கங்களை பின்பற்றி கடைபிடித்து வாழவேண்டும்.


 *நம் முன்னோர்கள் காட்டிய வழி முறைகள்!*


சரியை .கிரியை.யோகம்.ஞானம் என்னும் நான்கு வழிமுறைகளை சொல்லி வைத்துள்ளார்கள்.


சரியை சரியை.

சரியையில் கிரியை.

சரியையில் யோகம்.

சரியையில் ஞானம் என்னும் முதற்படி  *உருவ வழிப்பாட்டு முறையாகும்*


கிரியையில் சரியை.

கிரியையில் கிரியை.

கிரியையில் யோகம்.

கிரியையில் ஞானம் என்னும் உருவ வழிப்பாட்டு முறையாகும். *உருவக்கடவுளை தாமே தொட்டு அலங்காரம் செய்து வழிபடும் முறையாகும்.*


யோகத்தில் சரியை.

யோகத்தில் கிரியை.

யோகத்தில் யோகம்.

யோகத்தில் ஞானம்.

என்பதாகும்.உருவக்கடவுளின் நாமத்தை மந்திரங்களாக சொல்லி தனியாக அமர்ந்து *தவம்.தியானம்*

*யோகம்* போன்றவைகளைச் செய்தல் ஆகும்*.


ஞானத்தில் சரியை.

ஞானத்தில் கிரியை.

ஞானத்தில் யோகம்.

ஞானத்தில் ஞானம்.

என்பது உருவ வழிபாடு அற்று அறிவு தெளிவடைந்து உண்மை அறிந்து.உண்மை  உணர்ந்து மேலே சொல்லியுள்ள இந்திரிய.கரண.ஜீவ.ஆன்ம ஒழுக்கங்களை கடைபிடித்து. அக அனுபவத்தில் *கடவுள் ஒளியாக உள்ளார்* என்பதை அறிந்து

அருளைப் பெறும் வழியாகும்.


*வள்ளலார் பாடல்* 


*சரியைநிலை நான்கும்* *ஒரு கிரியை நிலை நான்கும்*

*தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன்*


உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்

ஒன்றொன்றா அறிந்தேன் மேல் உண்மைநிலை பெற்றேன்


அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்

ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும்


பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம்

பெற்றேன் இங் கிறவாமை உற்றேன்காண் தோழி.! 


மேலே கண்ட நான்கு நிலைகளையும் அருள் ஒளியால் ஒன்று ஒன்றாய் அறிந்தேன்.அதற்குமேல் உண்மை நிலை அறிந்தேன்.


வேதாந்தம்.

சித்தாந்தம்.

போகாந்தம்

யோகாந்தம் நாதாந்தம்

கலாந்தம் 

என்னும் ஆறு அந்தங்களையும் அறிந்தேன்.

 

*அதற்கு அப்பால் நின்று ஓங்கும் பெரிய சிவ அனுபவத்தால் சமரச சன்மார்க்கம் பெற்றேன் இறவாமை உற்றேன் என்கிறார்*.


இவ்வளவு பெரிய நிலையை அடைந்தால் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வெல்ல முடியும் என்கிறார். 


மேலும் ஒரு பாடல் ! 


சரியைஓர் நான்கும் கிரியைஓர் நான்கும் சாற்றிடும் யோகமோர் நான்கும்


புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசைசற் றறியேன்


பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் முத்திபெற் றிடவும்


உறியதோர் இச்சை எனக்கிலை என்றன் உள்ளம் நீ அறிந்ததே எந்தாய்.! 


மேலே கண்ட வழிகளில் சென்றால் முக்திதான் கிடைக்கும்.எமக்கு சித்திதான் வேண்டும். எமக்கு  நேர்வழியைக் காட்ட வேண்டும் என்கிறார். முத்தி என்பது முன்னுறு சாதனம்.சித்தி என்பது நிலைசேர்ந்த அனுபவம்.என்பார்.


*நேர்வழியைக் காட்டுகிறார் வள்ளலார்*.


மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் சித்தி பெறுவதற்கு முன்பாக உள்ளே இருந்த விளக்கைத் திருமாளிகைப் புறத்தில் வைத்து இடைவிடாது ஆராதியுங்கள் என்று   சொல்லிவிட்டு.


ஆண்டவர் தீப முன்னிலையில் விளங்குகின்ற படியால்.உங்களுடைய நேரத்தை வீணில் கழிக்காமல்.


ஞானசரியை  ( மரணம் இல்லாப் பெருவாழ்வு) என்னும் தலைப்பில் உள்ள 28. பாசுரங்கள் அடங்கிய பாடலில் கண்டபடி தெய்வ பாவனையை இந்த தீபத்தில் செய்யுங்கள் என்று இறுதியாக ஒரு வாக்குமூலத்தை அறிவிக்கின்றார்.


*கொடியேற்றி பேருபதேசம் (மகாஉபதேசம்) செய்கின்ற போது*

ஒரு செய்தியைச் சொல்லுகின்றார்.


சரியை முதலிய சாதகம் நான்கில், நான்காவது ஞானத்தில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கின்ற நான்கில், மூன்றாவது படியாகிய *ஞானத்தில் யோகம்*  செய்கின்ற பலனாகிய நிராசை யென்னும்படி உண்டாகின்றது. ஆகையினாலே, இந்த விசாரத்திலிருந்து கொண்டிருங்கள்.


இவ் விசாரஞ் செய்து கொண்டிருந்தால், ஆண்டவர் வந்தவுடனே, கண்டமாக உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவிப்பார். மறுபடியும் உங்களுக்கு உரிமை வந்தவுடனே அகண்டமாகத் தெரிவிப்பார். ஆதலால் நீங்கள் இந்த முயற்சியிலிருங்கள் என்கிறார்.


மேலே குறிப்பிட்டது ஞானத்தில் ஞான யோகம் என்னும் மூன்றாவதுபடி என்கிறார்.ஞானயோகம் என்பது ஆன்மாவைத் தொடர்பு கொண்டு அக அனபவத்தை பெறுவதாகும்.


*சுத்த சன்மார்க்கத்திற்கு இரண்டே படிகள்  தான். ஒன்று ஜீவகாருண்யம். ஒன்று சத்விசாரம் என்பதாகும்*


*சன்மார்க்கப் பெருநெறியின் ஒழுக்கங்கள்*


 இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என நான்கு வகைப்படும்.


அவற்றுள் *இந்திரிய ஒழுக்கம் என்பது* *ஜீவகாருண்யம் ஞானசரியை குறிப்பதாகும்*


ஜீவகாருண்யம் விளங்கும் போது அன்பும் அறிவும் உடனாக விளங்கும் அதனால் உபகார சக்தி விளங்கும்.


*ஜீவ காருண்ய ஒழுக்கம் சன்மார்க்கம் என்று அறிய வேண்டும்*.


*ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல்*.


* *இந்திரிய ஒழுக்கம்*


நாத முதலிய ஸ்தோத்திரங்களை உற்றுக் கேட்டல், மற்றவை கேளாதிருத்தல், கொடுஞ்சொல் முதலியவை செவிபுகாமல் நிற்றல், அசுத்தங்களைத் தீண்டாதிருத்தல், கொடூரமாகப் பாராதிருத்தல், ருசியின்மீது விருப்பமின்றி யிருத்தல், சுகந்தம் விரும்பாதிருத்தல், என்னும் ஞானேந்திரிய ஒழுக்கமும். 


 இனிய வார்தையாடுதல், பொய் சொல்லாதிருத்தல், ஜீவஹ’ம்சை நேரிடுங்கால் எவ்விதத் தந்திரத்திலாவது தடைசெய்தல், பெரியோரிடத்திற் செல்லுதல் - என்றால் - சாதுக்களிடம் பரிச்சயம் பண்ணுதல் உயிர்க்கு உபகரிக்கு நிமித்தம் சஞ்சரித்தல், *உயிர்க்கு உபகார நிமித்தம் கையால் உபகரித்தல்* மலஜல பாதைகள் அளவு மீறாமலும் கிரமங் குறையாமலும் அளவைபோல் தந்திர ஓஷதிகளாலும் ஆகாரப் பக்குவத்தாலும் பவுதிகப் பக்குவத்தாலும் செய்வித்தல் என்னும் கருமேந்திரிய ஒழுக்கமும் ஆகும்.


*கரண ஒழுக்கம் என்பது* - *ஞான கிரியை என்பதாகும்*  அதாவது *சத் விசாரத்தை குறிப்பதாகும்.*


 சிற்சபையின் கண் மனதைச் செலுத்துவது தவிர மற்றெந்தவகை ஆபாசத்திலும் செலுத்தாமல் இழுத்து மேற்குறித்த இடத்தில் நிறுத்துதல், 


பிறர் குற்றம் விசாரியாதிருத்தல், தன்னை மதியாதிருத்தல், செயற்கைக் குணங்களாலுண்டாகிய கெடுதிகளை நீக்கி இயற்கையாகிய சத்துவ மயமாயிருத்தல், பிறர்மேற் கோபியா திருத்தல், தனது சத்துருக்களாகிய தத்துவங்களைக் கோபித்தல், அக்கிரம அதிக்கிரமப் புணர்ச்சி செய்யாதிருத்தல் முதலியவாம்.


*ஜீவ ஒழுக்கம் என்பது* - *ஞானத்தில் யோகம் என்பதாகும்.*


எல்லா மனிதரிடத்தும் ஜாதி, சமயம், குலம், கோத்திரம், சூத்திரம், சாத்திரம், தேசம், மார்க்கம், உயர்வு, தாழ்வு முதலிய பேதமற்றுத் தானாக நிற்றல் 

.

*ஆன்ம ஒழுக்கம்* *என்பது ஞானத்தில் ஞானம் என்பதாகும்*


எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதங்களிடத்து முள்ள ஆன்மாக்களிடத்தும் இரங்கி, *ஆன்மாவே சபையாகவும் அதன் உள்ளொளியே பதியாகவும்* கண்டு கலந்து பூரணமாக நிற்றல் முதலியவாம்.!


இங்ஙனம் கூறிய ஒழுக்கங்களுள்ளே *இந்திரிய ஒழுக்கம் கரண ஒழுக்கம்* என்னு மிவற்றை நாம் ஒவ்வொருவரும் உண்மை யுணர்ச்சியுடன் மேற்கொண்டு ஒழுகவேண்டும்; 

ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் என்னும் இரு வகையான அரிய ஒழுக்கங்களை திருவருட்டுணை பெற்ற பின்னரன்றிக் கைகூடா. ஆதலால், அவ்வொழுக்கங்களைப் பெற்று ஒழுகவேண்டுவதற்கும் ஆன நன்முயற்சிகளில் பழக வேண்டும்.


எனவே ஞானசரியை என்னும்  தலைப்பில் உள்ள 28 பாடல்களில் கண்டுள்ளபடி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.


அதில் உள்ள முதல் பாடலே மிகவும் அரிய பெரிய பாடலாகும்.


நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே

நிறைந்து நிறைந்து ஊற்றெழுங் கண்ணீர் அதனால் உடம்பு


நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான

நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று


வனைந்து வனைந்து ஏத்துதும்நாம் வம்மின்உல கியலீர்

மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்


புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்

பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.! 


என்றும் இறுதியாக 28 ஆவது பாடல்..


சார்உலக வாதனையைத் தவிர்த்தவர் உள் ளகத்தே

சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை


நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்

நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி


ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை

எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை


ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின்

உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே.!  


எல்லோருக்கும் புரியும் வகையில் சாதாரண எளிய தமிழில் பதிவு செய்துள்ளார்.


இயற்கை உண்மையான இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு பூரண அருளைப்பெற்று ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றி பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !  


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக