*சாதியை விடாமல் ஜோதி காண முடியாது*.
சமய மதங்களின் பிரதிபலிப்பே சாதி என்பதாகும். *சமய மதங்களை கூட மக்கள் விட்டுவிடுவார்கள் "சாதியை விடமுடிவதில்லை*
மனிதன் உள்ளத்தில் குடிகொண்டு சவாரி செய்வதே சாதி.சமயம்.மதங்களின் கொள்கைகளாகும்..
*இவை ஆன்மாவில் பதிவாகி நிறைந்துள்ளது*.
ஆன்மாவில் பொய்யை நிரப்பிக் கொண்டு உள்ளதால் மெய்ப்பொருளைக் காணமுடியாமல்.அவற்றைத் தொடர்பு கொள்ள முடியாமல் அருளைப் பெற முடியாமல் மாண்டுகொண்டே உள்ளார்கள்.
ஆன்மாவை அறிந்து கொள்வதே ஆன்மீகம் என்பதாகும்.
கோயில். ஆலயம்.மசூதி.சர்ச்.
மற்றும் புண்ணிய ஸ்தலங்கள் என்று போற்றப்படும் இடங்களுக்கு சென்று உயிர் அற்ற ஜடப் பொருளை வழிபடுவது ஆன்மீகம் அல்ல.
உயிர் உள்ள ஜீவன்களான சித்தர்கள் யோகியர்கள் ஞானிகளை வழிபடுவதும் ஆன்மீகம் அல்ல.
சாதி சமயம் மதத்தினால் பிரித்து பிளவுப்பட்ட ஏழை எளிய மக்களின் துன்பம் துயரம் அச்சம் பயத்தை போக்குவதே ஆன்மாவை அறிந்துகொள்ளும் பாதையாகும்.
அடுத்து தன்னை அறிந்து இன்பம் அடைந்தால் தலைவனை அறியலாம்.எனபதே ஆன்மீகப் பாதையாகும்.
தன்னை அறிந்து இன்பம்உற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே என்றும்.
சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உரைத்த அருட்பெருஞ்ஜோதி ! என்னும் அகவல் வரிகளில் உண்மையை முதன்முதலில் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியவர் வள்ளலார்.
ஆறு அந்தகளால் மதங்களால் தோன்றின.
மதங்களால் சமயங்கள் தோன்றின.
சமயங்களால் சாதிகள் தோன்றின.
தொழில்களுக்காக சாதிகளைப் பயன் படுத்தினார்கள்.
தொழிலை வைத்து உயர்ந்தவன் தாழ்ந்தவன் என பிரித்தார்கள்.
தொழில் சார்ந்த இனத்தில் பொருளை ( பணம்) வைத்து.பொருள் உள்ளவனை பணக்காரன் என்றும்.பொருள் இல்லாதவன் ஏழை என்று பிரித்தார்கள்.
கீழ்த்தரமான தொழில்களான. ஊரில் உள்ள தெருக்களை துப்புறவுசெய்தல்.
மலம் அள்ளுதல்.இறந்துபோன பிராணிகளையும்.
மனிதர்களையும் கொண்டுபோய் அடக்கம் செய்தல். .எரித்தல் போன்ற கீழ்த்தரமான தொழில்களை செய்பவர்களை தீண்டத்தகாதவர்கள் என்றும் ஊருக்கு வெளியே ஒதுக்கி வைத்தும். சக மனிதர்களை மனித நேயம் இல்லாமல் சாதி இனம் மொழிகளால் பிரித்து வைத்தும் கேவலப்படுத்தியும் நடைமுறையில் தீர்க்கமுடியாத கொடுமைகளுக்கு ஆட்படுத்தி நடந்து கொண்டு வருகின்றது.
இவை எல்லாம் ஆன்மீகம் என்ற பெயரிலும் கடவுள் பெயரிலும். ஆச்சார சங்கற்ப விகற்பங்களால் வேறுபடுத்தி பிரித்து வைத்துள்ளார்கள்.
மனிதர்கள் வணங்கும் வழிபடும் கடவுள்களையும் ஏழைச்சாமி.
பணக்காரச்சாமி என்றும் சைவசாமி அசைவசாமி என்றும்.கொலை கேட்கும் கடவுள் .கொலை கேட்காத கடவுள் என்றும் பிரித்து வைத்துள்ளார்கள்.
இவைகள் யாவும் இன்று நேற்று வந்தது அல்ல. பல்லாயிரம் ஆண்டுகளாக தொன்றுதொட்டு நடந்து வருகிறது.. இதைத்தான் வள்ளலார் சமூகப் பார்வையோடு சாடுகிறார்.சமூகம் என்பது ஆன்மீகத்தோடு பின்னி பினைந்தது. ஆன்மீகம் வேறு.சமூகம் வேறு அல்ல.
எல்லாமே இறைவனால் படைக்கப்பட்டது.
வேற்றுமையை உண்டாக்க கடவுள் காரணம் அல்ல.
பாவம் புண்ணியம் காரணம் அல்ல. யார் காரணம் ?
ஆதியிலே உயர்ந்த சாதி என்று சொல்லுகின்ற மனிதர்கள் செய்த சூழ்ச்சியே காரணமாகும்.இந்த சூழ்ச்சியின் பின்னணியை மனிதர்களுக்கு புரியவைத்து.தெளிவுப்படுத்தி.உண்மையை எடுத்துரைத்து.சாதி சமயம் மதம் போன்ற பற்றுகளில் இருந்து வெளியேற்றி. மக்களை நல்வழிப்படுத்தி மனிதநேயம் ஆன்மநேயத்தை போதிக்க வந்தவர்தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.
அக்காலத்திலும் சாதி சமயம் மதங்களை எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் நிறையபேர் உண்டு.
ஆண் பெண் என்ற இரண்டு சாதிதான் என்று பிரித்து சொன்னார்கள்.
சாதி இரண்டொழிய வேறில்லை என்றார்கள்.
மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தார்கள் என சொன்னார்கள்.
உயிர் உள்ளது உயிர் இல்லாதது என பிரித்தார்கள்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும் சொன்னார்கள்.
உயிர்க்கொலை செய்பவர்கள்.உயிர்க்கொலை செய்யாதவர்கள் என பிரித்தார் வள்ளலார்
அதற்குமேலும் ஆணும்அல்ல.பெண்ணும் அல்ல.அலியும்அல்ல என்றும் எல்லா உயிர்களுக்கும் பொதுவான ஒரேத் தன்மை உடையது *ஆன்மா என்பதை அறிந்து *ஆன்மநேய ஒருமைப்பாட்டு* உரிமையை பின் பற்ற வேண்டும் என்னும் உண்மையை அழுத்தமாக பதிவு செய்தவர்தான் நம் அருட்தந்தை திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் ஆவார்கள்.
*நாம் அனைவரும். ஆன்ம குலம் ஒன்றே என்று அறிவதே உண்மையான ஆன்மீகம்.*
வள்ளலார் பேருபதேசத்தில் தெளிவாக பதிவு செய்கிறார்.
ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை.
என்கிறார்.
அதன் உள் அர்த்தம் என்னவென்றால் அவன் சூதாக பூட்டிய பூட்டை இப்போது நான் உடைந்த எரிந்துவிட்டேன் என்கிறார்.
இனி கடவுள் பெயரால் தவறு செய்ய வாய்ப்பு இல்லை.அப்படி மீறியும் செய்வார்களேயானால் *கொரோனோ* போன்ற பலவிதமான தொற்று தொற்றி தீராத துன்பம் அனுபவிக்க தனிமையில் தள்ளப்படுவார்கள்.
வள்ளலார்பாடல்!
சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.!
மேலும்.வள்ளலார் பாடல் !
சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த
*சாத்திரக்குப் பைகள்* எல்லாம் பாத்திரம்அன் றெனவே
ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே
அன்பால் இன்று உண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்
ஓதிஉணர்ந் தோர் புகழும் சமரசசன் மார்க்கம்
உற்றேன் சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம்
சோதிநடத் தரசை என்றன் உயிர்க்குயிராம் பதியைச்
சுத்தசிவ நிறைவை உள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.!.
*சாதி.சமயம் மதம்.சாத்திரம் போன்ற குப்பைகளில் இருந்து விடுபடாதவரை இறைவன் தொடர்பும் கிடைக்காது. அருளும் கிடைக்காது* என்ற உண்மைநிலையை ஆதியில் என் உள்ளத்தில் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன் என்கிறார்.
அதன்பிறகு *எல்லாவற்றையும் விட்டுவிட்டதினால்* சமரச சுத்த சன்மார்க்கம் உற்றேன் சிற்சபை காண பெற்றேன் என்கிறார்.
மேலும் வள்ளலார் பாடல் !
*சாதி சமயச் சழக்கை விட் டேன்* அருட்
சோதியைக் கண்டேனடி அக்கச்சி
சோதியைக் கண்டேன டி.! என்கிறார்.
மேலும் ..
சாதி குலம் சமயமெலாம் தவிர்த்தெனை மேல் ஏற்றித்
தனித்த திரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே
ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம்
ஆருயிர்கள் அகம்புறம் மற் றனைத்தும்நிறை ஒளியே
*ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க* *எனைத்தான்*
*ஓதாமல்* *உணர்ந்துணர்வாம்* *உருவுறச்செய் உறவே*
சோதி மய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்
தூயநடத் தரசே என் சொல்லும்அணிந் தருளே.!
இப்படி ஆயிரக்கணக்கான பாடல்களின் வாயிலாக சாதி சமயம் மதத்தின் குறைபாடுகளை தவறுகளை சுட்டிக்காட்டி. அவற்றின் பற்றுகளை அகற்ற வேண்டும் என்கிறார். உண்மை உணர்ந்து துணிவோடு அகற்றி மற்றவர்களுக்கு வழிகாட்டுவதே சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.
*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்* எவை என்பதைப்பற்றி வள்ளலார் சொல்லிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சிறு விண்ணப்பத்தில் தெளிவாக விளக்கி பதிவு செய்துள்ளார்.
*அனைத்து சன்மார்க்க சங்கங்களிலும் ஜோதி வழிபாட்டில் நாம் தினமும் சொல்லுகிறோம்*.
எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!
இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் *முக்கியத் தடைகளாகிய* சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும்,
வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும்.
சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய *ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை* எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.
எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே!
தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!
மேலே கண்ட விண்ணப்பத்தை தெரிந்து சொல்கிறோமா ? தெரியாமல் சொல்கிறோமா ? அந்த வாசகத்தில் உள்ளபடி பின்பற்றுகிறோமா ? இல்லையா ? என்பதை சிந்திக்க வேண்டும்.
வள்ளலார் தோற்றுவித்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்பதே சாதி சமயம் மதம் என்ற பற்று இல்லாதது.என்பதை அறிவால் அறிந்து கொண்டால் பற்றை தூக்கி எறிய தயங்கமாட்டோம்.
பற்றிய பற்று அனைத்தும் பற்றுஅற விட்டு அருள் அம்பலப்பற்றே பற்றுமினோ என்றும் இறைவீரே என்று சொல்லுகின்றார்.
*நாம் எங்கே சென்று கொண்டுள்ளோம் எவற்றை நோக்கிசென்று கொண்டுள்ளோம் என்பதே ஒன்றும் புரியாத புதிராகவே இருக்கிறது*.
வள்ளலார் பாடல்!
அச்சாநான் வேண்டுதல் கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும்
எச்சார்பும் ஆகிஉயிர்க் கிதம்புரிதல் வேண்டும்
எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்
*இச்சாதி சமயவிகற் பங்களெலாம்* தவிர்த்தே
எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்
உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்
உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே.!
என்று இறைவனிடம் விண்ணப்பம் செய்கிறார். இவ்வளவு பாடல்களிலும் விண்ணப்பங்களிலும் எழுதிவைத்தும் நாம் சாதி சமய மதப் பற்றுகளில் இருந்து வெளியே வரவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
நம்மால் பற்றுகளை விடமுடியாவிட்டாலும் சுத்த சன்மார்க்கத்தின் உண்மை அறிந்து புதியதாக வரும் அன்பர்களைக் குழப்பாமல் வழிவிட்டு ஒதுங்கிக்கொள்வது நாம் செய்யும் பெரிய புண்ணிய நற்காரியமாகும்.
தடைகளை நீக்குவோம்! திரைகளை அகற்றுவோம்! அருளைப் பெறுவோம்.!
மரணத்தை வெல்வோம் !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக