அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

வள்ளலார் கொள்கைகள் !

*வள்ளலாரின் கொள்கைகள்!*

கீழே கண்ட கொள்கைகள் முழுவதையும் கடைபிடிப்பவர்களே மரணத்தை வெல்ல முடியும்.

1.கடவுள் ஒருவரே !

2. அவரே அருட்பெருஞ்ஜோதி வடிவானவர் ! அவரை உண்மை அன்பால் வழிபட வேண்டும்.

3.சிறு தெய்வ வழிபாடுகள் கூடாது.

4. தெய்வங்களின் பேரால் உயிர்ப்பலி செய்யக் கூடாது.

5. கொலை செய்யக்கூடாது. புலால் உண்ணக் கூடாது.

6.சாதி.சமயம்.மதம் போன்ற வேறுபாடுகள் கூடாது.

7.எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணி ஒழுகும்.ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைக் கடைபிடிக்க வேண்டும்.

8.ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப
 வீட்டின் திறவு கோலாகும்.

9.புராணங்களும்.
சாத்திரங்களும்.
முடிவான உண்மையைத் தெரிவிக்கவில்லை.
எனவே அவற்றை பின்பற்ற வேண்டாம்.

10.மூட பழக்க வழக்கங்களை ஒழிக்க வேண்டும்.

11.காது குத்தல்.மூக்கு குத்தல் வேண்டாம்.

12.கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம்.

13.மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்ய வேண்டாம்.

14.இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்க கூடாது.

15.கருமாதி திதி முதலிய சடங்குகள் வேண்டாம்.

16.எதிலும் பொது நோக்கம் வேண்டும்.

17.உண்மை ஒழுக்க நெறியான *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க நெறியை* மட்டுமே பின்பற்ற வேண்டும்.கடைபிடிக்க வேண்டும்.

18.உலகம் முழுவதும் தருமச்சாலை தோற்றுவித்து சங்கம் அமைக்க வேண்டும்.

19.ஒரே கடவுள் என்ற உண்மையை உலக மக்களுக்கு எடுத்துரைத்து போதிக்க வேண்டும்.

20.அன்பு தயவு கருணையுடன் வாழ வேண்டும்.

உலகில் கண்டது.கேட்டது.கற்றது.கழித்தது.உண்டது எல்லாம் அநித்தியமானது. எதிலும் உண்மையான அருள் பெறும் வாய்ப்புகள் இல்லை என்பதை அறிந்து நித்தியமானதை தொடர்பு கொள்ள வேண்டும்.

நித்தியமானது அருட்பெருஞ்ஜோதி கடவுள் ஒன்றே என்பதை ஆன்மாவில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பாடல் !

கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
கற்றதெலாம் பொய்யே நீர் களித்ததெலாம் வீணே

உண்டதெலாம் மலமே உட் கொண்டதெலாம் குறையே
உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே

விண்டதனால் என் இனி நீர் சமரசசன் மார்க்க
மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே

எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின்
இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.!

என்னும் உண்மையை வெளிச்சம் போட்டு சொல்கின்றார்..நான் சொல்வது எல்லாம் உண்மை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
என்போல் நீங்களும் இன்பம் அடைதல் வேண்டும் என்பதே என் விருப்பமும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விருப்பமுமாகும்.

ஏன் என்றால் ? நான் சொல்லவில்லை. ஆண்டவர் சொல்லச் சொல்லியதைத்தான் நான் சொல்லுகின்றேன் என்கிறார் வள்ளலார் .

வள்ளலார் பாடல் !

நான் உரைக்கும் வார்த்தை எலாம் நாயகன்றன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே

வான்உரைத்த மணிமன்றில் நடம்புரி எம்பெருமான்
வரவெதிர்கொண்டு அவன்அருளால் வரங்களெலாம் பெறவே

தேன்உரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவீர்
தெரிந்து அடைந்து என் உடன் எழுமின் சித்திபெறல் ஆகும்

ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
யானடையும் சுகத்தினை நீர் தான்அடைதல் குறித்தே.!

என்னும் அருள் உண்மைக்  குறிப்பை வெளிப் படுத்துகின்றார்.

வள்ளலார் சொல்லிய மேலே கண்ட ஒழுக்கங்களை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

கடைபிடித்தால் மட்டுமே வள்ளலார் பெற்ற பேரின்ப சித்தி பெருவாழ்வு என்னும் மரணத்தை வெல்ல முடியும்.

முயற்சி செய்வோம் வெற்றி பெறுவோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக