அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

செவ்வாய், 14 ஜனவரி, 2020

உலகின் கரையாத பொருள் !

*உலகின் கரையாத பொருள்* !

*உலகின் கரையாத பொருள் அருள் **!

உலகத்தில் என்றும் உருமாறாத.
எக்காலத்தும் கரைந்துவிடாது நிலைப்பெற்று இருப்பது மவுனா அமுதம் என்னும் அருள் அமுதம் மட்டுமே..

அந்த அருளை வழங்குவதற்கு... தகுதி வாய்ந்த இயற்கை உண்மையான ஓரே கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே !

அவ்வகையான மவுனா அருள் அமுதைப் பெற்று மரணத்தை வென்று  வாழ்வாங்கு வாழும் வழியைக் காட்டியவர்.வாழ்ந்து காட்டியவர்.வாழ்ந்துகொண்டும் இருப்பவர் தான் *திருஅருட்பிரகாச வள்ளலார்*.

 நம் தமிழ் நாட்டில் கடலூர் மாவட்டம்.சிதம்பரம் வட்டம். மருதூரில்  பிறந்து.சென்னையில்  வாழ்ந்து.மீண்டும் சிதம்பரம் வந்து .கருங்குழியில் தங்கி தண்ணீரில் விளக்கு எரித்து.திருஅருட்பா என்னும் ஐந்து திருமுறையான பக்தி பாடல்கள் எழுதினார்.

வடலூர் வந்து வடலூர் மக்களிடம் 80 காணி இடம் பெற்று.முதன் முதலில் ஏழைகளின் பசிப்பிணியை போக்க சத்திய தருமச்சாலையை தோற்றுவித்து.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொண்டு.என்றும் அழியாத மவுனா அமுத்த்தை பெற்று.ஊன் உடம்பை ஒளி ஒலி உடம்பாக மாற்றிக்கொண்டு.

வடலூரில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உலக மக்கள்  அறிந்துகொள்ளும் பொருட்டு *சத்திய ஞானசபையை* தோற்றுவித்து  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி மேட்டுகுப்பம் சென்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்  சொல்ல ஆறாம் திருமுறை என்ற  *உலகப் பொதுமறையாகிய*
*திருஅருட்பா*  என்னும் அருள்நூலை எழுதி உலக மக்களுக்கு  தந்துவிட்டு.முத்தேக சித்திப்பெற்று.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து வாழ்ந்து கொண்டு இருப்பவர் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்..

வள்ளலார் பாடல் !

கரைந்துவிடா தென்னுடைய நாவகத்தே இருந்து
கனத்தசுவை தருகின்ற கற்கண்டே கனிவாய்

விரைந்து வந்தென் துன்பமெலாம் தவிர்த்த அருளமுதே
மெய்அருளே மெய்யாகி விளங்குகின்ற விளக்கே

திரைந்த உடல் விரைந்துடனே பொன் உடம்பே ஆகித்
திகழ்ந்து அழியாது  ஓங்க அருள் சித்தே மெய்ச்சத்தே

வரைந்து என்னை மணம்புரிந்து பொது நடஞ்செய் அரசே
மகிழ்வொடு நான் புனைந்திடுஞ் சொன் மாலைஅணிந் தருளே.;!

மேலே கண்ட பாடலில் தெளிவாக விளக்கி உள்ளார்...

வள்ளலார் சொல்லும் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பது இன்னும் நிறைய சன்மார்க்க அன்பர்களுக்கும்.மற்ற ஆன்மீக சகோதரர் சகோதரிகளுக்கும் புரியாமல் இருக்கின்றது...

மனித வாழ்க்கையில் மனித உடம்பிற்கு மூன்று மாற்றங்கள் உண்டு.

அவை
இம்மை இன்பவாழ்வு !
மறுமை இன்ப வாழ்வு !
பேரின்ப வாழ்வு !
என்பவைகளாகும்.

அதாவது ..சுத்த தேகம்.பிரணவதேகம்.ஞானதேகம் என்பனவாகும்.

சுத்த தேகிகள்! இம்மை இன்ப வாழ்வு பெற்றவர்கள்

இவ்வுலகில் மக்களுக்காக நல்ல பல சாதனைகள். நன்மைகள் செய்து மரணம் அடைத்துவிட்டாலும்.
அவர்கள் புகழ் நிலைப்பெற்று மக்களால் பேசப்பட்டு.
போற்றப்பட்டு வழிப்பட்டு வருபவர்களாகும்.

அவர்கள் பெருமை யானது !

மனிதப் பிறப்பில் தேகத்தாலும்.கரணங்களாலும்.புவனத்திலும்.போகங்களிலும்.குறைவின்றி நல்ல அறிவுடையவர்களாய்.
பசி.பிணி.முதலிய தடைகள் இல்லாமல்.உறவினர்.
நண்பர்கள்.அயலோர்.
முதலிய அனைவரும் தழுவ.சந்ததி விளங்கத் தக்க சற்குணமுள்ள மனைவியோடு.விடயங்களைச் சிலநாள் அனுபவித்து  நோய் நொடி இல்லாமல் மரணம் அடைந்தவர்கள் இம்மை இன்ப லாபம் பெற்ற சுத்த தேகிகள் என்பதாகும்..

அவர்கள் பெருமை !

அன்பு.தயவு.ஒழுக்கம்.
அடக்கம்.பொறுமை.
வாய்மை.தூய்மை முதலிய சுப குணங்களைப் பெற்று விடய இன்பங்களை வருந்தி முயன்று அனுபவித்துப் புகழ்பட வாழ்தலென்று அறிய வேண்டும்..

இவர்கள் மரணம் அடைந்து மீண்டும் பிறப்பு எடுத்து உயர்ந்த மரணம் இல்லாப் பெருவாழ்வு அடைவதறகுண்டான மறு பிறப்பிற்கு மீண்டும்  வருவார்கள்.

அவர்களையும் மரணம் இல்லாப் பெருவாழ்வு பெற்றவர்கள் என நினைத்து போற்றுகிறார்கள் அது அறியாமையாகும்.

அவர்கள் இறைவன் ஏகதேச அருளைப்பெற்று.எல்லோராலும் மதிக்கத்தக்க புகழ் உடம்பு பெற்ற சுத்த தேகம் பெற்றவர்கள் இம்மை இன்ப லாபம் பெற்றவர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

*மறுமை இன்ப லாபம் ! பிரணவ தேகம் பெற்றவர்கள் !*
மேலும்  அப்பர்.சுந்தரர்.
மாணிக்கவாசகர்.திருமூலர். மற்றும் சித்தர்கள் போன்ற நிறைய  அருளாளர்கள் உள்ளார்கள்.

ஐம்பூதங்களான மண்.நீர்.அக்கினி.
காற்று.ஆகாயம் போன்றவற்றில் கலந்து கொண்டவர்களையும் மரணம் இல்லாப் பெருவாழ்வு பெற்றவர்களாக்க் கருதுகிறார்கள்..

அவர்களும் பல ஆயிரம் ஆண்டுகாலம் ஐம் பூதங்களில் மறைந்து கலந்து வாழ்ந்து மீண்டும் உயர்ந்த மனிதப் பிறப்பு எடுத்து பூரண அருளைப்பெற்று மரணத்தை வென்று இறை அருளுடன் கலக்கும் வாய்ப்பு உண்டு..

அவர்கள் பெருமை என்னவென்றால் !

*மறுமை இன்ப வாழ்வு ! பிரணவ தேகிகள் !*

உயர் பிறப்பில் பெரிய தேக கரணங்களைப் பெற்றுப் பெரிய முயற்சியால் இறைவனைத் தொடர்பு கொண்டு.பெரிய விஷயங்களைப் பலநாள் அனுபவிக்கின்ற அருளைப் பெற்று பல ஆண்டுகள் அனுபவிக்கின்ற இம்மை இன்ப லாபத்தையும்.அதற்கு மேலான பல்லாயிரம்  ஆண்டுகள் வாழ்கின்ற *சூட்சும* தேகம் என்னும் பிரணவ தேகத்தை பெற்றவர்கள்.

பிரணவ தேகத்தைப் பெற்று வாழ்பவர்களை மறுமை இன்ப லாபத்தை  பெற்று வாழ்பவர்கள் எனப்படுவார்கள்.

அவர்களை மறுமை இன்ப வாழ்வு பெற்றவர்கள் என்றும்.பிரணவ தேகிகள் என்றும்  போற்றப்படுவார்கள்.

அவர்கள் பெருமை யாதெனில் !

அன்பு.தயவு.முதலிய சுப குணங்களைப் பெற்று சுத்த விடய இன்பங்களை.*எண்ணியபடி* தடைபடாமல் முயன்று பல்லாயிரம் ஆண்டுகள் அனுபவித்துப் புகழ்பட வாழ்தல் என்று அறிய வேண்டும்..அவர்களும் மீண்டும் மனிதப்பிறப்பு எடுத்து ஞானதேகம் பெற்று வாழும் வாய்ப்புள்ளது.

*பேரின்ப வாழ்வு ! ஞான தேகம் !*

பேரின்ப வாழ்வு என்பது !. என்றும் அழியாது.பிறப்பு.இறப்பு அற்ற ஞான தேகம் அதாவது அருள் ஒளி ஒலி தேகம் பெறுதல் என்பதாகும்.

*பேரின்ப லாபத்தை பெற்றவர்களின் தன்மையைப் பற்றி  வள்ளலார் விளக்கம் தருவதை தயவு செய்து பொறுமை யாக படியுங்கள்*

எல்லாத் தேகங்களையும்.
எல்லாக் கரணங்களையும். எல்லாப் புவனங்களையும்.எல்லாப் போகங்களையும்.

தனது *பூரண* இயற்கை விளக்கமாகிய *அருட்சத்தியின்* சந்நிதி விசேடத்தால் தோன்றி விளங்க விளக்கஞ் செய்கின்ற.

இயற்கை உண்மை வடிவினராகிய.கடவுளின் *பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று*.

எக்காலத்தும் எவ்விதத்தும்.எவ்வளவும் தடைபடாமல் அனுபவிக்கப்படுகின்ற.ஒப்பற்ற அந்தப் பெரிய இன்பத்தைப் பேரின்ப வாழ்வு ! பேரின்ப லாபம் !  என்று அறிய வேண்டும்...

*இந்த வாழ்வுதான் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.*

*இந்த வாழ்வுதான் கடவுள் நிலை அறிந்து அம்மயமாக வாழ்தல் என்பதாகும்.*

இந்த வாழ்வு பெற்றவர்களுக்கு மீண்டும் பிறப்பு இறப்பு என்பதே இல்லை என்பதாகும்..

*அவற்றிற்கு சுத்த பிரணவ ஞானதேகம் என்றும். முத்தேக சித்தி என்றும்.பேரின்ப சித்தி பெருவாழ்வு என்றும் பேரின்ப லாபம் என்றும் பெயராகும்*..

பேரின்ப லாபத்தை அடைந்தவர் பெருமை எது என்று அறிய வேண்டில் ....

நம் உடம்பில் உள்ள தோல்.நரம்பு.என்பு.
தசை.இரத்தம்.
சுக்கிலம் முதலிய அசுத்த பூத காரியங்களும்.அவற்றின் காரணங்களாகிய அசுத்த பிரகிருதி அணுக்களுமாகிய..

இத்தேகத்தை மாற்றி மாற்று இவ்வளவு என்று அறியப்படாத உயர்ந்த பொன்னாகிய....சுத்த பூதகாரிய சுத்த தேகத்தையும்.பொன் வடிவாகத் தோற்றுதல் மாத்திரமே நன்றி *ஆகாயம்*போல் பரிசிக்கப்படாத சுத்த பூத காரண பிரணவ தேகத்தையும்..

தோன்றப் படுதலுமின்றி ஆகாயம் போல் விளங்கப் படுகின்ற ஞான தேகத்தையும் பெற்றவர்களாய் இருப்பார்கள்...

அவர்களை எந்த சத்தியாலும் அழிக்க முடியாது.

.*பஞ்ச பூதங்களாலும் .
கூற்றுவன் எனும் எமனாலும். கொலைக் கருவியாலும்.பிணியாலோ.அணு ஆயுத கதிர் வீச்சாலோ.வேறு எந்த காரிய காரணங்களாலும் தீய சத்திகளாலும்.எக்காலத்திலும் அழிக்க முடியாத தேகத்திற்குப் பெயர்தான் அருள் ஒளி ஒலி தேகம் என்பதாகும்..அதுவே அருட்பெருஞ்ஜோதி தேகம் என்பதாகும்...

வள்ளலார் பாடல் !

காற்றாலே புவியாலே ககனம் அதனாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே

கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
கோளாலே பிறஇயற்றும் கொடுஞ் செயல்களாலே

வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே

ஏற்றாலே இழிவென நீர் நினையாதீர் உலகீர்
எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச் சார்வீரே.!

மேலே கண்ட பாடலின் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.
மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றால் என்ன ! என்பது விளங்கி இருக்கும் எனக் கருதுகிறேன்..

 ஐந்து வகையான அமுதம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை யால்  ஆன்மாவின் வழியாக  கிடைப்பவையாகும்..!

(ஐந்துவித அமுதம்)

1.வது அமுதம் நாக்கு நுனியில் பக்குவ ஞானத்தால் சிருஷ்டி வல்லப்ப் பிரஞ்ஞையால் கிடைப்பதாகும்.

2 வது புவனா அமுதம்.நாக்கு மத்தியில் பக்குவ கிரியையால் ஸ்திதி பிரஞ்ஞை உணர்ச்சி யால் உண்டாவதாகும்.

3 வது மண்டலா அமுதம் நாக்கின் அடியில் பக்குவ இச்சை சம்மார உணர்ச்சியால் உண்டாவதாகும்.

4 வது ரகசியா அமுதம் .உள் நாக்கின் அடியில் பக்குவ திரோபவம் உணர்ச்சியால் உண்டாவாதாகும்.

5 வது மெளனா அமுதம் உண்ணாக்கு மேல். பக்குவ அனுக்கிரகம்.அனுக்கிரகம் உணர்ச்சியால் சுபாவத்தினது அனுபவ துரியநிலையால் உண்டாவாதாகும்.

ஐந்தாவது அமுதமாகிய  மவுனா அமுதத்தை உண்டவர்கள் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்..

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அனுக்கிரகத்தால் அனுபவ துரியம் துரியாதீதம்  நிலைக்கும் மேல் இறுதியாக கொடுக்கும்  அருள் அமுதமாகும்...

இந்த அமுதம் எக்காலத்தும் கரையாத கரைந்து விடாத. எந்த சக்தியாலும் கரைக்க முடியாது எக்காலத்தும்  நிலைத்து நிலை கொள்ளும் அமுதமாகும்...

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால் கிடைக்கப் பெற்ற மவுனா அமுதத்தை உண்டு மரணத்தை வென்ற மாபெரும் அருளாளர் வள்ளலார் ஒருவர் மட்டுமே...

என்பதை உணர்ந்து புரிந்து அறிந்து தெரிந்து நாமும் வள்ளலார் போல் வாழ்ந்து பேரின்ப சித்திப் பெருவாழ்வு வாழ்வோம்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக