செவ்வாய், 10 டிசம்பர், 2019

சத்திய ஞானசபை விளம்பரம் !


சத்திய ஞான சபை விளம்பரம்

          உலகத்தினிடத்தே பெறுவதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே!

          அறிவு வந்த கால முதல் அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும், அடைந்து அறியாத அற்புத குணங்களையும், கேட்டு அறியாத அற்புதக் கேள்விகளையும், செய்து அறியாத அற்புதச் செயல்களையும், கண்டு அறியாத அற்புதக் காட்சிகளையும், அனுபவித் தறியாத அற்புத அனுபவங்களையும், இது தருணந் தொடங்கிக் கிடைக்கப்பெறுகின்றேன் என்றுணருகின்ற ஓர் சத்திய வுணர்ச்சியாற் பெருங்களிப்புடையேனாகி இருக்கின்றேன்.

          நீவிர்களும் அவ்வாறு பெற்றுப் பெருங்களிப்பு அடைதல் வேண்டும் என்று எனக்குள்ளே நின்று நிறைந்து எழுந்து வெளிப்பட்ட எனது சுத்த சன்மார்க்க லக்ஷியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமைப் பேராசை பற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன்.

          இயற்கையிற்றானே விளங்குகின்றவரா யுள்ளவரென்றும், இயற்கையிற்றானே யுள்ளவராய் விளங்குகின்றவரென்றும், இரண்டு படாத பூரண இன்பமானவ ரென்றும், எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லாப் பதங்களையும், எல்லாச் சித்திகளையும், எல்லாச் சத்தர்களையும், எல்லாக் கலைகளையும், எல்லாப் பொருள்களையும், எல்லாத் தத்துவங்களையும், எல்லாத் தத்துவி களையும், எல்லா உயிர்களையும், எல்லாச் செயல்களையும், எல்லா இச்சைகளையும், எல்லா ஞானங்களையும், எல்லாப் பயன்களையும், எல்லா அனுபவங்களையும் மற்றெல்லாவற்றையும் தமது திருவருட் சத்தியால் தோற்றுவித்தல், வாழ்வித்தல், குற்றம் நீக்குவித்தல், பக்குவம் வருவித்தல், விளக்கஞ் செய்வித்தல் முதலிய பெருங்கருணைப் பெருந்தொழில்களை இயற்றுவிக்கின்றவரென்றும், எல்லாம் ஆனவ ரென்றும், ஒன்றும் அல்லாதவரென்றும், சர்வகாருணிய ரென்றும், சர்வ வல்லபரென்றும், எல்லாம் உடையராய்த்தமக்கு ஒருவற்றானும் ஒப்புயர் வில்லாத தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ் ஜோதியர் என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே அகம்புற முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவென்னும் பூரணப் பொதுவெளியில் அறிவார் அறியும் வண்ணங்க ளெல்லாமாகி விளங்குகின்றார்.

          அவ்வாறு விளங்குகின்ற ஒருவரேயாகிய கடவுளை இவ்வுலகினிடத்தே ஜீவர்கள் அறிந்து அன்புசெய்து அருளையடைந்து அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல், பல வேறு கற்பனைகளாற் பலவேறு சமயங்களிலும் பலவேறு மதங்களிலும் பலவேறு மார்க்கங்களிலும் பலவேறு லக்ஷியங்களைக் கொண்டு, நெடுங்காலமும் பிறந்து பிறந்து அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவு மின்றி விரைந்து விரைந்து பல வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்திறந்து வீண் போகின்றார்கள்.

          இனி இச்சீவர்கள் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல், உண்மையறிவு, உண்மையன்பு, உண்மையிரக்க முதலிய சுபகுணங்களைப் பெற்று நற்செய்கையுடையராய், எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்குஞ் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்று, பெருஞ் சுகத்தையும் பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு, மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திருவுள்ளங் கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லக்ஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ஞானசபையை இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து “இக்காலந் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகளெல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றாம்” என்னுந் திருக்குறிப்பை வெளிப்படுத்தி, அருட்பெருஞ் ஜோதியராய் வீற்றிருக்கின்றார்.

          ஆகலின், அடியிற் குறித்த தருணந்தொடங்கி வந்து வந்து தரிசிக்கப் பெறுவீர்களாகிற் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் அன்றி, இறந்தவர் உயிர்பெற்றெழுதல் மூப்பினர் இளமையைப்பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங்களிப்பும் அடைவீர்.

                                      இங்ஙனம்
                   சிதம்பரம் இராமலிங்கம்

உலக மக்களிடையே ஒரு செய்தி சென்றடைய வேண்டுமெனில் அதற்கு விளம்பரம் செய்வது மிக அவசியமாகின்றது. இன்றைய தொழில் நுட்பத்தில் விளம்பரம் செய்வது மிக எளிதான ஒன்றாக இருக்கின்றது. முகநூல் (Facebook) போன்ற சமூக வலைதளங்களில் நாம் ஒரு செய்தியை பதிவிட்டால் அச்செய்தியானது உலகம் முழுதும் ஒரு நொடிக்கும் மிகக்குறைவான நேரத்தில் சென்றடைந்துவிடுகின்றது. ஆனால் வள்ளற்பெருமான் வெளிப்பட வாழ்ந்த காலத்தில் அவ்வாறில்லை. எனினும் வள்ளற்பெருமான் இறை செய்தியை தமது திருவருட்பா பாடல்கள் மூலமும் உரைநடை மூலமும் விளம்பரப்படுத்தினார். அது சென்றடைய வேண்டியவர்களுக்கு சென்றடைந்தது.

தாம் வாழுகின்ற வடலூரில் சத்திய ஞான சபையை வள்ளற்பெருமான் தோற்றுவித்தார். அதனை உலக மக்களிடையே தெரிவிக்க வேண்டும் என விரும்பினார். உடனே தம் கைப்பட அச்சபையின் நோக்கம் என்ன? பயன் என்ன? என்பதைப் பற்றி உரைநடையாக எழுதி அடியில் *சிதம்பரம் இராமலிங்கம்* என தம் கையொப்பம் இட்டு இவ்வுலகிற்கு வெளியிட்டார். அவர் வெளியிட்ட மாதம் நவம்பர் 25-ஆம் தேதி 1972-ஆம் வருடமாகும்.  

இவ்வுலகிலே பலதரப்பட்ட எண்ணிலடங்காத தேக வகைகள் உள்ளன. அவ்வகைகளிலே மனித தேகம் கிடைப்பது மிக அரிது என்பது நமக்கு எல்லாம் தெரியும். ஆனால் தெரிந்ததை புரிந்துக்கொள்வார் மிகச்சிலரே. அவ்வாறு புரிந்துக்கொள்வார்களை தமது நண்பர்களாக வள்ளற்பெருமான் அவ்விளம்பரத்தில் தொடக்கத்தில் எழுதுகின்றார்.

‘உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே!’ என்று தம் தேகத்தை ஒத்த நண்பர்களுக்கு ஞான சபை செய்தியை வெளிப்படுத்துகின்றார். இந்நிகழ்ச்சியை வெளிப்படுத்த என்ன காரணம்?

காரணம்: வள்ளற்பெருமானின் பேராசையே இதற்கு காரணமாக அமைந்துள்ளது. அப்பேராசை என்பது “ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை” என்பதாகும். இவ்வுரிமை சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லக்ஷியமாகும்.

அற்புத அறிவுகள், அற்புத குணங்கள், அற்புத கேள்விகள், அற்புத செயல்கள், அற்புத காட்சிகள், அற்புத அனுபவங்கள் போன்ற அற்புதங்களால் நான் மிகவும் களிப்புற்று இருக்கின்றேன். அக்களிப்பினை என்னைப்போன்று மனித தேகம் எடுத்த நீங்கள் எல்லோரும் பெறுதல் வேண்டும் என்ற பேராசையால் எழுதப்பட்ட விளம்பரம் இது என்று வள்ளற்பெருமானே உரைக்கின்றார். இவ்விளம்பரத்தின் நோக்கம் என்ன?

நோக்கம்: உண்மைக் கடவுள் ஒருவரே.! அவர் தனிப்பெருந்தலைமாயான அருட்பெருஞ்ஜோதியர்! ஆவார், என்ற உண்மையை தம் தேகத்தை ஒத்த நண்பர்களுக்கு தெரிவிப்பதுவே இவ்விளம்பரத்தின் நோக்கமாக இருக்கின்றது. இது பொது நோக்கம் எனலாம். இதன் உள் நோக்கம் என்னவாக இருக்கும்?

உள்நோக்கம்: உண்மையான ஒரே கடவுளை, தம்மை ஒத்த இவ்வுலகர்களும் அறிந்து அன்பு செய்து அருளை அடைந்து அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வாகிய மரணமிலா பெருவாழ்வை பெற்று வாழவேண்டும் என்பதும்,

அவ்வாறு வாழாமல் பலவேறு கற்பனைகளால், பலவேறு சமயங்களிலும், பலவேறு மதங்களிலும், பலவேறு மார்க்கங்களிலும், பலவேறு லக்ஷியங்களிலும் ஈடுபட்டு பிறந்து பிறந்து அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவும் இல்லாது விரைந்து விரைந்து பலவேறு ஆபத்துகளினால்
 துன்பத்தில் அழுந்தி இறந்திறந்து வீண் போகின்றவர்களை, இனியும் வீண் போகாமல் இந்த ஞான சபையையும் அதில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியரையும் வந்து வந்து வணங்கிச் செல்லுதல் வேண்டும்.

எல்லா சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகிய சுத்த சன்மார்க்கத்தை கடைபிடித்து பெருஞ் சுகத்தையும், பெருங் களிப்பையும் இம்மக்கள் அடைதல் வேண்டும். நினைத்த வண்ணம் நிறைவேறும் அதிசயத்தையும், இறந்தவர் உயிர்பெற்றெழுதல், வயதானவர்கள் இளமையைப் பெற்று களிப்படைதல் போன்ற அற்புதங்களும் இந்த ஞான சபை வளாகத்தில் நடைபெறுவதை காண்பீர்கள் என்ற தமது உள்நோக்கத்தையும் வள்ளலார் இவ்விளம்பரத்தில் வெளிப்படுத்துகின்றார்.

இச்சத்திய ஞான சபையை நான் எனது உடல் உள்ளே ஆன்ம அறிவு அருள் அனுபவத்தில் பார்த்துக்கொள்கிறேன் என்பவர்கள் சுத்த சன்மார்க்கிகள் ஆவர். ஆனாலும் அவர்களும் புறத்திலே வடலூரில் அமைந்துள்ள அருட்பெருஞ்ஜோதியரை வந்து வணங்காமல் அகம்பாவம் கொண்டிருந்தால் அவர்களது உள்முகப் பயணம் தடைபடும். அகத்திலே பார்ப்பவர்கள் புறத்திலும் பார்க்க வேண்டும். புறத்தே பார்ப்பவர்கள் அகத்திலும் பார்க்க வேண்டும். அகமும் புறமும் நிறைந்தால்தான் மேற்சொன்ன அற்புதங்கள் நிகழும்.


வள்ளற்பெருமான் வடலூரில் அமைத்த சபை மட்டுமே சத்திய ஞான சபையாகும்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அமர்ந்து அருள் பாலிக்கும்இடமாகும்.அதனால்தான் வந்து வந்து தரிசிப்பீர்களே ஆனால் பெற வேண்டியதை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார். 

மேலும் வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே என்று அனைத்துலக மக்களையும் வடலூருக்கு அழைத்து வரச்சொல்கின்றார்.

உலகியர்களால் ஆங்காங்கு கட்டப்பட்டு இதே பெயரிலோ அல்லது சற்று மாறுபட்ட பெயரிலோ வழங்கிவரும் சபைகளில் இவ்வற்புதம் நிகழாது. வள்ளற்பெருமான் மீது பற்று வைத்துள்ளவர்கள் ஞான சபைகளை கட்டுவித்தல் கூடாது. சன்மார்க்க சங்கங்கள் மட்டுமே தோற்றுவித்தல் வேண்டும் என்பதனையும் நாம் சத்திய ஞானசபை விளம்பரம் மூலம் தெரிந்துக்கொள்ள வேண்டும் .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக.!

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு