ஆன்ம லாபம் மூன்று வகைப்படும் !
மனிதன் அடைய வேண்டிது லாபம் மிகவும் முக்கியமானது.
லாபம் அடைவதற்கு ஆசை மிகவும் அதிகம் வேண்டும்.
ஆசை இல்லாதவன் எதிலும் வெற்றிபெற முடியாது.
சமய மதங்கள் ஆசையை அறவே கூடாது என்று சொல்லி உள்ளன.
அறுமின் அறுமின் ஆசையை அறவே அறுமின் ஈசனோடு ஆயினும் ஆசையை அறவே அறுமின் என்றார்கள்.
வள்ளலார் ஆசை அதிகம் வேண்டும் என்கிறார்.
ஒவ்வொரு மனிதனும் உலக ஆசையை மாற்றி அருள் பெறும் ஆசைப்பட வேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றார்.
வள்ளலார் பாடல் !
ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்
அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்
ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்
எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்
எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்
தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்
திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே
திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே
மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்
முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே.!
முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே.!
எக்காலத்தும் அழியாத வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் அருள் தரும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொள்ள ஆசைப்பட வேண்டும் என்கிறார்.
வேறு எந்த ஆண்டவராலும் அருளை வழங்க முடியாது.என்பதை தெரிந்து கொண்ட வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்று அனுபவித்து வாழ்ந்து கொண்டு ஆனமநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் மக்களுக்கு தெளிவாக தெரிவிக்கின்றார்.
இவ்வுலகில் வாழ்வதற்கு மனிதன் மூன்று வகையான ஆசைப்படுகின்றான் அதுவே *மண்ணாசை.பெண்ணசை.
பொன்னாசை* என்பதாகும்.அந்த ஆசை முழுவதும் பொருள் சார்ந்த ஆசையாகும். பொருள் சார்ந்த ஆசையில் சிக்கிக்கொண்டு எந்த பொருளையும் முழுமையாக அனுபவிக்க முடியாமலும்.தான் ஆசைப்பட்டு சம்பாதித்தை எவற்றையும் கொண்டு செல்ல முடியாமலும் இறுதியில் மரணம் வந்து மாண்டு அழிந்து போகின்றான்.
நம்மை அழிக்கும் பொருளை விட்டு நம்மை அழிக்க முடியாத அருளைப்பெற வேண்டும் என்பதே அருள் ஆசை என்பதாகும்.அருள் பெறுவதே ஆன்ம இன்ப லாபமாகும்.
*அந்த ஆன்மலாபமும் மூன்று வகையாக உள்ளன*.
இம்மை இன்பலாபம்.
மறுமை இன்பலாபம்.
பேரின்பலாபம்
என்ற மூன்றுவிதமான லாபத்தை பெற வேண்டும்.
வள்ளலார் பதிவு செய்துள்ளதை கவனமாக படிக்கவேண்டும்.
வள்ளலார் பதிவு செய்துள்ளதை கவனமாக படிக்கவேண்டும்.
உலகத்தில் உயர்ந்த பிறப்பாகிய மனிதப் பிறப்பைக் பெற்றுக் கொண்டவர்கள் இந்த பிறப்பினால் அடையத் தக்க தலைப்பட்ட ஆன்ம இன்ப சுகத்தைக் காலம் உள்ள பொழுதே விரைந்து அறிந்து அடைய வேண்டும்.
ஒவ்வொரு மனித ஜீவர்களும் வாழ வேண்டிய வாழ்க்கை அடைய வேண்டிய ஆன்ம இன்ப லாபம் .மூன்று வகைப்படும் .
அந்தத் தலைப்பட்ட ஆன்ம இன்ப வாழ்வு எத்தனை வகை என்று அறியவேண்டில் ;--
1,இம்மை இன்ப வாழ்வு ....2,மறுமை இன்ப வாழ்வு ,,,3,பேரின்ப வாழ்வு என மூன்று வகை என்று அறிய வேண்டும்.
1,இன்மை இன்ப வாழ்வு ;--
அவற்றுள் சிறிய தேக கரணங்களைப் பெற்றுச் சிறிய முயற்சியால் சிறிய விடயங்களைச் சிலநாள் அனுபவிக்கின்ற இன்பத்தை இம்மை இன்ப வாழ்வு என்று அறிய வேண்டும்.
இம்மை இன்ப லாபம் என்பது ;--மனிதப் பிறப்பில் ,தேகத்திலும் ,கரணங்களிலும் -புவனத்திலும்,போகங்களிலும் குறைவு இன்றி நல்ல அறிவு உடையவர்களாய் ,பசி,பிணி,கொலை,முதலிய தடைகள் இல்லாமல் ,உறவினர் சினேகர் ,அயலார்,முதலியவர்களும் தழுவ சந்ததி விளங்கத் தக்க சற்குணம் உள்ள மனைவியோடு ,விடயங்களைச் சில நாள் அனுபவிக்கின்றதை இம்மை இன்ப லாபம் என்றி அறிய வேண்டும்.
இம்மை இன்ப லாபத்தை அடைந்தவர் பெருமை எது ? என்று அறிய
வேண்டில் ;---
அன்பு ,தயவு,ஒழுக்கம்,அடக்கம்,பொறுமை,
வாய்மை,தூய்மை முதலிய சுப குணங்களைப் பெற்று அனுபவித்துப் புகழ் பட வாழ்தல் என்று அறிய வேண்டும்.
2,மறுமை இன்ப வாழ்வு
மறுமை இன்ப வாழ்வாவது யாது ? எனில்
உயர் பிறப்பில் பெரிய தேக கரணங்களைப் பெற்றுப் பெரிய முயற்சியால் பெரிய விஷயங்களைப் பலநாள் அனுபவிக்கின்ற இன்பத்தை மறுமை இன்ப வாழ்வு என்று அறிய வேண்டும்.
மறுமை இன்ப லாபம் எது ? எனில் ;
உயர் பிறப்பைப் பெற்று இம்மை இன்ப லாபத்தில் குறிக்கப்பட்ட நற் குணங்கள் எல்லாம் பொருந்த உயர் நிலையில் சுத்த விடயங்களைப் பல நாள் அனுபவிக்கின்ற இன்ப லாபத்தை மறுமை இன்ப லாபம் என்று அறிய வேண்டும்.
மறுமை இன்ப லாபத்தை அடைந்தவர் பெருமை யாது ? என்று அறிய வேண்டில் ;--
அன்பு, தயவு,முதலிய சுப குணங்களைப் பெற்றுச் சுத்த விடய இன்பங்களை எண்ணியபடி தடை படாமல் முயன்று பல நாள் அனுபவித்துப் புகழ் பட வாழ்தல் என்று அறிய வேண்டும்.
3,,பேரின்ப வாழ்வு ;--
பேரின்ப வாழ்வாவது ?;--
எல்லாத் தேகங்களையும்,எல்லாக் கரணங்களையும்,எல்லாப் புவனங்களையும்,எல்லாப் போகங்களையும்,தமது பூரண இயற்கை விளக்கமாகிய அருட் சத்தியின் சந்நிதி விசேடத்தால் தோன்றி விளக்கஞ் செய்கின்ற பூரண இயற்கை உண்மை வடிவினராகிய ,கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று ,எக்காலத்தும் ,எவ்விதத்தும் ,எவ்வளவும் தடைபடாமல் அனுபவிக்கப் படுகின்ற ஒப்பற்ற அந்தப் பெரிய இன்பத்தைப் பேரின்ப வாழ்வு என்று அறிய வேண்டும்.
இதில் நாம் கவனிக்க வேண்டியது.
இம்மை இன்ப லாபத்திற்கு சிறிய தேக்கரணம் என்கின்றார்.
மறுமை இன்ப லாபத்திற்கு பெரிய தேக்கரணம் என்பார்.
பேரின்ப லாபத்திற்கு பூரண இயற்கை இன்ப வடிவம் என்கிறார்..
நம் உடம்பானது அருள் விசேடத்தால் மூன்றுவிதமான மாற்றங்கள் உண்டாகின்றது என்பதை ஊன்றி கவனிக்க வேண்டும்.
பேரின்ப லாபம் யாது ? எனில் ;--யாவும் தாமாய் விளங்குவதே .
பேரின்ப லாபத்தை அடைந்தவர் பெருமை எது ? என்று அறிய வேண்டில்.
தோல் .நரம்பு,என்பு,தசை,இரத்தம் ,சுக்கிலம்,முதலிய அசுத்த பூத காரியங்களும் அவற்றின் காரணங்களாகிய அசுத்த பிரகிருதி அணுக்களுமாகிய தேகத்தை ,மாற்றி ,மாற்று இவ்வளவு என்று அறியப்படாத உயர்ந்த பொன்னாகிய ,
சுத்த பூத காரிய சுத்த தேகத்தையும்,பொன் வடிவாகத் தோற்றுதல் மாத்திரமே யன்றி ஆகாயம் போல் பரிசிக்கப் படாத சுத்த பூத காரண பிரணவ தேகத்தையும்,தோன்றப் படுதலும் இன்றி ஆகாயம் போல் விளங்குகின்ற ஞான தேகத்தையும் .பெற்றவர்களாய் இருப்பார்கள்.
அதற்கு சுத்த பிரணவ ஞான தேகம் என்றும் ..ஒளி தேகம் என்றும்.....மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றும் ...முத்தேக சித்தி என்றும் ....பேரின்ப சித்தி பெருவாழ்வு என்றும் பல பெயர்களும் ஒன்றேதான்.
பேரின்ப லாபத்தை அடைந்தவர் வாழ்க்கை :--
அவரது உடம்பு ,;---மண்ணினது திண்மையால் உள்ளே தரிக்கப் படார்கள் .
புறத்தே ,மண்,கல் முதலியவற்றால் எறியினும் ,அவை அவர் வடிவில் தாக்குவன அல்ல .உள்ளே நீரினது தன்மையால் குளிரப்படார்கள் , புறத்தே நீரில் அழுத்தினும் அவர் வடிவம் அழுந்தாது . உள்ளே நெருப்பினது வெம்மையால் சுடப்பட்டார்கள்.
புறத்தே நெருப்பிற் சுடினும் அவர் தேகத்தில் சூடும் வடுவும் தோன்றுவன அல்ல.உள்ளே ஆகாயத்தினது கலப்பினால் அந்தரிக்கப் படார்கள்.புறத்தே ஆகாயம் அவர் தேகத்தை அந்தரிக்க மாட்டாது .
ஆதாரத்திலன்றி நிராதாரத்திலும் அவர் தேகம் உலாவும்.அவரது கண்கள் முதலிய ஞானேந்திரியங்களும் ,வாக்கு முதலிய கர்மேந்திரியங்களும் ,பார்த்தல் முதலிய விஷயங்களையும்,பேசுதல் முதலிய விஷயங்களையும் பற்றுவன அல்ல .
தயையினால் விஷயங்களைப் பற்ற வேண்டில் சுவர் ,மலை முதலிய தடைகளும் ,அவர் கண்களை மறைப்பன அல்ல ,
அண்ட பிணடங்களில் அகம் புறம் முதலிய எவ்விடத்தும் உள்ள விடயங்களை அவர் கண்கள் இருந்த இடத்து இருந்தே கண்டு அறியும்.அண்ட பிண்டங்களில் எவ்விடத்து இருந்து பேசினும் அவர் செவிகள் இருந்த இடத்து இருந்தே கேட்டு அறியும்.
எவ்விடத்தில் இருக்கின்ற ரசங்களையும் அவர் நா,இருந்த இடத்திருந்தே சுவைத்து அறியும்.எவ்விடத்தில் இருக்கின்ற பரிசங்களையும் அவர் மெய் (உடம்பு ) இருந்த இடத்தில் இருந்தே பரிசித்து அறியும்.எவ்விடத்தில் இருக்கின்ற சுகந்தங்களையும் அவர் நாசி (மூக்கு ) இருந்த இடத்தில் இருந்தே முகந்து அறியும்.
எவ்விடத்தில் இருக்கின்றவர் களுக்கும் அவரது கைகள் இருந்த இடத்தில் இருந்தே கொடுத்தல் கூடும் ...எவ்விடத்திலும் அவரது கால்கள் இருந்த இடத்தில் இருந்தே நடத்தல் கூடும் .அவரது வாக்கு ,எவ்விடத்தில் இருக்கின்ற எவ்வெவர் களோடும் இருந்த இடத்தில் இருந்தே பேசுதல் கூடும்.
மற்ற இந்திரியங்கள் ,இருந்த இடத்தில் இருந்தே எவ்விடத்தும் ஆனந்தத்தில் கூடும்.அவரது மனம்,முதலான கரணங்கள் எப்படிப்பட்ட விஷயங்களையும் பற்றுவன அல்ல .தயவினால் பற்றத் தொடங்கில் ,எல்லா உயிர்களினது எல்லாச் சங்கற்ப விகற்பங்களையும் ஒரு நிமிடத்தில் ஒருங்கே நினைத்து விசாரித்து நிச்சயத்துக் கொள்ளும் .
அவர் அறிவு ஒன்றையும் சுட்டி அறியாது.தயவினால் சுட்டி அறியத் தொடங்கில் ,எல்லா அண்டங்களையும் ,எல்லா உயிர்களையும்,எல்லாப் பண்புகளையும்,ஒருங்கே ஒரு நிமிடத்தில் சுட்டி அறியும்.
அவர்கள் நிர்க்குணத்தரா ஆவார்கள் .அல்லது தாமச,இராசத,சாத்துவிக முதலிய முக்குணங்களாலும்,உள்ளே விகாரப் படார்கள்.புறத்தே அவரது குணங்கள் கரணங்களைப் பற்றுவன அல்ல ...உள்ளே பிரகிருதியினால் மூடப்படார்கள்.புறத்தே அவரது பிரகிருதி குணங்களைப் பற்றுவன அல்ல .
உள்ளே கால தத்துவத்தால் வேற்றுமைப் படார்கள். புறத்தே காலத்தால் அவரது திருமேனி தடைபடாது .உள்ளே நியதி அளவால் அளக்கப் படார்கள்.புறத்தே நியதியால் அவரது திருமேனி வரைபடாது ...
அன்றி காலம்,வித்தை,ராகம்,புருடன்,முதலிய மற்றைத் தத்துவங்களும் ,தத்துவ காரியங்களும் ,அவர்களுக்கு இல்லை.மாயையால் பேதப்படார்கள்.
சுத்த மகாமாயையைக் கடந்து அதன் மேல் அறிவு உருவாக விளங்குவார்கள்.
ஆகாரம்,நித்திரை,மைத்துனம் ,பயம்,என்பவைகளால் தடைபடார்கள்.அவர்கள் தேகத்திற்குச் சாயை ,வியர்வை,அழுக்கு,நரை,திரை,மூப்பு ,இறப்பு,முதலிய குற்றங்கள் உண்டாவான அல்ல ...பணி,மழை,இடி,வெயில் ,முதலிய வற்றாலும் ,இராக்கதர்,அசுரர்,பூதம்,பிசாசு,முதலிய வற்றாலும்,
தேவர்,முனிவர்,மனிதர்,நரகர் ,மிருகம்,பறவை,ஊரவன் ,தாவரம்,என்பவைகளாலும், எவ்விடத்தும்,எக்காலத்தும்,அவர் தேகம் வாதிக்கப்படாது...வாள்,கத்தி,முதலிய கருவிகளாலும்,கண்டிக்கபடாது,
எல்லா அண்டங்களும்,அணுக்கள் போலச் சிறியதாகத் தோற்றலும்,எல்லா அணுக்களும் அண்டங்கள் போலப் பெரியதாகத் தோற்றலும்,அவர் தேகத்திற்கு உரியதாகும்.
மேலும் இறந்தோரை எழுப்புதல் ,வார்த்திபரை வாலிபர் ஆக்குதல்,முதலிய கரும சித்திகளும்,-யோக சித்திகளும்,--ஞான சித்திகளும், அவர் சந்நிதியில் இடைவிடாது விளங்கும்.
சிருஷ்டித்தல் ,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,
அனுகிரகித்தல்,என்கிற கிருத்தியங்களும் ,அவர் நினைத்த மாத்திரத்தில் நடக்கும்.பஞ்ச கர்த்தாக்களும் அவர் கடைக்கண் பார்வையால் தங்கள் தங்கள் நடத்துவார்கள்.
அவர் அறிவு கடவுள் அறிவாக இருக்கும்.அவர்கள் செய்கை கடவுள் செய்கையாக இருக்கும்.அவர்கள் அனுபவம் கடவுள் அனுபவமாக இருக்கும்.
சர்வ சத்தி உடையவர்களாய் எக்காலத்தும் அழிவில்லாதவர்களாய் ,ஆணவம்,மாயை,கன்மம்,என்னும் மும்மலங்களும் அம்மல வாதனைகளும் இல்லாதவர்களாய் பேரருள் வண்ணம் உடையவர்களாய் விளங்குவார்கள்.
சரமாகிய ஒரு துரும்பும் ,அவரது திருநோக்கத்தால் உயிர் பெற்றுப் பஞ்ச கிருத்தியங்களும் செய்யும்.அவரது பெருமை வேதாந்த ,சிந்தாந்த ,கலாந்த,போதாந்த ,நாதாந்த ,யோகாந்தம் என்கின்ற ஆறு அந்தங்களிலும் விளங்கும் .அவற்றைக் கடந்தும் விளங்கும் என்று அறிய வேண்டும்.
இவை பேரின்ப லாபத்தை அடைந்தவர் பெருமை என்று அறிய வேண்டும்.
இவை யாவும் பெற்றவர்தான் வள்ளல்பெருமான் என்பதை மனிதர்களாகிய நாம் புரிந்து அறிந்து கொள்ள வேண்டும்.
பாடல் !
படைத்தல்முதல் ஐந்தொழில்செய் பணிஎனக்கே பணித்திட்டாய்
உடைத்தனிப்பே ரருட்சோதி ஓங்கியதெள் ளமுதளித்தாய்
கொடைத்தனிப்போ கங்கொடுத்தாய் நின்அடியர் குழுநடுவே
திடத்தமர்த்தி வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய் !
உடைத்தனிப்பே ரருட்சோதி ஓங்கியதெள் ளமுதளித்தாய்
கொடைத்தனிப்போ கங்கொடுத்தாய் நின்அடியர் குழுநடுவே
திடத்தமர்த்தி வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய் !
என்றும் !
- காற்றாலே புவியாலே ககனமத னாலே
- கனலாலே புனலாலே கதிராதி யாலே
- கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
- கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே
- வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
- மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே
- ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்
- எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.!
என்னும் பாடல் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.
மேலும் இது சத்தியவான் வார்த்தை என்கின்றார்.
பாடல்!
- சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்
- சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்
- இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்
- இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்
- சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்
- தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்
- செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்
- திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.!
மேலும் இதுவரை படிக்காத படிப்பை படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்கின்றார்.
பாடல் !
- முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்
- முடுகிஅழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே
- இயன்றஒரு சன்மார்க்கம் எங்குநிலை பெறவும்
- எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர்
- துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்
- தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர்
- பயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப்
- படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.!
மேலே கண்ட பாடல்கள் யாவும் உண்மையான இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தொடர்பால் அருளால் தான் அடைந்த பேரின்ப லாபத்தலாபத்தைப பற்றி தெளிவாக தெரிவிக்கின்றார்.
நாமும் வள்ளலார் வாழ்ந்த காட்டிய சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறிகளை கடைபிடித்து பேரின்ப லாபத்தைப் பெறுவோம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக