அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

புதன், 24 ஜூலை, 2019

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்த திருநாள் !

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்த திரு நாள் *!

எல்லாம் வல்ல தனித்தலைமைப் பெரும்பதியாகிய உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தன்னை கலந்து இன்புறும் நாளை முன் கூட்டியே மக்களுக்கு தெரிவிக்கின்றார் வள்ளலார்.

இறைவனால் வருவிக்க உற்ற வள்ளல்பெருமான்.51.ஆண்டுகளாக இவ்வுலகில் வாழ்ந்து உலக மக்களுக்கு சொல்ல வேண்டிய ஒழுக்க நெறிகளை.இறைவன் கட்டளைப்படி.ஆணைப்படி முழுமையாக முறையாக.எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் வெளிப்படுத்தி உள்ளார்..

வெளிப்படுத்தியதும் மட்டும் அல்லாமல்.தான் வாழ்ந்தும் காட்டியவர் வள்ளலார்..

மனிதன் இறைவன் நிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டால் மட்டுமே இறைவன் தானே வந்து ஆட்கொள்வார் என்பதுதான் வள்ளலார் கண்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க தனிப்பெரும் நெறியாகும்...

இந்த நெறியின் நோக்கம் இறைவன் அருளைப் பெற்று பேரின்ப சித்திப் பெருவாழ்வு வாழ்வதாகும்...

வள்ளலார்..இந்த உலகத்தில் பஞ்சபூத உடம்பை எடுத்து வாழ்ந்து இறைவன் தொடர்பு கொண்டு பூரண அருளைப்பெற்று பூத உடம்பை ஒளி உடம்பாக (அருள்உடம்பு) மாற்றிக் கொண்டு வாழ்ந்து மரணத்தை வென்றுவிடுகின்றார்..

*வள்ளலார் மரணத்தை வென்று அருள் உடம்பு பெற்றுக் கொண்டதால் இறைவன் வரும் நேரத்தை உலக மக்களுக்கு அறிவிக்கின்றார்*

வள்ளலார் அனுபவமாலை பதிகத்தில் பதிவு செய்கின்றார்..!

அருளாளர் வருகின்ற தருணம் இது தோழி
ஆயிரம் ஆயிரம்கோடி அணிவிளக்கு ஏற்றிடுக

தெருளாய பசுநெய்யே விடுக மற்றை நெய்யேல்
திருமேனிக்கு ஒருமாசு செய்தாலும் செய்யும்

இருள்ஏது காலை விளக்கு ஏற்றிட வேண்டுவதோ
என்பத மங்கலமாய் ஏற்றுதலாங் கண்டாய்

மருளேல் அங்கவர் மேனி விளக்கமது எண்கடந்த
மதி கதிர் செங்கனல் விரவி யென்னினுஞ் சாலாவே !

என்னும் பாடலில் .*அருளாளர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தன்மையும் அவர் வருகின்ற செய்தியும் முன் கூட்டியே வெளிப்படுத்துகின்றார்.*

அனுபவமாலை பாடல்கள் 100 பாடல்களும் இறைவனும் வள்ளலாரும் உரையாடிய அனுபவப் பாடல்களாகும்.

இறுதியாக மகா பேருபதேசம் என்னும் பகுதியில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை.எப்படி பெயர்  சொல்லி துதிக்க வேண்டும் என்ற மகாமந்திரத்தை வெளிப் படுத்துகின்றார்.

நமக்கு ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில் .நமக்கு முன் சாதனம் கருணை யானதினாலே.ஆண்டவர் முதன் சாதனமாக

*அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங் கருணை
அருட்பெருஞ்ஜோதி!!!!*

என்னும் திருமந்திரத்தை.வெளிப்படையாக எடுத்துக்கொண்டார்.தயவு.கருணை.
அருள்.என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம்.

அது ஒப்பற்ற பெருந்தயவுடைய பேரறிவேயாம் இக்து வாச்சியார்த்தம்.இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால் முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை.என்பதை மகாமந்திரத்தின் தன்மையை வெளிப்படுத்துகின்றார்.

மேலே கண்ட மகாமந்திரத்தை மட்டுமே உபயோகப் படுத்த வேண்டும்..இதுவே இறைவனின் உண்மையான மகாமந்திரம் எனபதை வெளிப்படையாக வெளிப்படுத்துகின்றார்...

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என் உடம்பில் கலந்து கொள்வதற்காக நான் இருக்கும் இடத்தில் வந்து அமர்ந்து இருக்கிறார் என்ற நிகழ் காலத்தை வெளிப்படுத்துகின்றார்..

மிகவும் முக்கியமான பாடல் நான்கு !

சத்திய அறிவிப்பு  

  • 1. ஐயன்அருள் வருகின்ற தருணம்இது கண்டீர்
    ஐயமிலை ஐயமிலை ஐயன்அடி ஆணை 
    மெய்யன்எனை ஆட்கொண்ட வித்தகன்சிற் சபையில் 
    விளங்குகின்ற சித்தன்எலாம் வல்லஒரு விமலன் 
    துய்யன்அருட் பெருஞ்சோதி துரியநட நாதன் 
    சுகஅமுதன் என்னுடயை துரைஅமர்ந்திங் கிருக்க 
    வையமிசைத் திருக்கோயில் அலங்கரிமின் விரைந்தே 
    மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே. 

  • 2. தனித்தலைமைப் பெரும்பதிஎன் தந்தைவரு கின்ற 
    தருணம்இது சத்தியம்காண் சகதலத்தீர் கேண்மின் 
    இனித்தநறுங் கனிபோன்றே என்னுளம்தித் திக்க 
    இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகும் போற்ற 
    மனித்தஉடம் பிதைஅழியா வாய்மைஉடம் பாக்கி 
    மன்னியசித் தெல்லாம்செய் வல்லபமும் கொடுத்தே 
    கனித்தசிவா னந்தமெனும் பெரும்போகம் தனிலே 
    களித்திடவைத் திடுகின்ற காலையும்இங் கிதுவே. 

  • 3. சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய் 
    சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய் 
    இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம் 
    இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள் 
    சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும் 
    தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும் 
    செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார் 
    திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே. 

  • 4. என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார் 
    இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார் 
    பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது 
    பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார் 
    தன்சாதி உடையபெருந் தவத்தாலே நான்தான்
    சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம்சத் தியமே 
    மின்சாரும் இடைமடவாய் என்மொழிநின் தனக்கே 
    வெளியாகும் இரண்டரைநா ழிகைகடந்த போதே. ! 

மேலே கண்ட பாடலின்படி இறுதியாக வெளிப்படுத்துகின்றார்.



30-1-1874.ஆம் நாள் ஸ்ரீமுக வருடம் தைமாதம் 19 நாள் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கார்த்தார்களுக்கு வெளியிட்ட இறுதிக் கட்டளை.!

நான் உள்ளே பத்துப் பதினைந்து தினம் இருக்கப்போகிறேன்.பார்த்து அவநம்பிக்கை யடையாதீர்கள்.

ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வேறு வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார்.என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டார் என்னும் திருவாக்கைத் தெரிவித்துவிட்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அமர்ந்து இருக்கும் இடத்தில் உள்ளே சென்று விடுகின்றார்.

இந்த நிகழ்ச்சி யை ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில்  தெரிவித்துவிட்டு உள்ளே சென்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து கொள்கின்றார்..

இனி எல்லா உயிர்களிலும் கலந்து கொள்வேன் என்கிறார்.

வள்ளலார் பாடல் !

எல்லா உலகமும் என்வசம் ஆயின
எல்லா உயிர்களும் என் உயிர் ஆயின

எல்லா ஞானமும் என் ஞானம் ஆயின
எல்லா வித்தையும் என் வித்தை ஆயின

எல்லாப் போகமும் என்போகம் ஆயின
எல்லா இன்பமும் என் இன்பம் ஆயின

எல்லாம் வல்ல சிற்றம்பலத்து என்அப்பர்
எல்லாம் நல்கி என் உள்ளத்துள் ளாரே !

*என்னும் பாடலிலே.இனி நான் எவ்வண்ணம் உள்ளேன்.என்ன செய்யப் போகிறேன் என்பதை வள்ளலார் தெளிவாகத் தெரிவிக்கின்றார்...*

இந்தநாள் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் வள்ளலார் கலந்து கொண்ட திருநாளாகும்.. இதுவே இந்த உலகின் ஒரு முக்கியமான சிறந்த நாளாகும்.

உலகிலே உண்மைக்கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.முதன் முதலில் .இவ்வுலகிற்கு வந்த இடம் தான்.தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூருக்கு அடுத்த மேட்டுக்குப்பம் என்னும் சித்திவளாக திருமாளிகையாகும்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக