திங்கள், 27 மே, 2019

இறைவன் நேரில் பேட்டி !

*இறைவன் நேரில் பேட்டி கண்ட அருளாளர் யார் ?*

உலகில் தோன்றிய அருளாளர்கள் அனைவரும்  இறைவனைத் தேடி அலைந்தார்கள்.
அதனால்  அவர்கள் அடைந்த துன்பம்.துயரம்.அச்சம்.
பயம்.சோதனைகள் அளவில் அடங்காதது என்பது அவரவர்களின்  வரலாறுகள் சொல்லுகின்றன.

அவர்களை ஒருநாளும் இறைவன் தேடிச் சென்றதில்லை.

*இவ்வுலகில் இறைவனே  தேடிவந்து பேட்டி கண்ட ஒரே ஒரு அருளாளர் திருஅருட்பிரகாச வள்ளலாரை மட்டுமே !*

வள்ளலார் பாடல் !

நீ நினைத்த நன்மை எலாம் யாம் அறிந்தோம் நினையே

நேர்காண வந்தனம் என் றென்முடிமேல் மலர்க்கால்

தான் நிலைக்க வைத்தருளிப் படுத்திட நான் செருக்கித்

தாள்கள் எடுத் தப்புறத்தே வைத்திடத் தான் நகைத்தே

ஏன்நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம் என் மகனே

எனக்கிலையோ என்றருளி எனை யாண்ட குருவே

தேன் நிலைத்த தீம்பாகே சர்க்கரையே கனியே

தெய்வ நடத்தரசே என் சிறுமொழிஏற் றருளே.!

என்னும் பாடலிலே தெளிவாகத் தெரியப் படுத்துகின்றார்..

*நீ நினைத்த நன்மை எல்லாம் யாம் அறிந்து தான் உம்மை நேர்காண வந்தோம் என  வள்ளலார் இடம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லுகிறார்*

மேலும் அவற்றைப் பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் வள்ளலார் இருக்க...ஏன் ?  என் மகனே எனக்கு உன்னை பேட்டிகாணும் சுதந்திரம் எனக்கு இல்லையோ என வள்ளலாரிடம் இறைவன் கேட்கும் பாங்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஊட்டுகின்றது.

இந்த நிலை உலகில் எந்த அருளாளருக்கும் கிடைக்காத மாபெரும் நிகழ்ச்சி யாகும்.

*அப்படி என்ன ? வள்ளலார் செய்த நன்மைகள்..*.

உலகில் தோன்றிய சித்தர்கள் ஞானிகள் யாவரும் உண்மைக் கடவுளைக் காண முயற்சி செய்து.முயற்சி வெற்றி அடையாமல் தோல்வி தான் அடைந்தார்கள்.

பின்பு தத்துவங்களை கடவுளாக ஏற்று வழிப்பட்டு .தியானம்.
தவம்.யோகம் போன்ற சாதனங்களில் ஈடுபட்டு சிறு அருள் ஒளியை பெற்று.வானகத்தும்.வையகத்தும் மற்றகத்தும் சென்று அலைந்து.திரிந்து. காலத்தை வீணாக கழித்து இறுதியில் மரணம் அடைந்து மீண்டும் பிறப்பு எடுத்து கொண்டே இருந்தார்கள் இருக்கின்றார்கள்...

*வள்ளலார் சென்ற பாதை தனியானது.*.

*வள்ளலார் அவ்வழியில் செல்லாமல்..இறைவனால் படைக்கப்பட்ட  எல்லா உயிர்களையும்.தம் உயிர்போல்  நேசித்தார்..அவ்வுயிர்களுக்கு வரும் இடையூறுகளை நீக்க. அரும்பாடு பட்டார்.வெற்றியும் கண்டார்*

மேலும் எல்லா உயிர்களையும் இயக்கும் உள் ஒளியாகிய *ஆன்மாக்களின்* தன்மையைக் கண்டார்.

*உயிர் இரக்கத்தையும்.
ஆன்ம நேயத்தையும் கண்டு.*உயிர் நேயத்தையும்.ஆனம நேயத்தையும்* கடைபிடித்து மக்களுக்கு இறை அருள் உண்மைகளைப் பற்றி  பறை சாற்றினார்.*

*உயிரையும்.ஆன்மாவையும் படைத்த இறைவன் யார்? என்பதை அறிந்து.அந்த ஒரே இறைவன் தான் அருட்பேரொளி என்பதை அறிந்து அவருக்கு அருட்பெருஞ்ஜோதி என்று பெயர் சூட்டினார்*

மேலும் இறைவனால் படைத்த உயிர்களான *தாவரங்களும்* தண்ணீர் இல்லாமல் வாடுவதைக் கண்டு தானும் வாடினார்.

வள்ளலார் பாடல் !

*வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன்* பசியினால் இளைத்தே

வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்

நீடிய பிணியால் வருந்து கின்றோர் என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்

ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.!

தாவரம் முதல் எல்லா உயிர்களும் ஒரேத் தன்மை உடையது என்பதை அறிந்து கொண்டு ஜீவ நேயத்தை கடைபிடித்தார்.

*மேலே கண்ட பாடல் தான் வள்ளலாரை ஏறாநிலை மேல் ஏற்றியதாகும்.*

*வள்ளலாரின் இந்த உண்மை நிலையை அறிந்து உணர்ந்து தெரிந்து தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாரை நேர்காண வந்தார்.* என்பதை ஒவ்வொரு அறிவுபெற்ற சன்மார்க்க சான்றோர்களும் .உலக
மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.

*வள்ளலாரை  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நேர்காண வந்ததின் நோக்கம் வள்ளலாருக்கு தெரியவில்லை....*

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லுகிறார்..

*நான் உமக்கு ஒரு மாபெரும் பரிசு கொடுக்கப் போகிறேன் நீ மறுக்காமல் பெற்றுக் கொண்டே ஆக வேண்டும் .*
அதற்காகவே உன்னை நேர்காண வந்தேன் என்கிறார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்*

*அந்த பரிசு என்ன ?*

சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது

தூயநல் உடம்பினில் புகுந்தேம்

இதந்தரும் உளத்தில் இருந்தனம் உனையே

இன்புறக் கலந்தனம் அழியாப்

*பதந்தனில் வாழ்க அருட்பெருஞ் சோதிப்*

*பரிசுபெற் றிடுகபொற் சபையும்*

*சிதந்தரு சபையும் போற்றுக என்றாய்*

தெய்வமே வாழ்கநின் சீரே.!

என்னும் பாடலில் ...*உன் தூய உடம்பினில் கலந்து என்றும் பிரியாமல் வாழப்போகிறேன்*.
உமக்கு என்றும் அழியாமல் வாழும் வாழ்க்கைத் தரப்போகிறேன் என்கிறார் .**அதுதான் கடவுள் நிலை அறிந்து அம்மயமாக வாழும் மரணம் இல்லாப் பெருவாழ்வாகும்**

*அதுதான் பேரின்ப சித்தி பெருவாழ்வாகும்*

*மேலும் நேர்காணலில் அதிர்ச்சியும் ஆனந்தமும் தரும் செயதியை வெளிப்படுத்துகின்றார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.*

வள்ளலார் பாடல் !

*துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித் ததுநினைச்*

*சூழ்ந்ததருள் ஒளிநிறைந்தே*

*சுத்தசன் மார்க்கநிலை அனுபவம் நினக்கே*

*சுதந்தரம் ஆனது உலகில்*

*வன்பெலாம் நீக்கி நல் வழியெலாம் ஆக்கி மெய்*

*வாழ்வெலாம் பெற்று மிகவும்*

*மன்னுயிர் எலாம்களித் திடநினைத் தனைஉன்றன்*

*மனநினைப் பின்படிக்கே*

*அன்பநீ பெறுகஉல வாதுநீ டூழிவிளை*

*யாடுக அருட்சோதியாம்*

*ஆட்சி தந் தோம்உனைக் கைவிடோம் கைவிடோம்*

*ஆணைநம் ஆணைஎன்றே*

*இன்புறத் திருவாக் களித்தெனுள் ளேகலந்*

*திசைவுடன் இருந்தகுருவே*

*எல்லாஞ்செய் வல்லசித் தாகிமணி மன்றினில்*

*இலங்குநட ராஜபதியே.!*

மேலே கண்ட பாடல் தான் வள்ளலாருக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அளித்த அருட்கொடையாகும்...

இந்த உலகமும் உலக உயிர்களும் தவறான வழியிலே சென்று அழிந்து கொண்டு உள்ளது..

*அதற்கு காரண காரியமானவர்கள் சாதி.சமய.மதங்களை தோற்றுவித்த அருளாளர்கள்..*
அவர்களுடைய துன்மார்க்க ஆட்சி அதிகாரங்களை இன்றுடன் அழித்து *வள்ளலாரிடம்*  ஐந்தொழில் வல்லபமான அருள்  ஆட்சியை ஒப்படைக்கின்றார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். அதுதான் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க ஆட்சியாகும்*

மேலும் ஆண்டவர் சொல்லுகிறார்.. *இதுவரையில் எனக்கு துன்பம் இருந்தது இனிமேல் எனக்கு எந்த துன்பமும் வருத்தமும் வாட்டமும் இல்லை*

ஏன் என்றால் ? நீ ஒருவன் தான் நான் சொன்ன எல்லா உண்மைகளையும் மறைக்காமல். ஒளிவு மறைவு இல்லாமல் உலகத்திற்கு வெளிப்படுத்தி விட்டாய்..

மேலும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற பெரும் பணியை சிரமேற்க் கொண்டு *வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினாய்*.*உயிர்களின் கொல்லாமையை உலகிற்கு அழுத்தமாக போதித்தாய்.* என்பதற்காகவே ஐந்தொழில் ஆட்சியை ஒப்படைக்கின்றேன்... என்கிறார் ..

*வடலூருக்கு அடுத்த மேட்டுக்குப்பம்  சித்தி வளாகத் திருமாளிகையில் வள்ளலார் தனிமையில்  இருக்கும் போது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நேரில் வந்து நேர்காணலில்.. ஐந்தொழில்  வல்லபத்தை கொடுத்துள்ளார்.*

என்பதை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டு வள்ளலார் காட்டிய *சுத்த சன்மார்க்க* பெருநெறியை பின்பற்றி வாழ்வாங்கு வாழ்வோம்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

சுத்த வடிவும் சுகவடிவாம் ஓங்கார

நித்த வடிவும் நிறைந்தோங்கு - சித்தெனும்ஓர்

ஞான வடிவுமிங்கே நான்பெற்றேன் எங்கெங்கும்

தானவிளை யாட்டியற்றத் தான்.!

என்னும் பாடலிலே உண்மையை வெளிப்படுத்துகிறார்..

இப்போது வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வடிவமான சுத்த வடிவம் என்னும் சுகவடிவம் பெற்று என்றும்  மாறாத மாற்ற முடியாத  ஓங்கார நித்த வடிவமான.இயற்கை உண்மையான  *ஞான வடிவம்* பெற்று அருள் ஆட்சி செய்து கொண்டுள்ளார்..
என்பதை உண்மை அறிவு கொண்டு அறிந்து கொள்ள வேண்டும்...

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க நெறியில் வாழ்வதற்கு இரண்டே வழிதான்..

ஒன்று ஜீவகாருண்யம்.
ஒன்று சத்விசாரம்..

*சத்விசாரம் என்பது இறைவனைக் காணும் வழியாகும்*

*ஜீவகாருண்யம் என்பது அருளைப் பெறும் வழியாகும்*.

 இந்த இரண்டு வழிகளால் மட்டுமே இறைவனைக் கண்டு இறைவனிடம்  அருளைப்பெறும் நேர்வழியாகும்...

விரிக்கில் பெருகும்.....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு