அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

திங்கள், 29 ஏப்ரல், 2019

பசியும் கொலையும்ஏன் தவிர்க்க வேண்டும்.

*பசியும் கொலையும் ஏன் தவிர்க்க வேண்டும் !*

ஒரு உயிருக்கும் உடம்பிற்கும் ஏழு வகையான துன்பம் வருகின்றது..

அவைகள்...
பசி.கொலை.பிணி.
ஆபத்து.பயம்.இச்சை.
எளிமை.என்பதாகும்.

*இந்த துன்பங்கள் உடம்பையும் உயிரையும் எப்படி பாதிக்கின்றன என்பதை தெளிவாக வள்ளலார் விளக்குகின்றார்*.

*பசி என்பது,* ஆகாரம் பொறாமையால் வயிற்றினுட் பற்றிநின்று தேகத்தின் அகத்தும் புறத்தும் உள்ள கருவி கரணங்களின் தன்மைகளைச் சுடுதல் செய்து அறிவை மெலிவித்து ஆன்மாவை வெளிப்படுத்து வித்தற்கு முதற்காரணமாகிய விகற்ப மாயாகாரியப் பிண்டப்பகுதி நெருப்பு.

*கொலை என்பது,* தேகத்தின் அகத்தும் புறத்தும் உள்ள கருவி கரணங்களைப் பல்வேறு கருவி கரணப் புடைபெயர்ச்சிகளால் பதைப்புண்டாகக் கலக்கஞ்செய்து அறிவை மெலிவித்து ஆன்மாவை வெளிப்படுத்துவித்தற்கு நிமித்தமாகிய விகற்ப பூதகாரியக் கொடுந்தொழில்,

*பிணி என்பது*, வாத பித்த சிலேட்டும விகற்பங்களால் மாறுபட்டு, தேகத்தின் அகத்தும் புறத்தும் உள்ள கருவி கரணங்களை நலிவுசெய்து அறிவை மெலிவித்து ஆன்மாவை வெளிப்படுத்துவித்தற்கு நிமித்தமாக நின்ற விகற்ப மாயாகாரியப் பிண்டப் பகுதி வேற்றுமை விளைவு.

*ஆபத்து என்பது,* அகங்காரத்தாலும் மறதியாலும் கரும வேறுபாட்டாலும் தேகபோக அனுபவங்களைத் தடுக்கின்ற விக்கினங்கள்.

*பயம் என்பது*,
தேக முதலிய கருவிகளுக்கு நட்டஞ் செய்வதாகிய விடயங்கள் நேரிட்டபோது கரணங்களுக்கும் அறிவுக்கும் உண்டாகின்ற நடுக்கம்.

*இன்மை என்பது,* கல்வி செல்வம் முதலிய கருவிகளைத் தற்சுதந்திரத்திற் பெறாமை.

*இச்சை என்பது* அடையக் கருதிய விடயங்களில் அருமை குறித்து அவற்றை மேன்மேலும் கருதச் செய்கின்ற சித்தவிருத்தி என்று அறியவேண்டும்.

*இவற்றுள் பசி கொலை என்பவை* இம்மைஇன்பம், மறுமை இன்பம், பேரின்பம் என்கிற மூன்றையும் தடுத்தலால் முதற்பட்ட தடைஎன்றும்;
.
பிணி, பயம், ஆபத்து, இன்மை என்பவை இம்மை மறுமை இன்பங்களைச் சிறிது தடுத்தலால் இடைப்பட்ட தடை என்றும்,

ஆசை இம்மைஇன்பத்தைச் சிறிதுதடுத்தலால் கடைப்பட்ட தடை என்றும் அறியவேண்டும்.

*சீவகாருணியத்தின் வல்லபம் யாதென்றறியவேண்டில்:*-

பிற உயிர்களிடத்துப் பசி கொலை முதலியவற்றுள் எதனாற் காருணியந் தோன்றியதோ அதனால் அவ்வுயிர்கள் வருந்தாதபடி அதை நீக்குதற்கு முயல்விப்பது அதன் வல்லபமென் றறியவேண்டும்.

*சீவகாருணித்தின் பிரயோசனம் யாதென்றறியவேண்டில்:-*

உயிர்களுக்கு இன்பம் உண்டுபண்ணுவது அதன் பிரயோசனம் என்றறியவேண்டும்.

*மேலே கண்ட துன்பங்களில் பசியும்.கொலையும்  மிகவும் தவிர்க்க வேண்டிய அவசியம் யாதெனில்*

இறைவனிடம் அருளைப் பெறுவதற்கு பசி.கொலை நீக்குதல் மிகவும் முக்கியமானதாகும்.
இதற்கு *பர ஜீவகாருண்யம்* என்றும்

மற்றவை *அபர ஜீவகாருண்யம்* என்றும்.இரண்டாக பிரிக்கின்றார்.

*வள்ளலார் எவ்வளவு தெளிவாக விளக்குகின்றார் பாருங்கள்..*

பசி, கொலை, தாகம், பிணி, ஆபத்து, பயம், இன்மை, இச்சை என்பவைகளால் வரும் அபாயத்தை நிவர்த்தி செய்விப்பது சீவகாருணியத்திற்கு லக்ஷியமாக இருக்கவும்.

*இவ்விடத்துப் பசியினாலும் கொலையினாலும் வரும் அபாயங்களை மாத்திரம் நிவர்த்தி செய்விப்பது தலைப்படும் காருணியம் என்று குறித்தது ஏன் ? என்று அறியவேண்டில்:-*

சீவகாருணிய ஒழுக்கத்தில் *பரசீவகாருணிய மென்றும் அபரசீவகாருணியம் என்றும் இருவகையாம்*.

அவற்றில் பசிநீக்கலும் கொலைநீக்கலும் பரசீவகாருணியம்.

மற்றவை அபரசீவகாருணியம். ஆகலில், பரசீவகாருண்யம் விசேஷமாகக் குறிக்கப்பட்டதென்று அறியவேண்டும்.

அன்றியும், பசியினால் வருந்துகின்ற சீவர்களுக்குப் பசியை நிவர்த்தி செய்விக்கின்ற தயவுடையவர்கள் தாகம் நீங்குவதற்குத் தண்­ணீர் கொடாமலிரார்கள். தண்­ணீர் கொடுப்பது பிரயாசமுமல்ல. தண்­ணீர் ஏரி, குளம், கால்வாய் முதலிய இடங்களிலும் இருக்கின்றது.........!

எனவே மனிதர்கள் பசி.கொலை தவிர்க்கும் ஜீவகாருண்ய உபாயத்தால் மட்டுமே இறைவன் அருளைப் பெற முடியும்.என்பதை நாம் ஒவ்வொருவரும் அவசியம் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டும்...

ஜீவகாருண்யத்தால் மட்டுமே ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் அறியாமை என்னும் மாயா திரைகள் விலகும்.

எனவேதான் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல் என்றார் வள்ளலார்..

எனவே தான் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றார் வள்ளலார்.

*ஜீவகாருண்யம் விளங்கும் போது அறிவும் அன்பும் உடனாக விளங்கும் என்றார்*

அறிவும் அன்பும் விளங்கினால் தான் உண்மை இறைவன் யார் என்பது தெரியும்.

ஜீவகாருண்யத்தால் உயிர் இரக்கத்தால் உண்மை இறைவனைக் கண்டவர் வள்ளலார்.

*அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்*

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே அருளை வழங்க முடியும்.

*அன்பும் அறிவும் விளங்கினால் தான் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரை விலகும். திரை விலகினால் மட்டுமே ஆன்மாவை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தொடர்பு கொண்டு அருள் வழங்குவார்.*

அருள் பூரணம் பெற்றால் தான் ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடையும்.

*ஒளி உடம்பு பெற்றால் தான் கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாற முடியும்..இதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.*

எனவே இறைவனை அறிந்து கொள்வதற்கும் இறைவனிடம் இருந்து அருளைப் பெறுவதற்கும்.பர ஜீவகாருண்யமாகிய பசிப்பிணியையும்.கொலையையும் தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும் என்பதை வள்ளலார் விளக்கமாக தெளிவாக தெரியப்படுத்து கின்றார்.

வள்ளலார் பாடல் !

காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே

களிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே

மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்

மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் தருமச்

சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே

சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே

மாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும்

மாநடத்தென் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.!

என்னும் பாடலின் வாயிலாக வள்ளலார் தெளிவு படுத்துகின்றார்..

மனித அறிவை பயன் படுத்தி மகிழ்ச்சி யுடன் வாழ்வாங்கு வாழ்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக