புதன், 30 ஜனவரி, 2019

அருட்பா மருட்பா போர் !


அருட்பா மருட்பா போர்.!

சைவ சமயத்தில் பக்தி இலக்கியங்களாகப் போற்றப்பட்டவை திருமந்திரம், திருவாசகம், திருப்புகழ். அதன் பிறகு எழுதப்பட்ட பாடல்கள் யா வும் பிரபந்த திரட்டுகள் எனவும், பின் இயற்றப்பட்டப் பாடல்கள் வெறும் திரட்டு எனவுமே அழைக்கப்பட்டன.

கோயில்களில், பசனைகளில், உற்சவங்களில் இப்பாடல்கள் மட்டுமே மிகுந்த சிரத்தையோடு பாடப்பட்டன.

இந்தச் சூழ்நிலையில் 1867 ஆம் ஆண்டு வள்ளலார் அவர்கள் இயற்றிய பாடல்கள் திருஅருட்பா எனும் தலைப்பில் வெளிவந்தது.

ஆரம்பத்தில் சொற்பொழிவுகளுக்கு முன்னர் பாடப்பட்ட திருஅருட்பா மக்களிடம் வரவேற்பு பெற்றபோது

கோயில்களில் பன்னிரண்டு திருமுறைகளோடு பாடப்பெறும் அளவுக்கு உயர்ந்தது. அதற்கு மேலும் உயர்ந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உயர்ந்து கொண்டே இருந்த்து.

இது சைவ சமயத்தார்கள் பலருக்கு வெறுப்பினைத் தந்தது.

ஏனெனில் இராமலிங்க அடிகளின் பாடல்கள் அனைத்தும் தேவை இல்லாத சமயக் கோட்பாடுகளை கேள்வி கேட்டது.

 சாதி சமய கோட்பாடுகளை.மத வேறுபாடுகளை களைய அவர் இயற்றியப் பாடல்கள் பலரின் கவனத்தைப் பெற, சாதி சமய மதங்களில் ஊறிய மனங்கள் அதை எதிர்த்தன.

சைவ சமய மரபியல் சிந்தனைகளை அவர் உடைத்தெறிவதாகக் கூறி சைவ சமய அடிப்படைவாதிகள் அவரோடு சண்டையிட்டனர். வாதம் செய்தனர்.அதில் குறிப்பிடத்தக்கவர் ஆறுமுக நாவலர்.

வள்ளலார் மீது மட்டுமின்றி, சைவ சமய விதிகளைச் சரிவரப் பின்பற்றாத சைவர்கள் அனைவர் மீதும் ஆறுமுக நாவலர் கடுங்கோபம் கொண்டார். அதனால்தான் “நாவலர்” என்னும் பெயரைத் திருவாவடுதுறை ஆதினம் அவருக்கு வழங்கிற்று.

யாழ்ப்பாணத்திலேயே பல சைவக் கோயில்கள் ஆகம விதிப்படி செயல்படவில்லை என்பதைத் தன்னுடைய “யாழ்ப்பாணச் சமய நிலை” என்னும் நூலில் அவர் விளக்கினார்.

சைவ சமயத்திற்கு எதிராக கருத்துகள் கூறும் இராமலிங்க அடிகளின் பாடல்கள் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சம்மந்தர் போன்றோரின் பாடல்களுக்கு இணையாக இடம்பெறுதல் கூடாது என்று அவர் தீவிரமாக எதிர்த்துப் பேசினார்.

இராமலிங்கரின் பாடல்கள் அனைத்தும் அருட்பாக்கள் அல்ல மருட்பாக்கள் என எழுதி நூல் வெளியிட்டதோடு, தனிப்பட்ட முறையில் அடிகளைத் தாக்கி பல சொல்லம்புகள் வீசினார்.

ஆறுமுக நாவலரைப் போன்று எதிர்ப்பவர்கள் ஒருபுறம் எனவும் இராமலிங்க அடிகளை ஆதரிப்போர் ஒரு புறமும் என வாதங்கள் தொடர்ந்து நடந்தன.

 அந்தக் காலகட்டத்தில் இராமலிங்க அடிகளுக்கு ஆதரவாக இசுலாமிய தமிழறிஞர் செய்குத்தம்பி பாவலர் பரப்புரை மேற்கொண்டார்.

இராமலிங்க அடிகளும் தனக்கு எதிரான கருத்துக்கள் பற்றி கவலை கொள்ளாது தன் பணியில்.இறை சிந்தனையில் கவனமாக இருந்தார்.

**ஏன் என்றால்  உலகத்தை திருத்த இறைவனால் வருவிக்க உற்றவர்.**

இதனால் கோபமுற்ற ஆறுமுக நாவலர் தன்னை அவமதித்து விட்டதாக அடிகளார் மீது வழக்கு தொடர்ந்தார் ஆனால் அந்த வழக்கு போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆறுமுக நாவலரால் தொடங்கப்பட்ட இந்த அருட்பா – மருட்பா போர் காலங்கள் கடந்தும், இராமலிங்க அடிகள் சித்தி பெற்ற பிறகும்.அதாவது மரணத்தை வென்ற பின்பும். இருபதாம் நூற்றாண்டு வரையிலும் அதற்கு மேலும் அன்றும்.இன்றும்.என்றும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கின்றது..

அருட்பா-மருட்பா அறிக்கைப் போர் தொடங்கிய அனைத்துச் செய்திகளையும், அப்போது வெளியிடப்பட்ட நூற்றுக்கணக்கான துண்டறிக்கைகளையும் திரட்டி ஆய்வாளர் ப. சரவணன், 1190 பக்கங்களில் “அருட்பா மருட்பா கண்டனத் திரட்டு” என்னும் பெரியதொரு ஆவண நூலை வெளியிட்டுள்ளார்.

 “அந்நூல் ஒரு புலமைக் களஞ்சியம், அறிவுத் தளங்களை ஆராய முயல்வோருக்குக் கிடைத்த அரிய புதையல்” என்று பாராட்டுகிறார் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி.

வள்ளலார் சிதம்பர தீட்சிதர்களைக் கருவியாகப் பயன்படுத்தியவர் அல்ல,

 மனிதர்கள் விலங்குகளாக மாறுவதற்கு சாதி.சமய.மதம் போன்ற பகைமை உணர்ச்சியே காரணமென்ற, கொள்கை வழியில் ஆரம்பிக்கப்பட்ட திருஅருட்பா மருட்பா போரில் வள்ளலாரின் திருஅருட்பா சார்பில்

சைவ சமயவாதியான மறைமலையடிகள் வாதத்தில் கலந்துகொள்ள அப்போர் முடிவுபெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது.

“நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளையாட்டு” என்றும்

“”சாதியும், மதமும், சமயமும் பொய் ”என்றும் “

“சாதி சமயவிகற் பங்களெல்லாம் தவிர்த்தே எவ்வுலகும் சன்மார்க்கம் பொதுவடைதல்வேண்டும் ” என்றும்

“கலையுரைத்த கற்பனையே நிலையெனக்கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக”

என்றும் பல நிலைகளில் பகுத்தறிவு கருத்துக்களை, சமத்துவ கருத்துக்களை தன் பாடல்களில் வெளிப்படுத்தியதன் காரணமாகவே அவர் சைவ சமயத்தாரிடம் மிகப்பெரிய கண்டணங்களை சந்திக்க நேர்ந்தது என்பதே உண்மை.

எனினும் காலம் கடந்தும் இன்றும் என்றும்.வள்ளலாரின் திருஅருட்பா பாடல்கள் மக்கள் மனதில் பசுமரத்தாணிப் போல் பதிந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

“எப்பொருளும் எவ்வுயிரும், எவ்வுலகும் ஒன்றே” என்ற ஒப்பற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்பதே வள்ளலாரின் கனவாக இருந்தது என்றால் அது மிகையல்ல.

வள்ளலார் தோற்றுவித்த சுத்த சன்மார்க்க இறை கொள்கைகயே! உலக மக்களை ஒன்று படுத்த முடியும் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வளர்ந்து வருகின்றன.

சுத்த சன்மார்க்க கொள்கைக்கு நேர் எதிரிகளே சைவ சமயத்தார்களே !
 
வள்ளலார் தன் உருவமே வேண்டாம் என்றவர்...

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மட்டுமே ஒளியாக வழிபட வேண்டும் என்று கட்டளை இட்டவர்.

சைவசமயத்தை சார்ந்தவர்கள் தான் வள்ளலார் உருவப்படத்தை சித்தரித்து சமய சின்னங்களான விபூதிப் பட்டையை வள்ளலார் படத்திற்கு அணிவித்தவர்கள்.

சைவ சமய நாயன்மார்களில் ஒருவராக வள்ளலாரையும் சேர்த்துவிடுவார்கள்.

நாயன்மார்கள் வரலாறு தத்துவங்களே தவிர உண்மை  அல்ல என்று தெளிவாக வள்ளலார் சொல்லி உள்ளார்.

சுத்த சன்மார்க்கிகள் எச்சரிக்கையாக இருந்து வள்ளலார் கொள்கைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் பொருப்பை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நம்மிடம் தந்துள்ளார்..

உலகம் எல்லாம் போற்ற ஒளிவடிவனாகி இலக  அருள்  செய்தான் இசைந்து.
திலகன் என நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான் தானே எனக்கு தனித்து..

என்று வள்ளல்பெருமான் தெளிவாக பதிவு செய்துள்ளார்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்வு !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு