வியாழன், 22 நவம்பர், 2018

வள்ளலார் அருள் ஆட்சி பெற்றுக் கொண்டது !

வள்ளலார் அருள் ஆட்சி பெற்றுக் கொண்டது !

வள்ளலார் அருள் ஆட்சியில் பதவிப் பிரமாணம்  பெற்றுக் கொள்கிறார் !

*வள்ளலார் சுத்த பிரணவ ஞான தேகம் பெற்றுக் கொண்ட பின் நடந்தது என்ன ?*

வள்ளல் பெருமான் சித்திவளாகத் திருமாளிகையில்..சுத்த சன்மார்க்க  கொடியேற்றி மகாஉபதேசம் செய்கிறார்..

அந்த உபதேசத்தில் ஒரு முக்கியமான வசனத்தை (வார்த்தை) சொல்லுகின்றார்.

*இது கடைசி வார்த்தை என்று சொல்லுகின்றார்.*

இதுமுதல் -சாலைக்கு ஆண்டவர்  போகிற- பத்துத் தினமாகிய கொஞ்சம் காலம்  வரையில்.நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டு இருங்கள்..

மேலும் ஜாக்கிரதையாக.நான் மேற் சொன்ன பிரகாரம் .விசாரம் செய்து கொண்டு இருங்கள் என்று மக்களிடம் சொல்லுகின்றார்...

மேலும்

இப்போது நீங்கள் - இதுவரைக்கும் ஒழுக்கத்துக்கு வராமல் எவ்வளவு தாழ்ந்த மனுஷ்யர்களாயிருந்தாலும் -

சாலைக்குப் போகக் கொஞ்சதினமிருக்கின்றது - அதற்குள்ளாக நீங்கள் நீங்களும் நல்லொழுக்கத்திற்கு வருவதோடுகூட, மற்றவர்களையும் நமது ஒழுக்கத்திற்கு வரும்படி எவ்விதத் தந்திரமாவது செய்து நம்மவர்களாக்கிக் கொள்ள வேண்டியது. நீங்கள் கொஞ்ச தினத்துக்கு அப்படிச் செய்து கொண்டிருங்கள்.

*நானும் ஆண்டவரிடத்தில் இவ்வுலகத்திலுள்ள எல்லா ஜீவர்களும் நன்மையடையப் பிரார்த்தித்தும், ஆண்டவரிடத்தில் கேட்டுக்கொண்டும் வருகின்றேன். ஆதலால், நீங்கள் அப்படிச் செய்து கொண்டிருங்கள்..*

*வள்ளலார் பத்து தினம் எங்கு போயிருப்பார் ?*

இங்கு நாம் கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்...

வள்ளலார் பாடல் !

கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில்

கதவுதிறந் திடப்பெற்றேன் காட்சியெலாம் கண்டேன்

அடர்கடந்த திருஅமுதுண் டருள்ஒளியால் அனைத்தும்

அறிந்துதெளிந் தறிவுருவாய் அழியாமை அடைந்தேன்

உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்

உள்ளபடி உள்ளபொருள் உள்ளனவாய் நிறைந்தேன்

இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம்ஓங் கினவே

இத்தனையும் பொதுநடஞ்செய் இறைவன்அருட் செயலே.!

என்னும் பாடல் வாயிலாக தெரிவிக்கின்றார்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருட் கோட்டையின் கதவு திறக்கப் பெற்று ஆண்டவர்   அழைத்ததை ஏற்றுக் கொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருட்சபைக்கு சென்று விடுகின்றார்...

அதற்கு முன்னாடி எல்லா அருளாளர்களுக்கும்.
அவசர அழைப்பு விடுத்து அனைத்து அருளாளர்களும் வந்து அருட்பெருவெளியின் புறத்தில் அமர்ந்து கொண்டு இருக்கிறார்கள்...

*அவர்கள் யார் யார் என்பதை வள்ளலார் தெரியப் படுத்துகின்றார்...*

அனுபவமாலை தலைப்பில் உள்ள 63...64 ஆவது பாடல்கள்..

உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடி

உறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி

பெருத்தமற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும்

பேசில்அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித்

திருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்று

தியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ

வருத்தமொன்றும் காணாதே நான்ஒருத்தி ஏறி

மாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே.!

அடுத்து அமர்ந்துள்ளவர்கள் !

பார் உலகாதிபர் புவனா திபர் அண்டா திபர்கள்

பகிரண்டாதிபர் வியோமாதிபர் முதலாம் அதிபர்

ஏர்உலவாத் திருப்படிக்கீழ் நின்று விழித்திருக்க

எனை மேலே ஏற்றினர் நான் போற்றிஅங்கு நின்றேன்

சீர்உலவா யோகாந்த நடம் திருக்கலாந்தத்

திருநடம் நாதாந்தத்தே செயும்நடம் போதாந்தப்

பேர் உலவா நடங்கண்டேன் திருஅமுதம் உணவும்

பெற்றேன்நான் செய்ததவம் பேருலகில் பெரிதே.!

மேலே கண்ட அருளாளர்கள் அனைவரும் அருட்சபையின் புறத்தே அமர்ந்திருக்க...வள்ளல்பெருமானை அழைத்து சபை நடுவே அமரவைத்து  அனைத்து அருளாளர் களுக்கும் அறிமுகப் படுத்தி வைக்கிறார்..

அறிமுகப்படுத்திவிட்டு ஓர் உண்மையை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அனைவருக்கும் புரியும் படி  சொல்லி ஆணையிட்டு ஆட்சி மாற்றம் செய்கின்றார்...

அனுபவ மாலை தலைப்பில் உள்ள
56..57 பாடல்கள் !

பொய்பிடித்தார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்

பொது நடங்கண்டு உளங்களிக்கும் போது மணவாளர்

மெய் பிடித்தாய் வாழியநீ சமரசசன் மார்க்கம்

விளங்க உலகத்திடையே விளங்குக என் றெனது

கைபிடித்தார் நானும்அவர் கால்பிடித்துக் கொண்டேன்

களித்திடுக இனியுனை நாம் கைவிடோம் என்றும்

மைபிடித்த விழிஉலகர் எல்லாரும் காண

மாலையிட்டோம் என்றெனக்கு மாலையணிந் தாரே.!

என்னும் பாடல் வாயிலாக உண்மையை உலக மக்களுக்கு தெரியப் படுத்துகின்றார்..

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி... உலகம் எல்லாம் அருள் ஆட்சி செய்யும் பொறுப்பை..
ஆணையிட்டு வள்ளல்பெருமானுக்கு அருள் மாலை அணிந்து ஆட்சி அதிகாரத்தை அறிவிக்கின்றார்..

ஏன் ஆட்சி மாற்றம் செய்கிறோம் என்னும் உண்மையைப் வெளிப்படையாக தெரிவிக்கின்றார்...

மேலும்....

பொருத்தமிலார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்

பொதுநடங்கண்டு வந்துநிற்கும் போது தனித் தலைவர்

திருத்தமுற அருகணைந்து கைபிடித்தார் நானும்

தெய்வ மல ரடிபிடித்துக் கொண்டேன்
சிக் கெனவே

வருத்தமுறேல் இனிச்சிறிதும் மயங்கேல் காண் அழியா

வாழ்வு வந்தது உன்தனக்கே ஏழுலகும் மதிக்கக்

கருத்தலர்ந்து வாழிய என் றாழிஅளித் தெனது

கையினில்பொற் கங்கணமும் கட்டினர் காண் தோழி.!

என்னும் பாடல்களின் வாயிலாக...எல்லா அருளாளர்களும்.எல்லா உலகமும் அறிய. வள்ளல்பெருமானை வாழ்த்தி. கையிற் அருள் கங்கணமும் கட்டி ஆட்சிப் பொறுப்பில் அமர்த்துகின்றார்....

மேலும் அடுத்து ஒருபாடலில் தெரிவிக்கின்றார் !

பாடல் !

ஆணை ஆணைநீ அஞ்சலை அஞ்சலை

அருள்ஒளி தருகின்றாம்

கோணை மாநிலத் தவரெலாம் நின்னையே

குறிக்கொள்வர் நினக்கே எம்

ஆணை அம்பலத் தரசையும் அளித்தனம்

வாழ்க நீ மகனேஎன்

றேணை பெற்றிட எனக்கருள் புரிந்தநின்

இணைமலர்ப் பதம்போற்றி.!

என்னும் பாடலில்..அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்... ஆணை ஆணை என்று சத்தியம் வைத்து சொல்கின்றார்..

எதற்கும் அஞ்சாமல் அருள் ஆட்சி செய்வாயாக..என்றும் நானும் உம்மைவிட்டு பிரியாமல் இருப்பேன் என்றும்  ஆணையிடுகின்றார்..

மேலும் அருட்பெருஞ்ஜோதி அகவலில் பதிவு செய்கிறார்...

தன் கையிற் பிடித்த தனி அருட் ஜோதியை
என்கையிற் கொடுத்த என்தனித் தந்தையே !

என்றும்..

மூவரும் தேவரும் முத்தருஞ் சித்தரும் யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை !

என்றும்..

உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க !

என்றும்.

சுத்த சன்மார்க்கச் சுகநிலை பெறுக உத்தமன் ஆகுக ஒங்குக என்பவை !

போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ்சீர் ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி !

என்னும் அருள் வரிகளில் தெளிவுப் படுத்துகின்றார்..

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு துன்பம் இருந்ததாம்..*

என்ன துன்பம் ?

உண்மைக் கடவுளான  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தெரிந்து கொள்ளாமலும்..
அருளைப் பெற முடியாமலும். மரணத்தை வெல்லும்  வழித் தெரியாமலும் மக்கள் தவறான வழியிலே சென்று மாண்டு( இறந்து) கொண்டே இருந்தார்கள். அதனால் துன்பம் அடைந்தேன்.

உண்மையான அருளாளர்கள் ஆட்சியாளர்கள் இல்லையே என்ற வருத்தமும் வாட்டமும் இருந்ததாம்..

இதுவரையில் நான் அனுப்பிய ஆன்மாக்கள் திரும்பி வரவில்லை என்ற வருத்தம் இருந்ததாம்

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

நடராஜபதி மாலை !
26 வது பாடல் !

 துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித் ததுநினைச்

சூழ்ந்ததருள் ஒளிநிறைந்தே

சுத்தசன் மார்க்கநிலை அனுபவம் நினக்கே

சுதந்தரம தானது உலகில்

வன்பெலாம் நீக்கி நல் வழியெலாம் ஆக்கி மெய்

வாழ்வெலாம் பெற்றுமிகவும்

மன்னுயிர் எலாம்
களித்திட நினைத் தனை உன்றன்

மன நினைப் பின்படிக்கே

அன்பநீ பெறுகஉல வாது நீடூழி விளை

யாடுக அருட்சோதியாம்

ஆட்சி தந்தோம் உனைக் கைவிடோம் கைவிடோம்

ஆணை நம் ஆணை என்றே

இன்புறத் திருவாக் களித்து என் உள்ளே கலந்து

திசைவுடன் இருந்தகுருவே

எல்லாஞ் செய் வல்ல சித்தாகி மணி மன்றினில்

இலங்கு நடராஜபதியே.!

என்னும் பாடலில் தெளிவாக தெரிவிக்கின்றார்....

இதில் மிகவும் உயர்ந்தது மண் உயிர் எல்லாம் களித்திட நினைத்தது ..அதாவது 

பாடல் !

வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே

வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்

நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உறக் கண்டுளந் துடித்தேன்

ஈடின் மானிகளாய் ஏழைகளாய்
நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.!

இந்த உயிர் இரக்கம் தான் ஆட்சி பொருப்பில் வள்ளல்பெருமனை.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.. அமர்த்த காரண காரியமாக அமைந்துள்ளது.

இன்னும் விரிக்கில் பெருகும்..

வள்ளலார் சித்திவளாகத்தில் பேருபதேசம் செய்யும் போது.

இது கடைசி வார்த்தை என்றும்  இன்னும் பத்து தினமாகிய கொஞ்ச காலம் வரையில் நல்ல விசாரணையில் இருந்து கொண்டு இருங்கள் என்பதும் ...

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அழைப்பை ஏற்றுக் கொண்டு அருட்பெருவெளிக்கு சென்று அருள் ஆட்சி ஆணையை பெற்றுக் கொள்ள சென்றதாகும் 

வள்ளலார் சித்தி பெற்ற நாளில் இருந்து அருள் ஆட்சி நடந்து கொண்டு உள்ளது....

*சத்திய அறிவிப்பு என்னும் தலைப்பில் உள்ள பாடல் !*

சத்தியவான் வார்த்தை இது தான்உரைத்தேன் கண்டாய்

சந்தேகம் இலை இதனில் சந்தோடம் உறுவாய்

இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்

இனிவரும் அத் தினங்கள்எலாம் இன்பம் உறு தினங்கள்

சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும்

தூய்மை உறும் நீஉரைத்த சொல் அனைத்தும் பலிக்கும்

செத்தவர்கள் எழுந்து உலகில் திரிந்து மகிழ்ந் திருப்பார்

திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.!

ஆன்ம நேய உரிமை உடைய சன்மார்க்க  சொந்தங்களே! அருள் பெற்றுக் கொண்டு மரணத்தை வெல்ல துடிக்கும் . விரும்பும் ஆன்மீக சான்றோர்களே ! என் அறிவில் விளங்கிய செய்திகளை தந்துள்ளேன் ..ஏற்றுக் கொள்வதும்.ஏற்றுக் கொள்ளாததும் உங்கள் விருப்பம்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு