*வள்ளலார்*
*தினமணி 5-10-18*
மக்களிடையே துறவிகளுக்கு என்றும் வாழ்வில் கசப்படைந்தோ, குறிக்கோளுக்காகவோ, உலக நலன் கருதியோ, உள்ளொளியாலோ துறவியானோர் பலர்.
எனினும், "துறந்தவர்கள் பெருமைக்கு எல்லையில்லை' என்பது திருக்குறள். உடலுக்கு உணவும் மருந்தும், உள்ளத்துக்கு அறிவுரையும் ஆறுதலும், உயிருக்கு வழிபாடும் பயிற்சியும் ஆகிய தீர்வுகளைத் துறவியரிடத்தில் எதிர்நோக்கி மக்கள் வணங்கி வருகின்றனர் .
வாழையடி வாழையென வழி வழியாக வந்த திருக்கூட்ட மரபில் திருவள்ளுவர் தொடங்கி நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள், ஞானியர் முதலியோரெல்லாம் இம்மரபில் வந்தவர்களே. இவ்வரிசையில் வள்ளலார், புதுமைத் துறவி, பொதுமைத் துறவி, புரட்சித் துறவி, சமுதாயத் துறவி, சீர்திருத்தத் துறவியாவார்.
வள்ளலார் வெள்ளாடைத் துறவி. தூய வெண்ணிற ஆடையையே ஓராடையாக அணிந்தார். காவி உடுத்தியதில்லை. துறவுக் கோலத்துக்குக் குறியீடாக இருந்த காவி தரிக்காது வெள்ளாடை உடுத்திக் கொண்டார்.
மணிமேகலையைப் போல அமுதசுரபி இல்லாமல் சத்தியத் தருமசாலையில் எளியோர்க்கும் ஏழை மக்களுக்கும் பசியாற்றும் ஞானியாக வடலூரில் விளங்கினார். இராமலிங்கர் 151 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியத் தருமசாலையில் 1867-ஆம் ஆண்டில் ஏற்றிய அடுப்பு இன்றும் அணையாமல் நாள்தோறும் ஆயிரம் மக்களுக்கு அன்னபாலிப்பு அளிக்கிறது.
வள்ளலார் வாழ்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருபத்து நான்கு பஞ்சங்கள் ஏற்பட்டன. அப்பஞ்சங்களை அடிகளார் நேரில் கண்டார். பசியுடன் அலைந்தோரையும் இறந்து பட்டோரையும் எண்ணி எண்ணி இவர் மனத்தில் நடுக்கம் கொண்டு அழுதார். பசியால் நேர்ந்த முப்பதுக்கு மேற்பட்ட அவல நிலைகளைக் கூறி நம் மனத்தை அடிகளார் பிழிகிறார்.
பசியால் பஞ்சடைந்து குழிந்து போகின்றது; காது கும்மென்று செவிடுபடுகின்றது; நா உலர்ந்து வறளுகின்றது; மூக்கு குழைந்து அழல்கின்றது; தோல் மெலிந்து உணர்ச்சி கெடுகின்றது; வாய் உளறுகின்றது; பற்கள் தளருகின்றன; நரம்புகள் குழைந்து நைகின்றன; நாடிகள் கட்டுவிட்டுக் கழறுகின்றன; எலும்புகள் பூட்டுவிட்டு நெக்குவிடுகின்றன; இதயம் வேகின்றது; மூளை சுருங்குகின்றது; வயிறு பகீரென்று எரிகின்றது; உயிரிழந்து விடுவதற்கு நெருங்கிய அடையாளங்கள் தோன்றுகின்றன. பசியினால் இவ்வளவு துன்பங்களும் உயிரினங்களுக்கு ஏற்படுகின்றன.
இத்தனை துன்பங்களும் உணவுண்ட பின் நீங்குகின்றன. பசி போக்கலே
மாபெரும் புண்ணியமாகும்.
அனைத்துச் சமயங்களும் உயிர் நலம் காத்தலையே அடிப்படையாகக் கொண்டவை. இராமலிங்கரும் எல்லா உயிர்களிடமும் அன்பு கொண்டார். அன்பைக் கடந்த இரக்கமும் உருக்கமும் இராமலிங்க அடிகளாரை முழுமையாக்கின.
"உயிர்தான் உயிர் இரக்கந்தான் ஒன்றல்லது இரண்டிலை
இரக்கம் ஒருவில் என் உயிர் ஒருவும்' என்பது
திருவருட்பா.
இரக்கமே தன் உயிர் என்றார். "உயிரும் இரக்கமும் தனித்தனியாகக் கூற முடியாதவை. பொது நலத்தில்தான் உயிரிரக்கம் பொங்கிப் பெருகும்' என்றார்.
இந்த நிலையில்தான் பசிக்கு உணவு, உணவுக்கு நெல், நெல்லுக்குக் கதிர், கதிர்தான் பயிர், பயிர் வாடினால் உயிர் வாடும் என்று நெகிழ்ந்து நெகிழ்ந்து நினைந்து நினைந்து உடம்பு நனைந்து நனைந்து "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்' வாடினார்.
பசித்துயரத்தோடு அந்நாளைய வரிவிதிப்பு முறையும் உழவர்களைப் பெரிதும் துயருக்குள்ளாக்கின. எளியோர் வட்டிக்குக் கடன் வாங்கி அவதியுற்றனர். அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, ஆகியவற்றுக்கும் இடர்ப்பட்டுக் கடன்பட்டு வறுமையுற்ற நிலையில் தவித்ததை இராமலிங்கர் நேரில் கண்டார். அதனை "வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்' என்று கடிந்தார்.
சிதம்பரத்திற்கு வடக்கே மருதூர் என்னும் சிற்றூரில் வாழ்ந்த இராமையா பிள்ளையின் ஐந்து மனைவியரும் மகப்பேறின்றி மறைந்தனராம். ஆறாம் முறையாகச் சின்னம்மையைத் திருமணம் செய்து அவருக்கு ஐந்தாம் மகனாக இராமலிங்க அடிகளார் 05-10-1823-ஆம் ஆண்டில் தோன்றினார். அண்ணன் பொறுப்பில், குடும்பத்தினர் தாய் வீடாகிய பொன்னேரியை அடுத்த சென்னை நோக்கி வந்தனர். சென்னையில் தொடக்கக் காலத்தையும், தென்னார்க்காடு மாவட்டச் சிற்றூர்களில் பிற்காலத்தையும், வடலூரில் நிறை வாழ்வையும் நடத்தினார். மருதூரில் பிறந்திருந்தாலும், தம்முடைய நினைவு தெரிந்த நாளிலிருந்து முப்பதாண்டுகளுக்கு மேலாகச் சென்னையிலேயே வாழ்ந்தார்.
இராமலிங்கரின் வாழ்க்கை வரலாற்று குறிப்புகள் முழுவதும் கிடைக்கப் பெறவில்லை. ஆங்காங்கே பாடல்களில் புதைந்து கிடக்கும் செய்திகள் சிலவும் அவரின் வரலாற்றை அறிய உதவுகின்றன. தெய்வமணிமாலையும், கந்தர் சரணப்பத்தும் முதன் முதலில் கந்தகோட்டத்திற் பாடப் பெற்றவை. வள்ளலார், முதன்முதலிற் பாடி வழிபட்ட சென்னையில் கந்த கோட்டத்தைப் போற்றிப் பாடிய "ஒருமையுடன் நினது திருமலரடி' பாடல் உலகறிந்தது.
வள்ளலார் வலியுறுத்திய கொள்கைகள் பல. அவற்றுள் சில:
1. கடவுள் ஒருவரே. 2. ஒளி வடிவில் அன்போடு வழிபட வேண்டும். 3. சிறு தெய்வ வழிபாடு கூடாது. 4. தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி கூடாது. 5. சாதி, சமய வேறுபாடுகளை இல்லாமல் நீக்க வேண்டும். 6. எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணி ஒழுகும் உயிரிரக்க ஒருமைப்பாட்டுரிமையைக்
கடைபிடிக்க வேண்டும். 7. எளியோர்க்குப் பசி தவிர்த்தலாகிய இரக்கமும் உருக்கமுமே பேரின்ப வீட்டின் திறவுகோல். 8. மூடப் பழக்க வழக்கங்களை அறவே ஒழிக்க வேண்டும். 9. சாத்திரங்களும் புராணங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்கவில்லை.
பொதுவாக, துறவியர் தம் சார்பாகச் சத்திரம், மடம், கோயில் என்ற நிறுவனங்களை அமைத்துக் கொண்டிருந்தனர். புத்தர் கூறிய மும்மணிகளை மனத்தில் கருதி, "சங்கம்', "சாலை', "சபை' என்ற நிறுவனங்களை வள்ளலார் வடலூரில் உருவாக்கினார்.
ஆங்கில அரசின் கொடுமையை வசைபாடி வருந்தினாலும் சமயப் பணி செய்ய வந்த கிறித்தவர், ஒரு பள்ளியை, மருத்துவ மனையை, கோயிலை அமைத்துக்கொள்வார்கள். மதுரையில் மேநிலைப்பள்ளியும், மருத்துவமனையும், மாதா கோயிலும் அடுத்தடுத்து அமைந்துள்ளதைக் காணலாம். அந்த வகையில், உடற்பசி நீக்கச் சாலையும், மனப்பசி போக்கக் கல்வி புகட்டும் சங்கமும், உயிர் உயர்வுபெறச் சபையும் என வள்ளலார் அமைத்தார் என்றும் கருதலாம்.
வள்ளலார் வாழ்ந்த வடலூரின் திசைதோறும் சிதம்பரமும், திருப்பாதிரிப்புலியூரும், திருமுதுகுன்றமும் புகழ் வாய்ந்த பெருங்கோயில்களாக அமைந்துள்ளன. எனினும், மரபார்ந்த கோயில்களின் வழிபாட்டு முறைகளிலும் வள்ளலாருக்கு மனம் இசையவில்லை. எண்கோண வடிவில் ஞானசபையைத் தானே வடிவ
மைத்து ஒளிவழிபாட்டை நிறுவினார். அருட்பெருஞ்சோதியை வழிபாட்டுக்குரிய பண்பாகவும் தனிப்பெருங் கருணையைப் பயனாகவும் உணரும் வகையில் சமரசச் சன்மார்க்கப் பெருமக்களுக்கு மறைமொழியாகவும் வழங்கினார்.
ஏழு நிறத் திரைகள் நீக்கிய பிறகு ஒளிச்சுடரைக் கண்டு வழிபடுகிற அமைப்பினை "இயற்கை விளக்கம்' என்றும் அறிவுறுத்தினார். சங்கத்தில் திருக்குறள் வகுப்பை முதன் முதலாகத் தொடங்கிய பெருமிதமும் வள்ளலாரைச் சாரும்.
சன்மார்க்கச் சங்கம் 1865-ஆம் ஆண்டிலும், சத்தியத் தருமசாலை 1867-ஆம் ஆண்டிலும், சத்திய ஞானசபை 1872-ஆம் ஆண்டிலும் அமைந்தன. வள்ளலார் உளமுருகிப் பாடிய பாடல்களுக்கு ஈடில்லை. "இறையருட் பெருநிலையைத் தமிழ் மொழியே அளிக்கும் தமிழ் மொழிக்கு நிகரில்லை, தமிழே தாய்மொழி'
என்றெல்லாம் பாடினார். "உருக்கத்துக்குத் திருவாசகம்' என்பார்கள். "உருக்கத்தின் ஆழத்துக்குத் திருவருட்பா' என்று கூறலாம். "அருள்' என்ற சொல்லைத் திருவருட்பா ஆளாத இடமேயில்லை. திருவருட்பாவுக்கு உருகாதார், திருவாசகத்திற்கும் உருகார். திருவாசகத்தில் வள்ளலார் தான் கலந்துள்ளதைப் பாடுகிறார் திருவருட்பாவிலும் நாம் கலந்து திளைப்போம்.
தெருக்கூத்து, நாடக மேடைகளில் 1930-ஆம் ஆண்டில் தொடங்கி மக்கள் விரும்பிக் கேட்டு மெய் மறந்து உருகி மகிழ்ந்த பாடல்களான "கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் குளிர்தருவே', "கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே', "வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்', "வருவார் அழைத்து வாடி' முதலிய இசைப்பாடல்கள் இசைக்கு இசையும், பக்தர்களை வசப்படுத்தும் பரிவும் ஈர்ப்பும் உருக்கமும் கொண்டவையாக இருந்தன.
பழகிய சொற்கள், அழகிய தமிழ் இரக்கம், உருக்கம் கொண்ட பாடல்களுக்குத் தாமே ஒரு பண் வரிசை அமைத்துப் பாடல்களைப் பாடிக் கொண்டே தைப்பூசப் பெருவிழாவில் அடியவர்கள் வடலூருக்கு நடந்து வருவதை இன்றும்
காணலாம்.
இந்த நன்னாள் இராமலிங்க வள்ளலார் சன்மார்க்க நெறியில் உலக மக்களைப் பொதுமைக்கு ஆளாக்க வருவிக்க உற்ற பொன்னாளாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக