ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

மூன்று ஆசைகளை தவிர்க்க வேண்டும் !

🙏🔥
அருட்பெருஞ்ஜோதி !
அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
அருட்பெருஞ்ஜோதி !
     
🙏🔥 மூவாசைகளில் நிராசை வராத வரையில் சுத்தசன்மார்க்க லட்சியம் என்பது எட்டாக்கனியே 🍇🍇🍇
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
     ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை இவ்வெளியவன் தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன் 🙏

சுத்தசன்மார்க்கத்தில் பயனிக்கின்ற சுத்தசன்மார்க்கத்திற்கு உரிமையுடைய சங்கத்தார்கள் ,

சுத்தசன்மார்க்க கொள்கையும், லட்சியமுமாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய "பூரண சித்தி "வல்லபத்தைப் பெற்று முத்தேக சித்தி அனுபவத்துடன் "அருட்பெருஞ்ஜோதி இயற்கை "
என்னும் அருட்தேகத்தைப் பெற்றுக்கொண்டு மரணமிலாப் பெருவாழ்வில் வாழும் பேறு பெறுவது என்பது ............!

வெறுமனே புலைகொலை தவிர்த்து இருந்தும்,

பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்யம் செய்து இருந்தும்,

திருவருட்பா முற்றும் பாராயணம் செய்து இருந்தும்,

புருவமத்தி தியானத்தில் தீபநாட்டம் வைத்து இருந்தும்,

இடைவிடாது மகாமந்திர உச்சாரணம் செய்து இருந்தும் ,

சன்மார்க்க சத்விசாரம் செய்து இருந்தும்,

இடைவிடாது வடலூர் மாதப்பூச ஜோதி தரிசனம் கண்டு இருந்தும்,

ஆகிய அனைத்து சன்மார்க்க நியதிகளிலும் இடைவிடாது நெறிப்படி வாழ்ந்து கொண்டு வந்தாலும்,

பெருமான் கூற்றுப்படி,
"பற்றுகள் அனைத்தையும் பற்றறத் தவிர்த்து அம்பலப் பற்றே பற்றாய் பற்றுமின்"
என்ற அறிவுரையின்படி ,

மாயையினால் படைக்கப்பட்ட நிலையற்ற அற்பசுகத்தை தரக்கூடிய இவ்வுலக இன்பத்தை தரக்கூடிய மண் பெண் பொன் என்ற விடய இன்பங்களின்மீது  "நிராசைக்" கொண்டு,

என்றும் அழியாப் பேரின்பத்தைத் தரக்கூடிய அருட்பெரும்பதிமீது மட்டுமே பற்று வைத்து பசுவின் வரவை எதிர்பார்த்து இளங்கன்று பரிதவிப்பது போன்று ,

ஆகாரத்தில் இச்சையற்று,
அழுத கண்ணீர் மாறாத வண்ணம் ஆண்டவரின் அருளுக்காக ஏங்கி தவித்தாலொழிய சுத்தசன்மார்க்க லட்சியத்தை எக்காலும்
அடைதல் கூடாது 🔥🙏

மூவாசைகள் 🍑🍐🍌
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
     இயற்கையிலேயே தயவை குணமாகக்கொண்ட நமது ஆன்மாவிற்கு ,

இயற்கையாகிய அனாதி ஆணவ மலமும் ,
இயற்கையில் செயற்கையாகிய மாயை மலமும்,
செயற்கையாகி கன்ம மலமும் ஆகிய மும்மலங்களும் சேர்க்கப்படுவதுடன்,

செயற்கை குணங்களாக
காமம்,
குரோதம்,
லோபம்,
மோகம்,
மதம்,
மார்ச்சரியம் என்னும் உட்பகைகளும் வந்தடைகின்றன .

இந்த செயற்கை குணங்களின் வாயிலாக போத அசைவின்கண் தோன்றும் விடய ஆசைகளாகிய ,
மண்,
பெண்,
பொன் என்ற மூவாசைகள் அசைக்கப்பட்டு ஆன்மாவை இறுகப் பற்றிக்கொள்கின்றன 🔥🙏

அதே போன்று  இவ்வுலகப் பொருள்களின்மீது பற்றற்று  நிராசையுடன் ,
போத அசைவின்றி தற்சுதந்திரம் இல்லாமல் திருவருட்சுதந்திரத்தில் நிற்கும் அனுபவத்தர்கள் ,

தேனுண்ட வண்டு அத்தேன் மயமாய் மயங்கி நிற்பதுபோன்று

போத ஒழிவின்கண்  சிவானந்ததேனில் மயங்கி அலையறியாக் கடல்போல ஆனந்த தெள்ளமுதைப் பருகி பேரின்பத்தை அனுபவிக்கின்றார்கள் 🍓

🙏🔥நனவு ,கனவு,சுழுத்தி🔥🙏
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
இப்பிரபஞ்சப் பொருள்களின் மீது நிராசையை உண்டாக்கும் பொருட்டு நமது பெருமான் சுத்தசன்மார்க்க லட்சியத்தை அடைய விரும்பும் சாத்தியர்களுக்கு

நனவிலும் மண்ணாசை,
கனவிலும் பெண்ணாசை,
சுழுத்தியிலும் பொன்னாசை முதலிய மூன்று ஆசைகளும் கூடாது என்று கூறுகின்றார்கள் 🔥🙏

நனவு (ல) சாக்கிரம்🍑
       நனவு என்பது நாம் விழித்திருக்கும்போது ஜாக்கிரதையுடன் இருக்கும் விழிப்பு நிலையாகும்.
இது நமது உள்ளம் பித்த உஷ்ணத்தோடு கூடி லலாடம் மற்றும் ஆக்ஞா என்று சொல்லக்கூடிய புருவமத்தியில் இருந்து செயல்படுவதாகும்.

இந்த நிலையில் நமது தத்துவங்கள் 96 ல் ,
ஞானேந்திரியங்கள் 5ம்,
அதனால் அடையக்கூடிய விஷயங்கள் 5 ம் அதாவது,
கண்,
காது,
மூக்கு
நாக்கு,
மெய் என்ற ஞானேந்திரியங்கள் 5ம்,

 அதனால் பெறக்கூடிய உணர்வுகளுமாகிய பார்த்தல்,
கேட்டல்,
நுகர்தல்,
ருசித்தல்,
பரிசித்தல் என்னும் ஞானேந்திரிய உணர்வுகள் 5ம்
மற்றும்,

கன்மேந்திரியங்கள் 5ம்
அதனால் செய்யப்படும் தொழில்கள் 5ம் அதாவது
வாக்கு,
கைகள்,
கால்கள்,
குதம் (மலவாய் (அ)கருவாய்),
குய்யம்(ஜலவாய்(அ)
எருவாய்) என்ற கன்மேந்திரியங்கள் 5ம்

அதன் செயல்களாகிய பேசுதல்,
பாடுதல்,
உண்ணுதல், கொடுத்தல் ,
எடுத்தல்,
நடத்தல்,
ஓடுதல்,
மலம் கழித்தல்,
ஜலம் கழித்தல் குழந்தை உற்பத்தி ஆகிய தொழில்களை செய்கின்ற கன்மேந்திரிய
செய்கல் 5ம் ,
மற்றும்,

பிராணன் முதலாகிய முக்கிய வாயுக்கள் 10ம்,

அந்தக்கரணங்களாகிய மனம்,
புத்தி,
சித்தம்,
அகங்காரம்
மற்றும் உள்ளத்தை சேர்த்து 5ம்

ஆக 35 தத்துவங்களும் நனவு நிலையில் வேலை செய்கின்றனவாகும்🔥🙏

கனவு(அ)சொப்பனம்🍅
     இது நாம் கனவு காணும்போது இருக்கும் நிலையைக் குறிக்கின்றது.
   
    கனவு என்பது நமது உள்ளம் வாதநாடியோடு கூடிக் கண்ட ஸ்தானத்தில் நிற்கும்போது செயல்படுவதாகும்.
   
    இந்த நிலையில் மேற்கூறிய ஞானேந்திரியம் 5 ம்,
கன்மேந்திரியம் 5 ம், தவிர மற்ற 25 தத்துவங்களும் வேலை செய்கின்றன🔥🙏

சுழுத்தி(அ)உறக்கம் 🍅
      இது நனவு கனவு அற்று உறங்கும்போது உள்ள நிலையைக் குறிக்கின்றது .
   
சுழுத்தி என்பது நமது உள்ளம் சிலேத்தும நாடியோடு கூடி மார்பு ஸ்தானத்தில் இருந்து செயல்படுவதாகும் .
     
இந்த நிலையில் ஆன்மா எந்தவித தொழில்களும் இல்லமால் தன்னை மறந்து சுகமாய் இருந்து நித்திரை செய்தாலும் அஞ்ஞான நிலையில் இருக்கின்றது .
இதற்கு "கேவல நிலை" என்று பெயர்;
இந்த நிலையில் மனம் சித்தம் மற்றும் பிராணன் தத்துவங்கள் மட்டும் வேலை செய்கின்றன🔥🙏

🙏🏘நனவினும் மண்ணாசை 🏘🙏
🏠🏕🏡🏕🏡🏕🏡🏕🏡🏕🏡🏕🏡🏕🏡🏕
       அனைவரும் ஆசைப்படுதல் வேண்டும் ,
ஆசைப்படுவதற்குதான் பிறவி ,
முற்பிறவியில் ஆசைப்பட்டதனால்தான் பிறவியே கிடைத்தது ,

பிறவியற்று இருக்க வேண்டும் என்றால் ஆசையற்று இருத்தல் வேண்டும்.

மானுடப் பிறவியைப் பெற்ற ஒரு ஆன்மா ஒரு பொருளின்மீது பற்று வைத்தால் அது அவா (அ) ஆசை,

அப்பொருளையே நினைத்துக்கொண்டு இருந்தால் அது காமம் .

அப்பொருளை எப்படியாவது அடைந்தே ஆகவேண்டும் என நினைத்தல் அது மோகம்;

சுத்தசன்மார்க்க லஷியத்தை அடைய விரும்பும் சாத்தியக்ள் எந்த ஒரு பொருளினிடத்திலும் மோகம் முதலிய குணங்கள் இன்றி அவா மயமாய் மட்டும் நிற்றல் வேண்டும்.

பரலோக வாழ்வாகிய சுத்தசன்மார்க்க சத்திய சாத்திய வாழ்வு பெற விரும்புபவர்கள் நிலையற்ற அற்ப சிற்சுகத்தைக் கொடுக்கக்கூடிய இப்பிரபஞ்ச பொருள்களின் மீது எத்துணையும் பற்றற்று நிராசை மயமாய் இருந்து ,

என்றும் நிலையான பேரின்பத்தை அளித்து நம்மை எக்காலத்தும் அழியாநிலையில் வைத்து ,அருள்வாழ்வை அளிக்கக்கூடிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்து மாறாத அன்பு வைத்து ,

எவ்விதத்தாவது  ஆண்டவரது தயவாகிய அருளைப் பெற்றிடவும் ,
ஆண்டவரை அடைந்திடவும் பேராவல்கொண்டு இருத்தல் வேண்டும்🔥

அந்த வகையில் சுத்தசன்மார்க்க லஷியத்தை அடைய விரும்பும் பக்குவிகள் விடய ஆசைகளில்  முதலாவதான மண்ணாசை நனவில்கூட இருத்தல்கூடாது என்று பெருமான் கூறுகின்றார்கள் .
எப்படி என்றால் ,

ஆறறிவு தேகம் கொடுத்து இப்புவியில் வாழப்பிறந்த ஒரு ஜீவருக்கு ,

அறம் பொருள் இன்பம் வீடு என்ற நூற்பொருளின்படி
ஒருவர் இல்லறத்தை நடத்துவதற்கு ஒரு அகமாகிய இல்லம் அவசியம் வேண்டும் என்றும் ,

அறவழியில் உழைத்து அதனால் பொருளை ஈட்டி  ,அதில் வரும் இன்பத்தைக் கொண்டு வாழ்வு நடத்த நன்செய் புன்செய் நிலம் தேவை என்றும் தனது வாழ்வியல் ஆதாரத் தேவைக்காக மட்டுமே ஆசைக்கொண்டு

" போதும்" என்ற மனத்தோடு தங்களது குடும்பத்தை அறவழியில் நடத்தி வரவும்,
நேர்மையான உழைப்பில் தமது தேவைக்கு மேல் வருகின்ற வருமானத்தில்

முன்வினையாலும் அஜாக்கிரதையினாலும் தற்சுதந்திரமில்லாமல் அருள்நியதியின் தணடனைப்படி எந்த வகையிலும் ஆதாரமற்று வறுமையில் இருப்பவர்களுக்கு வாழ்வாதரத்தை கொடுத்து உதவியும் வாழ்தல் வேண்டும் .

அப்படி இல்லாமல் காமம்,
குரோதம்,
லோபம் ,
மோகம்,
மதம்,
மார்ச்சரியம் என்னும் செயற்கை குணங்களின் வயப்பட்டு,

மண்ணாசைப்
பெருகி பலவீடுகள் மனைகள் நிலங்கள் என்று பேராசையுடன் வாங்கி சேர்த்துவைத்து ,
தன்னைச் சார்ந்து உள்ளவர்களுக்கும்,
தன்னிடம் யாசிப்பவர்களுக்கும்,

ஆதாரமற்ற வறியவர்களுக்கும் கொடுக்கும் குணம் ஏதும் இல்லாமல் லோபியாய் வாழும்போது ,
தான் சேர்த்து வைத்த பொருளினால் தனக்கே முடிவில் கேடு உண்டாகும் என்பதையும்
அறியும் அறிவு விளக்கமில்லாமல்,

நமது பிள்ளைகளையும்
எதிர்காலத்தில் உழைத்து வாழ்ந்து அதில் பொருள் ஈட்டவேண்டும் என்ற நிலையில் வைக்காமல்,

தான் சேர்த்து வைத்த பொருளைக்கொண்டு ஊதாரிதனமாக சுற்றித்திரியச் செய்து ,
சுகபோகத்தை அனுபவிக்கச்செய்து வாழ்வியல் கஷ்டங்கள் எப்படிப்பட்டவை என்பதை பட்டு தெரியவிடாமலும்,

அதனால் பெறக்கூடிய அனுபவங்களையும் பெறவிடாமல் நாமே அவர்களுக்கு காலம் சொல்லிக்கொடுக்கும் அனுபவப் பாடத்தை கற்க விடாமல் கெடுத்து விடுகின்றோம் .

ஒவ்வொருவரு ஆன்மாவும் உழைத்து வாழவேண்டும் என்று கருதி தனது பிள்ளைகளுக்கு உழைப்பின் அருமையை தெரியவைத்து அவர்கள் ஈட்டும் பொருளில் அவர்களை வாழவைக்கவேண்டும் ,

குடும்பத்தார் அனைவருக்கும் சேர்த்து  தலைமுறைக்கும் நாம்பொருளை தேடிவைத்துவிட்டு பிள்ளைகள்  வீணாகுவதற்கு நாமே காரணமாய் இருத்தல் கூடாது.
இது சாதாதன இல்லறத்தார்கள் அறிவது.

அதுவே சுத்தசன்மார்க்க லட்ஷியம் உள்ள பக்குவ ஜீவர்கள்,

பொருளிலே இவ்வுலகம் இருப்பதை உணர்ந்தும் ,
அருளுலகம் அடைவதற்கு இப்பொருளுலகப் பற்று கூடாது என்பதையும் உணர்ந்து ,

இவ்வுலகப் பொருள்களில் நிராசைக்கொண்டு, மண்ணாசையை  எந்தச் சூழலிலும் மனத்தினால் கூட நினைத்திடாமல்

இப்பிரபஞ்ச பொருள்கள் எல்லாம் இவ்வுலகில் நாம் வாழ்வதற்கு ஆதாரமாக இறைவன் கொடுத்த வாழ்வாதரப் பொருள்கள் என்று உணர்ந்தும் ,

எல்லாப் பொருள்களும் ஆண்டவருடைய உடைமைகள் என்றும் அவர் ஒருவருக்கே உரிமையுடையது என்றும்  கருதி,

இவ்வுலகில் நம்முடைய பொருள்கள் என்று  ஒரு துரும்புகூட  இல்லை என்பதை நன்றாக உணர்ந்தும் ,

இன்று எது நம்முடையதுவோ ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது,

மற்றொருநாள் அது வேறொருவருடையதாகிறது  என்ற உலகியல் உண்மையை அறிந்தும்,

எந்த வகையிலும் "பொருளால் இருளுரும்" என்ற உண்மையை உணர்ந்து

மூவாசைகளில் முதல் ஆசையாகிய
மண்ணாசை என்கின்ற "மானிடப் பேயின் " நினைப்பே இல்லாமல் வாழ்ந்திடல் வேண்டும் 🔥🙏.

பதிவு விளக்கம் பெறவேண்டி நீண்டதாய் இருப்பதனால் இதனுடைய தொடக்கமாகிய  பெண்ணாசை மற்றும் பொன்னாசையைப் பற்றி அடுத்தடுத்தப் பதிவுகளில் காண்போம்.
தயவான நன்றிகள் 🔥🙏
....வள்ளல் மலரடி வாழ்க ! வாழ்க 🔥🙏
....பெருமான் துணையில் 🔥🙏
....வள்ளல் அடிமை 🔥🙏
....வடலூர் இரமேஷ் ;

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு