அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

புதன், 4 ஏப்ரல், 2018

சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ?

சுத்த சன்மார்க்கம்  என்ன என்பதை வள்ளலார் தெளிவு படுத்துகின்றார் !

சுத்த சன்மார்க்கம் என்பது தனி மார்க்கம் அல்ல ! எல்லா மார்க்கங்களையும் கடந்து உயர்ந்த நிலையில் உள்ளது சுத்த சன்மார்க்கம்.

உயர்ந்த்து என்றால் ? எவ்வகையில் உயர்ந்த்து என்பதை சிறு விளக்கத்தின் மூலம் தெரிவித்தால் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்..

நம்மிடம் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டு உள்ளது என்று வைத்துக் கொள்ளுங்கள்.அதை மாற்றினால் அதிலிருந்து .1000..500..200..100..50..20..10 ..5..2..1 என்ற ரூபாய் நோட்டுகளாக மாற்றலாம்.

மேலே கண்ட ரூபாய்  நோட்டுகளில் ஒன்றிலாவது  2000 ஆயிரம் மதிப்பு இருக்குமா என்றால் இருக்காது..

அதேபோல் தான் சுத்த சன்மார்க்கத்தின் உள்ளே எல்லா மார்க்கங்களும் அடங்கி இருக்கின்றன.

மற்ற மார்க்கங்களில் சுத்த சன்மார்க்கம் உள்ளதா என்றால் இல்லை..

சுத்த சன்மார்க்கம் என்பது சாதி.சமயம்.மதங்களைக் கடந்த்து என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்...

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்.!

 திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்
சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு

வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து
வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்

பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்
பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே

கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்
கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே. !

என்னும் பாடல் வாயிலாக திருநெறி ஒன்றே அதுதான் சமரச சன்மார்க்க  சிவநெறி என்று உணர்ந்து சேர்ந்திடுமின் ஈண்டு என்கிறார்.

திருநெறி என்றால் எல்லாவற்றையும் விட.சுத்த சன்மார்க்கம்  உயர்ந்த நெறி..எனவே இதில் அனைத்து உலக மக்களும் சேர்ந்து பயன் அடையுங்கள் என்கிறார் வள்ளலார்....

சாகாக்கல்வி யைத் கற்றுத் தரும் மார்க்கம் தான் சுத்த சன்மார்க்கம் .

சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன என்பது தெரியாமல்.சன்மார்க்கத்தில் உள்ளவர்கள் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு கருத்தை சொல்லி மக்களை குழப்ப வேண்டாம் என்று தயவு செய்து கேட்டுக் கொள்கிறேன்...

வள்ளலாரே பல பாடல்களிலும் உரைநடைப் பகுதியிலும் தெளிவாக விளக்கி உள்ளார்..
மேலோட்டமாக படிக்காமல் ஊன்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

வள்ளலார் சொல்லி உள்ள சில குறிப்புக்கள் அனுப்புகிறேன் படியுங்கள்....

சுத்த சன்மார்க்கந்தான் யாதெனில்:

சுத்தம் என்பது ஒன்றுமல்லாதது. சுத்தம் என்பது சன்மார்க்க மென்னுஞ் சொல்லுக்குப் பூர்வம் வந்ததால், மேற்குறித்த சமயம் மதம் அனுபவங்களைக் கடந்தது.

சத்மார்க்கம் என்னும் பொருட்கு அர்த்தம் நான்கு வகை: அஃது பூர்வாதி உத்தரோத்தர பரியந்தம்.

இதன் முக்கிய லட்சியம் சுத்த சன்மார்க்க அனுபவ ஸ்தானமாகிய சுத்த சிவ துரியாதீத நிலைபெறில் விளங்கும். ஏகதேசத்தில் ஒருவாறு பூர்வம் என்பதற்குப் பொருள்:

சிருஷ்டியாதி அனுக்கிரக மீறாகச் செய்யும் பிரமாதி சதாசிவ மீறாகவுள்ள பஞ்ச கிருத்திய கர்த்தர்களில் ஒவ்வொரு கிருத்தியத்தின் விரிவு ஐந்தாக விரிந்த கர்த்தர் பேதம் இருபத்தைந்தாக விரிந்த மஹாசதாசிவாந்த அனுபவ காலத்தை அறுபத்து நாலாயிரத்தில் பெருக்கிய கால அளவு எவ்வளவோ அக்கால அளவு சுத்த மகா சதா சிவானுபவத்தைப் பெற்றுச் சுத்த தேகியா யிருப்பது.

 சத்தென்பது பரிபாஷை அது அனந்த தாத்பர்யங்களைக்கொண்டு ஓர் வாக்கிய பதமாய் நின்றது. மார்க்கம் என்பது யாதெனில்:

துவாரம், வழி, வழியென்பது சத்தென்னும் பொருளின் உண்மையைத் தெரிவிக்கிற மார்க்கம். ஆதலால், எவ்வகையினும் உயர்வுடையது பாவனாதீத அதீதம், குணாதீதஅதீதம், லட்சியாதீதஅதீதம், வாச்சியாதீதஅதீதம் ஆகியது சுத்த சன்மார்க்கம்.

மேற்படி மார்க்கத்தின் ஏகதேசம் அடியிற் குறிக்கும் அனுபவங்கள்: எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வகைத் தடையும் வாராத சுத்தமாதி ஞானதேக சித்தியும், அண்ட பிண்ட தத்துவங்களைச் சுதந்தரத்தில் நடத்தும் தனிப்பெரும் வல்லமையும், ஏமரவுப்பிய பிரேதஜீவிதாதி சித்தியும், வஸ்துப் பிரத்யக்ஷானுபவ சித்தியும் ஆகிய இவற்றை ஒருங்கே அடைவது மேற்குறித்த மார்க்கத்தின் முடிபு.

ஒருவாறு.
சத் என்னும் சொல் பரிபாஷை என்பதற்குக் குழூஉக் குறியாக இதன் கீழ்வரும் சில மந்திர வாசக பதவர்ணாதிகளை உணர்க. காரண மாத்திரமாய் விளங்கா நின்ற விந்து நாத முதலியனவும், காரிய காரண மாத்திரமாய் விளங்கா நின்ற அம், அங், சிங், வங், மங், சிவா, வசி, ஓம் முதலியவும், காரிய மாத்திரமாய் விளங்கா நின்ற ஹரி, சச்சிதானந்தம், பரிபூரணம், ஜோதியுட் ஜோதி, சிவயவசி, சிவயநம, நமசிவய, நாராயணாயநம, சரவணபவாயநம முதலியவும் இவ்வண்ணம் குறித்த பரிபாஷைகளின் உண்மை ஆன்ம அனுபவத்திலும் வகர தகர வித்தையிலும் விளங்கும்.

மேலும், மேற்குறித்த வண்ணம் தத்துவங்களை உபாசித்தும், அர்ச்சித்தும், தத்துவாதீதாதீதத்தைத் தியானித்தும், இடையில் ஜபித்தும், கரணலயமாகச் சமாதி செய்தும், தத்துவச் சேட்டைகளை அடக்காநின்ற விரதமிருந்தும், சாதாரண யோகபாகத்தில் மூச்சடக்கியும் சாதகர்கள் மேற்குறித்த வண்ணம் செய்வார்கள்.

சாத்தியர்கட்கே கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிஷ்டைகூடல் என்னும் நான்கும் கடந்து அவர்கள் ஆருடராக நிற்பதால் சாதனமொன்றும் வேண்டுவதில்லை. மேற்படி சாத்தியர்களே சுத்ததேகிகள். அவர்கள் அனுபவத்தை விரிக்கில் பெருகும். இன்னும் நிறைய விளக்கம் தந்துள்ளார் வள்ளலார்.

சுத்த சன்மார்க்கம் என்பது தனி மார்க்கம் அல்ல..எல்லா மார்க்கங்களையும் தன் உள் அடக்கி வைத்துக் கொண்டு உயர்ந்து நிற்கிறது... அதனால் தான் சாதி.சமயம்.மதங்களைக் கடந்த்து சுத்த சன்மார்க்கம்  என்பார் வள்ளலார்...

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை  முழுமையாக கடைபிடித்தால் எல்லாம் வெளிப்படையாக விளங்கும்...

வள்ளலார் நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் என்கின்றார்.நாம் ஏன் கவலைப்பட வேண்டும். நாம் வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டுவோம்..

வள்ளலார் சுத்த சன்மார்க்கத்திற்கு என்று  சட்டதிட்டங்களையும் தீர்ப்புகளையும் திருஅருட்பாவில் தெளிவாக தந்துள்ளார். வழங்கி  கொண்டே உள்ளார்.

 நாம் தண்டனைக்கு உள்ளாகாமல் சுத்த சன்மார்க்கியாய் வாழ்ந்து  மரணத்தை வென்று மற்றவர்களுக்கு வழி காட்டுவோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக