எங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.
அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !
▼
வெள்ளி, 1 டிசம்பர், 2017
ஜீவ காருண்யம் ஏன் செய்ய வேண்டும் ?
ஜீவ காருண்யம் ஏன் செய்ய வேண்டும் ?
எல்லாச் சீவர்களும் கடவுள் இயற்கையுண்மை ஏகதேசங்களாதலாலும் அவரவர் இடங்களிற் கடவுள் அருள்விளக்கம் விளங்குதலாலும், சமுசாரிகளுள் தமது தாய் தந்தை புணர்ந்தோர் மக்கள் துணைவர் முதலிய குடும்ப மட்டில் பசியாற்றிக் கொள்ளத் தக்க அற்பசக்தியுள்ள சமுசாரிகள் தாய் பிதா மக்கள் துணைவர் முதலிய குடும்பத்தாரைப் பசியினாற் பரிதபிக்க விட்டு அயலார்க்குப் பசியாற்றத் தொடங்குதலும்,கூடாது.
தம்மிடத்துப் பசித்து வந்த அயலாரை அந்தப் பசியால் பரிதபிக்க விட்டுத் தம் குடும்பத்தார் பசியை யாற்றத் தொடங்குதலும், கடவுளருளுக்குச் சம்மதமல்ல. என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆதலால், தமது குடும்பச் செலவைக் கூடியமட்டில் சிக்கனஞ் செய்து இருதிறத்தார் பசியும் நீக்குதல் வேண்டுமென்றும்; அற்பசத்தியினுங் குறைபட்டுத் தமது குடும்பம் மட்டிலும் பசியாற்றுவிப்பதற்குப் பிரயாசையால் மிகச் சிறிய முயற்சியுடைய சமுசாரிகள் தமது குடும்ப மட்டிலாவது பசியாற்றுவித்துப் பாதுகாக்க வேண்டும் .
தம்மிடத்துப் பசித்துவந்த அயலார் விஷயத்தில் மிகவும் தயவுடையவர்களாகி அவர் பசியை மற்றொருவரைக் கொண்டாவது ஆற்றுவிப்பதற்குத் தக்க முயற்சி யெடுத்துக் கொள்ளவேண்டு மென்றும்; இயல்புள்ள பிரபல சமுசாரிகள் தங்கள் தங்கள் வருவாய்க்குத் தக்கவரையில் தாய், பிதா, புணர்ந்தோர், மக்கள், துணைவர், உறவினர், சினேகர், அதிதிகள், பெரியர், அடிமைகள், அயலார், பகைவர் முதலியவர்களுக்கும்,
தமது குடும்பத்திற்குச் சகாயமாகத் தேடிய பசு, எருது, எருமை, ஆடு, குதிரை, தாவர முதலிய பிராணிகளுக்கும், பசியை ஆற்றுவித்துத் திருப்தியின்பத்தை உண்டுபண்ண வேண்டுமென்றும்;
விவாகம் புத்திரப்பேறு தெய்வம் படைத்தல் முதலிய பலவகைச் செய்கைகளில் வேறு வேறு சடங்குகளும் வேறு வேறு வினோதங்களும் வேறு வேறு பெருமைப்பாடுகளும் குறித்துப் பொருட் செலவு செய்தலை அமைத்து, விவாக முதலிய அந்தந்தச் செய்கைகளிலும் பசித்த சீவர்களுக்குப் பசியை ஆற்றுவித்து இன்பத்தை யுண்டுபண்ணுகின்ற சிறப்பினையே செய்யவேண்டுமென்றும், தெரிந்து பசியாற்றுவிக்க வேண்டும்.
அப்படிச் செய்யில் பசித்தவர் பசி நீங்கி அடைந்த இன்பத்திலும் அனேக மடங்கு அதிகமான இன்பத்தைத் தாம் அடைவார்களென்றும் சத்தியமாக அறியவேண்டும்.
நாம் அடையவேண்டிய இன்பத்தை.ஜீவ காருண்யத்தால் மட்டுமே அடையவேண்டும்.அடையமுடியும்.இதுவே கடவுள் சம்மதம் என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார்..
ஜீவ காருண்யம் ஏன் செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்டீர்களா.....
அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக