அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

மன்னிக்க வேண்டுகிறேன் இறைவா...

மன்னிக்க வேண்டுகிறேன் இறைவா....

இந்தப் பூவுலகில் நாம் படும் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஒரு வகையில் நாமே காரணம். முந்தைய பிறவிகளில் நாம் செய்த பாவங்களின் பலன்களை இந்த பிறவியில் அனுபவிக்கிறோம். அப்படி என்றால் "நாம் செய்த பாவங்களுக்கு விமோசனமே கிடையாதா?" என்றால்... "உண்டு!!".

செய்த தவறுகளுக்கு கண்ணீர் மல்க இறைவனிடம் மன்னிப்பு கேட்டு, இனி பாவமென்ற ஒன்றை செய்யமாட்டேன் என்று அவனிடம் உறுதியளித்தால் அவரவர் செய்த பாபங்களின் தன்மைக்கேற்ப அவர்களது கர்மாவின் கடுமை குறைக்கப்படும்.

உதாரணத்திற்கு ஒரு பெரிய மரத்தை கட்டி இழுத்துச் செல்வது தான் உங்களுக்கு தண்டனை என்று வைத்துக்கொள்வோம்....  நீங்கள் அதை அனுபவித்தே தீரவேண்டும் என்கிற விதி இருக்கும்போது, இறைவனிடம் மன்னிப்பு கேட்டால், அந்த தண்டனையின் கடுமை சற்று குறைக்கப்படுகிறது. எப்படி? அதே மரத்தை தண்ணீரில் இழுத்து செல்லவேண்டும் என்று தண்டனை மாற்றியமைக்கப்படுகிறது. தற்போது அது சுலபமல்லவா? மரத்தை தண்ணீரில் இழுத்துச் செல்வதற்கும் தரையில் இழுத்துச் செல்வதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

பாபம் செய்ததால் தான் நாம் இந்த மானிடப் பிறவி எடுத்திருக்கிறோம். சென்ற ஜன்மத்திலோ ஏன் இந்த ஜென்மத்திலோ கீழ்கண்ட பாவங்களுள் சிலவற்றையோ பலவற்றையோ தெரிந்து தெரியாமலோ செய்திருப்போம்.

முதலில் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்....

எந்தப் பிறவியில் என்ன பாவம் செய்தேன்?
என் இறைவா!

நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ?
வழிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ?
தானம் கொடுப்போரை தடுத்து நின்றேனோ?
கலந்த சிநேகரை கலகம் செய்தேனோ?

மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்தேனோ?
குடி வரி உயர்த்தி கொள்ளை கொண்டேனோ?
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ?
தருமம் பாராது தண்டம் செய்தேனோ?

மண்ணோரம் பேசி வாழ்வளித்தேனோ?
உயிர்கொலை செய்வோர்க்கு உபகாரம் செய்தேனோ?
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ?
பொருளை இச்சித்து பொய் சொன்னேனோ?

ஆசை காட்டி மோசம் செய்தேனோ?
வரவு போக்கு ஒழிய வழி அடைத்தேனோ?
வேலையாட்களுக்கு கூலி குறைத்தேனோ?
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ?
இரப்போர்க்கு பிச்சை இல்லை என்றேனோ?

கோள் சொல்லி குடும்பம் கலைத்தேனோ?
நம்பியோரை நட்டாற்றில் நழுவ விட்டேனோ?
கலங்கி ஒளிந்தோரை காட்டி கொடுத்தேனோ?
கற்பிழந்தவளை கலந்திருந்தேனோ?

காவல் கொண்டிருந்த கன்னியரை அழித்தேனோ?
கணவன் வழி நிற்போரை கற்பழித்தேனோ?
கருப்பம் அழித்து களித்திருந்தேனோ?
குருவை வணங்க கூசி நின்றேனோ?

குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ?
கற்றவர் தம்மை கடுகடுத்தேனோ?
பெரியோர் பாட்டில் பிழை சொன்னேனோ?
பட்சியை கூண்டில் பதைக்க அடித்தேனோ?

கன்றுக்கு பாலூட்டாது காட்டி வைத்தேனோ?
ஊண் சுவை உண்டு உடல் வளர்த்தேனோ?
கல்லும், நெல்லும் கலந்து விற்றேனோ?
அன்புடையோர்க்கு துன்பம் செய்தேனோ?

குடிக்கின்ற நீருள்ள குளம் தூர்த்தேனோ?
வெய்யிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழித்ததேனோ?
பகை கொண்டு அயலார் பயிரழித்தேனோ?
பொது மண்டபத்தை போய் இடித்தேனோ?

ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ?
சிவனடியாரை சீற வைத்தேனோ?
தவம் செய்தோரை தாழ்வு சொன்னேனோ?
சுத்த ஞானிகளை தூஷணம் செய்தேனோ?
தெய்வம் இகழ்ந்து செருக்கு அடைந்தேனோ?

என்ன பாவம் செய்தேனோ? இன்னது என்று அறியேன்.
என் இறைவா...
உய்யும் வழியும் உண்டோ - உணர்த்திடுவாய்
உலகெலாம் காத்திடும் உமையொரு பாகா!
தாயும், தந்தையும் நீ ஆவாய்
தனயன் என்னை மன்னித்தருள் செய்வாய்...

"ஆம்" என்று உங்கள் உள் மனம் கூறினால், இனியாவது அவற்றை தவிர்த்திடலாமே! எஞ்சிய நாட்களில் உத்தமனாக வாழ்ந்து, கருணைக்கடலாம் இறைவனின் மன்னிப்பை பெற்று நல் வாழ்வை அடைந்திடலாம்.

நீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக