அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

ஞாயிறு, 7 மே, 2017

கொடி கட்டிக் கொண்டோம் !

கொடி கட்டிக் கொண்டோம் !

வள்ளலார் கொடி கட்டிக் கொண்டோம் என்கின்றார் !

கொடி என்றால் என்ன ? கொடி என்றால் உயிர் காற்று  என்பதாகும் .உயிர் காற்று  இயங்காமல் இருக்க கொடிக் கட்டிக் கொண்டார் .உயிர் இயங்க பிராண வாய்வு  என்னும் காற்று வேண்டும்.இந்த உலகில் பிராணவாய்வு என்னும்  காற்று இல்லை என்றால் உயிர் இயங்காது.

அந்த  பிராணவாயுவை நிறுத்தி அமுதம் என்னும் அமுதக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்து விட்டார் வள்ளலார்  .அமுதக் காற்று தான்  ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றும் ஆற்றல்(சத்தி ) உடையதாகும்.அருளும் பொருளும் பெற்றேன் என்கின்றார் .அருள் என்பது இறைவனிடம் பெற்றுக் கொள்கின்றார் .பொருள் என்பது மாயையிடம் பெற்றுக் கொண்ட  அமுதக் காற்று என்பதாகும்  உடற் பிணியையும் உயிர்ப் பிணியையும் நீக்கும் அருள் மருந்தை உண்டு அருள் உடம்பாகிய ஒளி உடம்பைப் பெற்றுக் கொள்கின்றார் .

உடற் பிணி அனைத்தையும் ,உயிர்ப் பிணி அனைத்தையும்,
அடர்ப்பறத் தவிர்த்த அருட் சிவ மருந்தே !

மரணப் பெரும் பிணி வாரா வகை மிகு
கரணப் பெரும் திறல் காட்டிய மருந்தே !

என்னும் அகவல் வரிகளில் தெளிவாகத் தெரியப் படுத்துகின்றார் .

கொடி கட்டிக் கொண்டோம் என்பது !

இதுகாறும் தெயவத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது அசுத்த மாயா காரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள் .சுத்த மாயா காரிகளாகிய தெரிந்த பெரியோரும் இல்லை.சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால் அனுபவித்து அறியாத அனுபவமும்,கேட்டு அறியாத கேள்வியும் ,நாம் கேட்டு இருப்போம் .மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்து இருப்பார்கள்.ஆதலால் கேட்டு அறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே .ஆதலால் இத்தருணமே ---இக்காலமே சன்மார்க்க காலம் ....என்கின்றார் மேலும்

இதற்குச் சாட்சியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது .அக்கொடி உண்மை யாதெனில் ;-- நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி இருக்கின்றது .அந்த நாடி நுனியில் புருவ மத்தியின் உட் புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது.--அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்.மேற்புறம் மஞ்சள் வர்ணம், அச்சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும்,இருக்கின்றது.இக்கொடி நம் அனுபவித்தின் கண் விளங்கும் .இவ் வடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளி முகத்தில் அடையாள வர்ணமாக கொடி கட்டியது .இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின் கண் தோன்றும்.என்பதை மக்களுக்குத் தெரிவித்து .அதற்கு அடையாளமாக வெளிப் புறத்தில் கொடி கட்டி பேருபதேசம் செய்கின்றார் .

கொடியின் வண்ணம் !

அடிப்புறம் வெள்ளை வர்ணம்,மேற்புறம் மஞ்சள் வர்ணம் என்கின்றார் .அடிப்புறம் என்றால் எது ? மேற்புறம் என்றால் எது ?

அதற்கு ஓர் உதாரணம் ;--ஒரு  கோழி முட்டையை எடுத்துக் கொள்ளுங்கள் அதை அவித்து உடைத்துப் பாருங்கள்..வெள்ளை வர்ணம்,மேற்புறம்,மஞ்சள் வர்ணம்.. கீழ் புறம்  என்பது மஞ்சள் கருவின் மத்தியில் ஆன்மா இருக்கும் இடமாகும்.அதன் கீழ் உள்ளது மஞ்சள் வர்ணம்,மேல் என்பது வெள்ளை வர்ணம் .அதேபோல் நமது ஆன்மாவில் இரண்டு வர்ணம் உள்ளது .

ஆன்மா மஞ்சள் வர்ணம் ...உயிர் வெள்ளை வர்ணம் .என்பதாகும் .உடம்பை இயக்கிக் கொண்டு இருந்த உயிரை நிறுத்தி விடுகின்றார் வள்ளலார் .

அதாவது நமது நாபி முதல் புருவ மத்தி ஈறாக ஒரு நாடி ஏறவும் இறங்கவும் இருக்கின்றது என்பது .அந்த நாடியின் வழியாக பிராண வாய்வு என்னும் காற்று ,உடம்பை இயங்குவதற்கு இடைவிடாது செயல் பட்டுக் கொண்டு இருக்கின்றது .அவற்றை நிறுத்த வேண்டுமானால். அருள் அமுதம் வேண்டும்.அந்த அருள் அமுதத்தை உடம்பு முழுதும் செலுத்த வேண்டும் என்றால் அமுதக் காற்று வேண்டும் ..அமுதக்  காற்றினால் அருள் அமுதத்தை
உடம்பு முழுதும் நிறைப்பி விடுகின்றார் வள்ளலார் ..

அதன்பின் பஞ்ச பூதமான அணுக்களால் பின்னப்பட்ட பூத  உடம்பு, அருள் நிறைம்பிய  ஒளி உடம்பாக மாற்றம் அடைகின்றது .அதன்பின் உயிர் இயக்கம் நின்று விடுகின்றது...நாபி முதல் புருவ மத்தியின் ஈறாக அதாவது இரண்டு வழியாக சென்று கொண்டு இருந்த  நாடியை ,நாடியின் உள்  வழியாக சென்று கொண்டு இருந்த பூதக் காற்றை நிறுத்தி விடுகின்றார் . அதுவே கொடி கட்டிக் கொண்டோம் என்பதாகும்.

ஜவ்வு என்பது சக்கரம் போன்றது அதன் வாயிலாக காற்று உள்ளேயும் வெளியேயும் தள்ளிக் கொண்டே இருக்கும்.அந்த ஜவ்வு வையும்  இயங்காமல் நிறுத்தி விடுகின்றார் .

கொடி கட்டிக் கொண்டோம் என்பது மரணம் இல்லாப் பெருவாழ்வு பெற்றுக் கொண்டேன் என்பதாகும்.

கொடி கட்டிக் கொண்டோம் என்று சின்னம் பிடி
கூத்தாடு கின்றோம் என்று சின்னம் பிடி
அடிமுடிக் கண்டோம் என்று சின்னம் பிடி
அருள் அமுதம் உண்டோம் என்று சின்னம் பிடி.!

வேகாத கால் உணர்ந்து சின்னம் பிடி
வேகா நடுத் தெரிந்து சின்னம் பிடி
சாகாத தலை அறிந்து சின்னம் பிடி
சாகாத கல்வி கற்றுச் சின்னம் பிடி

என்பதை ஆனந்த மேலீடு என்னும் தலைப்பில் பதிவு செய்கின்றார் .
கொடி கட்டிக் கொண்டபடியால் ,உடம்பிற்குள்  வெந்து செல்லும் காற்றை வேகாத அமுதக் காற்றாக மாற்றிக் கொண்டார்.சாகும் உயிரை சாகாத உயிராக மாற்றிக் கொண்டார் .இதுவே வள்ளலார் கண்ட சாகாக் கல்வியாகும்.

இவைதான் சாகாத் தலை,வேகாக் கால், போகப் புனல் என்பதாகும்...
இவைதான் சுத்த சன்மார்க்க மரபு என்கின்றார் .

சாகாத தலை இது வேகாத காலாம்
தரமிது காண் எனத் தயவு செய் துரையே
போகாத புனலையும்  தெரிவித்து என் உளத்தே
பொற்புற அமர்ந்த தோர் அற்புதச் சுடரே
ஆகாத பேர்களுக்கு  ஆகாத நினைவே
ஆகிய எனக்கு என்றும் மாகிய சுகமே
தா காதல் எனத் தரும் தருமா சத்திரமே
தனி நடராஜ சற்குரு மணியே !

அதாவது சாகாத்தலை என்பது .;-- காரணா அக்கினி அதாவது சுத்த உஷ்ணம் உண்டாக்கிக் கொள்வதாகும்.சுத்த உஷ்ணம் என்பது அணுக்களை வேதித்தல் செய்யும் அருள் உஷ்ணமாகும்.

வேகாக் கால் என்பது ;-- ஆன்மா என்பதாகும்... நாம் சுவாசிக்கும் அசுத்த காற்றை,ஆன்மாவினால்  சுத்தப் படுத்தி அதாவது  உஷ்ணத்தினால்  சுட்டு பிராண வாயுவை உள்ளே அனுப்புக்  கொண்டே இருக்கும்.அதுதான் வேகும் காற்று ...அந்த  வேகும் காற்றை நிறுத்தி  வேகாமல் செல்லும் அமுதக் காற்றை உள்ளே அனுப்புவதுதான் வேகாக் கால் என்பதாகும்.ஆன்மா அசுத்தக் காற்றினால் வேகாமல் இருக்க வேண்டும்.

போகாப் புனல் என்பது ;--- ஜீவன் என்னும் உயிராகும் ,புனல் என்பது தண்ணீர் என்னும் இரத்தம் என்பதாகும். அசுத்த இரத்தத்தை நிறுத்தி ,அமுதம் என்னும் சுத்த அமுத  நீரை உடம்பின்  உள்ளே செலுத்த வேண்டும் .அந்த அமுதமானது வெளியே செல்லாது .உடம்பின் உள்ளே நிறைந்து நிற்கும் தன்மை உடையது.

சுத்த உஷ்ணம், அமுதக் காற்று . அருள்அமுதம் என்னும் அமுத நீர் .இவை மூன்றும் சேர்ந்தால் தான் ஊனினை உருக்கி உள் ஒளியை பெருக்க முடியும்.

உடம்பை விட்டு உயிர் பிரிந்து வெளியே சென்று,  மீண்டும் உயிரானது வேறு  பிறப்பு எடுக்காமல் இருக்க வேண்டுமானால்,உடம்பையும், உயிரையும்,ஆன்மாவின் தன்மைக்கு  அருள்  ஒளியாக,அருள் உடம்பாக  மாற்ற வேண்டும்.என்பதுதான் சாகாக் கல்வி என்பதாகும்.

சாகாக் கல்வியில் தேர்ச்சி பெற்றால் தான் கொடி கட்டிக் கொள்ள முடியும் என்கின்றார் வள்ளலார் .இவற்றை அருள் அறிவாலும்,அருள்  அனுபவத்தாலும் அனுபவித்து அறிய வேண்டும் என்கின்றார் வள்ளலார்.

இப்போது  கொடி கட்டிக் கொண்டபடியால்,இனி  எல்லோருக்கும் நல்ல  அனுபவம் அறிவின் கண் தோன்றும் என்கின்றார் .இதற்கு சாட்சி நான்தான் என்கின்றார் .

இத்தருணம் அருட்பெருஞ்ஜோதி  ஆண்டவர் தெரிவித்தார் ,தெரிவிக்கின்றார்,தெரிவிப்பார் ..நீங்கள் எல்லாவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம்,ஜாக்கிரதையுடன் உண்மை அறிவாய் சத்விசாரம் செய்து கொண்டு இருங்கள்...இதற்குக் முக்கிய காரணமான தயவு இருக்க வேண்டும்.அந்த தயாவிற்கு ஏதுவான பொது ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமையும் கூட இருத்தல்  வேண்டும்.

இப்படி இருந்து கொண்டு இருந்தால் ஆண்டவர் வந்த உடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள் .எல்லோருக்கும் தாய்,தந்தை,அண்ணன்,தம்பி,முதலான ஆப்தர்கள்,செய்யப்பட்ட உதவி எவ்வளவோ அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும் படியான இடம் இந்த இடம் என்கின்றார் வள்ளலார் ..

இது சத்தியம் சத்தியம் சத்தியம் இஃது ஆண்டவர் கட்டளை என்று சத்தியம் வைத்து சொல்லுகின்றார் .

மற்று அறிவோம் எனச் சிறிது தாழ்ந்து இருப்பீர் ஆனால்
மரணம் என்னும் பெரும் பாவி வந்திடுமே அந்தோ
சற்றும் அதை உம்மாலே தடுக்க முடியாதே
சமரச சன்மார்க்க சங்கத்தவர்கள் அல்லால் அதனை
ஏற்றி நின்று தடுக்க வல்லார் எவ்வுலகில் எவரும்
இல்லை கண்டீர் சத்தியம் ஈது என் மொழி கொண்டு உலகீர்
பற்றிய பற்று அனைத்தினையும் மற்றற விட்டு அருள்
அம்பலப் பற்றே பற்றுமினோ என்றும் இறவீரே !

என்ற பாடல் வாயிலாக;--,உலகப் பற்றை எல்லாம் விட்டுவிட்டு அருள் பெறுவதற்கு உண்டான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அம்பலப் பற்றை பற்றினால் மட்டுமே  என்றும் அழியாத அருளைப் பெற்று மரணத்தை வெல்லலாம் என்பதை தெளிவாக தெரிவிக்கின்றார் .அதற்கு தகுதியான மார்க்கம் தான் வள்ளலார் தோற்றுவித்த  சமரச சுத்த சன்மார்க்கம் சத்திய சங்கம் என்கின்றார்.எனவே இதுவே சன்மார்க்க காலம் ...சாதி, சமயம்,மதம் போன்ற மற்றைய மார்க்கங்கள்  யாவும் ஒழிந்து சன்மார்க்கம் விளங்கும் காலம் என்கின்றார்..இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் கிடையாது என்று அழுத்தமாக பதிவு செய்கின்றார் .

நாம் வள்ளலார் காட்டிய  உண்மையான  சுத்த சன்மார்க்க அருள்  நெறியைக் கடைபிடித்து உண்மை ஒழுக்கத்துடன்,உண்மை இரக்கத்துடன்,உண்மை விசாரத்துடன் பின்பற்றி  வாழ்ந்து மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்ந்து மற்றவர்களுக்கும் வழி காட்டுவோம் ...

இன்னும் விரிக்கில் பெருகும் ;---

அன்புடன்  ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக