- வள்ளலார் பாடல்கள் !
- சாதி சமய மதங்களையும்,சமயம் மதங்களை படைத்தவர்களையும்,மேலும் சமய மதங்களைப் பின்பற்றி வாழ்பவர்களின் அறியாமையும் பற்றி வள்ளலார் பதிவு செய்த பாடல்களில் சிலவற்றை கீழே தந்துள்ளேன் !
- ஆன்மீகம் என்பது உண்மைக் கடவுளைத் தெரிந்து கொண்டு,அருளைப் பெற்று வாழும் வாழ்க்கையாகும்.
- எளிய தமிழில் வள்ளலார் மக்களுக்கு வழங்கி உள்ளார் .!
- நான்முகர்நல் உருத்திரர்கள் நாரணர்இந் திரர்கள்
- நவில்அருகர் புத்தர்முதல் மதத்தலைவர் எல்லாம்
- வான்முகத்தில் தோன்றிஅருள் ஒளிசிறிதே அடைந்து
- வானகத்தும் வையகத்தும் மனம்போன படியே
- தேன்முகந்துண் டவர்எனவே விளையாடா நின்ற
- சிறுபிள்ளைக் கூட்டம்என அருட்பெருஞ்சோ தியினால்
- தான்மிகக்கண் டறிகஎனச் சாற்றியசற் குருவே
- சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்
- விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்
- ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி
- உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே
- ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர்
- எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தே
- தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்
- வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்
- சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
- என்ன பயனோ இவை.
- இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்
- இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்
- மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்
- மகனேநீ நூல்அனைத்தும் சாலம்என அறிக
- செயல்அனைத்தும் அருள்ஒளியால் காண்கஎன எனக்கே
- திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே
- அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற
- ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- சதுமறை335 ஆகம சாத்திரம் எல்லாம்
- சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ
- விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா
- வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்
- பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்
- பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்
- அதுஇது என்னாமல் ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்
- பவநெறி இதுவரை பரவிய திதனால்
- செந்நெறி247 அறிந்திலர் இறந்திறந் துலகோர்
- செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ
- புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்
- புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்
- தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில்
- உற்றகற் பனைகளும் தவிர்ந்தேன்
- வாடல்செய் மனத்தால் கலங்கினேன் எனினும்
- மன்றினை மறந்ததிங் குண்டோ
- ஆடல்செய் பாதம் அறியநான் அறியேன்
- ஐயவோ சிறிதும்இங் காற்றேன்
- பாடல்செய் கின்றேன் படிக்கின்றேன் எனக்குப்
- பரிந்தருள் புரிவதுன் கடனே.
- மதம்என்றும் சமயம்என்றும் சாத்திரங்கள் என்றும்
- மன்னுகின்ற தேவர்என்றும் மற்றவர்கள் வாழும்
- பதம்என்றும் பதம்அடைந்த பத்தர்அனு பவிக்கப்
- பட்டஅனு பவங்கள்என்றும் பற்பலவா விரிந்த
- விதம்ஒன்றும் தெரியாதே மயங்கியஎன் தனக்கே
- வெட்டவெளி யாஅறிவித் திட்டஅருள் இறையே
- சதம்ஒன்றும் சுத்தசிவ சன்மார்க்கப் பொதுவில்
- தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்
- கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
- கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்
- காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
- பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே
- பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே
- தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்
- தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
- நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே
- மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ
- விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே
- கால்வருணங் கலையாதே வீணில்அலை யாதே
- காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே
- மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற
- வயங்குநடத் தரசேஎன் மாலைஅணிந் தருளே.
- இருளான மலம்அறுத் திகபரங் கண்டே
- எல்லா உயிர்களும் இன்புற்று வாழ
- மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம்
- வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போகத்
- தெருளான சுத்தசன் மார்க்கம தொன்றே
- சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
- அருளான வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
- இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
- மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
- வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்
- தெருட்சாருஞ் சுத்தசன் மார்க்கநன் னீதி
- சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
- அருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
- சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
- ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
- அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
- நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
- நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
- வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
- மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.
- சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப
- நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் - ஓதுகின்ற
- பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம்
- வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.
- சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி
- நேத்திரங்கள் போற்காட்ட நேராவே - நேத்திரங்கள்
- சிற்றம் பலவன் திருவருட்சீர் வண்ணமென்றே
- உற்றிங் கறிந்தேன் உவந்து.
- குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
- கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்
- வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது
- மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்
- பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்
- புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்
- செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்
- சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.
- மதம்எனும்பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர் எல்லாம்
- மன்றிடத்தே வள்ளல்செயும் மாநடம்காண் குவரோ
- சதம்எனவே இருக்கின்றார் படுவதறிந் திலரே
- சாகாத கல்விகற்கும் தரம்இவர்க்கும் உளதோ
- பதம்அறியா இந்தமதவாதிகளோ சிற்றம்
- பலநடங்கண் டுய்ந்தேனைச் சிலபுகன்றார் என்றாய்
- சுதைமொழிநீ அன்றுசொன்ன வார்த்தைஅன்றோ இன்று
- தோத்திரஞ்செய் தாங்காங்கே தொழுகின்றார் காணே.
- மதியைக் கெடுத்து மரணம்எனும் வழக்கைப் பெருக்கி இடர்ப்படும்ஓர்
- விதியைக் குறித்த சமயநெறி மேவா தென்னைத் தடுத்தருளாம்
- பதியைக் கருதிச் சன்மார்க்கப் பயன்பெற் றிடஎன் உட்கலந்தோர்
- கதியைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே
- இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்
- கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே
- கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்
- நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய்
- ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்
- செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே
- சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே.
- கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்
- கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக
- மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்
- வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே
- உலைவறும்இப் பொழுதேநல் தருணம்என நீயே
- உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே
- சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- பொய்பிடித்தார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்
- பொதுநடங்கண் டுளங்களிக்கும் போதுமண வாளர்
- மெய்பிடித்தாய் வாழியநீ சமரசசன் மார்க்கம்
- விளங்கஉல கத்திடையே விளங்குகஎன் றெனது
- கைபிடித்தார் நானும்அவர் கால்பிடித்துக் கொண்டேன்
- களித்திடுக இனியுனைநாம் கைவிடோம் என்றும்
- மைபிடித்த விழிஉலகர் எல்லாரும் காண
- மாலையிட்டோம் என்றெனக்கு மாலையணிந் தாரே.
- பொருத்தமிலார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்
- பொதுநடங்கண் டுவந்துநிற்கும் போதுதனித் தலைவர்
- திருத்தமுற அருகணைந்து கைபிடித்தார் நானும்
- தெய்வமல ரடிபிடித்துக் கொண்டேன்சிக் கெனவே
- வருத்தமுறேல் இனிச்சிறிதும் மயங்கேல்காண் அழியா
- வாழ்வுவந்த துன்தனக்கே ஏழுலகும் மதிக்கக்
- கருத்தலர்ந்து வாழியஎன் றாழிஅளித் தெனது
- கையினில்பொற் கங்கணமும் கட்டினர்காண் தோழி.
106. சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென
ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி
ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி
58. சாதியு மதமுஞ் சமயமுங் காணா
ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி
ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி
791. மூவருந் தேவரு முத்தருஞ் சித்தரும்
யாவரும் பெற்றிடா வியலெனக் களித்தனை
யாவரும் பெற்றிடா வியலெனக் களித்தனை
- மதத்திலே சமய வழக்கிலே மாயை
- மருட்டிலே இருட்டிலே மறவாக்
- கதத்திலே மனத்தை வைத்துவீண் பொழுது
- கழிக்கின்றார் கழிக்கநான் உன்பூம்
- பதத்திலே மனத்தை வைத்தனன் நீயும்
- பரிந்தெனை அழிவிலா நல்ல
- பதத்திலே வைத்தாய் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- மதியைக் கெடுத்து மரணம்எனும் வழக்கைப் பெருக்கி இடர்ப்படும்ஓர்
- விதியைக் குறித்த சமயநெறி மேவா தென்னைத் தடுத்தருளாம்
- பதியைக் கருதிச் சன்மார்க்கப் பயன்பெற் றிடஎன் உட்கலந்தோர்
- கதியைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- குலத்திலே சமயக் குழியிலே நரகக்
- குழியிலே குமைந்துவீண் பொழுது
- நிலத்திலே போக்கி மயங்கிஏ மாந்து
- நிற்கின்றார் நிற்கநான் உவந்து
- வலத்திலே நினது வசத்திலே நின்றேன்
- மகிழ்ந்துநீ என்உளம் எனும்அம்
- பலத்திலே நின்றாய் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்
- சேர்கதி பலபல செப்புகின் றாரும்
- பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்
- பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்
- மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார்
- மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்
- எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- ஆடகப்பொற் சபைநடுவே நாடகஞ்செய் தருளும்
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- ஏடகத்தே எழுதாத மறைகளெலாம் களித்தே
- என்உளத்தே எழுதுவித்த என்உரிமைப் பதியே
- பாடகக்கால் மடந்தையரும் மைந்தரும்சன் மார்க்கப்
- பயன்பெறநல் அருளளித்த பரம்பரனே மாயைக்
- காடகத்தை வளஞ்செறிந்த நாடகமாப் புரிந்த
- கருணையனே சிற்சபையில் கனிந்தநறுங் கனியே.
- கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
- கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே
- உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே
- உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே
- விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க
- மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே
- எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்
- இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.
மேலே கண்ட பாடல்கள் போல் ஆயிரக் கணக்கான பாடல்களின் வாயிலாக சமய மதங்களையும் ,அவற்றைத் தோற்று வித்தவர்களையும் ,அவற்றை பின்பற்றுபவர் களையும் வள்ளலார் சாடுகின்றார் ..அதே உண்மையை நான் சொன்னால் என்மீது மக்கள் வருத்தபடுகின்றார்கள் ,எதிர்க்கின்றார்கள்.
வைத்தாலும் வைதிடுமின் வாழ்த்து எனக் கொண்டிடுவேன் மனம் கோனேன் மானம் எலாம் போன வழி விடுத்தேன்,பொய் தான் ஓர் சிறிது எனினும் புகலேன் நீவீர் எலாம் புனிதம் உறும் பொருட்டே என்பார் வள்ளலார் .
அதே பாணியைத் தான் நான் பின் பற்றுகிறேன்..எனக்கு யார் மீதும் வருத்தம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.நீங்கள் என்னுடைய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உடன் பிறப்புக்கள் என்பதை நான் தெளிவாக புரிந்து கொண்டு உள்ளேன். மெய்ப்பொருளின் உண்மையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே வள்ளலாரின் விருப்பம்.
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக