அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

வெள்ளி, 23 அக்டோபர், 2015

சாதனம் ஒன்றும் வேண்டாம் !

சாதனம் ஒன்றும் வேண்டாம் !

நம்முடைய துன்பம் நீங்குவதற்கும் ,இறைவன் அருளைப் பெறுவதற்கும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கும்...தியானம்,தவம்,யோகம்,விரதம்,வழிபாடுகள் போன்ற சாதனம் எதுவும் தேவை இல்லை.

அப்படி ஏதாவது ஒரு சாதனத்தை மற்றவர்கள் சொல்லியபடி கேட்டுச் செய்தால் அதனால் சிறு நன்மைகள் கிடைப்பது போல் தோன்றும்.

அதைக் கண்டு பல் இளித்து இறுமாந்து கெட்டுப்போக நேரிடும்.

ஆதலால் காலம் தாழ்த்தாது ,எல்லா உயிர்களையும் தன்னுடைய உயிர் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொண்டால் அதுவே பெரிய சாதனம்.

எல்லா உயிர்கள் இடத்தில் தயவும்,( ஜீவ காருண்யம் )ஆண்டவரிடத்தில் அன்புமே முக்கிய சாதனமாகும்.

மேலும் வள்ளல்பெருமான் சொல்லியது ''கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெருக மற்று எல்லாம் மருள் நெறி என கொள்ளல் வேண்டும்''

அந்தக் குணம் வந்தவன் எவனோ அவன்தான் முழுமையான அருளைப் பெற்றவன் ,அவனே சிறந்த மனிதன்.அவனே இறந்தவர்களை எழுப்புகின்ற வல்லமைப் பெற்றவனாகும்.

மரணத்தை வெல்லும் தகுதிப் பெற்றவன்.

அவனே ஆண்டவனை நேரில் கண்டவன். .அவனே ஆண்டவனும் ஆவான்.

ஒருவன் பிரார்த்தனை செய்ய வேண்டுமானால் அவனுக்காக மட்டும் செய்யக் கூடாது .

இந்த உலகில் உள்ள எல்லா உயிர்களும் நலமுடன் வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்ய வேண்டும்.அப்படிச்செய்தால் அதில் அவனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி விடுகின்றன.

இப்படித்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும்.;--

பாதி இரவில் எழுந்து அருளிப் பாவி ஏனை எழுப்பி அருட்
ஜோதி அளித்து என் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ் செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை
ஓத முடியாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே !

என்பதே பிரார்த்தனை சாதனம் என்பதாகும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக