3-2-2015 அன்று வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்.!
வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே
வந்தால் பெறலாம் நல்ல வரமே !
உயிர்களிடம் கொண்ட பெருங் கருணையால் ஒவ்வொரு பூச நட்சதரத்திற்கும் உயிர்கள் இன்பமுடன் வாழ்வதற்கு, உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் பாலித்துக் கொண்டு உள்ளார் .
ஒரு வருடத்திற்கு 14,பதினான்கு பூசம் வருகின்றது .அதிலே தை பூசம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது .அதனால் வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.ஏன் ? சிறப்பாக கொண்டாடப்படுகின்றது என்றால் .
அருட்பெருஞ் ஜோதி என்னும் இயற்கை உண்மைக் கடவுள் இந்த உலகில் நேரடியாக வந்து,இராமலிங்க வள்ளல்பெருமான் அவர்களின் ஆன்மாவில் அமர்ந்து அருளைப் பூரணமாகக் கொடுத்து ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றி மரணம் இல்லாப் பெருவாழ்வை கொடுத்த நாள் என்பதால் தைப்பூச ஜோதி தரிசனம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது .அதேப்போல் எல்லா உயிர்களும் பயன் அடைய வேண்டும் என்பதே வள்ளல்பெருமானின் சுத்த சன்மார்க்க கொள்கையாகும்
இறை அருள் !
உண்மையில் இறை அருளானது ஆன்மாவிற்கு , உயிர்,உடம்பு கொடுத்து இந்த உலகில் வாழ்வதற்கு வசதி செய்து கொடுத்துள்ளது.பலகோடி பிறப்புகள் எடுத்து இறுதியில் மனித தேகம் கிடைத்துள்ளது.அதனால் ஆன்மா உலக போகங்களில் இந்திரிய,கரண நுகர்ச்சியால் ஈடுபட்டு மண்ணாசை,
பொன்னாசை .,பெண்ணாசை ,என்னும் பற்றுதல்களால் சிக்கிக் கொண்டு உள்ளது .
அருள் என்பது ஆன்மாவில் இருந்தும், அவற்றை தெரிந்து கொள்ள முடியாமல் ,ஆணவம்,மாயை, மாமாயை, பெருமாயை, கன்மம் என்னும் ஐந்து மலங்கள் ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ளன.
ஆதலால் ..அவ்வாறு மனிதப் பிறப்பு எடுக்கின்ற உயிர்கள் தன்னை அறியாமல் உலகப் பற்றிலும் மனச் சுழற்சியிலும் வினை என்னும் செயல்பாட்டு வழியிலும் வீழ்ந்து அவத்தைக்கு உள்ளாகின்றது. என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
இறைவன் உயிர்களுக்கு பல இணைப்பையும் தணு கரணாதி புவன போகங்களையும் தத்துவங்களையும் சேர்த்து இப்புவியில் பிறக்கச் செய்கின்றார் .மனிதன் அவன் அறிவினால் உருவாக்கப்பட்டஒரு பொருளை அவன் எப்படி சுத்தம் செய்து தூய்மையாக்கி உபயோகப் படுத்துகின்றானோ அதேபோல், கருணைக் கடலாகிய கடவுள் தோற்றுவித்தல்,விளக்கம் செய்வித்தல்,துரிசு நீக்குவித்தல்,பக்குவம் வருவித்தல் ,அருள் செய்வித்தல்,ஆகிய ஐந்தொழில் வல்லபத்தால் ஆன்மாக்களை மறைத்துக் கொண்டு இருக்கும் மலங்களை நீக்கி விடுவார் என்பதை வள்ளல்பெருமான் தெளிவாக விளக்கிக் உள்ளார்.
ஆனால் மனிதனாக பிறந்தவன் அறிவு இருந்தும் தனக்கு உண்டாகும் பிணி,மூப்பு,மரணம்,துன்பம் என்னும் அவத்தைக் களுக்கு உள்ளாகி பிறந்து பிறந்து ,இறந்து இறந்து மீண்டும் பிறவிச் சூழலில் சிக்கி தவிக்கின்றார்கள் இதனால் தன்னை அறிதலையும்,தன்னைப் படைத்த தலைவன் என்னும் இறைவனைப் பற்றியும்,இறைவனால் கொடுக்கப்படும் அருள் ஆற்றலைப் பற்றியும், சிந்தனை இல்லாமல் தானாகவே பிறந்தது போலவும் தானே வாழ்ந்தது போலவும் அறியாமையால் வீழ்ந்து மடிகின்றான்.
அவ்வாறு வீழ்ந்து வாழ்கின்ற மனிதன் எதற்காக வாழ்கின்றோம் என்றே தெரியாமல் பயந்து சமய மதங்களில் சொல்லுகின்ற தத்துவ கடவுள்களின் மீது பற்று வைத்து சரியை கிரியைகளின் வழிகளில் சென்று ,எந்த பலனும்,பயனும் இல்லாமல் அழிந்து போகின்றான் ..
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக கடவுள் ஒருவரே என்ற உண்மையில் இருந்த மனிதன் .மத ஆச்சாரியர் களாலும் சமயத் தலைவர் களாலும் நிர்மாணிக்கப் பட்ட ஆலயங்களில் ஏகனாய் இருந்த கடவுளை அனேகனாய் உயிர் இல்லாத ஜடப்பொருளான பல உருவங்களை கற்பித்து ,மனித போக வாழ்க்கையில் உள்ளது போல் தெய்வங்களுக்கும் ,திருமணங்கள், ஊடல்கள்,பள்ளிஅறை,பூஜை போன்ற வைபவங்கள் வைத்து ஆராதனை செய்து பிண்ட லஷ்ணத்தை அண்டத்தில் காட்டினார்கள் .
அதனால் மனிதன் அகம் கருத்து, புறம் வெளுத்து வாழ்ந்து அற்ப இன்பமாயும் அதிக துன்பமாயும்,அனுபவித்து எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அழிந்து கொண்டே உள்ளார்கள் .
ஞான சபை !
மனித வாழ்க்கையில் அனைவரும் உண்மையான இறைவன் யார் ? என்பதை அறிந்து, அவரால் என்றும் அழியாத அருளைப் பெற வேண்டும்,என்பதற்காக வள்ளல்பெருமான் வடலூரில் 25-1-1872,ஆம் ஆண்டு சத்திய ஞான சபையைத் தோற்றுவித்து உள்ளார் .
வள்ளலார் சொல்லியுள்ளது ;--
கடவுள் வழிபாடு எவ்வாறு செய்வோம்,? கடவுள் திருவருள் என்நாளடைவோம் ? பிணி ,மூப்பு ,மரணம், துன்பம் முதலிய அவத்தைகள் எப்போது நீங்கும் ? என்றும் அழியாத பேரின்ப சித்தி பெருவாழ்வு எக்காலம் கிடைக்கும் ? என்று எண்ணி எண்ணி வழி துறை தெரியாமல் வருந்துகின்ற தருணத்தே களைப்பரிந்து உதவும் கருணைக் கடவுளே !
தேவரீர் நெடுங்காலம் பிணி மூப்பு,மரணம்,துன்பம் முதலாகிய அவத்தைகளால் துன்புற்றுக் களைப்படைந்து உள்ளோம்.அவ் அவத்தைகளில் இருந்தும் நீக்கிக் களைப்பையும் கலக்கமும் தவிர்த்து அழியாத பேரின்ப சித்தியை அடைவித்தல் பொருட்டாகவே பூர்வ ஞான சித்தி புரத்தின் வடபால்
பார்வதிபுரம் என்று குறிக்கப் படுகின்ற ''வடலூர்'' உத்தர ஞான சித்திபுரத்தில் யாம் ( அருட்பெருஞ்ஜோதி ) அளவு கடந்த நெடுங்காலம் சித்தி எல்லாம் விளங்கத் திருவருள் நடம் செய்வோம் என்றும் அது தருணம் இத்தருணமே என்றும்,
அப்பதியின் இடத்தே யாம் அருள் புரிதற்கு அடையானமாக ஓர் ''ஞான சபையை,காணுதல் வேண்டும் என்றும்.திருவருட் குறிப்பால் அறிவித்ததும் இன்றி அருள் உருவாகி அனைத்து உயிர்கள் இடத்தும் ,அகத்தும் புறத்தும்,அமர்ந்து அருளி யாதோர் தடைகளும் இன்றி அத்திரு ஞான சபையும் தோன்றி விளங்கச் செய்வித்தருளிய தேவரீர் பெருங்கருனையைக் கருதும் தோறும் பெருங் களிப்பு அடைகின்றோம்.என்று வள்ளல்பெருமான் தெரிவித்து உள்ளார்கள் .
உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நம் வள்ளல் பெருமானுக்கு திருக்குறிப்பால் அறிவித்ததை ,அவர் லஷியமாகக் கொண்டு வடலூர் பெருவெளிக்கு ''உத்திர ஞான சிதம்பரம் " என பெயரிட்டு அப்பெருவெளியில் 'சத்திய ஞாசபையை' அமைத்துள்ளார் .
அந்த சத்திய ஞானசபை எண்கோண வடிவமாகக் கொண்டதாகும்.எட்டுக் கதவுகளைக் கொண்டதாகும்.அதன் உள் பன்னிருகால் மண்டபம் ஒன்றும் நாற்கால் மண்டபம் ஒன்றும்,ஒன்றனுள் ஒன்றாக அமைக்கப் பட்டுள்ளன்.அழகிய யானைகள் கொண்ட எட்டு கைப்பிடிகளும் கூடிய படிக்கட்டுகளும் அதன் மத்தியின் நடுவே ''ஞான சிங்காதன பீடம்'' அமைத்து,ஒரு நிலைக் கண்ணாடி வைத்து அதன் உள்ளே அணையா தீபம் வைக்கப் பட்டுள்ளது.அதுவே ஆன்ம பிரகாசம் .என்பதாகும்.
மனித உடம்பின் தலைப் பாகத்தில் எண்கோண வடிவமாக உள்ள புருவ மத்தியில் உள் ஒளியாக உள்ளதுதான் ஆன்ம பிரகாசமாகும்.அந்த ஆன்ம பிரகாசமே ஜோதியாகவும்,அந்த ஆன்ம பிரகாசமாகிய ஜோதியை மறைத்துக் கொண்டு உள்ளதே மாயா திரைகள் என்பதை விளக்கவே இயற்கையின் விளக்கமாக சத்திய ஞான சபையில் ஏழு வண்ணத் திரைகளாகவும் அமைக்கப் பட்டுள்ளது .
அந்த கண்ணாடியில் இருந்து பிரதி பலிக்கும் பிரகாசமே ஜோதி வழிபாடாகும். அந்த பிரகாசத்தை ஏழு வண்ணத் திரைகளால் மறைக்கப்பட்டு உள்ளது தைப் பூசத்தன்று ஒவ்வொன்றாக நீக்கிய பிறகே ஜோதி தரிசனம் காட்டப்படுகின்றது .
உலகில் உள்ள எட்டுத் திக்கு மக்களும் சாதி,சமய,மத இன வேறுபாடுகள் இல்லாமல் வந்து ஜோதி தரிசனம் காண வேண்டும் என்பது வள்ளல்பெருமான் வகுத்து தந்த வழிபாடாகும்.
பாவனையாக காட்டப்படுகின்றது !
ஆன்மாவின் அகத்தே உள்ள அருளைக் காண வேண்டும் என்றால்,அஞ்ஞானமாகிய ஏழு திரைகளை நீக்க வேண்டும் என்ற அனுபவத்தைப் புறத்தே பாவனையாகக் காட்டுவதே சத்திய ஞானசபை ஜோதி தரிசனமாகும். வள்ளல்பெருமான் தான் கண்ட அனுபவத்தை வெளிப்படுத்தி உள்ளார் .
சத்திய ஞானசபை என்னுள் கண்டனன்
சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன் !
திருந்தும் உள்ளத் திருக்கோயில் ஞான
சித்திபுரம் எனச் சத்தியம் கண்டேன் !
நம் வள்ளல்பெருமான் அருட்பெருஞ்ஜோதி என்னும் உண்மைக் கடவுளைக் கண்டு அனுபவித்து மக்களுக்கு காட்டுவதற்காகவே ஜோதி தரிசனம் காட்டப்படுகின்றது.
நம் வள்ளல்பெருமான் இந்த மாயா மறைப்புத் திரைகளாகிய தத்துவ படலங்களை பற்றி அருட்பெருஞ்ஜோதி அகவலில் மிகவும் தெளிவாக விளக்கி உள்ளார் .
கரைவின் மாமாயைக் கரும் பெருந் திரையால்
அரைசது மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !
பேருறு நீலப் பெருந்திரை அதனால்
ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !
பச்சைத் திரையால் பரவெளி அதனை
அச்சற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !
செம்மைத் திரையால் சித்துறு வெளியை
அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !
பொன்மைத் திரையால் பொருளுறு வெளியை
அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !
வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை
அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !
கலப்புத் திரையால் கருதனு பவங்களை
அலப்புற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !
மேலே கண்ட ஏழு திரைகள் மனித ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ளன. .அதை விளக்கும் வகையில் வடலூரில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் கட்டப்படுகின்றது ,முதலில் நமக்குத் தெரிவது கறுப்புத்திரை ,அதற்குப்பின் நீலத்திரை ,அதன்பின் பச்சைத்திரை ,அதன்பின் சிவப்புத்திரை,அதன்பின் பொன்மைத் திரை ,அதன்பின் வெண்மைத் திரை,அதன்பின் இறுதியாக கலப்புத்திரை,இவ் ஏழு திரைகளையும் ஒவ்வொன்றாக நீக்கித் திரை மறைப்பை எல்லாம் நீக்கியபின் திரைக்குப் பின்னர் பிரதிட்டை செய்யப் பெற்றுள்ள கண்ணாடியில் அருட்பெருஞ் ஜோதி தரிசனம் காட்டப்படும் .
தைப்பூசத்தின் தெய்வீக சிந்தனையை சொல்லி மாளாது.சமய மதங்களில் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள எல்லாத் திருத்தலங்களிலும்,தைப்பூசம் மிகவும் சிறப்பான விழாவாக கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்ததே.
ஆனால் இவை எல்லாவற்றையும் விட மிகவும் சிறப்பானதொரு நிகழ்வு வடலூர் சத்திய ஞான திருத் தலத்திலே ''உத்திர ஞான சிதம்பரத்திலே ' நம் வள்ளல்பெருமானிடம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ''அருள் நடனம் '' புரிய எழுந்தருளி இருப்பதாக கூறி ஞான சபையை அமைக்குமாறு ஆண்டவர் திருவாய் மலர்ந்து அருளி உள்ளதை பெருமானார் திருஅருட்பாவில் தெளிவுப் படுத்தி உள்ளார் .இதுவே ஞானசபையில் நடைபெறுகின்ற தைபூசத்தின் தனிச்சிறப்பாகும்.
மேலும் தைப்பூசத் திருநாளை ''ஞான நிறைவு ''நாளாகவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எல்லா உயிர்களுக்கும் அருளை வழங்கி இன்பம் தரும் நாளாகவும் ,வள்ளல்பெருமான் திருவாய் மலர்ந்து அருளி உள்ளார் .
மேலும் சிறப்பு ''ஞான நிறைவு ''என்பது நம்முடைய ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் மலம் ஐந்தினையும் விளக்கி மானுட வடிவை மாற்றி சுத்த பிரணவ ஞான தேகம் என்னும் அழியாத மூவகைச் சித்தியான முத்தேக சித்தியைப் பெற்று ..ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றும் ஆற்றலைத் தரும் என்பதாகும்.
மேலும் எல்லா உயிர்களிலும் இறைவன் ஆன்ம ஒளியாக இயங்கிக் கொண்டு இருப்பதால், கொலையும் புலையும் தவிர்த்தவகளுக்கு மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் புரிவார் என்பதை மனித ஜீவர்கள் தெரிந்து கொண்டு கொலையும் புலையும் தவிர்த்து விட்டு ஜோதியை வழிபடவேண்டும்.என்பது வள்ளல்பெருமானின் அழுத்தமான கட்டளையாகும்.
தைப்பூச ஜோதி தரிசனத்தின் சிறப்பு !
தை மாதத்தில் பூச நட்சத்திரம் வருகின்ற தினம்,மிகவும் சிறப்பு வாய்ந்த தினமாகும்.அகரம் + உகரம் + மகரம் என்னும் ++ உடம்பு ,உயிர்,ஆன்மா மூன்றும் ஒன்றாக இணையும் நாளாகும்.
தை மாதத்தில் பூச நட்சத்திரம் வருகின்ற நாளில் சூரியன் உதிக்கின்ற நேரத்தில் சந்திரனும் வானத்தில் இருக்கும்.அப்போது ஞான சபையில் இருந்து அக்னியான ஜோதி காண்பிக்கப்படும்.அதாவது சூரிய ,சந்திர,அக்னி மூன்றும் ஜோதியுள் ஜோதியாக ,கிழக்கே சூரியனையும்,மேற்கே சந்திரனையும் மத்தியில் அக்கினியும் ஒரே நேர் கோட்டில் இயங்குவது அதாவது அவற்றை மக்கள் ஒரே நேரத்தில் வடலூரில் பார்ப்பது தனிச்சிறப்பாகும்.
சந்திரன் என்பது கரண அறிவு என்னும் மன அறிவு. --சூரியன் என்பது உயிர் அறிவு என்னும் ஜீவ அறிவு,--அக்னி என்பது உள் ஒளி என்னும் ஆன்ம அறிவு என்பதாகும்.
சந்திரன சூரியனில் அடங்கி ,சூரியன் அக்னியில் அடங்கி, அக்னி ஆகாயத்தில் அடங்கி,மூன்றும் ஒளிகளும் அருட்பெருஞ் ஜோதியில் அடங்கி ஆன்மா அருளைப் பெற்று மீண்டும் பிறப்பு ,இறப்பு இல்லாமல் மரணத்தை வெல்லுவதே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்
இத்தகைய பெரும் சிறப்புகள் எல்லாம் கொண்ட வடலூர் உத்தர ஞான சிதம்பரம் எனும் ஞான சபையிலே நிகழ உள்ள தைப்பூச ஜோதி தரிசன பெரு திருவிழாவில் நாம் யாவரும் உற்றார் உறவினர் ,நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஜோதி தரிசன திரு காட்சியை கண்டு அருளைப் பெற்று இன்பமுடன் வாழ்வோம்.
எல்லோருக்கும் தாய்,தந்தை,அண்ணன் ,தம்பி உற்றார் உறவினர் ,நண்பர்கள் முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ அதற்குக் கோடி கோடி பங்கு அதிகமான உதவி கொடுக்கும் படியான இடம் வடலூர் ஜோதி தரிசனம் காட்டப்படும் 'சத்திய ஞானசபை'' என்னும் இடமாகும்.
சத்திய தருமச்சாலை !
உயர்ந்த அறிவு படைத்த மனித ஜீவர்கள் உணவு கிடைக்காமல் பசி என்னும் பிணியால் மடிந்து கொண்டு உள்ளார்கள் என்பதை அறிந்த வள்ளல் பெருமான் வடலூரில் 23-5-1867 .ஆம் ஆண்டு வைகாசி மாதம் பதின்ஒன்றாம் தேதி சத்திய தருமச்சாலையை தோற்றுவித்துள்ளார்
வள்ளல்பெருமான் ஏற்றிவைத்த அணையா அடுப்பு இன்றுவரை வடலூர் வருகின்ற மக்களின் பசியைப் போக்கிக் கொண்டுள்ளது.ஜீவ காருண்யம் என்னும் பசிப்பிணியைப் போக்குவதே கடவுள் வழிபாடு என்றும் .உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றும் மக்களுக்கு போதித்து உள்ளார்
வடலூர் தைப் பூசத்திற்கு வரும் பல லட்சக் கணக்கான மக்களும் சத்திய தருமச்சாலையில் சென்று பசியாற்றிக் கொண்டு ஜோதி தரிசனம் பார்க்க வேண்டும் என்பது வள்ளலாரின் அழுத்தமான கொள்கையாகும்.
மேலும் வடலூரில் ஜோதி தரிசனம் காண வருகின்ற மக்களுக்கு ..சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்கள் எங்கு பார்த்தாலும் உணவு வழங்கிக் கொண்டே இருப்பது கண் கொள்ளா காட்சியாகும்.
வடலூர் வரும் மக்களுக்கு உணவும் கிடைக்கும் ..அறிவும் கிடைக்கும்... அருளும் கிடைக்கும்.
இது சத்தியம்,சத்தியம்,சத்தியம்,இஃது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கட்டளையாகும்.
வடலூர் செல்வோம் ஜோதி தரிசனம் காண்போம் .அருளைப்பெருவோம்.
ஆன்மநேயன்
ஈரோடு செ ,கதிர்வேல்.
திருஅருட்பா ஆராய்ச்சி மையம் .
108,C,நந்தா இல்லம்,
வையாபுரி நகர் .வள்ளலார் வீதி .
46,,புதூர் அஞ்சல் .ஈரோடு
SELL ..9865939896 ,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக