அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

சனி, 31 ஜனவரி, 2015

மெய் ஞானத்தை அடையும் வழி.5.



மெய் ஞானத்தை அடையும் வழி
பகுதி-5
காலத்தின் அளவுகளும் கலியுக முடிவும்-2
(தொடர்ச்சி)
மேலும் ஒவ்வொரு யுக முடிவு காலங்களில் அந்த யுகத்தின் தாக்கம் அதன் யுக முடிவு வருடங்களில் சரிபாதி குறைந்து அடுத்த யுகத்தின் யுக தாக்கம் சரிபாதி அதிகரிக்கும். அடுத்த யுகத்தின் ஆரம்பத்தில் முன்யுகத்தின் தாக்கம் மீதி பாதி குறைந்து அடுத்த யுகம் பூரணமடைந்திருக்கும்.
உதாரணமாக கலியுக முடிவில் 400 ஆண்டுகளில் கலியுகத்தின் பாதி சக்தி குறைந்து க்ருத யுகத்தின் பாதி சக்தி ஆரம்பித்திருக்கும் அடுத்ததாக வரும் க்ருத யுக ஆரம்பம் 100 ஆண்டுகளிலேயே கலியுகத்தின் மீதி பாதி சக்தி குறைந்து க்ருத யுகத்தின் மீதி பாதி சக்தி முழுமடையும்.
க்ருதயுக முடிவில் க்ருத யுகத்தின் பாதி சக்தி 100 ஆண்டுகளில் குறைந்து த்ரேதாயுகத்தின் பாதி சக்தி ஆரம்பிக்கும். த்ரேதாயுக ஆரம்பம் 200 ஆண்டுகளில் க்ருத யுகத்தின் மீதி பாதி சக்தி குறைந்து த்ரேதா யுகத்தின் மீதி பாதி சக்தி கூடி பூரணமடையும்.
வரலாற்று அறிஞர்களை பொறுத்தவரை உலக வரலாற்றை கிருஸ்துவிற்கு முன்என்றும் கிருஸ்துவிற்கு பின் என்றும் கணக்கிட்டு அதனடிப்படையில் வரலாறுகள் எழுதப்படுகின்றன.
இந்திய வரலாற்றை பொறுத்தவரை காலங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில் சந்திரகுப்த மௌரியரின் ஆட்சி காலத்திலிருந்து வரலாற்று ரீதியாக தொகுக்கபட முடிகிறது.
தமிழக வரலாற்றை பொறுத்தவரை சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோவில் கட்டிய காலத்திலிருந்துதான் வரலாற்று ரீதியாக காலங்களை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட முடிகின்றது.
வள்ளல் பெருமான் அளித்துள்ள யுகங்களின் காலங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்கையில் சில உண்மைகள் வெளிச்சத்திற்கு வருகின்றன.
யுகங்களை அடிப்படையாகக் கொண்ட காலக்கணக்கீடு செய்ய நமது முன்னோர்கள் மகாபாரதம் எனும் இதிகாசத்தில் ஒரு சிறு ஆதாரத்தை அளித்துள்ளார்கள். யுதிஷ்டிரர் எனும் தருமர்,"நாளை முதல் கலியுகம் ஆரம்பிக்கப் போகிறது, எனவே நாம் ஆட்சியை விட்டுச் செல்வோம்" எனக்கூறி தமது பேரன் பரிஷத்து என்பவனுக்கு அரசாட்சியை அளித்துவிட்டு தனது தம்பிகள் நால்வர் மற்றும் மனைவி திரௌபதியுடன் இமயமலை நோக்கி சென்றுவிட்டதாக ஒரு கருத்து வருகிறது. அது போன்ற சம்பவம் நடந்து 5101 ஆண்டுகள் ஆகியுள்ளதாகவும், எனவே கலியுகாதி 5101 என்று நமது ஜோதிடர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நமது ஞானகுரு வள்ளல் பெருமானிடம் யோக நிலையில் தொடர்பு கொண்ட போது கடந்த ஆண்டு "1999 ஆகஸ்ட் மாதம் 10 ந்தேதியுடன் கலியுகம் முடிந்து, 11-ஆம் தேதியிலிருந்து க்ருத யுகம் எனும் சத்திய யுகம் ஆரம்பிக்க உள்ளது, அதை தாங்கள் விழா எடுக்க வேண்டும்" என்றார்.
எந்த அடிப்படையில் யாம் யுகமாற்றம் எனக்கொள்வது என அவரிடம் சத்விசாரம் செய்கையில், " பூச நட்சத்திரத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கையில் இந்த யுகமாற்றம் நிகழ உள்ளது, யாம் வழங்கி உள்ள யுகங்களுக்கான காலத்தையும் கணக்கிட்டு நீவிர் மகாபாரத சம்பவத்தையும் உண்மையாக கருதி ஆய்வு செய்க" என்றார்.
அதற்கு தக்கவாறு 1999 ஆகஸ்ட் 11-ஆம் தேதி சூரியகிரகனம் ஏற்பட்டது. அந்த கிரகண முடிவிலிருந்து க்ருதயுகம் ஆரம்பித்ததாகக் கொண்டு யுகங்களையும், உலக வரலாற்றையும், நமது பண்டைய கலாச்சார ஆன்மீக மாற்றங்களையும் ஒப்பு நோக்கி ஆய்வு செய்தபோது சில உண்மைகள் வெளியாயின. தர்மர் அவர்கள் பட்டத்தை துறந்து சென்ற மறுநாளிலிருந்து கலியுகத்தின் தாக்கம் ஆரம்பமாகியுள்ளது எனத் தெரியவருகிறது.
உலக வரலாற்றை தொகுக்கும்போது கி.பி.,கி.மு., என்பது போல நமது கலாச்சார ஆன்மீக வரலாற்றை தொகுக்க தர்மருக்கு பின் (த.பி), தருமருக்குமுன் (த.மு.) என எடுத்துக்கொள்வோம். அந்த அடிப்படையில் தொகுக்கும்போது கிறிஸ்துவிற்கும் தருமருக்கும் இடைப்பட்ட ஆண்டுகள் வித்தியாசம் 3102 ஆண்டுகள் வருகின்றன. அவற்றை துல்லியமாக கணக்கிடும் வேலையை வரலாற்று அறிஞர்களுக்கும் ஜோதிடர்களுக்கும் விட்டு விட்டு, நாம் வித்தியாசம் 3100 ஆண்டுகள் என கணக்கிட்டு ஆய்வு செய்ததில் கீழ்கண்ட விவரங்கள் வெளியாகின. விவரம் வருமாறு.
இந்த பட்டியல் விவரப்படி பார்க்கும்போது இன்றைய சூழலில் (கி.பி.2000) கலியுகம் முடிந்து க்ருதயுகம் ஆரம்பித்துவிட்டது. ஆனால் கலியுகத்தின் தாக்கம் கி.பி. 2100 வரை இருக்கும். பூரண க்ருதயுகம் கி.பி.2100-லிருந்து ஆரம்பிக்கும். கடந்த கி.பி.1600-லிருந்து 400 ஆண்டுகளாக சிறிது சிறிதாக இதுவரை பாதி கலியுகம் முடிந்து பாதி க்ருதயுகத்தாக்கம் ஆரம்பித்துவிட்டது. இனி மீதி 100 ஆண்டுகளில் மீதி பாதி கலியுகத்தாக்கம் முடிந்து, க்ருதயுகம் முழுமையாக ஆரம்பிக்கும். மேலும் தர்மர் பட்டத்தை துறந்து சென்ற மறுநாள் முதல் கலியுகத்தாக்கம் ஆரம்பித்து உள்ளது. முழுமையான கலியுகம் தருமருக்கு 700 ஆண்டுகளுக்கு பிறகு ஆரம்பமானது.
மேலும் தற்போது தேசிய சிந்தனை உள்ள வரலாற்று அறிஞர்கள், கிருஸ்துவிற்கு முன் கிறிஸ்துவிற்கு பின் என்ற காலக் கணக்குக்கு பதிலாக கிருஷ்ணனுக்கு முன் கிருஷ்ணனுக்கு பின் என்று வரலாற்றை தொகுக்கலாம் என்று கூறுகிறார்கள். கிருஸ்துவையும் கிருஷ்ணனையும் வைத்து பார்க்கையில் இருவருக்கும் கி.மு.,கி.பி., என்று வரும். இது வரலாற்றில் பெறும் குழப்பத்தை ஏற்படுத்தும்.
மேலும் தருமர் 56 தேச அரசர்களுக்கும், கிருஷ்ணர் உள்பட தலைமை அரசராக இருந்தவர். மேலும் அவரது பட்டத்தை துறந்ததினம், வரலாற்று ரீதியாக எடுத்துக் கொள்ள ஏதுவாக உள்ளது கிருஷ்ணர் அவர்கள் தெய்வ நிலையடைந்தவர் எனும்போது அவரது பிறந்த தினத்தை கொள்வதா, மறைந்த தினத்தை கொள்வதா அல்லது தனது தெய்வத் தன்மையை வெளிப்படுத்திய ஏதேனும் ஒரு தினத்தை கொள்வதா என்பதுடன், அந்த தினங்களுக்கும் கலியுக தாக்கம் ஆரம்பித்ததிற்கும் இடைப்பட்ட ஆண்டுகள் பற்றிய கால கணக்கில் குழப்பங்கள் மிகுந்த சிக்கல் ஏற்படும். எனவே தேசிய சிந்தனை கொண்ட வரலாற்று அறிஞர்கள்கூட மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால் தருமரை அடிப்படையாக கொண்டு செய்வது ஏதுவாகும் என எண்ணுகிறோம்.
மேலும் இந்த யுகங்கள் எப்படி வரலாற்று ரீதியாக அமைகின்றன? யுகங்களின் இலக்கணங்கள் என்ன? இதனால் யாது பயன்? இந்த கால கணக்கு வரலாற்றுக்கு எவ்வாறு பயன்படும் என்பதை அடுத்து வரும் "சதுர்நிலை வழிபாடுகள்"என்ற தலைப்பில் ஆய்வு செய்வோம்.
(தொடரும்)
-ஜோதிமைந்தன் சோ.பழனி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக