அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

செவ்வாய், 8 ஜூலை, 2014

கடவுளை நிலை அறிந்து அருளைப் பெரும் நிலை !

கடவுளை அறிந்து அருளைப் பெரும் நிலை !

ஆன்மீகத்தில் ...சரியை ,கிரியை,யோகம்,ஞானம் ,என்னும் நான்கு நிலைகள் உண்டு .ஒவ்வொன்றிலும் நான்கு நிலைகள் உண்டு. மொத்தம் பதினாறு நிலைகள் உள்ளன .கடைசி நிலையான ஞானத்தில் ஞானம் என்னும் பதினாறாவது நிலையைப் போதிக்க வந்தவர்தான் வள்ளல்பெருமான்.

சரியை நிலை நான்கும் ஒரு கிரியை நிலை நான்கும்
தனி யோக நிலை நான்கும் தனித்தனி கண்டு அறிந்தேன்
உரிய சிவ ஞான நிலை நான்கும் அருள் ஒளியால்
ஒன்று ஒன்றாய் அறிந்தேன் மேல் உண்மை நிலை பெற்றேன்
அரிய சிவ சிந்தாந்த வேதாந்தம் முதலாம்
ஆறு அந்த நிலை அறிந்தேன் அப்பால் நின்று ஓங்கும்
பெரிய சிவ அனுபவத்தால் சமரச சன்மார்க்கம்
பெற்றேன் இங்கு இறவாமை உற்றேன் காண் தோழி .

சரியை ;--என்பது பக்தியின் முதல் நிலையாகும். உயிர் இல்லாத தத்துவ உருவங்களான கல்,மண்,செம்பு ஐம்பொன்,தங்கம்,போன்ற உலோகங்களால்   செய்த மொம்மைகளை வைத்து,  நடுவர் என்னும் பூசகர் மூலமாக வழிபாடு செய்து,  புறத்தில் இருந்து கொண்டு கை கூப்பி வணங்கி  வழிபாடு செய்வது.  அவை .''புறப்புறம்'' என்பதாகும்.இவை ஆன்மீக கல்வியின் ஆரம்பநிலை கல்வியாகும் ,ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து படிப்பது போலாகும்.

இந்த படிப்பால் கிடைக்கும் லாபம்.''புறப்புறம்'' என்னும் இந்திரியங்களான ,கண்,காது,மூக்கு,வாய்,உடம்பு போன்ற புறப்புறக் காட்சி யாகும்.இதனால் இந்திரியங்கள் என்னும் கருவிகள் மட்டும் மகிழ்ச்சி அடையும்.இது நிலை அற்றதாகும் .

கிரியை ;--என்பது பக்தியின் இரண்டாவது நிலை....உயிர் இல்லாத தத்துவங்களை,அதாவது மேலே சொன்ன மொம்மைகளான கடவுள்களை வைத்து தாமே அருகில் சென்று தொட்டு கழுவி  அதற்கு பூ வைத்து,பொட்டு வைத்து   அலங்காரம், அபிஷேகம்,ஆராதனை,செய்து,அதன் முன் இலையை  வைத்து  படையல்  செய்து வழிபடுவதாகும் இவை ''புறம்''என்னும்   வழிபாடாகும்''. .இவை ஆன்மீக கல்வியின் பத்தாம் வகுப்பு படிப்பது போன்றதாகும்.

இந்த படிப்பால் கிடைக்கும் லாபம் .''புறம்'' என்னும் கரணங்களான  ,மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்,என்னும் கருவிகள் மட்டும் மகிழ்ச்சி அடையும்.அதனால் மன நெகிழ்ச்சி, மன உருக்கம் மட்டும் உண்டாகும். இது கர்ம சித்தியைக் கொடுக்கும் இதுவும் நிலை அற்றதாகும்.

யோகம் ;--இவை உயிர் இல்லாத,மேலே சொன்ன உருவங்கள் அனைத்தும் தத்துவங்கள் என அறிந்து உருவ வழிபாட்டை விட்டு தன்னைத் தானே அறிந்து ஜீவன் நிலையில் இருப்பதாகும். இதற்கு யோக நிலை என்பதாகும்.இதனால் உயிரைக் காப்பாற்றி நீண்ட நாட்கள் வாழ்வதற்கு உண்டான  வழியை கண்டு பிடிப்பதாகும். இதற்கு சமாதி நிலை என்றும் பெயர் ...இவை ''அகப்புறம்' என்னும் வழிபாடாகும்.இவை யோக சித்தியைக் கொடுக்கும். இவை ஆன்மீக கல்வியின் கல்லூரியில் படிக்கும் நிலைப் போன்றதாகும்.

இந்த படிப்பால் கிடைக்கும் லாபம் ''அகப்புறம்'' என்னும் உயிர் (ஜீவன் ) மகிழ்ச்சி அடையும். உயிருடன் நீண்ட நாள் வாழலாம் .

ஞானம் ;--இவை ஆன்மாவை அறிந்து கொள்ளும் அனுபவநிலை, உலகத்தைப் பற்றி, உயிர்களைப் பற்றி,பஞ்சபூதங்களைப் பற்றி,கிரகங்களைப் பற்றி, அண்டங்களைப் பற்றி, அவைகளை இயக்கும் சத்தி சத்தர்களைப்  பற்றி,அதற்கு மேல் கடவுள் யார் ? என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வதாகும்

உண்மைக் கடவுள் யார் ? என்பதை முழுமையாக தெரிந்து கொள்வதும் இறைவன் இடம் இருந்து முழுமையான அருளைப் பெரும் வழியாகும்.

தத்துவங்கள் எல்லாம் கடவுள் இல்லை அவை வெறும் ஜடங்கள் ,  சமய மதங்கள் சொல்லிய கதைகள் யாவும் கற்பனைக் கதைகள் என்பதை ஆன்ம அறிவால் அறிந்து கொள்தாகும்.. எல்லா உயிர்களும் அந்த உயிர்களை இயக்கும் ஆன்மாவை அறிந்து கொள்வதாகும்.அதற்கு ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்பதாகும்.

நாம் யார் ? நமக்கு உயிர் எப்படி வந்தது ? உடல் எப்படி வந்தது ? ஏன் பிறக்கின்றோம் ? ஏன் இறக்கின்றோம்,? மறுபடியும் பிறப்பு உண்டா ?இல்லையா ? இறந்த பின் எங்கு செல்கின்றோம்,? என்னாவாகின்றோம் ?,

ஆரம்பம் எங்கே ? வாழ்க்கை எங்கே ? முடிவு எங்கே ?  முதலில் உயிர் வந்ததா ? உடல் வந்ததா ? ஆன்மா வந்ததா ? போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு விடை காண்பது ..ஞானம் என்னும் ஆனம் அறிவாகும் ..

ஞானம் என்பது  முழுமையான,பூரணமான ,அருள் அறிவு , என்பதாகும்

இவைதான் ஆன்மீகத்தின் பல்கலைக் கழகப் பட்டப் படிப்பாகும்.இங்கு உண்மையைத் தவிர வேறு எதுவும் போதிப்பதில்லை.

இந்த படிப்பால் கிடைக்கும் லாபம் ஆன்ம லாபம் என்பதாகும். இதனால் ''அகம் '' என்னும் ஆன்மா மகிழ்ச்சி அடையும். இந்த லாபத்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

அதற்கு மேல் ஆறு அந்தங்களான  சித்தாந்தம், வேதாந்தம், போதாந்தம், கலாந்தம்,யோகாந்தம் நாதாந்தம்,முதலான அந்தங்களைக் கடந்து ,பல கோடி அண்டங்களைக் கடந்து ..அதற்கு அப்பால்.அருட்பெரு வெளியில் திருவருட் செங்கோல் நடத்தும். அருட்பெருஞ் ஜோதியை கண்டு அதன் மயமாக மாற்றிக் கொள்வதாகும்.

ஆன்ம லாபம் அடைந்தவர்கள் ஆன்ம தேகம் என்னும் ஞான தேகத்தைப் பெற்று ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றிக் கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள்...மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மய மாவார்கள்...அவர்களை பேரின்ப லாபம்,பேரின்ப வாழ்வு  பெற்றவர்கள் என்று அறியலாம். அவர்களை கடவுள் உரிமையுடன் ஏற்றுக் கொள்வார்.இதுவே கடவுள் நிலை அறிந்து அருளைப் பெரும் நிலையாகும்

ஞானம் என்னும் சாகாக் கல்வியை போதிக்க வந்தவர்தான் வள்ளல்பெருமான் அவர்களாகும்.

மனிதனால் ஞானத்தை போதிக்க முடியாது என்பதால் .இறைவனே
வள்ளலார் உருவம் தாங்கி வந்து ஞானம் என்னும் சாகாக் கல்வியைப் போதிக்கின்றார்.

அதற்கு ''சாகாக் கல்வி'' என்று பெயர் வைத்து உள்ளார் வள்ளல்பெருமான் .

சாகாக் கல்வியைப்  போதிக்கும் பல்கலைக்கழகம் ,வள்ளலார் தோற்றுவித்த ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' என்னும் கல்விக் கூடமாகும்.

சரியை,கிரியை,யோகம்,என்னும் ஆன்மீக வழிபாடு, சாகும் கல்வியைப் போதிக்கின்றது....ஞானம் என்னும் ஆன்மீக அக வழிபாடு ''சாகாக் கல்வி'' யைப் போதிக்கின்றது .

ஆகையால்,''ஞானத்தில் ஞானம்'' என்னும் பதினாறாவது கல்வியான  ''சாகாக் கல்வியைக் கற்று'' கடவுளிடம்  அருள் என்னும் பட்டத்தைப் பெற்று,ஆன்ம லாபத்தை அடைந்து ,மேலும்,இம்மை இன்பலாபம்,..மறுமை இன்பலாபம்,..பேரின்ப லாபத்தை அடைந்து  .மரணத்தை வென்று.ஞான தேகத்துடன் வாழ்ந்து கொண்டு இருப்பவர்தான் திரு அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.

அவர்காட்டிய ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில்''அங்கத்தினர் களாகி  உண்மை ஒழுக்க நெறியைக் கடைபிடித்து கடவுளை நிலை அறிந்து அருளைப் பெற்று பேரின்ப லாபத்தை அடைந்து பெரு மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக