வெள்ளி, 14 மார்ச், 2014

கருணை ! உயிர் இரக்கம் !

கருணை !

மனிதன் உயர்ந்த அறிவு படைத்தவன் ,..ஏன் என்றால் உண்மையை அறிந்து கொள்ளும் அறிவு மனிதனுக்கு மட்டும் இறைவனால் கொடுக்கப்பட்டு உள்ளது.

மிருகம் படைப்பிற்கு பின் மனிதப் பிறப்பு கிடைப்பதால் மனிதன் மிருக குணமுடையவனாக இருக்கின்றான் ,அவன் தன்னுடைய அறிவை பயன் படுத்தாமல் மனதை பயன்படுத்துகிறான்.மனம் உலக பற்றுகளைத் தேடி அலைவதாகும்..மிருகத்திற்கு மனம்மட்டும் தான் அதிக வேலை செய்யும் .அவைகள் உண்ணுதற்கும்,உறங்குதற்கும் மட்டும்தான் தெரியும் ,அவைகளுக்குத் அறிவு தெளிவு கிடைக்காது.

மிருகங்களைப் போல் மனிதன் வாழ்வதால் மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டு உள்ளான்.மனிதனுக்கு துன்பமும் துயரமும்,அச்சமும்,பயமும்,வருகின்ற போது,அவன் எதோ ஒன்றை நாடிச் செல்கிறான்,அவனுக்கு வரும் குறைபாடுகளைப் போக்குவதற்கு ,..பணம் பறிப்பவர்கள் நிறைய பேர் உள்ளார்கள்.

மனத்தை அடக்க வேண்டும் என்பதற்காக அவரவர்கள் ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்டு ,பக்தி,வழிபாடு, தவம் ,தியானம்,யோகம்,போன்ற பொய்யான கலைகளை கற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இதனால் மனம் அடங்குமா என்றால் அடங்காது,இதனால் யாருக்கு லாபம் என்றால் சொல்லிக் கொடுக்கும் அமைப்புகளுக்கும்,அதை போதிப்பவர்களுக்கும் மட்டும்தான் பொருள் என்ற லாபம் குவிந்து கொண்டே இருக்கும்.

அதையும் உண்மை என்று நம்பி மக்கள் வழிதுறை தெரியாமல் அலைந்து கொண்டு உள்ளார்கள் .

மனம் எக்காலத்தும் அடங்காது மனதை அடக்கவும் முடியாது.அலை;பாயும் மனத்தை அடக்க வேண்டுமானால்,மனதை மாற்ற வேண்டும்,எப்படி மாற்ற வேண்டும் ? இந்த உலகில் உயிர்களுக்கு துன்பம் தராமல் ஜீவ காருண்யம் என்ற உயிர் இரக்கத்தால்,கருணையால் மட்டுமே மனம் நல்லதை நாடிச்செல்லும்.மனம் நல்லதை நாடிச்செல்லும் போதுதான் ,மனம் அறிவைத் தேடும் .அறிவைத்தேடும் போது,மனத்திற்கு அறிவு துணையாக செயல்படும் .அப்படியே சிறுக சிறுக பழகும் பொது,அறிவுக்குள் மனம் அடங்கி விடும் .

அதன் பின்தான் உண்மையைத் தேடும் மனம் உண்மை அறிவுடன் கலந்து விளக்கமடையும் .உண்மையை அறிந்த மனிதனுக்கு ,துன்பம்,துயரம்,அச்சம்,பயம் போன்ற வேதனைகள் அவனுடைய மனத்தையோ,! உடம்பையோ ! உள்ளத்தையோ 1 உயிரையோ! பாதிக்காது

மனத்தை அறிந்தவனே மனிதன் என்பவனாகும்.மனிதன் உயர் நிலைக்கு செல்லவேண்டுமானால் கருணை ஒன்றினால் மட்டுமே செல்ல முடியும் என்பதை உலக மக்களுக்கு அருள்வள்ளல் அருட்பிரகாசர் நமது வள்ளல்பெருமான் அவர்கள் தெளிவு படுத்தி உள்ளார்.

ஜீவ காருண்யம் இல்லாமல் செய்யப் படுகின்ற பக்தி,வழிபாடு,தவம்,தியானம்,யோகம் முதலிய யாவும் அறிவற்ற வெற்று மாயா ஜாலங்கலாகும் என்று அழுத்தமாக விளக்கி உள்ளார்கள்.

வரும் உயிர் இரக்கம் பற்றியே உலக
வழக்கில் ஏன் மனம் சென்ற தோறும்
வெருவி நின் அடிக்கே விண்ணப்பித்து இருந்தேன்
விண்ணப்பம் செய்கின்றேன் இன்றும்
உருவ என் உயிர்தான் உயிர் இரக்கந்தான்
ஒன்றதே இரண்டில்லை இரக்கம்
ஒருவில் என் உயிரும் ஒருவும் என் உள்ளத்து
ஒருவனே நின் பதத்து ஆணை !

என்கிறார் .நமது வள்ளல்பெருமான் .என்னுடைய மனமானது,உலகில் உள்ள உயிர்கள் மீது இரக்கம் கொண்டதே தவிர வேறு எதன் மீதும் என்னுடைய மனம் செல்ல வில்லை. உயர் இரக்கம்தான் என்னுடைய உயிர் ,..இரக்கம் இல்லை என்றால் என்னுடைய உயிர் நீங்கி விடும்,என்கிறார் .

ஜீவ காருண்யம் என்னும் உயிர் இரக்கம் மனிதனாக பிறந்தவர்கள் அனைவருக்கும் மிகவும் அவசியமாகும்.

அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு ஜீவகாருண்யமே இறை வழிபாடு என்கிறார் .

மனம் போனபடி சென்று வாழ்ந்து துன்பங்களை அனுபவிக்காமல் மனத்தை அடக்கி அறிவை தொடர்பு கொள்ள கருணை ஒன்றுதான் மிக முக்கிய கருவியாகும்.

ஆன்மநேயன் ;--ஈரோடு கதிர்வேல்   

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு