திங்கள், 8 ஆகஸ்ட், 2011

சமய நூல்களின் உண்மை !


சமய நூல்களின் உண்மை


பெரியபுராணத்தில் குறித்த 63 நாயன்மார்களும் மற்ற நாயன்மார்களும் தத்துவங்களே யொழிய வேறில்லை. அதை அதை விசாரித்து அனுஷ்டித்தால், அது அது ஒவ்வொரு சித்தியைக் கொடுக்கும். இதுபோல சைவத்தில் சொல்லுகின்ற சௌராதி சண்டை பரியந்தமும்* தத்துவமே யாம். சைவ புராணம் விஷ்ணு புராணம் முதலிய யாவற்றின் உண்மையும் தத்துவ சம்மாரங்கள். சூரபத்மன் யுத்தம் முதலிய யுத்தங்களும் தத்துவ சம்மாரங்களே. இதுபோல் மாணிக்கவாசக சுவாமிகள் முதலிய மகான்களின் சரித்திரமும் தத்துவசித்தியே. மேற்குறித்தவர்கள் பேரால் ஒவ்வொரு மஹான்கள் சாஸ்திரங்களையும் தேவாரம் திருவாசகங்கள் முதலியவைகளையும் அமைத்து, இவற்றிற்கு இடமாக ஆலயங்கள் அமைத்து, மேற்படி சித்திக்கு உரிய தத்துவ தத்துவிகளின் பெயரைக் கர்த்தாவாக்கி, அந்தச் சித்தி முடிக்குங் காலம் தினம் கருவி முதலியவைகளை மேற்படி ஆலயங்களுக்கு விசேஷ காலமாக்கி, வழக்கத்தில் வருவித்தார்கள். மேற்குறித்த நாயன்மார் முதலியவர்களின் உண்மையனுபவ தாத்பரியமுடைய சித்திகள் முன்னும் பின்னும் இனியுமுள. நாம் மேற்படி தத்துவங்களை அனுஷ்டித்தால் அவ்விதமாக ஆகக் கூடும். இது போலவே திருவிளையாடல் பாரத பாகவதங்களு மமைத்துக் கொள்க. ஒருவாறு.

* சௌராதி சண்டை பரியந்தம் - சூரிய பூசை முதல் சண்டேசுவர பூசை முடிய.

புராண ஹ’ருதயம்

பெரியபுராணத்திற் குறித்த 63 நாயன்மார்களும் தத்துவங்களே ஒழிய வேறல்ல. அதை அதை விசாரித்து அனுஷ்டித்தால், அது அது ஒவ்வொரு சித்தியைக் கொடுக்கும். கணபதி, சுப்பிரமணிய சுவாமிகளும் தத்துவங்களே தவிர வேறல்ல. புராணங்களி னிருதயமெல்லாம் தத்துவ சம்மாரமே. இதன் உண்மை சுத்த சன்மார்க்கத்தில் விவரமாய் வெளியாகும். சமய நூல் உண்மை
மாணிக்கவாசக சுவாமிகளும் 63 நாயன்மார்களும் மனிதரல்லர். தத்துவங்கள். தேவாரம் திருவாசகம் முதலியவைகள் மேற்குறித்தவர்கள் பாடியனவல்ல, சித்தர்கள் சில சித்திகளைக் குறித்துக் கற்பனையாய்ச் செய்த சரித்திரம்; அதற்கு மேற்கொள் வேண்டுவதின் பொருட்டுச் சில பாடலுஞ் செய்து, புராணத்தில் மேற்குறித்தபடி பெயரிட்டு, அவர்கள் செய்ததாகப் பரிச்சயஞ் செய்ததே தவிர, உண்மையல்ல. இவற்றிற்குரிய தாத்பரியங்களும் உண்மைகளும் சுத்த சன்மார்க்கத்தில் பகிரங்கமாய் இனி வெளிப்படும். (வேறொரு குறிப்பு)
சூரபத்மனுடைய யுத்தம் முழுமையும் தத்துவ சம்மாரமே. சுப்பிரமணியர் விநாயகர் மயிலின் மேலும் பெருச்சாளியின் மேலும் ஏறினார்களென்கிற தாத்பர்யம் வேறு. அது தெரியாம லந்தச் சுவாமிகளைத் திருவிழாக் காலத்தில் வாகனங்களின் மேல் ஏற்றுதல் தெரியாமை. 20. சமய நூல்களில் பிழை
சமயமத சாத்திரங்களில் அனேக இடத்தில் பிழைகளிருக்கின்றன. அதற்குக் காரணம் அவற்றை இயற்றியவர்கள் மாயையின் சம்பந்தத்தை அடைந்திருந்தவர்கள். ஆகையால் முன்னுக்குப் பின் மறைப்புண்டு தப்புகள் நேரிட்டிருக்கின்றன. மாயையை வென்ற சுத்த ஞானிகளுக்கல்லது மற்றவர்களுக்குப் பிழையற இயற்ற முடியாது. அந்தப் பிழைகள் சுத்தசன்மார்க்கம் விளங்குகின்ற காலத்தில் வெளிப்படும்.

- வள்ளலார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு