வியாழன், 31 அக்டோபர், 2013

தீபாவளி நல் வாழ்த்துக்கள் !


தீபாவளி நல் வாழ்த்துக்கள் !

ஆன்மநேய அன்புடைய சகோதர சகோதரிகளுக்கு தீபாவளியின் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் தீபாவளியைக் கொண்டாடுவதில்லை.கடவுள் தீப ஒளியாக ஒவ்வொரு ஜீவன்கள் உடம்பிலும்,உள் ஒளியாக இயங்கிக் கொண்டு உள்ளார் .அந்த இறைவனுக்கு நன்றி சொல்லும் வகையால் தீப ஒளியை தீபாவளியாக கொண்டாடுகின்றார்கள் .

தீபாவளி அன்று புத்தாடை உடுத்தி,புதுமையான பலகாரங்களை உண்டு,பட்டாசு வெடித்து,மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் ,அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் அருள்புரிய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

உங்கள் அன்புள்ள ஆன்மநேயன்;--கதிர்வேல் .

புதன், 23 அக்டோபர், 2013

வடலூர் சத்திய ஞான சபை விளக்கம் --1 !



வடலூர் சத்திய ஞான சபை 

உத்தர ஞான சித்திபுரம் என்றும், உத்தர ஞான சிதம்பரம் என்றும்,
திருவருளால் ஆக்கப்பட்ட  சிறப்புப் பெயர்களும் ,பார்வதிபுரம் என்றும் ,வடலூர் என்றும் உலகியலால் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப்பதியின் இடத்தே ,இயற்கை விளக்க நிறைவாகி உள்ள ஓர் சுத்த சிவானுபவ ஞான சபையில் ,இயற்கை உண்மை நிறைவாகிய ,திரு உருவைத் தரித்து ,இயற்கை இன்ப நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை,எவ்வுயிரும் இன்பம் அடைதல் பொருட்டே செய்து அருளுகின்றவர் யார் ?

எல்லாம் வல்ல தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும்.

வடலூரில் வள்ளல் பெருமான் அவர்கள் தோற்றுவித்துள்ள, சபைக்கு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை'' என்று பெயர் வைத்துள்ளார் .

சபை என்பது எல்லோருக்கும் பொதுவானது.அங்கே சாதி, சமயம் ,மதம் என்ற எந்த வேறுபாடுகளும் இல்லாதது . ஞான சபையில், உண்மையானக் கடவுளை வரவழைத்து மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்ற பெருங் கருணையோடு தான் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை'' 'தோற்றுவித்து உள்ளார் .

சபையைத் தோற்றுவித்தது ஆண்டவர் கட்டளை. !

சத்திய ஞான சபையை கட்டுவதற்கு முன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல்பெருமானுக்கு ஒரு கட்டளையை பிறப்பிக்கின்றார்.அந்தக் கட்டளை யாதெனில் ;--

என்பாட்டுக் கெண்ணாததெண்ணி இசைத்தேன் என்
தன்பாட்டைச் சத்தியமாத் தான் புனைந்தான் --முன்பாட்டுக்
காலையிலே வந்து கருணை அளித்தே தருமச்
சாலையிலே வா என்றான் தான் .

நான் பல தத்துவ தெய்வங்களை வணங்கியும், அந்த தெய்வங்கள் பெயரால் பல ஆயிரக்கணக்கான பாடல்களைப்  பாடியும் எழுதியும் வைத்துள்ளேன் .ஆனால் அவைகள் எல்லாம் உண்மையான தெய்வங்கள் அல்ல என்பதை அறிவால் அறிந்து கொண்டேன்.ஆதலால் உண்மையான இறைவன் யார் ?அவருடைய அருள் உருவத்தையும், ஆற்றலையும், செயல்களையும் அறிந்து கொள்ள விரும்புகின்றேன்,என்று இறைவனிடம் முறையிடுகின்றார் .

அதற்கு ஆண்டவர் சொல்லியதுதான் மேலே கண்ட பாடல் ...

உன்னுடைய தேடுதலைப் புரிந்து கொண்டேன் உன்னையும் உன்னுடைய பாடல்களையும் ஏற்றுக் கொண்டேன் ,ஆனால் நீ ஒரு வேலை செய்யவேண்டும்.இந்த உலக மக்கள் பசி,பட்டினி, வறுமை போன்ற கொடுமைகளினால் துன்பப்டுகிரார்கள் ,அந்த மக்களின்  பசியைப் போக்கக் கூடிய தருமச் சாலையைத்  தோற்றுவித்து, அதன் வழியாகத்தான் வரவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கின்றார்

அப்படி தோற்றுவித்தால் நான் யார் ! என்பதை உமக்குத் தெரிவிக்கிறேன் என்னுடைய உண்மையான உருவத்தைக்  காட்டுகிறேன் என்று வள்ளல்பெருமானிடம் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் தெரிவிக்கின்றார்.

ஆண்டவர் ஆணையை ஏற்றுக் கொண்டு அவசர அவசரமாக தருமச்சாலையை கட்டி... 23-5-1967, ஆம் தேதி சத்திய தருமச்சாலையைத் தொடங்கி வைக்கின்றார்..

தொடங்கி வைத்த பின் வள்ளல்பெருமான் பதிவு செய்துள்ள பாடல் !

காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே
களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறுங் கனியே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை எலாம் தருமச்
சாலையிலே ஒருபகலில் தந்த தனிப்பதியே
சமரச சுத்த சன்மார்க்கத் தலை அமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்தாடும்
மாநடத்தென் அரசே என் மாலையும் ஏற்று அருளே !

தருமச்சாலையைத் தோற்றுவித்த பின் எல்லாப் பயன்களையும்,தருமச் சாலையில்  ஒரே பகலில் அளித்து விட்டதாக பறை சாற்றுகின்றார்.

மேலும் ;--

காலையிலே நின் தன்னைக் கண்டு கொண்டேன் சன்மார்க்கச்
சாலையிலே இன்பம் தழைக்கின்றேன்---ஞாலமிசை
சாகா வரம் பெற்றேன் தத்துவத்தின் மேல் நடிக்கும்
ஏகா நினக்கடிமை யேய்ந்து...

என்னும் பாடல்கள் வாயிலாகத் தெளிவுப் படுத்தி உள்ளார் .

இன்மை இன்பவாழ்வு,மறுமை இன்ப வாழ்வு,பேரின்ப வாழ்வு என்னும் முத்தேக சித்தியைப் பெற்றுக் கொண்டேன்,சாகா வரமும் பெற்றுக் கொண்டேன்.மேலும் அளவில்லாத இன்பத்தைப் பெற்றுக் கொண்டேன் .இனிமேல் என்னுடைய அருட்பாமாலை எல்லாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தவிர வேறு யார் மீதும்,எழுத மாட்டேன், பாட மாட்டேன்.பதிவு செய்ய மாட்டேன் .இனிமேல் என்னுடைய அருட் பாமாலைகள் எல்லாம்  ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று முறையிடுகின்றார் .

வள்ளல்பெருமான் வேண்டுதலை ஏற்றுக் கொண்ட அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் .நீ எண்ணியபடி விளையாடி மகிழ்க என்று... தன்னுடைய உரிமைகள் அனைத்தும் வழங்கி மகிழ்கின்றார் ..

உத்தர ஞான சித்தி மாபுரத்தின்
ஓங்கிய ஒரு பெரும் பதியை
உத்தர ஞான சிதம்பர ஒளியை
உண்மையை ஒரு தனி உணர்வை
உத்தர ஞான நடம் புரிகின்ற
ஒருவனை உலகெலாம் வழுத்தும்
உத்தர ஞான சுத்த சன்மார்க்கம்
ஒளியைக் கண்டு கொண்டேனே .

என்றும் ;--சத்திய ஞான சபை என்னுட் கண்டனன்
சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன் .

சமரச சத்தியச் சபையில் நடம்புரி
சமரச சத்தியத் தற்சுயஞ் சுடரே

சபை எனது உளம் எனத் தான் அமர்ந்து எனக்கே
அபயம் அளித்ததோர் அருட்பெருஞ்ஜோதி !

மருள் எலாம் தவிர்த்து வரம் எலாங் கொடுத்தே
அருள் அமுதம் அருத்திய அருட்பெருஞ்ஜோதி

வாழி நின் பேரருள் வாழி நின் பெருஞ் சீர்
ஆழி யொன்று அளித்த அருட்பெருஞ்ஜோதி !

என்னும் பலப்பாடலகளில் தெரியப் படுத்தி உள்ளார் .

அருட் பெருஞ்ஜோதியைக் கண்டு கொண்டேன் ,அவர் ஒளியாக ஒலியாக உள்ளார் .அவரை உலக மக்களுக்கு தெரியப் படுத்த போகிறேன் .அதற்காக வடலூரில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை'' தோற்றுவிக்கப் போகின்றேன் அதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அனுமதி வழங்கிவிட்டார் என்பதை தெரியப்படுத்தி சத்திய ஞானசபையை தோற்றுவிக்கின்றார் வள்ளல்பெருமான் அவர்கள் .      

சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை விளம்பரம் !  25-11-1872,ஆம் ஆண்டு !

உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே !

அறிவு வந்த காலம் முதல் அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும்.கேட்டு அறியாத அற்புதக் கேள்விகளையும்.செய்து அறியாத அற்புதச் செயல்களையும்,கண்டு அறியாத அற்புதக் காட்சிகளையும்,அனுபவித்து அறியாத அற்புத அனுபவங்களையும்,இது தருணம் தொடங்கிக் கிடைக்கப் பெறுகின்றேன்.என்று உணருகின்ற ஓர் சத்திய உணர்ச்சியால் பெருங் களிப்பு உடையோனாகி இருக்கின்றேன்.

நீவீர்களும் அவ்வாறு பெற்றுப் பெருங்களிப்பு  அடைதல் வேண்டும் என்று எனக்குள்ளே நின்று நிறைந்து எழுந்து வெளிப்பட்ட எனது சுத்த சன்மார்க்க லஷியமாகிய ''ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமைப்'' பேராசை பற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன் .

இயற்கையில் தானே விளங்குகின்றவராய் உள்ளவர் என்றும்,இயற்கையில் தானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்றும்,இடண்டுபடாத பூரண இன்பமானவர் என்றும்,எல்லா அண்டங்களையும் .எல்லா உலகங்களையும் ,எல்லாப் பதங்களையும்,எல்லாச் சத்திகளையும்,எல்லாச் சத்தர்களையும்,எல்லாக் கலைகளையும்,எல்லாப் பொருள்களையும்,,

எல்லாத் தத்துவங்களையும் ,எல்லாத் தத்துவிகளையும் ,எல்லா உயிர்களையும்,எல்லாச் செயல்களையும்,எல்லா இச்சைகளையும்,எல்லா ஞானங்களையும் ,எல்லாப் பயன்களையும்,எல்லா அனுபவங்களையும்,மற்றை எல்லா வற்றையும்

தமது திருவருட் சத்தியால் தோற்றுவித்தல்,வாழ்வித்தல்,குற்றம் நீக்குவித்தல் ,பக்குவம் வருவித்தல்,விளக்கஞ் செய்வித்தல்,முதலிய பெருங்கருணைப் பெருந் தொழில்களை ,இயற்று விக்கின்றவர் என்றும்,எல்லாம் ஆனவர் என்றும்,ஒன்றும் அல்லாதவர் என்றும்,சர்வ காருண்யர் என்றும்,சர்வ வல்லபர் என்றும்,

எல்லாம் உடையராய்த் தமக்கு ஒரு வாற்றானும் ஒப்புயர்வு இல்லாத் தனிபெருந்தலைமை ''அருட்பெருஞ் ஜோதியர் ''என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற ''உண்மைக் கடவுள் ஒருவரே'' அகம்புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவு என்னும் பூரணப் பொது வெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார்.

அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே யாகிய கடவுளை இவ்வுலகினிடத்தே ஜீவர்கள் அறிந்து அன்பு செய்து அருளை அடைந்து அழிவில்லாத சத்திய
சுகப்பூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல் ,பல்வேறு கற்பனைகளால் பல்வேறு சமயங்களிலும்,பல்வேறு மதங்களிலும்,பல்வேறு மார்க்கங்களிலும்,பல்வேறு லஷியங்களைக் கொண்டு,

நெடுங்காலம் பிறந்து பிறந்து,அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவும் இன்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்து இறந்து வீண் போகின்றோம்.

இனி இச்சீவர்கள் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல் உண்மை அறிவு,உண்மை அன்பு,உண்மை இரக்கம் முதலிய சுப குணங்களைப் பெற்று நற்செய்கை உடையவராய் ,

எல்லாச் சமயங்களுக்கும்,எல்லா மதங்களுக்கும்,எல்லா மார்க்கங்களுக்கும்,உண்மைப் பொது நெறியாகி விளங்கும் ''சுத்த சன்மார்கத்தைப் பெற்று ''பெருஞ் சுகத்தையும் பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு ,மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திருவுளங் கொண்டு......

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ''ஓர் ஞானசபையை இங்கே தமது திருவருட் சமமதத்தால் இயற்று வித்து இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம்,அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றோம்'' என்னும் திருக்குறிப்பை வெளிப்படுத்தி,அருட்பெருஞ் ஜோதியராய் வீற்று இருக்கின்றார்.

ஆகலின் ,அடியிற் குறித்த தருணம் தொடங்கி வந்து வந்து தரிசிக்கப் பெருவீர்களாகிற் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் அன்றி,இறந்தவர் உயிர் பெற்று எழுதல்,மூப்பினர் இளமைப் பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங் களிப்பையும் அடைவீர்கள்.

என்று வள்ளல்பெருமான் ஞான சபையைக் தோற்றுவிக்கும் முன் ,அருட்பெருஞ் ஆண்டவர் யார் ? என்பதையும்.அவர் எப்படி செயல்பட்டுக் கொண்டு உள்ளார் என்பதையும்,,ஆண்டவரே ஞானசபைக்குள் வந்து அமர்ந்து செயல்படுவார் என்பதையும்,மேலே கண்ட ஞான சபை விளம்பரம் என்னும் தலைப்பில் மக்களுக்கு அறிவித்து விட்டுத்தான் ஞான சபையைத் தோற்று விக்கின்றார்.      

ஞான சபையின் அமைப்பு !

அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு எல்லாம் ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்பது வள்ளலாரின் முக்கிய கொள்கையாகும் .

அதனால்தான் முதன் முதலில் வடலூரில் 23--5--1867,ஆம் ஆண்டில் சத்திய தருமச்சாலையைத் தோற்றுவித்து உள்ளார் .

ஜீவகாருண்யம் என்னும் தருமச்சாலையின் வழியாகத்தான் உண்மையான இறைவனைக் காண முடியும் என்ற நோக்கத்தில் ,தருமச்சாலையின் அருகாமையில் வடலூரில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை
''25--1--1872,ஆம் ஆண்டு தொடங்கி வைத்துள்ளார் .

சபை எனது உளம் எனத் தான் அமர்ந்து எனக்கே
அபயம் அளித்ததோர் அருட்ப்ருஞ் ஜோதி .            

சத்திய ஞான சபை என்னுள் கண்டனன்
சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன்

வள்ளல்பெருமான் அவர்கள், தன்னுள் கண்ட காட்சியை வரைபடம் வரைந்து சத்திய ஞான சபையைத் தோற்று விக்கின்றார்..உலக அதிசயங்களிலே வடலூரில் உள்ள சத்திய ஞானசபை முதன்மையானதாகும் .இதை அரசாங்கமும்,உலக மக்களும் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனைத் தரும் விஷயமாகும்.. காலம்தான் பதில் சொல்லவேண்டும்.                                                                                                                                                                                                            உடம்பின் தலைபகுதி !                                                                                                                                                                      
உயிர் உள்ள ஒவ்வொரு ஜீவன்களின் உடம்பே உண்மையான தெய்வம் குடிகொண்டு இருக்கும் இடமாகும்,அதுவே கடவுள் விளங்கும் ஆலயமாகும்..அதிலும் முக்கியமாக ''இயற்கை விளக்கமாக'' மனித உடல்களின் தலைப் பாகத்தில்,உச்சிக்கும் கீழே, உள் நாக்கிற்கும் மேலே சிரசின் நடுவில் துரிய பீடத்தில் ஆன்மா என்னும் ஒளி,  உள் ஒளியாக இருந்து உயிர் மற்றும் மனம் முதலான அந்தக் கரணத்தின் கூட்டத்தின் மத்தியில் அமர்ந்து  இயங்கிக் கொண்டு இருப்பது அருட்பெருஞ்ஜோதி என்னும் அருள் ஒளியாகும்.அதுவே ஆன்மாவாகும்.

எல்லாப் பிறப்புகளிலும் உயர்ந்த அறிவுள்ள மனித தேகத்தைப் பெற்றவர்கள் மட்டுமே ,இறைவனின் உண்மையான அருளைப் பெற்று மரணத்தை வென்று ,கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் வல்லமை பெற்றவர்கள். மனிதர்களுக்கு மட்டுமே அறிவு விளக்கம்,ஆன்ம விளக்கம்,அருள் விளக்கம் பெறுவதற்குண்டான உடல் அமைப்பை இறைவன் கொடுத்துள்ளார். ஆதலால் மனிதர்கள் மட்டும் உயர்ந்த அறிவு பெற்ற பிறப்பு உள்ளவர்களாகும்.

அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்பதை சுட்டிக் காட்ட தருமச்சாலையைத் தோற்றுவித்துள்ளார் .கடவுள் ஒருவரே என்பதை சுட்டிக் காட்ட ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையைத் தோற்றுவித்து உள்ளார் .கடவுளின் அருளைப் பெருவதற்கு இரண்டு வழிகளை வள்ளல்பெருமான் காட்டி உள்ளார்கள் அதாவது --சத் விசாரம் ,பரோபகாரம்,..

சத்விசாரம் என்பது உண்மையான இறைவன் யார் என்பதையும் உயிர்கள் தோன்றும் விதத்தையும் ,அண்டபிண்ட ரகசியங்களையும் அறிந்து கொள்ளும் அறிவைச்சார்ந்த்து,...பரோபகாரம் என்பது உயிர்களுக்கு வரும் துன்பங்களைப் போக்குவது இதுவே கடவுள் வழிபாடாகும் .  

.மனித ஆன்ம உள் ஒளியின் அமைப்பே ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையாக'' வடலூரில் வள்ளலார் எண்கோண வடிவமாக அமைத்துள்ளார்கள்.

மனிதனின் உடம்பு எண்சான்  அமைப்பைக் கொண்டது என்பதை உணர்த்தும் வகையிலும் உலகம் எட்டுத் திக்குகளைக் கொண்டது என்பதையும் தெளிவுப் படுத்தி  எண்கோண வடிவில் ''சத்திய ஞான சபை'' அமைக்கப் பட்டதாகும்.அதற்கு கடவுள் இயற்கை விளக்கம் என்று பெயர் வைத்துள்ளார் வள்ளல்பெருமான் .

உலகம் எட்டு திக்குகளைக் கொண்டது .எட்டுத் திக்கு மக்களும் வந்து உண்மையானக் கடவுளை வடலூரில் காண வேண்டும் என்பது வள்ளலாரின் அழுத்தமான நம்பிக்கையாகும்

உண்மையான இறைவன்  ''ஒளி வடிவமாக'' உள்ளார் என்பதை உலக மக்கள் அனைவரும் அறிந்து தெரிந்து கொண்டு வடலூர் வந்து வழிபாடு செய்யவேண்டும் என்பது வள்ளலாரின் முக்கிய முதல் கொள்கையாகும் அதுவே அடிப்படை உண்மையாகும் அதுவே மக்கள் அறிந்து கொள்ளும் செய்திகளுமாகும்.

கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ் ஜோதியர் ! என்பது வள்ளலாரின் முதல் கட்டளையாகும்.

சத்திய ஞான சபை !

சத்திய ஞான சபை செப்புத் (செம்பு )தகடுகளால் மூடப்பட்ட கூரையும், தங்கமுலாம பூசிய உச்சித் தூபியும் வைத்து கட்டப்பட்டதாகும். ஞானசபையின் கட்டிட உருவ அமைப்பு எண்கோண வடிவமானது இதைச்சுற்றி எண்கோண அமைப்பில் வேலிபோல் சிறு சிறு தூண்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த தூண்கள் நீளமான இரும்பிச் சங்கிலியால் இணைக்கப்பட்டு உள்ளன அதைத் தாண்டி உள்ளே மக்கள் செல்லக் கூடாது என்பது வள்ளலாரின் கட்டளையாகும்.அந்த சங்கிலி வளையம் ஞானசபையை சுற்றி இடைவெளி இல்லாமல் இருக்க வேண்டும் என்பது வள்ளலாரின் கருத்தாகும்.

வழிபாடு செய்கிறவர்கள் சங்கிலி தூண்களுக்கு வெளியே நின்றுதான் வழிபாடு செய்து வணங்க வேண்டும்.யாதொரு காரியம் குறித்தும் மக்கள் உள்ளே செல்லக் கூடாது.

இந்த சங்கிலியை ஒருசிலர்,மனிதனின்  மூச்சுக் காற்றின் கணக்கு என்றும்  அந்த கணக்கை வைத்து சங்கிலியை பின்னப்பட்டது என்று கூறுகின்றனர் .அவை ஏற்றுக் கொள்ள முடியாது.ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர்கள் பணிகள் ,செயல்கள்,தொழில்கள்,நடத்தைகள் வழியாக அவரவர் சுவாசிக்கும் காற்று முறையில் கூடுதலும் குறைதலும் மாறுபடுகின்றன.மூச்சுக் காற்றுக்கும் அந்த சங்கிலிக்கும் எந்த சம்பந்தமும்  இல்லை.அப்படி இருந்தால் வள்ளலாரே அதன் விளக்கத்தை சொல்லி இருப்பார் .

ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் அழுத்தமான இரும்புச் சங்கிலிப் போன்ற மாயாத்  திரைதான் மாயா சக்தியாகும்.மாயா திரையாகும் .என்பதை சுட்டிக் காட்ட இரும்பு சங்கிலியை ஞாசபையைச் சுற்று அடையாளமாக அமைத்து உள்ளார் .ஒழுக்கம் நிறைந்து கருணையே வடிவமாக மாறியவர்கள் மட்டுமே உள்ளே போகத் தகுதி உடையவர்கள்.மேலும் புலால் மறுத்தவர்கள் மட்டுமே உள்ளே போக அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

புலால் மறுக்காதவர்கள் இரும்பு சங்கிலியின் வெளியில் இருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்பது வள்ளல்பெருமான் இட்ட அன்பு கட்டளையாகும்.

தற்போது அந்த சங்கிலி துண்டிக்கப்பட்டு இருக்கிறது .

ஞானசபையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்து அமர்ந்து ஒளி வடிவமாக மக்களுக்கு காட்சித் தருவார் என்பதை உணர்த்தும் வகையில் சத்திய ஞானசபையின் அகம் என்னும் மத்தியில் ''ஞான சிங்காதன பீடம் '' என்னும் ஒரு மேடை உள்ளது, அந்த மேடையின் மேல் கண்ணாடிக் கூண்டுக்குள் அணையா விளக்கை வைத்துள்ளார்கள் .

வள்ளலார் ஞானசபையின் விளக்கப் பத்திரிகையில் ஓர் முக்கிய செய்தியை தெரிவித்து உள்ளார் .

இன்று தொடங்கி ,அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரது அருட்பெருஞ் சித்தி வெளிப்படும் வரைக்கும்,ஞானசபைக்கு உள்ளே தகரக் கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும் ,பித்தளை முதலிய வற்றால் செய்த குத்து விளக்கு வேண்டாம்.

தகரக்கண்ணாடி விளக்கு வைக்குங் காலத்தில் தகுதி உள்ள நம்மவர்கள் தேகசுத்தி,கரணசுத்தி உடையவர்களாய் '''திருவாயிற்படிப் புறத்தில் இருந்து கொண்டு விளக்கு ஏற்றி பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட சிறுவர் கையில் கொடுத்தாவது,எழுபத்திரண்டு வயதுக்கு மேற்பட்ட பெரியர் கையில் கொடுத்தாவது ,

''உட்புற வாயில்களுக்குச் சமீபங்களில் வைத்து வரச் செய்விக்க வேண்டும் ''.
என்பது வள்ளலாரின் கட்டளையாகும்.

இந்த கட்டளைகளில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது..வள்ளலார் சபையை அமைத்து ஜோதி தரிசனம் காட்டவில்லை.என்பது தெளிவாகிறது.

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரது அருட்பெருஞ் சித்தி வெளிப்படும் வரைக்கும் ,நான் சொல்லிய வண்ணம் சபையை கவனித்து செயல்படுங்கள் என்று ஆணையிடுகிறார்.அருட்பெருஞ் சித்தி எப்போது வெளிப்படும் என்பதை வள்ளலார் அப்போது சொல்லவில்லை..

அடுத்து சபையின் மத்தியில் தகரக் கண்ணாடி விளக்கு வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை.உட்புற வாயில்களுக்கு சமீபங்களில் வைக்க வேண்டும் என்கிறார் .உட்புற வாயில்கள் சமீபங்கள் என்பது கதவுகளின் உட்புறத்தின் ஓரமாக வைக்கச் சொல்லுகிறார்.

இங்கே சபையின் உட்புற வாயில்கள் என்பதால் எட்டு கதவுகள் உள்ளன என்பது தெளிவாகின்றன.

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் சித்தி வெளிப்படும் வரைக்கும் என்பதால், ஆண்டவர் வருகின்ற வரையில் அந்த இடம் இருள் இல்லாமல் வெளிச்சம் இருக்க வேண்டும் என்பதாகும்,எரியும் விளக்கில் கண்களுக்கு தெரியாத பூச்சிகள் வந்து உயிர் இழ்ந்துவிடக்கூடாது என்பதால், ஜீவகாருண்ய அடிப்படையில் தகரக் கண்ணாடி விளக்கு வைக்க வேண்டும் என்று கட்டளை இடுகிறார் .

சபையின் விளக்கப் பத்திரிகையின் விளக்கத்தைப் உற்று கவனித்தால் வள்ளல் பெருமான் ஜோதி தரிசனம் காட்டவில்லை என்பதும் ,எழுதிரைகளை வள்ளல்பெருமான சபையில் தொங்க விடவில்லை என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரது அருட்பெருஞ் சித்தி வெளிப்படும் வரைக்கும் என்பதால் .வள்ளல்பெருமான் .இறைவன் கட்டளைப்படி சித்திவளாகத் திருமாளிகையில் சென்று கதவை தாளிட்டுக் கொள்ளாமல் ''ஞானசபைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டு இருக்க வேண்டும்'' அதைத்தான் சித்தி வெளிப்படும் வரைக்கும் என்று பதிவு செய்கிறார் . சபையை வள்ளல்பெருமான் சொல்லியபடி,அன்பர்கள் முறையாக, கவனமாக செயல்படுத்த வேண்டும் என்று கட்டளை இடுகிறார் .

வள்ளல்பெருமான சொல்லிய வண்ணம் தொண்டர்கள் செயல் படாததால் கோபத்துடன் சபையை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு மேட்டுக்குப்பம் சென்றுவிடுகிறார் .தன்னுடைய சீடர்களுக்கு வள்ளல்பெருமான் சொல்லியது ..இதுநாள் வரையில் என்னுடன் பழகியும் என்னுடன் இருந்தும் சுத்த சன்மார்க்கம் இன்னதென்று புரிந்து கொள்ளவில்லையே என்று சொல்லி வேதனைப்படுகிறார், இதுதான் சபையில் நடந்த செய்திகளாகும்.

வள்ளலார் ஜோதி தரிசனம் காட்டினார் என்பதும்,...ஏழு திரைகளை வள்ளல்பெருமான் தொங்கவிட்டார் என்பதும்....திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காட்டினார் என்பதும் ...ஏற்றுக் கொள்ளமுடியாது, அருட்பெருஞ் ஜோதி ஆண்டவருக்கு திரை மறைப்பு எல்லாம் கிடையாது.என்பதையும் நாம் உணர வேண்டும்.

மனித ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருப்பதுதான் அஞ்ஞானம் என்கிற  அறியாமை என்னும் மாயா திரைகளாகும்.இதை புரிந்து கொள்ளாமல் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவருக்கு திரைப்போடுவது என்ன நியாயம் ? இவைகள் அனைத்தும் சமயவாதிகள் செய்த சூழ்ச்சியாகும் ,என்பதை.சுத்த சன்மார்க்கிகள் சிந்திக்க வேண்டும்.மேலும் சபையின் விளக்கத்தை பின்னாடிப் பார்ப்போம் .  

தற்போது ஞானசபைக்குள் சுத்தம் செயவதற்கும்,தீபம் ஏற்றுவதற்கும் 72,வயதுக்கு மேற்பட்டவர்களும்,12,வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும் என்பது வள்ளலாரின் கட்டளையாகும் .

ஞானசபையில், சமய மத கோவில்கள் போல் அபிஷேகம்,ஆராதனை,அர்ச்சனை,மேளதாளம்,பிரசாதம்,அகல் விளக்கு,சூடம்,விபூதி,குங்குமம்,போன்ற எந்த ஆச்சார சங்கற்ப செய்கைகளும் செய்யக்கூடாது என்பது வள்ளலாரின் அழுத்தமான கொள்கைகளாகும்.

எட்டுக் கதவுகள் !

எண்கோண வடிவமாக கட்டப்பட்டுள்ள ஞான சபையில் எட்டுக் கதவுகள் வைத்து கட்டப்பட்டுள்ளன.எட்டுக் கதவுகளுக்கும் எட்டு அம்பலம்.என்று பெயர் வைத்துள்ளார் .எட்டுக் கதவுகளும் திறந்தே வைத்திருக்க வேண்டும் என்பது வள்ளலாரின் கட்டளையாகும்.

ஆதாரமான பாடல் !

வருவார் அழைத்து வாடி வடலூர் வட திசைக்கே
வந்தால் பெறலாம் நல்ல வரமே .

திருவார் பொன்னம்பலத்தே செழிக்குங் குஞ்சித பாதர்
சிவசிதம் பரபோதர் தெய்வச் சபாநாதர்....வருவார்

சிந்தை களிக்கக்கண்டு சிவானந்த மதுவுண்டு
தெளிந்தோர் எல்லாரும் தொண்டு செய்யப் பவுரிகொண்டு
இந்த வெளியில் நடம் இடத் துணிந்தீரே அங்கே
இதைவிடப் பெருவெளி இருக்கு என்றால் இங்கே ....வருவார்

இடுக்கு இல்லாமல் இருக்க இடம் உண்டு நடஞ் செய்ய
இங்கு அம்பலம் ஒன்று அங்கே எட்டு அம்பலம் உண்டைய
ஒதுக்கில் இருப்பது என்ன உளவு கண்டு கொள்வீர் என்னால்
உண்மையிது வஞசமல்ல உன்மேல் ஆணை என்று சொன்னால் ....வருவார்

மெல்லியல் சிவகாம வல்லி யுடன் களித்து
விளையாடவும் எங்கள் வினை யோடவும் ஒளித்து
எல்லையில் இன்பம் தரவும் நல்ல சமயம்தான் இது
இங்கும் அங்கும் மடமாடி இருக்கலாம் என்றபோது

வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே
வந்தால் பெறலாம் நல்ல வரமே .

என்னும் பாடல் வாயிலாக, வடலூர் பெருவெளியில்,எண்கோண வடிவமாக தோற்றுவிக்கப் பட்டுள்ள  சத்திய ஞான சபைக்கு வந்து அமர்ந்து மக்களுக்கு அருள் பாலிக்க வேண்டும் என்று  அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை அழைக்கின்றார் . இதவிட பேருண்மை எதுவேண்டும் .

வள்ளல்பெருமான் அன்பால் அருளால் ஈர்க்கப்பட்ட வடலூர் பார்வதி புரத்து மக்கள் எண்பது காணி இடம் கொடுத்துள்ளார்கள் அதன் மத்தியிலே ஞான சபையை தோற்றுவித்து உள்ளார் ..எதற்காக அவ்வளவு இடம் என்றால் உலகில் உள்ள எட்டு திக்கு மக்களும் வந்து, எந்த திக்கில், எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் அருட்பெருஞ்ஜோதி தரிசனம் தெரியவேண்டும் என்பதால், எட்டு அம்பலம் என்னும் எட்டுக் கதவுகள் வைத்து ஞானசபையைக் கட்டி வைத்துள்ளார் .

காலம் கடந்த கடவுளைக் காண்பதற்கு காலம் கருதுவதேன் ? ..என்றும்,
அடங்கு நாள் இல்லாது அமர்ந்தானைக் காணற்கே தொடங்கு நாள் நல்லது அன்றோ!  என்றும் ...தடையாது இல்லாத தலைவனைக் காணற்கே தடையாது இல்லை கண்டாய் ! ..என்றும், ஆலயக் கதவை அடைத்து வைக்காதே ! என்றும் திருஅருட்பாவில் பல இடங்களில் பதிவு செய்துள்ளார் .

சத்திய ஞான சபையில் ,மாதப்பூசம்  தரிசனமோ,தைப்பூசம்  தரிசனமோ,தினமும் மதியம்,இரவு போன்ற தரிசனமோ காட்டச் சொல்லவில்லை.கடவுளைக் காண்பதற்கு நேரம்,காலம்,நட்சத்திரம்,சாத்திரம்  போன்ற, சடங்கு முறைகள் தேவை இல்லை என்பது வள்ளலார் வகுத்த தந்த வழிமுறை களாகும்.

உலகில் உள்ள மக்கள் அனைவரும் வடலூருக்கு வந்து ஜோதி தரிசனம் காண வேண்டுமானால் சத்திய ஞான சபையில் இடைவிடாது தினசரி ஜோதி தரிசனம் காண வேண்டும் என்பதும்,காட்ட வேண்டும் என்பதும் வள்ளலாரின் விருப்பமாகும்.அதை விடுத்து ,சமய,மதம் சாதிக் கோவில்கள் போல் காலம்,நேரம்,பார்த்து ஜோதி தரிசனம் காண்பிக்க கூடாது.அவை இறைவனுக்கு ஏற்புடையது அன்று என்பதை தெளிவு படுத்தி உள்ளார் .

திருஅருட்பாவின் உண்மை தெரிந்த சன்மார்க்க அன்பர்களின் விருப்பமும் ,பொது நோக்கமுள்ள லட்சகணக்கான மக்களின் விருப்பமும் இதுவேயாகும்  தினசரி இறைவனை எந்நேரமும், எப்போது வேண்டுமானாலும் தரிசனம் காண வேண்டும்  என்பது தான் அனைவரின் கோரிக்கையாகும்.

எனவே சத்திய ஞான சபையில் தினசரி ஜோதி தரிசன வழிபாடு எந்நேரமும் நடைபெறுவதுதான் உண்மையான வழிப்பாட்டு முறையாகும். உடனே அதற்கு உண்டான வழிமுறைகளை  ஏற்பாடு செய்ய வேண்டும்.

சத்திய ஞான சபையில் ஜோதி அணையாமல் எப்போதும் ஒளிர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

ஞான சபையில் சன்மார்க்க கொடி ஓங்கி உயர்ந்து பறக்க வேண்டும்.

இது தொடர்ந்து நடைபெறும் வரைக்கும் சன்மார்க்க அன்பர்கள் தொடர்ந்து பாடுபட வேண்டும்.

வள்ளல் பெருமானின் விருப்பத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்து மக்கள் தினந்தோறும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபடுவதற்கு வகை செய்து கொடுங்கள் என்று, இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கும் தமிழக ஆட்சிக்கும்,தமிழக முதல்வருக்கும் முறைப்படி தெரிவிக்க வேண்டும்.வள்ளல்பெருமான கட்டளைப்படி சட்டப்படி வழிபாட்டு முறையை மாற்றி அமைக்க வேண்டும் .

வடலூர் உலகின் புண்ணிய தளமாகவும் ,சாதி,சமயம்,மதம் என்ற பேதம் இல்லாமல் மக்கள் வந்து வழிபாடு செய்து வணங்கும் ,உண்மைக் கடவுள் விளங்கும் இடமாக, உலகின் அதிசயத்தில் ஒன்றாக, தமிழக அரசு அறிவித்து அதற்குண்டான பணிகளைத் தொடங்க வேண்டும்.மேலும் சுற்றுலா ஆன்மீக அதிசிய ஸ்தலமாக அறிவிக்க வேண்டும்.

வள்ளல்பெருமான் பதிவு செய்துள்ள பாடல்கள் !

சித்தி புரத்தே தினந்தோறும் சீர் கொள அருள்
சித்திவிழா நீடித்து தழைத்து ஒங்க --எத்திசையில்
உள்ளவரும் வந்தே உவகை உருக மதத்
துள்ளல் ஒழிக தொலைந்து .

உலகம் எல்லாம் தொழ உற்றது எனக்கு உண்மை யொண்மை தந்தே
இலக எலாம் படைத்து ஆருயிர் காத்து அருள் என்றது என்றும்
கலகம் இலாச் சுத்த சன்மார்க்க சங்கம் கலந்தது பார்த்
திலகம் எனா நின்றது உத்தர ஞான சிதம்பரமே .

காணாத காட்சிகள் காட்டு விக்கின்றது காலமெல்லாம்
வீணாள் கழிப்பவர்க்கு எய்தரிதானது வெஞ்சினத்தார்
கோணாத நெஞ்சிற் குலாவி நிற்கின்றது கூடிநின்று
சேணாடர் வாழ்த்துவது உத்தர ஞான சிதம்பரமே !

என்று பல பாடல்களில் வள்ளலார் சத்திய ஞானசபையைப் பற்றி பதிவு செய்துள்ளார்.

உலகுக்கு ஒரு புதிய ஆன்மீக விழிப்பு உணர்வை தரக்கூடிய உண்மையான ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையை வலியுறுத்தும்,சாதி,சமயம்,மதம் போன்ற வேறுபாடுகள் இல்லாத ''உலகின் பொது வழிபாட்டுச் சபைதான் '' வடலூரில் உள்ள சத்திய ஞான சபையாகும்.

நம் உடம்பின் தலை பாகத்தின் உள்ளிருக்கும் ஆன்ம ஒளியை ,அருட்பெருஞ் ஜோதியைப் புறத்தில் அருட்பெருஞ்ஜோதியாகக் சுட்டிக் காட்டி இருக்கும் ஆன்ம ஒளி தான் சத்திய ஞான சபையாகும் .அங்கு இரவு பகல் இருபத்து நான்கு மணி நேரமும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் ஒளி வடிவாகக் காட்சி தரும் திருவிளக்குத் தான், சத்திய ஞான சபையில் ஒளிர்ந்து கொண்டு இருக்க வேண்டும்.

எல்லா உலக மக்களும், எந்த நேரத்திலும் வந்து வழிபடக் கூடிய அருள் ஜோதி வழிப்பாட்டுத் தளம் தான் சத்திய ஞான சபையாகும் .

இந்த உண்மையை மறைத்து சத்திய ஞான சபையை,சில நாட்கள் தவிர மற்றைய நாட்களில் ஆண்டுதோறும் பூட்டி வைக்க எண்ணுவது உண்மையான இறை உணர்வை மறைக்கும் நோக்கமாகும் .

இதை ஒவ்வொரு சன்மார்க்கிகளும் உணர வேண்டும்.வெளிநாட்டில் இருந்தோ உள் நாட்டில் இருந்தோ ,வடலுருக்கு வருபவர்களை அழைத்துக் கொண்டுபோனால் அங்கு சத்திய ஞான சபையை  அடைத்து வைத்து இருந்தால் அவர்களுக்கு எப்படி அருட்பெருஞ் ஜோதியைக் காண்பிப்பது .

வடலூருக்கு வள்ளலார் வைத்த பெயர் ''ஞான சித்திபுரம்'' என்பதாகும்.அதாவது சித்தி என்னும் அருள் நிறைந்த இடமாகும் .அருள் நிறைந்த இடம் அடைக்கப்பட்டு இருக்கலாமா என்பதை சிந்திக்க வேண்டும்.

சாதி,சமயம்,மதம்,போன்ற பற்று உள்ளவர்கள் வடலூர் வந்து ஜோதி தரிசனத்தை கண்டு களிக்கும் போது,தங்களுக்குள் இருக்கும் சாதி,சமய ,மதப் பற்றுகள் மறைந்து உண்மையான சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறிகளுக்கு தங்களை மாற்றிக் கொள்வார்கள் என்பது வள்ளலாரின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும் .

இப்படி உலகில் உள்ள ஒவ்வொரு மக்களும் வந்து ஜோதி தரிசனம் கண்டு களித்து பின் ....உலக மக்கள் அனைவரும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைக் கடைபிடித்தால் உலகமே தூய்மையாகும்,உலகமே அமைதி பூங்காவாக மாறிவிடும்  என்பது வள்ளலாரின் எண்ணமும்,கொள்கை களுமாகும்

வடலூரில் சத்திய ஞான சபையில் --25--1--1872,ஆம் ஆண்டு ,திறப்பு விழா செய்து ,ஆண்டவர் அருள் சித்தி வெளிப்படும் வரைக்கும் இப்படித்தான் சபையைக் காத்து வர வேண்டும் என்று அன்பர்களுக்கு கட்டளை இட்டுள்ளார் .வள்ளல்பெருமான் சொல்லிய வண்ணம் செயல்படவில்லை என்பது தெளிவாகின்றது .

வள்ளலார் சொல்லியபடி வழிப்பாட்டு முறைகள் நடைபெறாததால் சபையை பூட்டி அதன் சாவியை எடுத்துக் கொண்டு ,சித்திவளாகம்,என்னும் மேட்டுக் குப்பத்திற்கு சென்று விட்டார் .இதுவே உண்மையாகும் .

வள்ளலார் சித்தி பெறுகின்ற வரையில் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காட்டப்படவில்லை.

வள்ளலார் சித்தி பெற்ற பின்பு சில மாதங்கள் கழித்து .சபாபதி குருக்களின் சூழ்ச்சியால், சமயவாதிகளின் துணையுடன் சமய,மதம் போன்ற  சடங்குகளுடன் ஏழு திரைகளை வைத்து ,தினமும் மதியம்,இரவும்... மாதப்பூசம்,தைப்பூசம் என்னும் சமய வழிப்பாட்டு முறையைக் கொண்டு வந்துள்ளார்கள்.. அது தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டு வந்தது.

வள்ளலார் சித்திப் பெற்றபின் சபாபதி குருக்கள் ஞான சபையைத் திறந்து வழிபாட்டு முறைகளை அவர் விருப்பத்திற்கு செயல்படுத்தி விட்டார் .அவரும் இல்லை என்றால் அதுவும் நடைப்பெற்று இருக்காது.அதுவும் இறைவன் சம்மதமே,அதுவும் காலத்தின் கட்டாயமாகும்.கெட்டதில் ஒரு நல்லதாகும்.

சபாபதியின் குடும்பத்தின் வாரிசுகளை வெளியேற்ற,சுத்த சன்மார்க்க அன்பர்கள் பலர் பல போராட்டங்கள் செய்தும் பலப்பல முயற்சி செய்தும் வெற்றிபெற முடிய வில்லை.சாபாபதி குருக்களின் வாரிசுகள் தொடர்ந்து சத்திய ஞான சபையை கைப்பற்றி சமய,மத  சடங்குகளுடன் வழிபாட்டு முறைகளை செய்து வந்தனர்.

எப்படியோ திருவருள் சம்மதத்தால்,பல சன்மார்க்க அன்பர்கள் முயற்சியால் இந்து சமய அறநிலையத்துறை ஆட்சியாளரின் உதவியாலும் தமிழக அரசின் உதவியாலும் ,பழைய குருக்களின் குடும்பத்தை, சட்டப்படி நீக்கி விட்டு சடங்குகள் இல்லாத ஜோதி தரிசனம்,பழையப்படி காட்டப்பட்டு வருகிறது.

இன்னும் வள்ளலார் கட்டளைப்படி ,வடலூர் சத்திய தருமச்சாலையும்,சத்திய ஞான சபையும்,சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமும். மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வளாகமும் முழுமையாக நடைபெறவில்லை.

இனிமேலாவது இந்து சமய அறநிலையத்துறை ஆட்சியாளர்களும்,தமிழக அரசும் முன்வந்து,வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்களை, வள்ளலார் திருஅருட்பாவில் எழுதி வைத்துள்ளபடி,உண்மை மாறாமல் சீர் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்பது சுத்த சன்மார்க்கிகளின் வேண்டு கோளாகும்.

இதற்கு தமிழக அரசு கண்டிப்பாக செயல்படும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.சுத்த சன்மார்க்கிகள் விடா முயற்சி செய்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

உலக அரங்கில் தமிழ் நாடு பேசப்படும் நிலை உயர வேண்டுமானால் ,வள்ளலார் காட்டிய ஒழுக்க நெறிகளும்,ஜீவ காருண்ய ஒழுக்க  நெறிகளும்,ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்னும் ஒருமைப்பாடும்...உலகப்  பொது நெறியாகக் போற்றப்படும் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமும்'' அதன் வழியாக அவர் காட்டிய கொள்கைகளும் வள்ளலார் விதைத்த விதைகளாகும்.

அவர் விதைத்த பகுத்தறிவு ஆன்மீக விதையை உலகம் முழுவதும் விதைக்க வேண்டும்.இதை உணர்வது  உயர்த்துவது,வளர்த்துவது,உலகம் முழுவதும் பரப்புவது, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க உறுப்பினர்களின் கடமையாகும் .வள்ளலார் காட்டிய உண்மை நெறியை தமிழக அரசின் கவனத்திற்குப் கொண்டு போவதும் சுத்த சன்மார்க்கிகளின் கடமையாகும்.மேலும் இவற்றை ஏற்றுக் கொண்டு நிறை வேற்றுவது தமிழக அரசின் முக்கிய கடமையாகும்.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை வளர்ப்போம்,!
சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை காப்போம்,!
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையைக் காண்போம் !
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சித்திவளாக ஞான சித்தி புறத்திற்கு செல்வோம்!
ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமையை கடைபிடிப்போம் !
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உலகிற்கு காண்பிப்போம்!
உலகம் எல்லாம் சமரசத்தை காண்போம் !.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ பாடுபடுவோம்.!

கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
வாழ்க உலக உயிர்கள் !
வளர்க சுத்த சன்மார்க்க நெறி !

அன்புடன் ஆன்மநேயன் ;--செ,கதிர்வேல் .
கைபேசி ..9865939896 .
தொலை பேசி --0424 2401402,