திங்கள், 10 மே, 2010

வள்ளலார் ஞான சித்தர்

உலகம் தோன்றிய காலத்திலிருந்து, ஒவ்வொரு காலக்கட்டத்திலும், சித்தர்கள், யோகிகள், ஞானிகள், கர்த்தாக்கள் தோன்றிகொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு சுத்த ஆன்மாக்கள் என்று பெயர்.

அவர்கள் உலகில் தோன்றக் காரணம் மனித சமுதாயத்தை மேம்படுத்த, ஒழுங்குபடுத்த, சீர்படுத்த வந்தவர்களாகும். ஆனால் அவர்கள் மாயையில் சிக்குண்டு உண்மையும் பொய்யும் கலந்த செய்திகளை உலகுக்கு தந்துவிட்டு மாண்டுபோய்விட்டார்கள்.

அவர்களுக்கு கர்ம சித்தர்கள் என்று பெயர் சூட்டுகிறார் வள்ளலார் அவர்களால் தான் குழப்பமும் பிரச்சனையும் வேற்றுமையும் ஏற்பட்டுள்ளது.

1874 - ம் ஆண்டு வரையில் கர்ம சித்தர்களுடைய காலமாக இருந்தது. அதன் பின் ஞான சித்தருடைய காலம் ஆரம்பம் ஆகியுள்ளது என்பதை வள்ளலார் தெளிவு படுத்துகிறார், கீழே கண்ட பத்தியில்.

சமரச சுத்த சன்மார்க்க
சத்திய ஞானாசாரம்
சுத்த தேகம்

என்ற தலைப்பில் வள்ளலார் பதிய வைத்துள்ளது.

இதுவரையில் கர்ம சித்தருடைய காலம் அதனால் சமயங்களும், மதங்களும் பரவி இருந்தன, இப்போது வரப்போகிறது ஞான சித்தருடைய காலம். இனி ஜாதி, சமய, மதம், முதலான ஆசாரங்கள் எல்லாம் போய் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான ஆசாரம் ஒன்றே  விளங்கும்.

சமய மதங்களில் சொல்லுகின்ற கர்த்தர்கள், மூர்த்திகள், ஈஸ்வரன், பிரம்மன், சிவம், முதலிய தத்துவங்கள் காலப் பிரமாண பரியந்தம் இருப்பதே ஒழிய அதற்க்கு மேல் இருக்காது.

சமய மதங்களில் சொல்லுகின்ற கர்த்தர்களுடைய சித்திகள் சர்வ சித்திகளையுடைய கடவுளின் சித்தியின் லேசங்கள் அதாவது (சிறிய துகள்கள்). அந்த சர்வ சித்திகளுடைய கடவுளுக்கு ஒப்பாகார்கள். கோடி கோடி பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கிறார்கள்.

இப்போது இருக்கும் வேதாகமங்கள் புராணங்களிலும் சமய மதங்களிலும் லட்சியம் வைக்காதீர்கள். வைத்தால் சமரச சுத்த சன்மார்கத்தில் உங்களுக்கு லட்சியம் வராது. வராவிட்டால் நீங்கள் அடையப்போகிறது ஒன்றும் இல்லை. ஆதலால், அவைகளையெல்லாம் பற்றற விட்டு சர்வ சித்தியை உடைய கடவுள் ஒருவர் உண்டு என்றும் அவர் ஒருவரே அருட்பெரும் ஜோதியர் என்றும், அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்ய வேண்டும்.

அப்படிப்பட்ட சமரச சுத்த சன்மார்கத்திர்க்கு உரிய கடவுளை வழிபாடு செய்வதற்கு சாதனம் இருவகையாகும் : 1 . பர உபகாரம். 2 . சத்விசாரம்.

பர உபகாரம் என்பது :- தேகத்தாலும், வாக்காலும், திரவியத்தாலும், உபகாரம் செய்வது.
சத்விசாரம் என்பது :- நேரிட்ட பட்சத்தில் ஆன்ம நேய சம்பந்தமான தயா விசாரத்தோடு இருப்பது.

கடவுளது புகழை விசாரித்தல் ஆன்மாவின் உண்மையை விசாரித்தல். தன சிறுமையை கடவுளிடத்தில் விண்ணப்பித்தல் இந்த மார்க்கத்தால் தான் சுத்த தேகம் பெற வேண்டும் என்று தெளிவாக எழுதி வைத்துள்ளார் நம் வள்ளலார் அவர்கள். சன்மார்கிகளாகிய  ஆகிய நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். 

ஜாதி, மத, சமய பழக்க வழக்கங்களிலே ஊறி போய் அதையும் விடாமல் இதையும் விடாமல் சன்மார்கத்தை பிடித்துக்கொண்டு அலைந்துகொண்டு இருக்கிறீர்கள். இப்படி இருந்தால் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கம் எப்படி வளர்ச்சி அடையும்? சற்று சிந்தித்து பாருங்கள்.

நீங்கள் திருந்த மாடீர்கள் நீங்கள் திருந்தாவிட்டாலும், திருந்தியவர்கள் மூலம் வள்ளலார் காட்டிய அருட்பெரும் ஜோதி செயல் பட்டுக் கொண்டு இருக்கிறது.

1874 - ம் வருடத்திற்கு பிறகு சுத்த சன்மார்க்கம் பல வகைகளிலும் பல வழிகளிலும் பல துறைகளிலும் மறைமுகமாக செயல் பட்டுக்கொண்டு இருக்கிறது.

இன்னும் கொஞ்ச காலத்தில் வள்ளலார் காட்டிய ஒரே கடவுள் அருட்பெரும் ஜோதியும், வள்ளலார் அமைத்த சுத்த சன்மார்க்க கொள்கைகளும் உலகம் முழுவதும் நிரம்பி நிற்கப்போகிறது. இது சத்தியம்.

வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், கிருத்தவம், இஸ்லாம், புத்தம் முதலிய அனைத்தும் இன்னும் கொஞ்ச காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து ஒழிந்து இருக்கும் இடம் தெரியாமல் விழுந்து விடும். 

ஞான சித்தர் காலம் ஆரம்பம் ஆகிவிட்டது ஆதலால் பொய்யானவை அனைத்தும் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து விடும் என்பதை அருட்பா பாடல் மூலம் தெரிவிக்கின்றார் வள்ளலார் அவர்கள்.

பன்மார்க்க மெல்லாம் பசையற்று ஒழிந்தனவே
சன்மார்க்க மொன்றே தழைத்ததுவே -- சொன்மார்க்கத் 
எல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான்
கொள்ளா நெறி அருளைக் கொண்டு.

சாதிகுலம் என்றும் சமயமதம் என்றும் உப
நீதியில்லா ஆச்சிரம நீட்டென்றும் -- ஓதுகின்ற
பேயாட்டமெல்லாம் பிதிர்ந்து ஒழிந்ததுவே பிறர்தம்
வாயாட்டம் தீர்ந்தனவே மற்று. 

மீண்டும் மலரும்... நன்றி...

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு